தோழமையுடன்

Monday, February 27, 2012

இறைநேசர்களை நேசிப்போம்! இறைவனை மட்டுமே வணங்குவோம்!

                   யா அல்லாஹ்! உன்னிடம் உனது நெருக்கத்தையும், உலகிலே அகக்கண்ணால் உன்னைக் காண்பதையும், மறுமையில் புறக்கண்ணால் உன்னைக் காண்பதையும் உன்னிடம் வேண்டுகின்றேன்! 
                   - சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்)
  
எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான் பத்ஹுர்ரப்பானியில் (பக்கம்87ல்) சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள்


படித்தவுடனே அதிர்ச்சி ஏற்படுத்தும் இவ்வளவு கடுமையான வார்த்தையை அவர்கள் ஏன் சொல்கின்றார்கள்?

நான் அடிப்படையில் காதிரியா, ஷிஸ்தியா ஆன்மீக பாதையில் ஓர் மாணவன். எனது ஆன்மீக குருநாதரின் குருவான நூருல் மஷாயிக் ஹஜ்ரத் நூரிஷாஹ்(ரஹ்) கௌதுல் அஃலம் முஹய்யத்தீன் அப்துல் காதர் ஜெய்லானியின் 21 தலைமுறை பேரராவார்கள். இந்த மாதம்  கௌதுல் அஃலம் முஹய்யத்தீன் அப்துல் காதர் ஜெய்லானியை கொண்டாடும் மாதம் என்பதால் அவர்களின் அருள் நிரம்பிய போதனைகளை நாமும் நினைவுபடுத்தி, பிறரையும் நினைவு கூறச் செய்து கொண்டாடுவோம் என ஆவல் மிகுந்தது. கவுது நாயகத்தின் பிரசங்கங்களின் தொகுப்பான மாபெரும் தவசீலர் முஹய்யத்தீன் ஆண்டகை (மொழிபெயர்ப்பு ஆர்.பி.எம் கனி) புத்தகத்தை எப்போதும் தன்னுடன் வைத்திருந்து  ஓய்வு நேரங்களில் எல்லாம் தன் காதலியின் காதல் கடிதத்தை படிப்பது போல் படிக்கும் என் அலுவலக நண்பர் (அதிரையை சேர்ந்தவர். வழக்கறிஞர். பல காலம் சவுதியில் வேலை பார்த்தவர். கராத்தேயில் பிளாக்பெல்ட் செகண்ட் டான். பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் வெளியிடவில்லை.) அவர்களை அணுகி  புத்தகத்தை இரண்டு நாட்களுக்கு இரவலாக பெற்றுக் கொண்டேன். எல்லாம் வல்ல இறைவன் மொழிபெயர்ப்பாளர் ஆர்.பி.எம் கனி, எனது நண்பர் ஆகியோருடன் நமக்கும் கவுதுனா அவர்களின் பொறுட்டால் எல்லா நலனும் கிருபை செய்வானாக! ஆமீன்!

 அவசர அவசரமாக நான் பொறுக்கி  எடுத்த சில ஞான முத்துகளை சின்ன சின்ன விளக்கங்களுடன் உங்களின் அன்பான பார்வைக்கு வைக்கின்றேன்.  

(கவுதுனாவின் வார்த்தைகள் மெருண் கலரில் போல்ட் செய்யபட்டுள்ளது)

0 0 0 0

எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான் (ப.ர.P87) என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள்

படித்தவுடனே அதிர்ச்சி ஏற்படுத்தும் இவ்வளவு கடுமையான வார்த்தையை கவுதுனா ஏன் சொல்கிறார்கள்?

குஃப்ருஎன்பதற்கு மறைக்குதல் , திரையிடுதல் என்பது பொருள்.

இறைவன் சிருஷ்டிகளுடன் இருக்கும் மஈத்தை’ பிரியா நிலையை விட்டும் எவரது அகக்கண்கள் திரையானதோ, அவர்கள் உள்ளத்தில் விழுந்த திரையால் இறைநெருக்கத்தை நிராகரிக்கும் நிலையையே அடைகிறார். இதையே கவுதுனா காஃபிராகிவிட்டான் அதாவது திரையுண்டவனாக ஆனான் என சொல்கிறார்கள்.

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

நீங்கள் எங்கிருந்த போதும் உங்களுடன் நான் இருக்கின்றேன்என இறைவன் தன் திருமறையில் சொல்லி இருக்க எவர்கள் படைப்பினங்களுடன் படைத்த இறைவன் உடன்இருப்பதை மறுக்கிறார்களோ அவர்கள் படைப்பினங்களில் காணப்படும் தேவைகளை நிறைவேற்றக் கூடிய  ‘உலூஹிய்யத்எனும் தன்மையை படைப்பிற்கே சொந்தமாக்குவார்கள். அதனால் இவர் தன் தானே தான் இந்த நலனை நமக்கு செய்தார் என நினைப்பார் இது தான் இணைவைக்குதல் எனும் கொடிய பாவத்தின் தலைவாசல்.      ( உலூஹிய்யத் பற்றி விளக்கம் வேண்டின் தவ்ஹீதே உலூஹிய்யத்  –  நபி வழி வந்த ரகசியம்  இடுகையை பார்வையிடுங்கள்).

