தோழமையுடன்

Thursday, September 6, 2012

முரீது எனும் ஆன்மீகப் பயணி Vs. ஷைத்தான்

 நீங்கள்லாம் முரீது முரீதுன்னு சொல்றீங்களே  அதுக்கு என்ன அர்த்தம் என்பது ஒரு FAQ (Frequently Asked Question).
 
முரீது என்ற வார்த்தை இராதத் என்பதிலிருந்து வந்தது. இராதத் என்றால் நாட்டம் என பொருள்.

முரீது என்றால் நாடக் கூடியவர் ன்பது பொருள்.

எதை நாடக் கூடியவர்?

செய்யதுனா கௌதுல்அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி(ரலி) அவர்கள் நாடக்கூடியவரை குர்ஆனில் மூன்று வகையாக கூறப்பட்டிருக்கிறது என வகைப்படுத்துகிறார்கள்.


யுரீதுத் துன்யாஉலகை நாடக் கூடியவர்.

யுரீதுல் ஆஹிராமறுமையை நாடக் கூடியவர்.

யுரீது  வஜ்ஹஹுஇறைத் திருமுகத்தை நாடக்கூடியவர்.

இதில் இறைவனை முன்னோக்கி தன் வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொண்ட மூன்றாவது வகையினரைத் தான் ‘தரீக்கா’ எனும் ஆன்மீகப்பாதையில் முரீது என்ற சொல்லால் குறிப்பிடபடுகின்றது

எங்கள் ஷெய்குனாஃபைஜீஷாஹ் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வை பற்றிய ஞானத்தை (மஆரிபத்துல்லாஹ்) தெரிந்து கொள்ளுபவர். ஷைத்தானைப் பற்றிய ஞானம் (மஆரிபத்துஷ்ஷைத்தான்) தனையும் தெரிந்து கொள்ள வேண்டும்என்பார்கள். அதை பல அருமையான குட்டி கதைகள் மூலம் எளிமையாக விளக்குவார்கள்.

அவைகளில் இரண்டு கதைகள். வார்த்தைக்கு வார்த்தை அவர்கள் சொன்னதை என்னால் repeat பண்ண முடியவில்லை. ஆகவே எனது பாணியில் உங்கள்  முன்வைக்கின்றேன்.

கதை 1 :

ஒரு முரீது காட்டு வழியே போய் கொண்டிருந்தார். அங்கே ஒரு வியாபாரி கடிவாளங்களை விற்றுக் கொண்டிருந்தார். அவரை நெருங்கிய முரீது,
பெரியவரே! இந்த காட்டுல இதை விற்றால் யாரு வாங்குவார்கள்? ஊருக்குள்ளே போய் கடை போடலாமேஎன்றார்.

அந்த வியாபாரி, “என் பெயர் ஷைத்தான். அல்லாஹ்வின் பாதையில் பயணிப்பவரை என் பக்கம் இழுக்கவே இந்த கடிவாளம். ஒவ்வொருவருக்கும் ஒரு கடிவாளம் வச்சிருக்கேன்என்றான் நமட்டு சிரிப்புடன்.

அட அவனா நீ. நான் யாரு தெரியுமா? இன்ன பெரிய ஷெய்கின் முரீது. எனக்கு ஏதும் கடிவாளம் இருக்கா உன் கிட்டஎன்றார்.

எவ்வளவு பெரிய ஷெய்குடைய சீடர் நீங்க. உங்களுக்கெல்லாம் நான் கடிவாளம் போட முடியுமா?” என ஷைத்தான்அடக்கமாக சொல்லவே,

முரீது மனம்மகிழ்ந்து, “அது தானே பார்த்தேன். என்கிட்டெல்லாம் உன் பாச்சா பலிக்காதுஎன்றார்

சரி நீங்க போங்கஎன ஷைத்தான் சொல்லவே அவர் நடையை கட்டினார்
 சிறிது தூரம் தான் சென்றிருப்பார் ஷைத்தான் அவரை கைத்தட்டி அழைத்தான். முரீது அவன் கிட்ட வந்தார். “சரி, சரி நீஙக போங்கஎன்றான். அவர் தன் பயணத்தை தொடங்க எத்தனிக்கையில் மீண்டும் அவரை அழைத்தான். அவர் ஷைத்தானை நெருங்கிஏன்டா பயலே! ஏன் சும்மா சும்மா கூப்பிடுறே? எனக்கு ஏதும் புது கடிவாளம் கண்டு புடிச்சிட்டியோ ?” என கோபமாக கேட்டார்.

