தோழமையுடன்

Wednesday, February 15, 2012

வலிமார்கள் சகவாசம் தேவையா?


 “குர்ஆனும், ஹதீஸும் இருக்க சூஃபிகளை பின்பற்றும் உங்களுக்கு நரக நெருப்பு காத்திருக்கிறதுஎன இரண்டு தினங்களுக்கு முன் ஒரு  பெயரில்லா பின்னூட்டம் வந்திருந்தது. நீங்கள் யாராயிருந்தாலும் உங்களுக்களுக்கு என் தாழ்மையான  பதிலிது. கொஞ்சம் அன்புடன் சிந்திக்க வேண்டியவனாய்….

 முதலாவதாக, குர் ஆனில் வந்துள்ள மூஸா(அலை) அவர்கள் கிள்ரு(அலை) அவர்களை சந்தித்த இந்த நிகழ்வை படியுங்கள்:

அவ்விருவரும் (மூஸா நபியும் அவர்களின் பணியாளரும்) நம் அடியார்களில் ஓர் அடியாரை (கிள்ருவை) கண்டார்கள். (அவர் எத்தகையவர் என்றால்) நமக்கு (சொந்தமான) அருளை அளித்து இருந்தோம். மேலும் நம்முடைய ஞானத்தையும் நாம் அவருக்கு கற்றுத் தந்திருந்தோம். (18:65)

மூஸா(அலை) அவரிடம்  “உமக்கு கற்பிக்கப்பட்ட நன்மையானவற்றை நீர் எனக்கு கற்று கொடுப்பதற்காக நான் உங்களை பின் தொடரட்டுமா?” என்று கேட்டார். (18:66)

சிந்தித்து பாருங்கள் மூஸா நபி யாரு? வேதம் கொடுக்கப்பட்ட விஷேசமான நபி.
கிள்ரு( அலை) அவர்கள் நபியா? அல்லது வலியா என்ற சர்ச்சை இன்றும் தொடர்கின்றது.ஆக குறைந்த பட்சம் ஹிள்ரு அவர்கள்  இறைவனின் நேசத்துக்குரிய ஒரு நல்லடியார்.

 ஹிள்ரு அவர்களை விட பல மடங்கு உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள மூஸா நபி இறைவன் அளித்த ஞானத்தை பெற ஓர் இறைநேசரிடம் பின் தொடரட்டுமா என கேட்கின்றார்கள் என்பது தான் இங்கே சிந்திக்க வேண்டிய விசயம்.

இதில் நமக்கு படிப்பினை இல்லையென்றால் இறைவன்  இதை சொல்லிக்காட்டுவானா? என்பதையும் சிந்தித்து பாருங்கள்.

அடுத்து நபி(ஸல்) அவர்களின் மூலம் முழுமையான மார்க்கம் தரப்பட் பின்னும் இன்னொருவரிடம் செல்லும் தேவை என்ன என்பதைப் பார்ப்போம்.

நாமாக அப்படி செய்தால் தவறு தான். குர்ஆனே அப்படி வழிகாட்டினால் அது எப்படி தவறாக இருக்க முடியும்.

ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.” (25:59) என்கிறது இறைவேதம்.

குரானும், ஹதீஸும் இருக்க இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ள அந்த விளக்கத்தை வைத்திருக்கும் ஒருவரை அணுக சொல்லி இறைவனே உத்தரவிடுவதன் காரணம் என்ன?

1.       எந்த சிருஷ்டியையும் போல் இல்லாத இறைவனை சுயமாக அறிவது என்பது இயலாது. ஞானத்தின் பட்டினமான நபி (ஸல்) அவர்களும் தன் சொந்த ஆராய்சியால் இறைஞானத்தை பெறவில்லை. இறைவன் வஹியின் மூலம் அறிவித்து கொடுத்த மகத்தான பாக்கியமது. ஆக  இறைவனை அறிவதில் சுயஆராய்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

2.       குரானையும், தீஸிலும் கூறப்பட்ட விளக்கத்தை தெளிவாக அறியும் நபிவழி என்ன?
பெருமானாரிடமிருந்து சஹாபாக்கள் அறிந்தார்கள்,
சஹாபாக்களின் வழியாகத் தாபியீன்கள்,
தாபியீன்களிடமிருந்து தபவுத்தாபியீன்கள்,

இப்படி சங்கிலித் தொடராக வந்த இந்த ஞானஜோதியை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும் ஒருவலியே முர்ஷிதைஅணுகுவது தான் வேதம் காட்டும் நேர்வழி. இதை பின் வரும் இறைவசமும் உறுதி செய்கிறது.

 (நபியே!) யாரை (அவர்களின் மன அமைப்பின் கோரிக்கை படி) அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்.(18:17)

அடுத்ததாக இறைநேசர்களுடனான ஆன்மீக சகவாசத்தின் நோக்கம் என்ன என்பதை பார்ப்போம்.

இறைநம்பிக்கையும், இறையச்சமும் தான் இறைநேசத்தின் (விலாயத்தின்) அடையாளமாக குர் ஆன் கூறுகின்றது. அத்தகைய இறைநேசர்களுடன் இருந்து இறையச்ச நிலையை நாமும் அடைவதுதான் ஆன்மீக சகவாசத்தின் முக்கிய பகுதியாக கருதப்படுகின்றது. ஆகவே இறைநேசர்களின் சகவாசம் என்பது வாழ்வில் மிகமிக அவசியம்.

இந்த இறைவசனத்தை பாருங்கள்:

ஈமான் கொண்டவர்களே! தக்வா செய்யுங்கள்.அல்லாஹ்வின் பக்கம் உங்களை நெருக்கி வைக்கும் வஸீலாவைத் தேடுங்கள். மேலும் அவனுடைய பாதையில் (குறிப்பாக நப்ஸுடன்) போர் செய்யுங்கள்.(அப்போது) நீங்கள் வெற்றி பெறலாம்.(5:35)

இங்கு வஸீலா என்பது ஏகத்துவ மெய்ஞானத்தை கற்றுக் கொடுத்து இறைவன் மீது அன்பையூட்டி நம்மை அவன்பால் நெருக்கி வைக்கும் வலியே முர்ஷித்களையே குறிக்கிறது. எனவே அத்தகைய உண்மையான காமிலான ஷெய்குமார்களை தேடியடையும் பொறுப்பு நமக்குள்ளது என்னும் அறிஞர்களின் கருத்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். மேலும், நம் வாழ்வியல் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில்  தோழமையின் பங்கு மகத்தானது என்பதால் நம் இறைநம்பிக்கை உறுதி பெறவும், இயன்றவரை தக்வா செய்யவும் நமக்குத் தூண்டுதலாக இருக்கும் மெய்யடியார்களின்  தொடர்ச்சியான தோழமை வாழ்நாளெல்லாம் நமக்குத் தேவை என்பதை

ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹுவை அஞ்சுங்கள்(தக்வா செய்யுங்கள்) மேலும் சாதிக்கீன்களுடன் (தோழமை கொண்டு) இருங்கள்.(9:119) என்னும் திருவசனம் வலியுறுத்துகிறது.

இறுதியாக இந்த ஹதீஸை உங்கள் பார்வைக்கு தருகின்றேன்

புகாரி ஷரீஃப் பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3470
 
பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்றவர். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, '(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?' என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், 'கிடைக்காது" என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒருவர், '(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!" என்று அவருக்குக் கூறினார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.

அப்போது இறை கருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) தர்கித்தனர். உடனே இறைவன் அதை நோக்கி, 'நீ நெருங்கி வா!" என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, 'நீ தூரப்போ!" என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, 'அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்" என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்

நூறு கொலை செய்த ஒருவர். நல்லடியார்களின் சகவாசத்தை பெறவில்லை. மன்னிப்பை நோக்கமாக வைத்து இறைநேசர்களின் சகவாசத்தில்  ஆசைவைத்தார். அவருக்கு இறைவன் பொழிந்த கருணையை பாருங்கள். 

இதுவரை நல்லடியார்களின் சகவாசத்தின் நோக்கமும் அவசியமும் சுருக்கமாக உங்கள் முன் வைக்கப்பட்டது. இதற்கு பின்னும் இருள் உங்களுக்கு வெளிச்சமாகவும், வெளிச்சம் உங்களுக்கு இருளாகவும் தோன்றினால்……

"இறைவன் தான் நாடியவர்களை தனது ஒளியின் பக்கம் செலுத்துகிறான்.”(24:35)
இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! ஆமீன்!
Post a Comment