தோழமையுடன்

Thursday, April 26, 2012

நாகூரில் ஏகத்துவ கொடியேற்றம் 455ஆம் வருடம்


முதலில் 'இன்று நாகூர் கந்தூரி எனும் ஏகத்துவ கொடியேற்றம்' எனும் இந்த இடுகையை மீண்டும் ஒரு முறை படித்து விடுங்கள்.

படித்து விட்டீர்களா? நன்றி! தொடருங்கள்..

பாரசீக நாட்டில் வாழ்ந்த ஒரு சூஃபிக்கு  பேரழகியான ஒரு மகள் இருந்தாள். எத்தனையோ செல்வந்தர்கள் அந்த அழகியை மணமுடிக்க போட்டியிட்டனர். ஆனால் அந்த சூஃபியோ ஒரு எளிய வணக்கவாளியை அழைத்து தன் மகளுக்கு மணமுடித்தார். தந்தையின் விருப்பத்திற்கு தலை சாய்த்து அந்த ஏழையின் கைப்பிடித்த அப்பெண் தன் கணவனின் குடிலுக்கு அப்போதே புறப்பட்டு சென்றார். இரவானதும் அந்த ஏழை மணமகன் தான் வைத்திருந்த ரொட்டியை தனக்கும் தன் மனைவிக்கும் பங்கு போட ஆரம்பித்தார் அந்த பெண்ணோ அழத் துவங்கினாள். 

மணமகன் மனம் வருந்தி “ பெண்ணே உன் தந்தை செய்தது தவறு. அதற்கு நான் உடன்பட்டது அதை விட பெரிய தவறு. ஏதுமில்லாத ஏழையான எனக்கு இந்த ஆசையெல்லாம் வரக் கூடாது. என்னை மன்னித்து விடு! உனக்கு மணவிலக்கு தரச் சித்தமாயிருக்கின்றேன்.  உன்னை மணக்க போட்டியிடும் எத்தனையோ செல்வந்தர்களில் நீ விரும்பியவரை மணந்து வாழலாம்” என்றார். அந்த பெண்மணி மேலும் அழத்துவங்கினார்.  காரணம் புரியாமல் மன்றாடி கேட்ட போது அவள் , “அன்பரே இந்த ரொட்டித் துண்டு உமக்கு ஏது?” என கேட்டாள். அந்த எளியமனிதரோ “ பெண்ணே இந்த ரொட்டி துண்டு காலையில் எனக்கு கிடைத்தது. பகலில் பாதியை உண்டு விட்டு இரவுத் தேவைப்படும் என்பதற்காக பாதியை வைத்திருந்தேன் என்றார். அவரை ஏறிட்டு பார்த்த மனைவி “இதற்காகத் தான் அழுகின்றேன். ஏனெனில் பகலில் உணவழித்த இறைவன் இரவுக்கும் கொடுக்க போதுமானவன் என்ற தவக்கலில் (இறையாதரவில் ) பகலில் உமக்குப் போக எஞ்சியதை தேவையுடையோருக்கு கொடுக்காமல் சேமிப்பில் இறங்கியிருக்கின்றீரே! இப்படிப்பட்ட உம்மை 'தக்வாதாரி' என்று எண்ணி என் தந்தை என்னை மணமுடித்து கொடுத்தாரே! என்று தான் அழுகின்றேன்” என்றதும் மணமகன் அதிர்ந்து போனார்.

என்ன இப்படியெல்லாம் கூடவா தவக்கல் வைக்க முடியும் என்று தடுமாறுகிறது நம் மனம்.

மிருகங்களுக்கு இருக்கும் பக்குவம் கூட நமக்கில்லையே என பொட்டில் அறையும்  இந்த திருவசனத்தை பாருங்கள். 

(இந்த உலகில்) உயிர் வாழும் பிராணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச்(ரிஜ்கை) சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்(ரிஜ்க் அளிக்கின்றான்). அவனோ செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.(29:60) 

மேலே கூறிய படிப்பினையூட்டும் சம்பவம் ‘பாதுஷா நாயகம்’ என புகழப்படும் சங்கைமிகும் ஷாஹுல் ஹமீது வலியுல்லாவின் உபதேசங்களில் காணக்கிடைத்தது.