இல்லை. இல்லைஎன அவன் பணிவுடன் உடனே மறுத்தான்.

அப்ப ஏன்டா என்னை கூப்பிட்டேஎன கேட்டார்.

ஒரு விசயத்தை சொல்லத் தான் கூப்பிட்டேன்என்றான்

சொல்லு. சொல்லு.” என்றார் கம்பீரமாக.

ஷைத்தான் சொன்னான், “ நான் வான்னு சொன்னா வற்றீங்க. போன்னு சொன்ன போறீங்க. உங்களை இழுக்க  கடிவாளமே தேவையில்லையேஎன்று சிரித்தான்.

பி.கு :  ஷெய்கின் சகவாசமும், அவர்கள் தரும் பயிற்சியும் கொண்டு அகப்பெருமையை சன்னம் சன்னமாக நீக்கத் வேண்டும். அதை விடுத்து ஷெய்கின் அந்தஸ்த்தை  மட்டும் பெருமையடித்து கொண்டு நம் அகப்பெருமையை வளர்ப்பது எத்தனை ஆபத்து என்பதை இந்த கதை சுட்டி காட்டுகிறது.

கதை 2

ஷைத்தான் நம்மை வழி நடத்தும் இன்னொரு கதை.

பள்ளிவாசலில் ஒரு பெரிய மார்க்க அறிஞர் சொற்பொழிவாற்றினார். கேட்டவர்கள் எல்லாம் சொக்கி போய் விட்டார்கள். சொற்பொழிவு முடிந்ததும். நான், நீ என அவரை சூழ்ந்து கொண்டு அவரது கையை பிடித்து முத்தம் போட்டார்கள். மார்க்க சட்டபடி அல்லாஹ், ரஸூலின் போதனைக்காக சங்கை செய்பவருக்கு வசதியாக கையை கொடுக்க வேண்டுமல்லவா? 

அவரும் இரண்டு பக்கமும் கையை நீட்டி அவர்களுக்கு வசதியாக தந்தார்.
நெருங்க முடியாதவர்கள் அவர் ஜுப்பாவை, மேலே போட்டிருந்த சால்வையை என எது கையில் கிடைக்கிறதோ அதை தொட்டு முத்திக் கொண்டார்கள். அப்படியே ஜனத் திரளுடன் வாசல் வரை வந்தவர் பெருமிதத்தால் உள்ளம் பூரித்து நின்றார்.

அங்கே ஓரத்தில் ஒருவர் நின்று கொண்டுகையைத் தாருங்கள் நானும் முத்தமிட வேண்டும்என கேட்க, “ யாருயா நீ, இத்தனை பேரு போட்டி போட்டுக் கொண்டு என் கையை முத்தமிடும் போது. நீ மட்டும் திமிரா ஒரு மூலையிலே நின்றுகிட்டு என்னை கூப்பிடுறேஎன கோபமாக கேட்டார்.

ஹஜ்ரத்! என் பெயர் ஷைத்தான். நீங்க அவங்க கிட்ட பெருமையாக முத்தமிட கையை குடுத்துகிட்டு இருந்த போதெல்லாம் ஒரு நிமிசம் கூட உங்களை விட்டு பிரியாமல் நான் உங்க கூடத் தானே இருந்தேன். இணைபிரியாத என்னை போய் யாருன்னு கேட்கிறீங்களே ஹஜ்ரத்! ” என்று சிரித்தான்.

0 0 0 0

يَا أَيُّهَا النَّاسُ أَنتُمُ الْفُقَرَاء إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

“மனிதர்களே நீங்கள் (எல்லா நிலையிலும், எல்லா விஷயங்களிலும்) அல்லாஹ்வின்பால் தேவையுடையவர்கள். அல்லாஹ்வோ (எக்காலத்திலும், எவரிடத்திலும்) தேவையற்றவனாகவும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்”. (35:15)

இந்த இறைவசனத்தில் வரும் ‘ஃபுகராவு இலல்லாஹ்’ என்பது உள்ளமை(Existence), பண்புகள், செயல்படும் சக்தி, பொருளாதார ஆதிக்கம் என எதுவுமே ஒரு வினாடி கூட எனக்கு சொந்தமில்லை என இடைவிடாமல் என்றும், எங்கும்  இறைவன் பக்கம் தேவையுறுபவர் தான் முரீது (யுரீது வஜ்ஹஹு) என்ற சொல்லுக்கு தகுதியானவர். ஏகத்துவ மெய்ஞானம் தான் அத்தகைய முரீதின் அடிப்படை கல்வி.
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment