தொழுகை “பாவம்” எனும் அழுக்குகளையும்
வேற்றுமையினால் (கைரியத்*) ஏற்படும் மனகளங்கங்களையும் அல்லாஹ்தாலாவின் தரிசனையை விட்டும்
தூரப்படுத்தும் சிருஷ்டிகள்(அனைத்தையும்) விட்டு மனதை பரிசுத்தபடுத்துகிறது.
வேற்றுமைகளை விட்டும் சுத்தமாகும்
தருணம் கல்பின் திரைகள் நீங்கிவிடுகின்றன.- (நூல்:ஹிகம்).
"கைரியத*" என்பது இறைவனை விட்டு மனதால் பிரிந்து தனியே தன்னை விளங்கும் நிலையை குறிக்கும். இதை பற்றிய ஆழமான விளக்கத்தை முறையான இறைஞான அறிஞர்களை அணுகி பெறுதல் நலம். இந்த கட்டுரையை விளங்க இந்த அளவு விளக்கமே போதுமானது.
0 0 0
இந்திய பெருங்கடலில் உள்ள சிசெல்ஸ் தீவில்
நான் வேலை செய்து கொண்டிருந்த போது என் சங்கைக்குரிய குருநாதர் ஃபைஜிஷாஹ்(ரஹ்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார்கள்.
அப்போது அவர்கள் செய்யும் வணக்கங்களை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. தனியே தொழக்
கூடிய தொழுகையில் வேத வசனங்களை ஓத ஆரம்பித்தால் உலகை மறந்த பேரின்பத்தில் லயித்து
விடுவார்கள். இறைவேதத்தின் ஆழமான அர்த்தங்களில் மூழ்கிய பேரின்ப நிலையில் ஒவ்வொரு வசனத்தையும் மீண்டும் மீண்டும் பல முறை ஓதுவார்கள். அவர்கள் தொழுது முடிக்க வெகு நேரமாகிவிடும். இதை பல முறை பார்த்து வியந்திருகின்றேன்.
அப்போதெல்லாம் அவர்கள் இவ்வளவு லயித்து தொழுகின்றார்கள். நாம் எத்தனை
அலங்கோலமாய் தொழுகின்றோமே! அதன் காரணம் என்ன என்ற சிந்தனை என்னை வாட்டும்.