தோழமையுடன்

Saturday, December 18, 2010

ரகசிய ரோஜா மவுலானா ரூமி(ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை “ரகசிய ரோஜா” என்ற பெயரில் தமிழில் தந்திருக்கிறார் சகோதரர் ரமீஸ் பிலாலி. அவர் ஊரில் என் முகவரிக்கு அனுப்பிய புத்தகம் துபாய் வந்து சேர்ந்து இன்றுதான் படிக்க வாய்த்தது.ரகசிய ரோஜாவைப் பற்றி பார்க்கும் முன் ரமீஸ் பிலாலியைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்  நாகூர் ரூமியின் வார்த்தைகளில். எனது கருத்தை விட இந்த தமிழ் பேராசியரைப் பற்றி ஆங்கிலப் பேராசிரியர் டாக்டர் நாகூர் ரூமி கூறுவது தானே பொருத்தமாக இருக்கும். 

"திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் தற்போது தமிழ்த் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் ரமீஸ் பிலாலி என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்"  என்கிறார் நாகூர் ரூமி. 


"ஆழமாக, எந்த இடத்திலும் நிதானம் தவறாமல், உணர்ச்சி வசப்பட்டுவிடாமல், தர்க்கம், கிண்டல், அழகான தமிழ் இப்படி எல்லாவற்றையும் வாரி வாரி வழங்கி எழுதுகிறார் இவர். யார் மனமும் புண்படாமல், அதே சமயம் உண்மையை உண்மையாக கூடுதல் குறைவு இல்லாமல் உரைக்கும் இவர் பாணி என்னை பரவசப்படுத்துகிறது. இவரும் என்னைப் போலவே ஒரு குரு மூலமாக ஆன்மிகப் பாதையொன்றில் பயணிப்பவர் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி" எனவும் நாகூர் ரூமி குறிப்பிடுகின்றார்.

அதே நேரத்தில் ஆன்மீக பயணி இவர் என்ற எண்ணத்தோடு இவர் தளத்திற்கு சென்றவர்கள் என்னிடம் கொஞ்சம் ஏமாற்றத்தையே தெரிவித்தார்கள். ஆன்மீக பயணியின் அனுபவங்களை, ரமீஸ் பிலாலி தன் முத்திரை எழுத்துகளில் இன்னும் அதிகம் எழுத வேண்டும் என்பது எனது அன்பான கோரிக்கை. அதற்கான ஆரம்ப அறிகுறி மீண்டும் பிரபஞ்சக் குடிலின் ஜன்னலுக்கு உள்ளே  பார்த்ததில் தென்பட துவங்கியுள்ளது மகிழ்ச்சியைத் தருகின்றது.

ரகசிய ரோஜா புத்தகத்தின் முகவுரையாக மவுலானா ரூமி அவர்களை பற்றி “கவிஞர்களின் ஞானி, ஞானிகளின் கவிஞர்” என ஒரு முன்னுரை எழுதியுள்ளார். அதில் சம்ஸு தப்ரேஷ் (ரஹ்) என்னும் தன் குருவின் சகவாசத்தினால் ரூமி அவர்களுக்கு நேர்ந்த ஆரம்ப மாற்றத்தை குறிப்பிடும் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. இதோ ரமீஸ் பிலாலியின் அற்புத வரிகள்…
“ரூமி, அறிவுக் கடல் என பாராட்ட பட்டவர்தான். இப்போது அவர் ஒரு சிறு துளி. முன்பு துளித் தன்மை நீங்காத கடல். இப்போது கடற் தன்மைக் கொண்ட துளி”


கடற்தன்மை கொண்ட துளியென்பது  ஆன்மீக பயணிகளுக்கு குருவின் சகவாசத்தில் நேரும் மகத்தான ரஸவாதம். குருவின் சகவாசத்தில் 'தான் பெரிய அறிஞன்' என்ற உணர்வு அழிக்கப்படும். மாறாக 'இல்மே லதுன்னி' எனும் இறையருள் ஞானத்தின் அற்புத வாயில் திறக்கும்.

 ரூமி அவர்கள் அறிவு கடலென திகழ்ந்த காலத்தில் வெளியாகாத 'மஸ்னவியும்', 'ருபாயியாத்தும்'கடற்தன்மை கொண்ட துளியான பின் நேர்ந்த இறை அருட்கொடைகள் தாம்.00000

ரகசிய ரோஜா கவிதைகளுக்கு  ரமீஸ் பிலாலியின் சின்ன சின்ன அடிக்குறிப்புகள் மேலும் அழகூட்டுகிறது. மாதிரிக்கு ஒன்று இதோ:
" காதலியோடு நடந்திருந்தேன்
ரோஜா தோட்டத்தில்.
அசட்டையாக என் பார்வை வீழ்ந்தது
ஒரு ரோஜாவின் மீது.
காதலி சொன்னாள்,
“வெட்கமாயில்லை?
இங்கே இருக்கின்றன
என் கன்னங்கள்,
அங்கே பார்க்கின்றாய்
ரோஜாவை நீ!"

