தோழமையுடன்

Tuesday, March 2, 2021

பரிபூரணத்தை நோக்கிய யாத்திரை - கனவுக்குள் கனவு நாவலை முன்வைத்து - கீரனூர் ஜாகிர்ராஜா

கனவுக்குள் கனவுநாவல் தமிழுக்குப் புதுவிதமான வரவு. காரணம் இது பேசுகின்ற விடயம்சூஃபித்துவம். தமிழில் எழுதப்பட்ட முதல் சூஃபி நாவல் இது  என்று சூஃபியிசத்தில் தோய்ந்த எழுத்தாளராகிய நாகூர் ரூமி மதிப்பிடுகிறார்

முதலில் ‘கனவுக்குள் கனவு’ ஒரு நாவல் தானா என்னும் கேள்வியிலிருந்து தொடங்கலாம். இக்கேள்விக்கும் கூட அவசியம் என்ன என்று கேட்டால் – இது வழக்கமான தமிழ் நாவலாக இல்லை  என்பதே பதில். பின் நவீனம், அமைப்பியல், மாய யதார்த்தம் என்றெல்லாம் தமிழ் நவீன இலக்கியவாதிகள் பேசத்தொடங்கி ஆண்டுகள் பல கடந்துவிட்டன. ஆனாலும் யதார்த்தவாதமே இங்குக் கோலோச்சுவது மறுக்கவியலாத யதார்த்தம். யதார்த்தவாதப் படைப்புகளுக்குள்ளே மேற்சொன்ன உத்திகள் அவ்வப்போது தோன்றி அல்லது ஊடாடி மறைகின்றன தான். இந்திய நாவலாசிரியர்களில் பெரும்பான்மையினர் யதார்த்தவாத எழுத்தாளர்களே. பின் நவீனம், மாய யதார்த்தம் என்று எழுதப்படுகின்ற சில எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வாசகப் பொருட்படுத்தலின்றி தோல்வியையே தழுவியிருக்கின்றன. ஆனால் இம்முயற்சிகளை நாம் வளர்ச்சியாகக் கருதியே தீர வேண்டும்.



நூருல் அமீன் ஃபைஜி தனது முதல் நாவல் – முயற்சியை பரீட்சார்த்தமாகவே தொடங்குகிறார். சூஃபித்துவம் குறித்த தொடக்க நிலைப் புரிதல் கூட இல்லாத வாசகர்களுக்கு Auto suggestion, Self hypnosis, Self Image, Ontology எல்லாம் புதிதாகவும் புதிராகவுமே இருக்கும். எளிய தமிழ் வாசகன் முழுக்க புனைவு சஞ்சாரத்தில் மிதக்கப் பயிற்றுவிக்கப்பட்டவன். ஃபைஜியின் நாவலிலும் புனைவுலகமென ஒன்று இருக்கவே செய்கிறது. அவருக்குத் தமிழ் நவீன எழுத்துகளில் பரிச்சயமிருக்கிறது. ‘விவேகங்கள் கூடிய பின்பும் கீழ்மையிலே சிக்குண்டு கிடக்கிறோம். இந்த போதாமைக்கு எதிரான போராட்டத்தைத்தான் பரிபூரணத்தை நோக்கிய யாத்திரையாக நான் கூறுகின்றேன்’ என்கிற சுந்தர ராமசாமியின் மேற்கோளை நாவலின் 11-வது அத்தியாயத்தில் பயன்படுத்துவதன் மூலம் மெல்ல நமக்கு உணர்த்துகிறார். மட்டுமல்ல, இந்நாவலை ஃபைஜி ஏன் எழுதினார் என்பதற்குமே கூட சு.ரா.வின் மேற்கோள் பொருந்திப் போகிறது. இந்நாவல் வாசகப் போதாமைக்கு எதிரான போராட்டத்தைத்தான், பரிபூரணத்தை நோக்கிய யாத்திரையைத்தான் முன்வைக்கிறது.

 

நாவல் நிகழும் களம், மக்கள் தொகையில் கால்பங்குக்கும் மேல் இந்தியர்களைக் கொண்டதும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக விலையுயர்ந்ததுமான துபாய் நகரம்.

