தோழமையுடன்

Thursday, April 19, 2012

அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்

 கவலைப்பட வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் (9:40)

தவ்ர் மலைக் குகையை எதிரிகள் சூழ்ந்த போது தன்னுடன்  இருந்த நபி(ஸல்) அவர்களுக்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் சிறிது மனக்கலக்கம் அடைந்தார்கள். அந்த வேளையில் நாம் இருவர் மட்டுமல்ல நம்முடன் மூன்றாவதாக அல்லாஹ் இருக்கின்றான் என்று ‘இறைநெருக்கத்தை’(மஈயத்தை)ப் பற்றிய இறைநம்பிக்கையை பெருமானர் நினைவுறுத்திய வாசகம் தான் இது. 


இந்த  சம்பவத்தை தன் திருமறையில் சுட்டிக்காட்டி நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதால் அவர்கள் மீது ‘சகீனத்’ என்ற அமைதியை வழங்கியதாகவும், வானவர்களைக் கொண்டு அவர்களை வலுப்படுத்தியதாகவும் இறைவன் கூறுகின்றான்.

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது உதவி செய்த இறைவன் தூரமாக இல்லை எனும் இறைநம்பிக்கைதான். 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறை நம்பிக்கையிலேயே மிகவும் சிறந்தது நீ எங்கே இருந்தாலும் உன்னுடன் அல்லாஹ் இருக்கிறான் என்று நீ உறுதியாக அறிந்து கொள்வதாகும். (பைஹகி ஷரிப், அஸ்ஸில்ஸிலத்துல் ஸஹீஹா)

நன்றாக கவனியுங்கள்! நபி(ஸல்) அவர்களின் சொல்படி இது உறுதியாக அறிந்து கொள்ள வேண்டிய கல்வியாகும். 

அல் அகீதா அல் வாஸிதியா எனும் தன் நூலில் இப்னு தைமியா அவர்களால் கூட இந்த நபிமொழி குறிப்பிடப் பட்டுள்ளது.(தமிழில் :இஸ்லாமின் இறைகோட்பாடு)
ஆனால் இதற்கான இப்னு தைமியா அவர்களின் விளக்கம் தான் இறைஞானிகளின் விளக்கத்திலிருந்து பெரிதும் மாறுபடுகின்றது.

அந்த புத்தகத்தில் (பக்கம் 66) “ல்லாஹ் உங்களுடன் இருக்கிறான் என்பதன் பொருள், அவன் படைப்பினங்களுடன் கலந்து? இருக்கிறான் என்ற அர்த்தத்தில் அல்ல. சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சி என்பதுடன் அவனது படைப்புகளில் ஒரு சிறிய படைப்புமாகும். அது வானத்தில் இருப்பதுடன் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் இருப்பதாக கருதுகிறோம். அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான். அர்ஷின்மீது இருப்பதுடன் அவனது படைப்பினங்களையும் கண்காணிக்கின்றான். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறான். படைத்து நிர்வாகிக்கின்றான்என்றும்அவனது பார்க்கும், கேட்க்கும் ஆற்றலால் நம்முடன் இருக்கின்றான்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த நூலில் “அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்பதற்கு வானம் அவனை சுமந்துள்ளது என கற்பனை செய்ய கூடாதுஎன்றும்நிச்சயமாக அல்லாஹ்வின் குர்ஸி வானங்கள் பூமி அனைத்தையும் விட விசாலமானதுஎன்றும் இறுதியாகஅல்லாஹ்வின் தன்மைகளில் அவனுக்கு யாதொரு உவமையும் கூற முடியாது. அவன் அருகாமையில் இருப்பதுடன் உயர்ந்தும் இருக்கிறான். உயர்ந்து இருப்பதுடன் அருகாமையிலும் இருக்கிறான்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

எவ்வளவு தெளிவான குழப்பம்?

