தோழமையுடன்

Tuesday, January 4, 2011

சூஃபி ஞான அகமியங்களின் திறவுகோல்


“வீட்டின் வாயிலில் ஏகத்துவ கொள்கையும் (தவ்ஹீதும்) வீட்டுகுக்குள்ளே இணைவைப்பும் (ஷிர்க்கும்) இருப்பின் என்ன பயன்? நாவில் சுத்தமும் உள்ளத்தில் அசுத்தமும் இருந்தென்ன பயன்? வாய் இறைவனுக்கு நன்றி சொல்வதாயும் மனம் இறைவன் மீது குற்றம் காணுவதாயும் இருந்தால் என்ன பயன்?” இது யாருடைய வாசகம் என்பதை அறிந்து கொள்ளுமுன் …..
இந்த வாசகத்தை எப்போது நான் படிக்க நேர்ந்தது என்பதை எண்ணிப் பார்கின்றேன்.
நல்ல குடும்பம், இனிய மனைவி, அன்பு நண்பர்கள், வருமானத்தை அள்ளித் தரும் உயர்ந்த வேலை, கண்ணியமான வாழ்க்கை என இனிமைக்கு இனிமையாய் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த போது.....
தகுதியற்ற எனக்கு இத்தனை இனிமையை அள்ளி வழங்கிய இறைவனை நோக்கி காதலான என் தேடல் அதிகரித்தது. நல் வழிகாட்டும் ஆன்மிக குருவுக்காக மனம் ஏங்கியது. யார் தேடலைத் தந்தானோ அந்த இறைவனே மகத்தான ஒரு குருவின் தோழமையான வழிகாட்டல் எனும் பாக்கியத்தையும் அருளினான்.


ஆன்மீக தேடலுக்கும் என் குருவை அடைவதற்கும் இடைப்பட்ட காலத்தில் எனக்கு மிகுந்த மன அமைதியையும் ஆன்ம திருப்தியையும் தந்தது கௌதுல் அஃலம் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்களின் பிரசங்கங்களின் தொகுப்பாக மூன்று பாகங்களாக வெளிவந்த "மாபெரும் தவசீலர் முஹைய்யத்தீன் ஆண்டகை" என்ற நூல் தான். R.P.M. கனி B.A.B.L., அவர்களால் தொகுக்கப்பட்ட அருமையான ஞான பொக்கிசம் அந்த நூல். இறைஞான பொக்கிசங்களின் திறவு கோல் அது.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள கேள்வியை முன் வைத்தவர்கள் இறை நேச செல்வர்களின் தலைவராக இறைநேசர்களால் கொண்டாடப்படும் கௌதுல் அஃலம் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்களே ஆவார்கள்.
சஞ்சலமான மனநிலையில் இறைவனின் திருபெயரை கொண்டு துவங்கி ( பிஸ்மி சொல்லி) அந்த புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து படிப்பேன். என் சஞ்சலம் தீர்ந்து ஒரு தெளிவு ஏற்படும். “அண்ணன் பேருக்கு ஒரு சீட்டை எடு என கேட்டு கிளி எடுக்கும் சீட்டை வைத்து ஜோசியன் சொல்லும் விளக்கம் போலவா?” என்ற கிண்டல் வேண்டாம். இதை போலவே வேறு பலரும் படித்து பலன் பெற்றதாக கூறினார்கள்.
“இணங்கு மெய்ஞ் ஞான பேரின்ப கடலின்
 இன்னமு தெடுத் (து) எமக்கு அளிப்போன்” 
என்கிறது குணங்குடி மஸ்தான் சாஹிப் அவர்களின் பாடல். குணம்குடியார் குடம் குடமாக பருகியிருக்கலாம். கொஞ்சம் சிரத்தையோடு அந்த புத்தகத்தை படித்தால் மேற் கூறிய அந்த நூலின் மூலம் அந்த இன்னமுதின் வாடையையாவது நம்மால் நுகர முடிகிறது.
மெய்ஞானம் என்றவுடன் ஏதோ வானில் பறக்கும் வித்தை என கருத வேண்டாம். மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்தான நபி வழி வாழ்க்கை தான் அதன் அடிப்படை.
முஹய்யத்தீன் என்றால் மார்க்கத்துக்கு உயிர் கொடுத்தவர் என்று பொருள். அவர்கள் பிறந்த போது ஒரு இஸ்லாமிய அரசல்ல மூன்று இஸ்லாமிய தலைமை பீடங்கள் ஆட்சி செலுத்தி கொண்டிருந்தன ஆனால் அளவுக்கு மிஞ்சிய சுகபோகத்தால் இஸ்லாத்தின் உயிரான கொள்கைகள் மறைந்து சடங்குகள் மட்டுமே மலிந்திருந்தது. 
அந்த காலத்தில் இஸ்லாத்தை உயிரூட்ட இறைவன் முஹய்யத்தீன் ஆண்டகையை தேர்ந்தெடுத்து கொண்டான். அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்தார்கள். எழுபதினாயிரம் பேர்களுக்கும் மேல் கூட்டம் கூடியது. இரவில் அவர்கள் சொற்பொழிவை கேட்பதற்காக பகலிலேயே மக்கள் வந்து இடம் பிடித்து கொள்வார்கள். கூட்டத்துக்கு வெளியே இடம் கிடைக்காதவர்கள் தாம் ஏறி வரும் ஒட்டகம் அல்லது கோவேறு கழுதைகளில் அமர்ந்து இருந்த படியே சொற்பொழிவுகளை கேட்பார்கள். 
ஒலி பெருக்கி இல்லாத அந்த நாளில் அவர்கள் சொற்பொழிவை அருகில் இருந்தவர்கள் கேட்டதை போல தூரத்தில் இருந்தவர்களும் தெளிவாக கேட்க முடிந்தது ஒரு மகத்தான அற்புதம். "அவர்கள் பேசும் நாவாக நான் இருக்கின்றேன் அவர்கள் என்னை கொண்டே பேசுகின்றார்கள்" என தனது நெருக்கத்தை அடைந்தவர்களை பற்றி இறைவன் குறிப்பிடும் பொது இது ஒரு பெரிய விஷயமே அல்ல. 


