குளச்சலை சேர்ந்த நண்பர் ஜாஹிர் ஹுசன்(துபாய்) அனுப்பிய மின்னஞலிருந்து படிப்பினைக்குரிய இந்த சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்கள் பார்வைக்கு....
சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.
பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா.
ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர், தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.
ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறி நின்றார்.
அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது.
“என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதே” என்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.
பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார்.
மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார்.
பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார்.
அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன், இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டது” என்று கூறினார்.
அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.
அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம்.
அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது.
அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார்.
அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்” என்று கூறினார்.
சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுது “இரண்டணா நாணயம்” என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார்.
உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார்.
அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய் “ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதை” எனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார்.
“ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
“அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்று’ எண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்” என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார்.
“அன்றிரவு எங்களுக்கு உதவி – புரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.”
-இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.
இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன். மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன். அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்” என்று கூறினார்.
அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின.
“நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில் “பரக்கத்” செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு !!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.
( வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து )
நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )
No comments:
Post a Comment