தோழமையுடன்

Monday, February 20, 2012

பறவைகளின் இதயம்


நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பறவையின் இதயங்களைப் போன்ற இதயங்களையுடைய மக்கள் சுவர்க்கம் புகுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம், ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ் எண் 77) 


இறைநம்பிக்கையாளனின் இதயம் இறைவனின் அரியாசனம் (குலூபுல் முஃமினீன் அர்ஷுல்லாஹ்) என்று சொல்லப்பட்டிருக்கும் படைப்பினங்களில் சிறந்த படைப்பாக இருக்கும் மனித இதயத்தை விட பறவைகளின் இதயங்களுக்கு அப்படி என்ன சிறப்பு?


பறவைகளுக்கு நம்மைப் போன்ற கற்பனையும் இல்லை, அதனால் கவலைகளும் இல்லை. “கா.க்..கா.. எனக் கருணையோடு அழைத்து நேற்று சோறு போட்ட கோடி வீட்டு அம்மா இன்றைக்கும் போடுவாளா? அரிசி விலை அமோகமா ஏறிடுச்சுன்னு பக்கத்து தெரு காக்கா சொல்லுச்சே?” என்று எந்த காகமும் கவலைப்படுவதில்லை.

இன்று உலகையே உலுக்கும் பொருளாதார நெருக்கடியால் எந்தப் பறவையும் மனச்சோர்வு (Depression) நோய்க்கு ஆளாகவில்லை.

பறவைகள் இறக்கைகளை விரித்த வண்ணமாக இறைவனை துதிக்கின்றன.(24:41)  இறைவன் அவற்றை (கீழே விடாமல் தாங்கி ) தடுத்துக் கொண்டிருப்பதாக சொல்கின்றான்.(67:19)

பறவைகள் சந்தேகப்படுவதில்லை.இறைவனின் மீது முழுநம்பிக்கை வைத்து இரை தேடச் சென்று முழுவெற்றியுடன் திரும்புகின்றன. பறவைகளின் இதயம் போன்றவர்கள் என்பது அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்பும் சாற்றுபவர்கள் என்பது பொருளாகும்.


அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். பறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)


இந்த நபிமொழிக்கு விளக்கம் அளிக்கும் போது என் குருநாதர், “நன்றாக கவனியுங்கள் அன்பர்களே! பறவைகள் முயற்சியற்று இருக்கவில்லை. உணவு தேடி கூடுகளை விட்டு பறந்து செல்கின்றன. இறைவன் உணவளிக்கின்றான். எந்த பறவையும் பட்டினியால் இறந்ததில்லை” என சொல்வார்கள்.பறவைகள் மட்டுமல்ல எந்த உயிரினமும் இப்படி மனிதனைப் போல அல்லாஹ்வின் “கொடுக்குதலில்” - தேவையை நிறைவேற்றும் தன்மையில், அவநம்பிக்கையால் அவஸ்த்தைப் படுவதில்லை.
"(இந்த உலகில்) உயிர் வாழும் பிராணிகள் எத்தனையோ இருக்கின்றன.அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான். அவனோ (ஊமையின் அழைப்பைக் கூட ) செவியுறுபவனாகவும் (உங்கள் அனைத்துத் தேவைகளையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.(29:60)"  என்கிறது இறைவேதம்.


அனைத்துயிர்களும் அல்லாஹ்வைக் கொண்டு வாழ்கின்றன.

அவைகள் அல்லாஹ்வை மறந்ததும் இல்லை. பிரிந்ததும் இல்லை.

இறைவனை சார்ந்திருப்போருக்கு அவனே போதுமானவன். (65:3) என்பது திருமறை வாசகம். ஆனால் யாரும் துணையில்லா பாலைவனத்தில் அன்பு மனைவியையையும், கைக்குழந்தையையும் விட்டு விட்டு ஒரு கணவன் வந்தால் அந்த மனைவியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?.

தாய்குலங்கள் கண்ணீர் வடிய ஆதரவு தரும் மெகா டி.வி. சீரியல் காட்சி இல்லையிது அன்னை ஹாஜரா அவர்களையும் அவர்களின் அருந்தவப் புதல்வர் இஸ்மாயீலையும் மனித நடமாட்டமே இல்லாத மக்காவின் பாரான் பள்ளத்தாக்கில் தன்னந்தனியாக நபி இப்றாஹீம் (அலை) விட்டுச் சென்றது நபிமார்களின் வரலாற்றில் ஓர் ஏடு.