இது மட்டுமல்ல அவர்களுடைய வாழ்வில் தொடற்சியாக அற்புதங்கள் நடந்து கொண்டே இருந்தன. இப்னு தைமிய்யா போன்ற சூஃபித்துவத்திற்கு எதிரான அறிஞர்கள் கூட கௌதுனாவின் வாழ்க்கை அற்புதங்களால் நிரம்பியது என ஒத்துக் கொள்கிறார்கள். அவர்களை பற்றி எழுதிய ஆங்கில நூல்கள் அனைத்துமே a saint of incessant miracles என்று குறிப்பிடத் தவறுவதில்லை என நாகூர் ரூமி தன் சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் எனும் நூலில் குறிபிடுகின்றார்.

அவர்களின் அற்புத உபதேசங்களின் சில துளிகள்: 
அவர்கள் துறவை உபதேசிக்கவில்லை.உலக வாழ்வின் வெற்றியை உதறிட சொல்லவில்லை. உலக வெற்றியை ஆன்மீக வெற்றிக்கு உதவும் படிக்கல்லாக்கிக் கொள்ள உபதேசித்தார்கள்.
 “உன் வாழ்கையை நடத்த ஏதாவது தொழில் புரி!. அப்போது தான் உன் சிந்தனையை ஒழுங்கு படுத்த முடியும். தொழிலும் உழைப்பும் இறைவனிடமிருந்து வாழ்வாதாரங்களை(ரிஜ்கை) வாங்கி கொள்ளும் வாயிற்படிகளாகும். அவற்றின் மூலம் சிருஷ்டிகளின் தயவை நாடுவதிலிருந்து அப்பாலாகிக் கொள்ளலாம்."
அதே நேரத்தில் உலக வெற்றி எந்த வட்டத்துக்குள் இருக்க வேண்டும் என்பதையும் உபதேசித்தார்கள்.
"அன்பர்களே உலகத்தை தேடுவதில் இரவின் இருட்டு வேளையில் விறகு பொறுக்க சென்றவன் போல் ஆகி விடாதீர்கள்.....
உங்களுடைய அனைத்து செயல்களும் ஏகத்துவம் (தவ்ஹீது), இறை சட்டம்(ஷரீயத்), பயபக்தி (தக்வா) ஆகிய கதிர்களைக் கொண்ட சூரிய வெளிச்சத்துடனல்லவோ நடை பெற வேண்டும்."
நம் கனவுகள் ஈடேற யாருக்குத் தான் ஆசை இல்லை. அதை அடையும் வழியை அவர்கள் அற்புதமாக கூறும் விதம் பாருங்கள்:
“உங்கள் முன்பு ஒரு கதவும் அடைபடக் கூடதென்ற விருப்பம் உங்களுக்கிருப்பின் இறைவனுக்கு பயப்படுங்கள். இறையச்சம் என்பதே சர்வ கதவுகளையும் திறக்கும் திறவு கோலாகும். இதற்கு 'பயபக்தி உடையவர்களுக்கு அறியாப்புறத்திலிருந்து வாழ்வாதரங்கள் அளிப்பதாக' கூறும் இறைவசனத்தை குறிப்பிடுகின்றார்கள்."
ஏகத்துவம்(தவ்ஹீது), இறையச்சம்((தக்வா), இறைவனை சார்ந்திருத்தல் (தவக்கல்) என்பதை அடைய நபி வழி பேணும் ஞானகுருவின் சகவாசம் தேவை.

குருவிடம் செல்லும் பொது காலி பாத்திரமாக செல்லுங்கள் என்பார்கள் இமாம் ஷாஃபி (ரஹ்). அதையே இப்படி சொல்கின்றார்கள் கௌதுல் அஃலம்.
“என்னிடம் வரும் போது உங்கள் அறிவு, அனுஷ்டானம், பேச்சு, வம்சம், சொத்து, சுகம், குடும்பம் இவற்றையெல்லாம் மறந்து விட்டு வர வேண்டும். என் முன்பு இறைவன் அல்லாத சகலவற்றையும் துறந்த நிர்வாணிகளாக நிற்க வேண்டும். அப்போது தான் இறைவன் உங்கள் மீது தன் சமீபத்துவம், அருள், நற்பேறு ஆகியவற்றின் உடைகளை அணிவிப்பான். இவ்விதம் என்னிடம் வந்து என் வாயிலாக சீர்திருத்தம் பெறுவீர்களாயின், கவலையின்றி காலையில் எழுந்து கவலையின்றி மாலையில் கூடு திரும்பும் பறவைகளைப்போல ஆகி விடுவீர்கள்."
இது போன்ற விலை மதிக்க முடியாத உபதேசங்கள் நிரம்பிய இந்த புத்தகத்தை வாங்கி சாம்பிராணி போட்டு பத்திரமாக அலமாரியில் வைத்து விடாமல் படித்து பயனடைய இறை கருணையை வேண்டுகின்றேன்.

Post a Comment