 “அல்லாஹ்வின் மீது அன்பு கொள்வது என்பதே மார்க்கத்தின் சாரமாகவும், மனித வாழ்க்கையின் லட்சியமாகவும் இருக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் மீது அன்பு கொள்வதென்பது அவ்வளவு சாத்தியமானதா? அவனோ அரூபி! அரூபியான அவனை நேசிப்பது எப்படி? அன்பர்களே நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நமக்கு தெரியாத ஒன்றின் மீது நம் அனுபவத்தில் அறிந்திராத ஒன்றின் மீது அன்பு கொள்வதென்பது எப்படி சாத்தியமாகும். அல்லாஹ்வை பற்றிய அறிவு நமக்கிருந்தாலன்றி அவன் மீது நாம் கொள்கின்ற நேசம் முழுமையடையாது என்பதால் தான் எம் பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மார்க்கத்தில் முதன்மையானது இறைஞானம் (அவ்வலு தீனி மஃரிஃபதில்லாஹ்) என்று தெளிவுற கூறியுள்ளார்கள்” என்பதும் அவர்களின் உபதேசங்களில் ஒரு பகுதி.

 “ஹே நல்லறிவாளர்களே! உண்மையையும், பொய்யையும் பிறித்தறிவிக்கும் பொருட்டு அல்லாஹ் என்னை ஹிந்துஸ்தானத்தில் தோன்றச் செய்துள்ளான்” என கூறும் மகானவர்களின் வாசலில் நின்று குணங்குடி மஸ்தான் ஸாஹிப் வலியுல்லா பாடிய பின் வரும் பாடல் வரிகள் மிகவும் பிரசித்தமானது:

 திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி!

சிம்மாசனாதிபர்கள் நஜரேந்தியே வந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி!

ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
அணி அணியாய் நிற்பர் கோடி!

அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
அனைந்தருகில் நிற்பர் கோடி!

மக்க நகராளும் முஹம்மதுர் ரஸூல் தந்த
மன்னரே என்பர் கோடி!

வசனித்து கொழுவீற்றிருக்குமும்
மகிமை சொல வாயுமுண்டோ

தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே!

தயவு வைத்தெமையாளும் சற்குணம் குடிகொண்ட
ஷாஹுல் ஹமீதரசரே! 

நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் பெயர் கூட தெரியாத நிலையில் நானூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு சரித்திர நாயகர் மறைந்தும் மறையா மங்கா புகழுடன், கொடி பறக்கும் கோட்டையுடன், தென்னகத்து திரு விளக்காய் ஒளி வீசுகின்றார்கள்.

இது அவர்களின் கந்தூரி நாட்கள். முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்து சகோதரர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு அவர்களை எங்கள் ‘நாகூர் ஆண்டவர்’ என அழைத்து கொண்டாடும் நாட்கள் இது.


இன்றைய நாளில் அடக்கஸ்தலங்களை ஜியாரத் செய்வது நபிவழியாக (சுன்னத், முஸ்தஹபான ஒன்றாக) இருக்க அதை இணைவைப்பாக (ஷிர்க்காக) விளங்கும்விலக்கும் போக்கு ஒரு மோசமான பேஷனாகி விட்டது.

நமது இந்தியா போன்ற பன்முக கலாச்சார சூழலில் கந்தூரி நாட்களை மனித நேயமும்இறைநேசமும் மணக்கும் இஸ்லாமிய கலாச்சார விழாவாக நடத்துவது எப்படி  என்பது அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டிய ஒன்று.

அதே நேரத்தில் அந்த விழாவினையொட்டி நடக்கும் நிகழ்வுகளில் இறைஞானமில்லா அறியாமையால் நிகழும் அனாச்சாரங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதும் உண்மை.


எங்கள் சிஸ்தியுல் காதிரி ஞானபாட்டையின் ஷெய்குமார்கள் கந்தூரி நாட்களில் நாகூரில் வந்து அதபுடன் தங்கி இருந்து பாதுஷா நாயகத்தின் அருளுடன் ஏகத்துவ இறைஞான பாடங்கள் நடத்தி, இறைப்புகழ் பாடுவது வழக்கம். அந்த நாட்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற கிருபையான நாட்கள். 

நாகூரில் எங்கள் ஷெய்கு நாயகம் ஃபைஜிஷாஹ்(ரஹ்) அவர்கள் பாதுஷா நாயகத்தின் பேரர் பாக்கர் சாஹிப் ஆலிம் (ரஹ்) (வலது) அவர்களுடன் நேசத்துடன் உரையாடிய காட்சி.

“ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
அணி அணியாய் நிற்பர் கோடி!

அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
அனைந்தருகில் நிற்பர் கோடி!”

எனும் பாடல் வரிகளுக்கேற்ப இன்னும் எத்தனை எத்தனையோ ஆன்மீக பெரியார்கள் இன்றைய தேதியில் அங்கே கூடியிருப்பார்கள் என்பது உறுதி!.


00000
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் தமது மகனுக்கு “மகனே! அவ்லியாக்கள்பால் ஒரு போதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே!” என உபதேசித்திருக்கிறார்கள் ஆனால் இன்றைய நாளின் பார்த்தால் மதிக்கப்பட வேண்டிய மார்க்க பெரியார்களின், வலிமார்களின் கண்ணியம் மனதை விட்டு நீங்கியவர்களாக நம் இளைஞர்களில் ஒரு சிலர் வலம் வருகிறார்கள்.

ஏன் ஹன்பல்(ரஹ்) அப்படி சொன்னார்கள். அவ்லியாக்களை வெறுப்பது 'இறைவனோடு தொடுக்கும் போர்' என்பதுடன் அதனால் விளையும் பெரிய ஆபத்து என்ன என்பதற்கு ஷைத்தானின் சரித்திரத்தில் நமக்கு விளக்கம் இருக்கிறது.

ஷைத்தான் ஆரம்பகாலத்தில் இறைவனுக்கு நெருக்கமானவனாகவே இருந்தான்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இறைவனை வணங்கிய வணக்கசாலி அவன் என்றும் வானவர்களுக்கே பாடம் போதித்த அறிஞன் எனவும் சொல்லப்படுகின்றது.

அப்படிப்பட்டவன் இறைவனின் வெறுப்புக்கு எப்படி ஆளானான்?
அவன் மது அறுந்தவில்லை, விபச்சாரம் செய்யவில்லை, அனாதைகளின் சொத்தை அபகரிக்கவில்லை, திருடவில்லை, பொய், புறம் பேசவில்லை பின் என்ன தான் செய்தான்?

ஆதம் நபியை கண்ணியபடுத்துவதற்காக வேண்டி அவர்களுக்கு சஜ்தா செய்ய இறைவன் சொன்னதற்கு மாறு செய்தான்

கண்ணியப்படுத்த வேண்டியவர்களை கண்ணியப்படுத்தாதது தான் அவனை ஷைத்தானாக்கியது

மனிதர்களுக்கு சஜ்தா செய்வது இன்று மார்க்கத்தில் தடை செய்யப்பட்டு விட்டாலும் பெற்றோர், பெரியோர்களுக்கு மரியாதை செய்வது தொடர்கிறது.

ஆகவே தோழர்களே நீங்கள் அவுலியாக்களை நேசித்து கொண்டாடினால் அது ஒரு பாக்கியம். அவர்களைப் பற்றிய விளக்கம் இல்லையென்றால் அவர்களுக்கு எதிராக நாவசைக்காமல் அதபுடன் ஒதுங்கி இருப்பது நலம்.

000

வலிமார்களின் உறைவிடத்தில் பெறும்  நன்மையை விளங்க இந்த இறைவசனங்களை சிந்தித்து பாருங்கள்.

அவருடைய (மரியம்(அலை) அவர்களுடைய) இறைவன் அவர் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்;. அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவர் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவரிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவர்(மரியம் அம்மா பதில்) கூறினார். (3:37)


هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்." (3:38)

மேற் கூறிய திருவசனங்களை கவனியுங்கள். மரியம் (அலை) அவர்கள் ஒரு நபியின் தாயாராக இருந்தாலும் அவர்கள் நபியல்ல. இறையருள் பெற்ற இறைநேசச் செல்வி – வலிய்யா ஆவார். ஜகரியா (அலை) அவர்களோ நபியாவார்கள், இருந்தும் மரியமவர்களிடத்தில் அல்லாஹ்வின் அருள் இறங்குவதை உணர்ந்த மாத்திரத்தில்  அந்த இடத்தில் இறைவனினிடம் தன் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள்.

வலிமார்களின் உறைவிடத்தில் இறைவனிடம் அருள் வேண்டுவதற்கு இந்த இறைவசனத்தை ஆதாரமாக கூறுகின்றார்கள் ஞானவான்கள்.

பாதுஷா நாயகம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியத்தின் பொருட்டால் சம்பூரணமான ஈமானுடன்  சீமானாக  நம்மை வாழச்செய்வானாக! ஆமீன்!

Post a Comment