முதலில் அவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கூறுபவைகளை பார்ப்போம்:

ரஹ்மான் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான் (20:5)

வானத்திற்கு மேலிருப்பவன் உங்களை பூமியில் சொருகிவிட மாட்டான் என நீங்கள் அச்சமற்றிருக்கிறீர்களா?”(67:16)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:” என்னை நீங்கள் நம்ப மாட்டீர்களா? நான் வானத்திற்கு மேல் உள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிற்றே

மேல் கூறிய ஆயத்துகளும், நபிமொழியும் அல்லாஹ் அர்ஷில் இருப்பதை உறுதி செய்கின்றன. இதை மறுப்பது கட்டாயம் இறை நிராகரிப்பாகும்

ஆனால் அல்லாஹ் வானத்தின் மேல் - அர்ஷில் மட்டும் தான் இருக்கின்றான் என்பது தான் இஸ்லாமிய கொள்கையா? என்பது தான் கேள்வி.அதைப் பற்றி இப்போது நாம் பார்ப்போம்.

அர்ஷின் மேல் அல்லாஹ் இருக்கின்றான் என விளக்கும் இன்னொரு நபிமொழியிலேயே  அதன் இறுதியில்முஹம்மதின் (எனது) ஆன்மா எவனது கரத்தில் இருக்கிறதோ அத்தகையவன் (அல்லாஹ்வின் ) மீது சத்தியமாக பூமியின் கீழ்பக்கம் ஒரு கயிற்றில் வாளியை போட்டால் அது திட்டமாக அல்லாஹ்வின் மீதே விழுகிறதுஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறிய பின் அந்த விஷயத்திற்கு ஆதாரமாக இந்த ஆயத்தை ஓதி காண்பித்தார்கள்:

அவனே (ஒவ்வொரு வஸ்த்துவின்) ஆரம்பமாகவும், முடிவாகவும், வெளிரங்கமாகவும், உள்ரங்கமாகவும் இருக்கின்றான். அவன் எல்லா வஸ்த்துகளையும் அறிந்தவனாக இருக்கின்றான்.(57:3) ( நூல் : அஹமது, திர்மிதி மிஷ்காத் பக்கம் 510)

மேலே கூறிய நபிமொழியில் அர்ஷுக்கு மேல் அல்லாஹ் இருப்பதை கூறும் போது நபி(ஸல்) சத்தியமிட்டு கூறவில்லை. ஏனெனில் அந்த விசயத்தில் யாருக்கும் சந்தேகம் வராது. ஆனால் பூமிக்கு கீழ் இருப்பதை கூறும் போது சத்தியமிட்டதுடன், திட்டமாக என்று உறுதிபடுத்தியும் கூறுயுள்ளார்கள்.

அல்லாஹ் வானத்தில் மட்டுமே இருக்கின்றான் என்பவர்கள் வைக்கும் இன்னொரு நபிமொழி இது.

“நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணிடம்அல்லாஹ் எங்கேஎன்று கேட்டார்கள். “அவள் வானத்திற்கு மேல்என்று கூறினாள். நான் யார் என்று கேட்டார்கள். அவள்அல்லாஹ்வின் தூதர்என்று கூறினாள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இவளை உரிமை விட்டு (விடுதலை செய்து) விடுங்கள். நிச்சயமாக இவள் மூஃமின் என்று கூறினார்கள்” என்பதாகும்.

இங்கே சிந்திக்க வேண்டிய விஷயம்அல்லாஹ் எங்கே இருக்கின்றான்என்ற கேள்விக்கு மேலே பதில் அளித்தது நபி(ஸல்) அவர்களோ, அபூபக்கர் சித்தீக்(ரலி), உமர்(ரலி) போன்ற தெளிவான விளக்கம் பெற்ற நபித்தோழர்களோ இல்லை. இஸ்லாத்தின் ஆரம்ப நிலை நம்பிக்கையில் உள்ள ஒரு பெண்மணி.

ஆனால் இதே கேள்விக்கு அல்லாஹ் என்ன சொல்கின்றான்?

நபியே உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்) நிச்சயமாக நான் சமீபமாக இருக்கின்றேன்.(2:186)

இறைவனே சொன்ன பிறகு இதற்கு மேல் இந்த விசயத்தில் ஆதாரமே தேவையில்லை இருந்தாலும் மனதெளிவுக்காக இன்னும் கொஞ்சம் பார்ப்போம். “குர்ஆன், ஹதீஸ் ஒளியில் அல்லாஹ் நம்முடன்என்பது ஷைக் அப்துல் காதர் மன்பஈ (இர்பானி ஷாஹ் நூரி) அவர்கள் எழுதிய நூல். வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் அரபி கல்லூரியின் முன்னாள் முதல்வர் P.S.P.ஜைனுல் ஆபிதீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள் இந்த நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ளார்கள். மார்க்க அறிஞர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற அந்த நூலில் “ நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடனே இருக்கிறான்.(57:4) என்ற திருவசனத்தை இப்படி விளக்குகிறார்கள்.