இம்தியாஸ் தன் அறையிலிருந்து வெளியேறி பால்கனியில் வந்து நின்று, ஈச்சை மரங்களின் அழகை ரசிப்பது நாவலுக்கு ஒரு நல்ல தொடக்கமென்றால் – இம்தியாஸின் இளைய மகள் ஹசீனா, புறா முட்டையிட்டிருப்பதை வாப்பாவிடம்  கூறி, அதைப் படம் எடுத்து ‘பிளாட் நம்பர் 102-இல் மணிப்புறாவின் குடியேற்றம்’ என முகநூல் நிலைத்தகவலிட்டு வைப்பதும், சில நாட்களுக்குள் புறாக்கள் பறந்துவிட, கூடு காலியாவதும், பிறகு அவள் அட்டையில் TOLET எழுதி கூட்டில் செருகுவதும் என ஒருவித கவித்துவம் இழையோடும் சிறுகதை அரங்கேற்றமே இந்நாவலுள் நிகழ்கிறது. சரி, நாவல் இப்படித்தான் நகரும் போலிருக்கிறது என நாம் நினைக்கையில், அன்பில் முகம்மது என்பவன் இம்தியாஸுக்கு போன் செய்து ‘எனக்கு ஃபனாவாக வேண்டும்’ என்கின்றான், ‘பாஸ்ட் புட் கடையில் ஒரு மசால் தோசை பார்சல் என்பது போல’ என்று இதைக் கேலி செய்யும் ஃபைஜி அடுத்தடுத்த அத்தியாயங்களில் ‘விஷயத்துக்கு’ வந்துவிடுகிறார். நமக்கோ தளிர்விட்ட மரத்துக்கு சலாம் கூறி, மரத்திடமிருந்து பதில் சலாமும் பெறும் ஜமீலைப் போன்ற அற்புதமான குழந்தைகளின் வழியாகவே கூட இந்நாவல் சொல்லப்பட்டிருக்கக் கூடாதா என்னும் ஏக்கம் தோன்றிவிடுகிறது. ஆபரேஷன் செய்ய வந்தவர் கத்தியை எடுக்காமலிருப்பதாவது.


ஆறடி உயரம், பொன்னிறம், கம்பீரக்குரல், அழகிய தாடி என ஷெய்குவை அறிமுகப்படுத்துவது சரி. அது என்ன எழுத்தாளர் பாலகுமாரனைப் போல முகச்சாயல்? இது மட்டுமல்ல – இந்திரா காந்தியைப் போல முன் நெற்றியில் சற்றே இளநரை, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியைப் போன்ற கவர்ச்சிகரமான தோற்றம், எழுத்தாளர் ஆதவன் ஜாடை என்றெல்லாம் சில பாத்திரங்களை அறிமுகப்படுத்துவது ஆசிரியர், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சுஜாதாவின் கதாபாத்திரங்கள் கணேஷ் – வசந்தையும் விட்டுவைக்கவில்லை. நியாஸ் என்னும் பாத்திரத்தை ரஜினி ரசிகனாகக் காட்டுகிறவர், ஒரு அத்தியாயத்தில் அனுஷ்கா, ஹாரிஸ் ஜெயராஜ்ஜையும் சுட்டுகிறார். இவையெல்லாம் கசப்பு மருந்தின் மேலே தடவப்பட்ட இனிப்புகளா? நல்ல படம் ஒன்றை எடுத்துவிட்டு, வணிகத்துக்காக சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி நடனத்தை இடைச்செருகும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் உத்தியா? புரியவில்லை.


ஆன்மிகத்தை அடிநாதமாகக் கொண்ட நாவல் எழுத விஷய ஞானமும், தெளிவும் துணிச்சலும் வேண்டும். ஜெயமோகனுக்கு ஒரு வாசகர் வட்டம் இருந்ததால், அவரால் விஷ்ணுபுரமும், வெண்முரசு வரிசை நாவல்களும் எழுத இயன்றது. நூருல் அமீன் ஃபைஜி துணிந்திருக்கிறார். தமிழில் எழுதும் இஸ்லாமிய எழுத்தாளர்களில் பலருக்கும் அவர்களுடைய ஆன்மிகத்தை எப்படி வாசகனுக்குக் கடத்துவதென்பதில் குழப்பம் இருந்தது. மத வரையறைகளுட்பட்ட, ஒழுக்கம் போதிக்கின்ற ஆக்கங்களை அவை சரியாகச் சித்தரிக்கப்படாத காரணத்தால் வாசகர்கள் தொடர்ந்து புறக்கணிக்கவே செய்தனர். ஒரு பிரத்தியேகமான ஆன்மிகப் புனைவை வெற்றிகரமாகத் தருவதற்கு எந்த சமூக எழுத்தாளனாலும் இன்றுவரை இயலவில்லை.


கனவுக்குள் கனவு நாவலில் ஷெய்கு ‘வகுப்பு’ எடுக்கிறார். வகுப்பு நமக்கொன்றும் சலிப்பூட்டவில்லை. வாசகர்களுக்கு?


போர்ஹேஸ், காஃப்கா, மார்க்வேஸ், கால்வினோ, தல்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி போன்றோரை உள்வாங்கிக்கொண்ட தமிழ் நவீன அறிவு ஜீவச்சமூகம் சூஃபித்துவத்தை உள்வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். வெறுமனே, தோன்றியபொழுது சூஃபிக்கதைகளை, கவிதை வரிகளை தொட்டுக்காட்டுவதுடன் ஒதுங்கிக்கொள்வது நுனிப்புல் மேயும் சமாசாரமாகிவிடும். நூருல் அமீன் ஃபைஜி போன்றவர்கள் வாசக பொருட்படுத்தலுக்கு உள்ளாவதால் மட்டுமே இது சாத்தியமாகும்.


கனவுக்குள் கனவு நாவலில் குறிப்பிட்டுச் சொல்ல மற்றொரு விடயம், அது தரும் துபாய் நகரத்தின் கலவையான சித்திரங்கள். 95 சதவிகிதம் எண்ணெய் வளம் சாராத ரியல் எஸ்டேட், டிரேடிங் வங்கிகள் கடன் வழங்கும் நிறுவனங்கள் சார்ந்தே துபாய் நகரின் பொருளாதாரம் இருக்கிறது என்கிற தகவல் வியப்பூட்டுகிறது. லெஹ்மன் பிரதர்ஸ் என்னும் முதலீட்டு வங்கியின் வீழ்ச்சியுடன் தொடங்கிய நிதி நெருக்கடியிலிருந்து துபாய் மீண்டு, அசாதாரண வளர்ச்சி பெற்ற வரலாறும் இந்நாவலில் உண்டு. அமீரகத்தின் மொத்த மக்கள் தொகை ஒரு கோடிக்கும் குறைவு. இதில் சுமார் 15 சதவிகிதம் பேர் மட்டுமே அதன் குடிமக்களாகிய அரேபியர். 85 சதவிகிதம் பேர் வெளிநாட்டுக்காரர்கள். இவர்களுடைய குடியிருப்பு விசா, சுற்றுலா விசா, லைசென்ஸ் கட்டணங்கள் இவற்றைக்கொண்டே துபாயின் பொருளாதாரம் உச்சத்தை அடைந்தது போன்ற தகவல்கள் அரியவை.


முற்றிலும் புதிய வாசிப்பனுபவத்தை வழங்கிய இந்நாவல் வாசித்து வரவேற்கப்பட வேண்டும். இது ஒரு இஸ்லாமிய நாவல் என்பதைக் காட்டிலும் இந்திய நாவல் என்றறியப்பட வேண்டிய அவசியம் உள்ளது.


நூருல் அமீன் ஃபைஜி வெற்றி தோல்வி குறித்துச் சிந்திக்காமல், இதே சூஃபித்துவத் தளத்தில் குறிப்பாகப் புனைவின் வழி தொடர்ந்து இயங்க வேண்டும். பரிபூரணத்தை நோக்கிய யாத்திரை என்பது அதுவாகவே இருக்கமுடியும். வாழ்த்துக்கள்.



 கனவுக்குள் கனவு (நாவல்)

நூருல் அமீன் ஃபைஜி

புல்லாங்குழல் வெளியீடு – நாகை

பக்கம் – 212. விலை ரூ 250/-