 இதற்கு ரமீஸ் பிலாலியின் அடிக்குறிப்பு : ரோஜா தோட்டம் என்பது இறைவனின் பண்புகள் வெளிப்படும் இந்த பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. அதன் அழகில் லயிக்கிறோம் நாம். நீங்கள் எங்கிருந்தாலும் அவன் (இறைவன்) உங்களுடனே இருக்கின்றான் என்கிறது அல் குர்ஆன் (57:4). (ஆனால் வாழ்வின் போக்கில்) நம்முடன் அவன் இருப்பதை நாம் மறந்து போகின்றோம்.

00000

இதை படித்த போது எனக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகம் வந்தது. எனது மனைவியுடன் சென்னைக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். நான் அவளுடன் பேச விரும்பி அவள் பக்கம் திரும்பிய போது  அவள் பேருந்தின் ஜன்னல்  வழியாக வயல் வரப்புகளை வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள். அவளது முகத்தில் தெறிந்த குழந்தைத் தனமான குதூகலம் எனக்கு மகிழ்வைத் தந்தாலும் அவளை சீண்ட விரும்பி அவள் தோளைத் தட்டி என் பக்கம்  அழைத்து,
“ ஆனந்த விகடன்ல் ஒரு ஜோக்கு வந்திருந்துச்சு “கல்யாணத்துக்கு முன்” என ஒரு ஜோடியின் படத்தை போட்டிருந்தது. அதில் ஒருவரின் முகத்தை ஒருவர் அன்புடன் பார்த்து கொண்டிருந்தார்கள். அதுக்கு பக்கத்திலேயே “கல்யாணத்துக்கு பின்” என அதே ஜோடியின் படம் போட்டிருந்தது. இருவருடைய முதுகும் ஒன்றை ஒன்று நோக்க எதிர் எதிர் திசையில் பார்த்து கொண்டிருந்தார்கள்". என சொல்லி "என்னம்மா அதுக்குள்ள  என் தோழமை கசந்திடுச்சா?” என கேட்க,

“என்னங்க நீங்க!” என செல்லக் கோபமாய் சினுங்கினாள்.

“இல்லைம்மா! நான் கட்டிய கணவன் தான். உன்னை படைத்த கடவுளல்ல. எனக்கே நீ கூட வரும் போது என்னையே பார்த்துக்கிட்டு வரலனைன்னா கசக்குதே,

மறைந்த பொக்கிசமாக இருந்த இறைவன் தான் அறியப்பட நாடி நம்மையும் சகல சிருஷ்டிகளயும்  படைச்சிருக்க,

திரும்பும் திசை எல்லாம் என் முகம்.

உன் பிடறி நரம்பை விட சமீபமாக இருக்கின்றேன். 


என வேத வரிகளில்  தன் நெருக்கத்தைக் கூறி, தன் அருமை தூதரின் மூலம் அவனை  முன்னோக்கும் அகப்பார்வையையும் தந்த பின்னால்


உன்னில் என்னை ( என் அத்தாட்சியை) பார்க்க மாட்டாயா? என கேளவி எழுப்பும் போது


நம்மிலும், ஒவ்வொரு சிருஷ்டியிலும் அவன் சூழ்தலை (இஹாதத்தை)  அகக்கண்ணால் பார்க்காமல் நாம அசட்டையா இருந்தால்  இறைவனுக்கு அது எத்தனை அதிருப்தியை நம் மீது ஏற்படுத்தும்” என கேட்க அவள் “ஆமாங்க” என அமோதித்தாள். நானும், அவளும் ஆன்மீக பாடம் பெற்றிருந்ததானால் ஏற்பட்ட  பாக்கியமான  கருத்தொருமிப்பு இது. எல்லா புகழும் இறைவனுக்கே!

மீண்டும் ஒரு முறை மேலே உள்ள ரகசிய ரோஜா கவிதையை படித்து பாருங்கள் உங்கள் மனதிலும் புதிய புதிய அனுபவங்கள் பூக்கலாம்.

ரகசிய ரோஜா புத்தகம் வேண்டுவோர் ரமீஸ் பிலாலி அவர்களை trameez4l@gmail.com  என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Post a Comment