இந்த வசனத்தில்  ‘அய்னமா என்ற வார்த்தையில் இடத்தை பொதுவாக்கியும் (உமூமே மகானி)குன்தும் என்ற வார்த்தையில் காலத்தை பொதுவாக்கியும் (உமூமே ஜமானி) கூறப்படுள்ளது. அதாவது நீங்கள் எந்த இடத்திலே எந்த நேரத்தில் எங்கிருந்தாலும் அவன் உங்களுடனே இருக்கிறான் என்பது பொருளாகும்.

இந்த ஆயத்தின் விரிவுரையில் தப்ஸீர் ஜலாலைன் ஹாஷியாவில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் உங்களுடனே எனது வெளிப்பாட்டைக் (ஜாத்தின் தஜல்லி) கொண்டு சதா இருக்கிறேன். உங்களை விட்டும் ஒரு சிறிதும் முந்தவோ, பிந்தவோ மாட்டேன். (என்பதாக  அல்லாஹ் கூறியுள்ளான்)

(தஃவீலூன் னஜ்மிய்யா ஹாஷியா தப்ஸுர் ஜலாலைன் பக்கம்-449) 

00000

இன்னும் இந்த நபிமொழிகளை பாருங்கள்:
நபித்தோழர்கள் சப்தங்களை உயர்த்தி திக்ரு செய்தபோது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களே! உங்களுக்கு இலகுவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக நீங்கள் காது கேளாதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை.  மிக நுட்பாமாக கேட்பவனையும், பார்பவனையுமே நீங்கள் அழைக்கின்றீர்கள். நிச்சயமாக நீங்கள் அழைப்பவன் உங்களில் ஒருவருக்கு அவரின் வாகனத்தின் கழுத்தைப் பார்க்கிலும் மிக அருகாமையில் இருக்கின்றான்.”  (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழ நின்றால் தனது முகத்தின் முன்போ, வலப்புறத்திலோ துப்ப வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அவரது முகத்துக்கு முன் இருக்கிறான். அவரது இடப்புறத்தில் துப்பிக் கொள்ளட்டும். அல்லது அவரது பாதத்திற்கு கீழ் துப்பிக் கொள்ளட்டும்.  (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).

மேற்கூறிய விளக்கங்களிலிருந்து நாம் எங்கிருந்தபோதும் அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்பது குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் தெளிவாகிறது. ஆனால்,

"இறை நம்பிக்கையிலேயே மிகவும் சிறந்தது நீ எங்கே இருந்தாலும் உன்னுடன் அல்லாஹ் இருக்கிறான் என்று நீ உறுதியாக அறிந்து கொள்வதாகும்" என்ற உயர்வான நபி வழி நம்பிக்கையை அடைவதற்கு ‘அல்லாஹ் நம்முடன் எப்படி இருக்கின்றான்’ என்ற இறைஞான விளக்கம் தேவை.

இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் சொல்லுகிறார்கள்:- “ யார் மார்க்க சட்டதிட்டங்களை படித்து கொண்டார். இறைஞானங்களை படிக்கவில்லையோ அவர் (ஜிந்திக்) வழிகெட்டவராகி விட்டார், யார் இறைஞானம் மட்டும் படித்துக் கொண்டார் ஆனால் போதுமான அளவு மார்க்க சட்டங்களை படிக்கைல்லையோ அவர் பாவியாகிவிட்டார். யார் இரண்டையும் படித்துக் கொண்டாரோ அவர்தான் சரியான பாதையில் செல்கிறார். (மிர்காத் ஷரஹ் மிஷ்காத்)


அத்தகைய சரியான பாதையை இறைவன் உங்களுக்கும் எனக்கும் அருள் செய்வானக! ஆமீன்!.


சகோதரர் தேரிழந்தூர் தாஜுதீன் ஃபைஜிக்கு அல்லாஹ் உடல்  நலத்துடன் கூடிய நீண்ட ஆயுளையும், நிறைவான நல்வாழ்வையும் வழஙகுவானாக! ஆமீன்!

தொடர்புடைய சுட்டி:

இறைவனுக்கு இடம் தேவையில்லை


உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment