போதிய கவனம் பெறமல் இருக்கும் இந்த போராட்டம் மக்கள் மன்றத்தில் பரவலாக சென்றடைய வேண்டும். மனித நேயம் பேசும் அனைவரின் கவனமும், ஆட்சியாளர்களின் கனிவும், கவனமும் இதன் பக்கம் திரும்ப வேண்டும் என்ற ஆர்வத்துடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. இதை பல்வேறு வலைத்தள அன்பர்கள் மீள்பதிவு செய்வது அதற்கு துணை நிற்கலாம். நன்றி!
நண்பர் யாழன் ஆதி நக்கீரன் இதழில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். இரோம் ஷர்மிளா என்ற பெண் கவிஞர்-போராளியைப் பற்றி. சமூக அக்கறை கொண்ட எந்த மனிதனும் படிக்க வேண்டிய கட்டுரை. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அது ஒரு இந்தியக் கடமை என்றுகூடச் சொல்லுவேன். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணங்களில் எல்லாம் உச்ச நீதிமன்றத்தைப் போல –ல் காத்தடிக்க குப்புறப் படுத்து வழித்துக்கொண்டு தூங்குவதே இந்திய அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இந்திய மக்களும் அப்படித் தூங்க வேண்டுமா என்ற கேள்வியை இந்தக் கட்டுரை எழுப்புகிறது. ஷர்மிளா, ஷகிலா என்ற பெயர்களைக் கேட்டால் தமிழர்களுக்குப் பொங்கி வரும் விஷயமே வேறு. இந்த இரோம் ஷர்மிளா விஷயத்திலும் நாம் பொங்கி எழத்தான் வேண்டும். ஆனால் இது வேறு விதமான பொங்கல். இது மனசாட்சியும், அறியும் உள்ள இந்திய உள்ளத்திலிருந்து எழவேண்டும். இதுபோன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வதும், அது தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதும்கூட ஒரு கடமைதான். நான் என் கடமையைச் செய்துவிட்டேன். நீங்களும் செய்யுங்கள். என்னைவிட விஷயம் தெரிந்தவர்கள் – அனேகமாக இந்தியாவில் உள்ள அனைவருமே – இது தொடர்பாக என்ன, என்னென்ன செய்யலாம் என்று யோசியுங்கள். சொல்லுங்கள். செய்யுங்கள்.
அன்புடன்
நாகூர் ரூமி.
நன்றி யாழன் ஆதி.
இந்திய அரசியல் பெருவெளியில் அதன் விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்தே பல்வகையான உண்ணாவிரதங்கள் நமக்கு அறிய கிடைக்கின்றன. காந்தியின் உண்ணாவிரதங்களும் அதனால் அவர் செய்த உடலரசியலும் வரலாற்றின் பக்கங்களில் விரவி இருக்கின்றது. அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அவர் நடத்திக் காட்டிய உண்ணா விரதங்கள் கொடுங்கோலர்களாக ஆட்சி செய்த வெள்ளையர்களையே ஆட்டி வைத்திருக்கின்றன. 1930 செப்டம்பர் திங்களில் அவர் நடத்திய எரவாடா சிறை உண்ணாவிரதம் இந்திய அரசியலின் இரு துருவங்களை ஆய்வாளர்களுக்கு அடையாளம் காட்டியது.
தமிழக அளவில் நாம் எடுத்துக்கொண்டால் தமிழ்நாடு என்னும் பெயருக்காக சங்கரலிங்கனார் நடத்திய உண்ணாவிரதம் மிகவும் முக்கியமானது. பல போராட்டங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் என்னும் அறிவிப்போடு தொடங்கும். ஆனால் அந்த நாளே அந்த உண்ணாவிரதம் நின்று போகும் அல்லது பிரச்சனைகள் தீர்க்கப்படும். ஈழ விடுதலைப்போரில் அதற்கு எதிர்நிலையில் இருப்போரும் கூட திலீபனின் உண்ணாவிரதத்தினை மறக்க முடியாது. உலகம் விழித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு இளைஞன் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் வற்றி செத்துப் போன போராட்டத்தை தமிழர்கள்தான் இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டினர். அகிம்சையின் உச்சம் அது. ஆந்திராவில் தனித் தெலுங்கானா கேட்டு உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர ராவின் உண்ணாவிரதம் வன்முறைகளைத் தூண்டி ஆந்திராவை ஸ்தம்பிக்க வைத்தது. அது மட்டுமல்ல தனித்தெலுங்கானா மாநிலத்தை மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை அறிவிக்க வைத்த உண்ணாவிரதம் அது.
ஆனால் இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் ஒரு உண்ணாவிரதம் கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கின்றது. மணிப்பூர் மாநிலத்தின் பெண் கவிஞரும், மனித உரிமைப் போராளியுமான இரோம் சர்மிளா சான் என்னும் முப்பத்தாறு வயது பெண்மணியின், இப்போராட்டம் ஏன் இப்படி தொடர்கின்றது என்னும் கேள்வி கேட்பாரற்று கிடக்கின்றது.
1942 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த ஆண்டு. காங்கிரஸ் பேரியக்கம் வெள்ளையனே வெளியேறு என்னும் இயக்கத்தை நடத்தியது. அப்போராட்டத்திற்கு கிடைத்த பெரும் ஆதரவைக் கண்டு அஞ்சிய ஆங்கில பேராதிக்க அரசு, அதை அடக்க ஒரு சிறப்பு சட்டத்தை இயற்றியது. அதுதான் ராணுவச் சிறப்பு அதிகார சட்டம். அதன்படி ஒரு ராணுவ வீரர் யாராவது ஓர் அப்பாவியை போராட்டக்காரர் என்று நினைத்தாலும் உடனே அவரைச் சுட்டுத்தள்ள அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதன்படி இந்திய மக்கள் அநேகம் பேர் கொல்லப்பட்டனர். அந்த சட்டத்தை ஒரு வார்த்தைக் கூட மாற்றாமல் அப்படியே 1958 ஆம் ஆண்டு ராணுவ சிறப்பு அதிகார சட்டம்(1958) சுதந்திர இந்திய அரசு கொண்டு வந்தது. வடகிழக்கு மாநில மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்தச் சட்டம் அப்போதைய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது. இதைக் கொண்டுவந்த அப்போதைய உள்துறை அமைச்சர் சட்டத்தை அறிவித்துவிட்டு பேசும்போது வெறும் ஆறு மாதத்திற்கு மட்டுந்தான் இது அமலில் இருக்கும் என்றும் பிறகு திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். ஆனால் இந்த சிறப்பு ராணுவ அதிகார சட்டம் ஐம்பத்தி இரண்டு ஆண்டுகளாக அப்படியேதான் இழுத்துக்கொண்டு இருக்கின்றது.1990 இல் இச்சட்டம் காஷ்மீருக்கு விரிவு படுத்தப்பட்டது. அதை எதிர்த்துதான் பொது மக்கள் போராட்டம் காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்தச் சட்டத்தை மத்திய அரசு எந்த மாநிலத்திலும் எப்போது வேண்டுமானாலும் அமல்படுத்தலாம். இந்தச் சிறப்பு ராணுவ அதிகாரச் சட்டம் ஒரு ராணுவ வீரர் யாரை சந்தேகிக்கிறாரோ அவரை கைது செய்யலாம், விசாரிக்கலாம் ஏன் கொல்லக் கூட செய்யலாம். தேடுவதற்கான அதிகாரமும், சந்தேகத்தின் பேரில் பொருட்களை நாசம் செய்யவும், காணாமல் ஆக்கவும் ராணுவத்திற்கு அதிகாரங்களை இச்சட்டம் வழங்குகின்றது. எங்கெல்லாம் இந்தச் சட்டம் அமலில் இருக்கின்றதோ அங்கெல்லாம் ராணுவத்தினரின் கேள்விகளில்லா அதிகாரத்தால் நீதிக்குப் புறம்பாக மக்கள் கொல்லப்படுவது, காணாமல் போவது, சித்திரவதை செய்யப்படுவது, பாலியல் வன்புணர்வு செய்யப்படுவது, முறையற்ற கைது நடவடிக்கைகள் என மக்கள் படும் துயரங்கள் ஏராளம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இப்படி முறைகேடாக நடந்துகொண்டதற்கு எந்த ராணுவத்தினரையும் தண்டிக்க முடியாது என்பதும் முக்கியமாக நோக்கத்தக்கது.
மணிப்பூர் மக்கள் இக்கொடுமையான சட்டத்திற்கு எதிராக பல ஜனநாயக முறையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பல பாலியல் வன்புணர்வுகளை ராணுவத்தினர் மணிப்பூர் இளம் பெண்கள்மீது நடத்தினர். பல பெண்கள் கொல்லப்பட்டு பள்ளத்தாக்குகளிலும் புதர்களில் வீசப்பட்டனர்.
10.07.2004 ஆம் தேதி தங்ஜம் மனோரமா என்ற பழங்குடிப் பெண்ணின் பாலியல் கொடுங்கொலைக்குப் பின், மணிப்பூர் தாய்மார்கள் நாற்பது பேர் அசாமில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் முன்பு தங்களை நிர்வாணப்படுத்திக் கொண்டு “இந்திய ராணுவமே எங்களைக் கற்பழித்துக் கொல்” என்னும் முழக்கத்துடன் போரிட்டது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் பல போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இதற்காக பேசி வந்திருக்கின்றன. வெளி நாடுகளில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்திய அரசின் கவனதிற்கு இந்தப் பிரச்சனையை கொண்டுவந்தும் அது ஈரத்துணியைப் போலவே இந்த விஷயத்தில் சொதசொதத்து இருக்கின்றது.