நமது சகல கேடுகளுக்கும் மூலக்காரணம் இறைவனை விட்டுத் தூரமாகி கிடப்பதும், இறைவனல்லாதவற்றை பற்றிப் பிடித்து கொண்டிருப்பதுமேயாகும்”  என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள்.



இறைநெருக்கத்தை விளங்காத அறியாமையால் தவறு செய்வதை கண்டிக்கும் கவுதுனா அதை அறியும் பேறுபெற்றும் தவறு செய்பவர்களை இப்படி கண்டிக்கிறார்கள்.

 “நமது இறைவனோ சகலபடைப்பினங்களின் மீது சாட்சியாய் இருக்கிறான்.

 எங்கும் இருக்கிறான்.

 சர்வ வஸ்துகளையும் கண்காணிப்பாளனாய் இருக்கிறான்

எல்லா வஸ்துகளின் சமீபத்திலும் இருக்கிறான்.

அத்தகைய ரப்பைவிட்டும் நீங்கள் தேவையற்றவர்களாய் இருக்க முடியுமா? அப்படி இருக்கையில் (மனதால்) அறிந்தபின் (செயலால்) அவனை மறப்பதெப்படி? அல்லாஹ்வை அறிந்த பிறகும் அவனுக்கு எதிரிடை செய்யும் உங்களின் நிலமை கைசேதத்துக்குரியதாகும். அவனிடமிருந்து திரும்பாதீர்கள். ஏனெனில் அது கொண்டு சர்வ நன்மையும் இழந்தவர்களாவீர்கள்என்கின்றார்கள்.

ஆரம்பப் பாடமாக உலகின் ஒவ்வொரு சிருஷ்டிகளின் இயக்கத்திலும் இறைவனின் சக்தியை முன்னோக்க பயிற்சி அளிக்கிறார்கள் ஆன்மீக குருநாதர்கள். ஆனால் நமது மனமோ சிறிது நேரம் அதில் கவனம் செலுத்தி விட்டு பெரும்பொழுதை மறதியிலேயே கழிக்கிறது

ஆன்மீகப்பயணமென்றால்  என்ன என கேட்பவர்களுக்கு அது பற்றிய  சிறு விளக்கம்.

ஆன்மீக பயணத்தைசுலூக்என்பார்கள்.

ஆன்மீகவாதியை ஸாலிக்பயணி என்பார்கள்.

இது என்ன பயணம்?

ஃப ஃபிர்ரூ இலல்லாஹ் என குர்ஆனில் குறிப்பிடபடும்  அல்லாஹ்வை நோக்கிய பயணம்.

பிடரி நரம்பை விட சமீபமானவனை நோக்கி பயணம் எதற்கு?

இது உடலின் இடப்பெயர்ச்சியல்ல. மனதின் இடப்பெயர்ச்சி.

இறைவனை தூரமாக எண்ணும் கற்பனை தூரத்தை இறைஞாபகம், தியானம் கொண்டு கடக்கும் பயணம்.

 ‘இஹ்தினஸ் சிராத்தல் முஸ்தகீம்என்பதற்கு நேர் வழியில் செலுத்தக் கூடியவன் என்பது பொருள் என்பார்கள்.

ஸுலூக் என்பது அவனை நம் வாழ்வின் துணையாக்கி கொள்ளும் பயணம்

இந்த பயணத்தின் இலக்கும், வழித்துணையும் நம்மை படைத்தவன் தான் என்பது ஓர் அதிசயம்.

அவன் உடன் இருக்கிறான் என்ற உணர்வை முழுமையாக்கிக் கொண்டு அவனுக்கு முற்றிலும் அடிபணிந்து வாழ்வது தான் இந்த பயணத்தின் இறுதி லட்சியம்.

ஆரம்பத்தில் அவன் திருநாமத்தை (இஸ்மை)..

அடுத்து அவன் சக்தியை (குவ்வத்தை)..

அடுத்து அவன் பண்புகளை (சிஃபத்தை)…

இறுதியில் அவனையே அவனை துணையாக கொள்ளும் பயணம் தான் ஆன்மீகம்.
ஆனால் அதற்கு எத்தனை பொறுமை வேண்டும்?

அன்பர்களே! நாம் ஷைத்தானை வெறுப்பதாக சொல்லிக் கொண்டாலும், நமக்கு நம் மனம் போன போக்கில் சந்தோசம் கொண்டாடும் ஷைத்தானிய தோழமையில் இருக்கும் வாழ்க்கை பயணம் தான் மிகவும் உவப்பாயிருக்கிறது. அல்லாஹ்வின் சிந்தனையில் அவனுடன் பொழுதை பயனுள்ளதாக கழிப்பது கசப்பாக இருக்கிறது. அல்லாஹ் தான் நம்மை காப்பாற்றி அவனோடிருக்க அருள் செய்ய வேண்டும். ஆமீன்!


அவனுடன் பொறுமையுடன் இருங்கள். அவனை விட்டும் பொறுமையில்லாதவர்களாய் இருக்க வேண்டாம்என சொல்லுகின்றார்கள் கவுதுனா. எதற்காக அந்த பொறுமை தெரியுமா?. “எவர்கள்ஸாபிர்களாக (பொறுமையுள்ளவர்களாக) இருக்கிறார்களோ அவர்களேகாதிர்களாக (சக்தியுடைவர்கள்) ஆவார்களென்பது உங்களுக்கு தெரியாதா? (ப.ர. 62,-63) என கேட்கின்றார்கள்.


அல்லாஹ்வை அடைந்து, அவனைக் கொண்டு வாழும் நற்பேறை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக!


யாஅல்லாஹ்! நீதான் என்னுடய பலம். நீயே என்னுடைய உதவி. உன்னைக் கொண்டே உலாவி வருகின்றேன். உன்னைக் கொண்டே போரிடுகின்றேன். உன்னைக் கொண்டே (தாக்க வரும் எதிரிகளை) வெட்டுகின்றேன்.” என்பது நபித்தோழர்களுக்கு பெருமானார் (ஸல்) காட்டித் தந்த  திக்ராக, துஆவாக இருக்கிறது. (அபு தாவுது, திர்மிதியில் உள்ளதாக இந்த துஆ சவுதி அரசால் இலவசமாக வெளியிடப்பட்ட முஸ்லிமின் அரண் என்ற புத்தகத்தில் பக்கம் 85ல் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.)

அல்லாஹ்வை அடைவது என்றால் என்ன?

 “அல்லாஹுத் தஅலா அளவில் சேர்தல் என்று இறைஞானிகள் (ஆரிபீன்கள்) சொல்வது அவனைப்பற்றி உண்மையான அறிவாக அறிந்து கொள்ளுதல் என்பதேயாகும். இன்றேல் அவன் ஒன்றோடு சேர்வதை விட்டும், அவனோடு ஒன்று சேர்வதை விட்டும் அல்லாஹ் தூயவனாயிருக்கிறான்என இப்னு அதாவுல்லா ஸிக்கந்தரி (ரஹ்) தங்கள் ஆன்மீக அறிஞர்களிடையே பிரபல்யமான  ‘ஹிகம்என்ற சங்கைமிகும் நூலில் கூறியிருக்கிறார்கள்.  

அல்லாஹ் உடன் இருப்பதை அறிந்து கொள்வதுடன் அந்த ஞான உணர்வில் கூடியவரை நிலைத்திருக்க முயல வேண்டும்

பயிற்சி இல்லாத ஆன்மீகத்தை செக்குமாட்டுக்கு ஒப்பிடுவார்கள் என் குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்). எனது ஆன்மீக சகவாசத்தின் ஆரம்பத்தில்அல்லாஹ்வுடன் எவ்வளவு நேரம் இருந்தீர்கள்என எங்களைக் கேட்பார்கள் சங்கை மிகும் என் குருநாதர்.
0 0 0 0
நமது ஆன்மீக மார்க்கம் (பயணம்) வழி தவறிப்போவதற்கான காரணத்தை எளிமையாக வகைப்படுத்துகிறார்கள் கவுதுனா.

உங்களுடைய மார்க்கம் (தீன்) சீர்தவறி போவது நான்கு காரணங்களாலேயாகும்.

முதலாவது, நீங்கள் அறிந்திருப்பதை அனுஷ்டிக்காமலிருப்பதாகும்

 இரண்டாவது, நீங்கள் அறியாதிருப்பதை அனுஷ்டிப்பது

 மூன்றாவது, அறியாததை அறிய முயற்சிக்காது அறிவீனர்களாயிருப்பது

 நான்காவது, மற்றவர் அறிய முயற்சிப்பதை தடுப்பது”. (ப.ர-P 63)

இதில் நாம் எந்த வகையில் இருக்கிறோம் என சிந்தித்து அந்த சீர்கேட்டை நீக்க முயல வேண்டும்.
 
இறுதியாக கவுதுனாவின் இந்த வார்த்தைகளை உங்கள் முன் வைக்கின்றேன்.

விழியுங்கள்!, உங்கள் இதயம் அவன்பால் ஓரடி எடுத்து வைத்தால், அவன் உங்கள் பக்கம் பல அடிகள் நெருங்குபனாவாக இருக்கின்றான் என்று நபிமொழி சாரத்தை நம் சிந்தனைக்கு தருகிறார்கள் இறையருட் கொடையாய் வந்த வலிகள் கோமான்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் இந்த விழிப்புணர்வை (Divine Awareness) வழங்குவானாக! ஆமீன்!. 

நன்றி!: இந்த கட்டுரையை மேற்பார்வையிட்டு உதவிய மௌலவி சஃபியுல்லாஹ் ஜாமலி, M.A.M.Phil அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் பேரருள் செய்ய இறைஞ்சுகிறேன்!.ஆமீன்!




Post a Comment