அப்போது அன்னை ஹாஜரா அவர்கள்ஏன் எங்களை இங்கே விட்டுச்செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். இது இறை ஆணை என்றதும், ‘அவ்வாறாயின் அந்த நாயன் எங்களை கைவிடமாட்டான்.என்று உறுதியுடன் இறைநம்பிக்கையை (தவக்குலை) வெளியிட்டார்கள். (ஆதாரம் புகாரி3364).


இங்கே நாம் விளங்க வேண்டியது. இப்ராஹிம் நபி இறைவன் உத்தரவின் பேரில் பாலைவனத்தில் விட்டு சென்றது போல் காட்சியளித்தாலும்.“நீயே உள்ரங்கமானவன் உன்னையன்றி எந்த சிருஷ்டியும் இல்லை. (முஸ்லிம் ஷரீப்)” என்ற அந்தரங்கத்தை விளங்கிய நபியாதலால் பாலைவனத்தை காட்டி கொண்டிருக்கும் இறைவனிடம் தான் விட்டு சென்றார்கள் நபிகள் என்பதைத் தான்.

நபியின் மனைவியாக இருந்ததால் ஹாஜிரா அம்மையாரும் அந்த ஞானவிளக்கத்துடன் இறைவன் போதுமானவன் என தவக்கல் வைத்தார்கள். 


அந்த தவக்கலுக்கு இறைவன் அளித்த மகத்தான பரிசுகள் எத்தனை? 


ஹாஜரா அம்மையார் தண்ணீர் தேடி சபா மர்வா குன்றுகளிடையே ஓடிய சிறு ஓட்டம் இன்று ஹஜ் செய்பவர்களின் வணக்கத்தில் (இபாதத்தில்) ஒன்றாகியது.


அன்புபிள்ளை இஸ்மாயிலின் செல்ல கால்கள் மேலும் கீழும் அசைய அவர்கள் சின்னப்பாதம் தட்டிய மணலின் கீழிருந்து நீரூற்று வெளிவந்தது. அதுவே பின்னாளில் ஹாஜிகள் அருந்தி மகிழும் ஜம்ஜம் நீர் வழங்கும் கிணறானது.


அவர்கள் கால்பட்ட பாலை நிலம் அகிலத்திற்கு அருள் வழங்கும் சோலைவனமாகியது.


உச்சகட்டமாக பெருமானாரின் பிறந்தமண் என்ற பேறும் பெற்றது. 


'அத்தவ்ஹீத் தவக்கல். அத்தவக்கல் தவ்ஹீத்' என்பார்கள் என் குரு நாதர். இதன் பொருள் ஒருவருடைய ஏகத்துவ உணர்வின் வெளிப்பாடு தான் அவர் தன் அனைத்து காரியங்களுக்கும் இறைவனை சார்ந்திருக்கும் தவக்கல் என்பது.

நமது தவ்ஹீது, தவக்கலின் நிலை நமக்கும் இறைவனுக்கும் தான் வெளிச்சம்!.


“வீட்டின் வாயிலில் ஏகத்துவ கொள்கையும் (தவ்ஹீதும்) வீட்டுகுக்குள்ளே இணைவைப்பும் (ஷிர்க்கும்) இருப்பின் என்ன பயன்? நாவில் சுத்தமும் உள்ளத்தில் அசுத்தமும் இருந்தென்ன பயன்? வாய் இறைவனுக்கு நன்றி சொல்வதாயும் மனம் இறைவன் மீது குற்றம் காணுவதாயும் இருந்தால் என்ன பயன்?” என்பது இறை நேச செல்வர்களின் தலைவராக இறைநேசர்களால் கொண்டாடப்படும் கௌதுல் அஃலம் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்களின் வார்த்தைகள். 


தவ்ஹீது பற்றிய சிறு விளக்கம் வேண்டின்  கீழ் வரும் சுட்டிகளை சொடுக்குங்கள்.


தவ்ஹீது தஸவ்வுஃப் சில விளக்கங்கள்
 மனமே நீ மயங்காதே!

Post a Comment