சர்வதேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான எந்த நிர்ணயிப்புகளுக்கும் இந்தச் சிறப்பு ராணுவ அதிகாரச் சட்டமும் ராணுவமும் உள்வரவில்லை. 1997 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்குழு இந்த ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், மக்களின் அரசியல் மற்றும் குடியுரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறுகின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளது. மீண்டும் 2007 இல் இன ஒதுக்கலுக்கு எதிரான ஐ.நா. குழு ஓராண்டுக்குள் இந்தச் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியது. 2009 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகைப்புரிந்த மனித உரிமைக்கான உயர் ஆணையர் இந்தச் சட்டத்தினை திரும்பப்பெற வேண்டும் என்று வற்புறுத்தினார். 14.06.2010 அன்று இந்த சட்டத்தினை திரும்ப பெற வேண்டுமென ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்திய அளவிலும் பல குழுக்கள் அவ்வப்போது வருவதும் தங்களின் முடிவுகளை அரசுக்கு அறிவிப்பதுமாக இருக்கின்றது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அமைத்த நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான சிறப்பு ராணுவச் சட்டத்திற்கான மறுபரிசீலனைக் குழு, எந்தக் காரணமாக இருந்தாலும் இந்தச் சட்டமானது ஒடுக்குதலுக்கான சின்னமாகவும் வெறுப்பதற்கானப் பொருளாகவும் இனவொதுக்கலுக்கான கருவியாகவும் இருக்கின்றது என்றுக் கூறி இச்சட்டத்தைத் திரும்பப்பெற அரசுக்கு பரிந்துரைத்தது. தற்போதைய சட்ட அமைச்சராக உள்ள வீரப்ப மொய்லி அவர்களின் தலைமையிலான மறு கட்டமைப்பிற்கானக் குழுவும் இக்கருத்தினைத்தான் வலியுறுத்தியது. துணைக் குடியரசுத்தலைவர் அமீது அன்சாரி அவர்களின் தலைமையிலான குழுவும் அச்சட்டத்தினை திரும்பப் பெறவே வலியுறுத்தியது. இந்திய ராணுவத் தலைமைத் தளபதி 2010 ஜூலை மாதம் 19 ஆம் தேதி இந்தச் சிறப்பு சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஆட்சேபனை இல்லை என வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, 2004 ஆம் ஆண்டு மணிப்பூரின் தலைநகர் இம்பாலாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான நம்பிக்கையினை தூவி வந்துள்ளார். இதுவரை எந்த விதமான எதிர்வினைகளோ இல்லை. ஆனால் படுகொலைகளும் வன்முறைகளும் மட்டும் நடந்த வண்ணம் உள்ளன.
இரோம் ஷர்மிளாவின் போராட்டம் இந்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்திதான் நடந்துகொண்டிருக்கின்றது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மருத்துவமனையின் அறையொன்றே சிறையாக இரோம் ஷர்மிளா அடைக்கப்பட்டிருக்கின்றார். 2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி முதல் பத்தாவது ஆண்டாக உணவு எதையும் சாப்பிடாமல் அவர் போராட்டத்தைத் தொடர்கின்றார். ஒரு பெண் கவிஞராக தன் காதலையும் அபிலாஷைகளையும் வெளிப்படுத்த வாய்ப்பிருந்தும் அல்லது மற்றக் கவிகள் போல சினிமாவுக்குப் பாடல்கள் எழுதி சமூகத்தை வளர்க்கும் வாய்ப்பிருந்தும், தன் மக்கள் மேல் நிகழ்த்தப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போரிட்டு தன் நிகழ்காலத்தை இழந்து வருகின்றார் இரோம் ஷர்மிளா.
2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இம்பால் நகரத்துக்கு ஏழு கிலோமீட்டர் தூரமுள்ள மல்லோம் என்ற ஊரில் பேருந்துக்காகக் காத்திருந்த அப்பாவி மக்களை இந்திய ராணுவம் சுட்டு படுகொலை செய்தது. கொல்லப்பட்டவர்களில் 62 வயதான முதியவரும் உண்டு. இதைக் கேள்வியுற்ற அந்த நிமிடமே இரோம் ஷர்மிளா தனது போராட்டத்தை அறிவித்தார். அப்போது அவருக்கு வயது இருபத்தெட்டு. சிறப்பு ராணுவ அதிகாரச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டி சாகும்வரை உண்ணாவிரதம் என்ற அறிவிப்பு இந்திய அரசியலில் ஒரு சாதாரண அறிவிப்பாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் ஷர்மிளாவின் இப்போராட்ட அறிவிப்பு என்பது இவ்வளவு உண்மையானதாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கவில்லை.வழக்கமான அறிவிப்போடு நின்றுவிடும் போராட்டமில்லை என்று உணர்ந்தவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 309ன் பிரிவின் படி இரோம் ஷர்மிளவுக்கு ஓராண்டு தண்டனை அளித்து இம்பாலில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனையில் சிறை வைத்தனர். மூக்கின் வழியாக அவருக்கு வலுகட்டாயமாக உணவு செலுத்தப்பட்டது. ஓராண்டு முடிந்ததும் அவர் விடுதலைச் செய்யப்பட்டார். விடுதலை ஆனதும் நேராக உண்ணாவிரதப் பந்தலுக்குச் சென்று போராட்டத்தை தொடங்கிவிடுகின்றார். மீண்டும் சட்டம் தன் கடமையைச் செய்ய ஷர்மிளாவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார். இப்படி கடந்த நவம்பர் 2 ஆம் தேதியுடன் பத்துவருடங்கள் கடந்திருக்கின்றன. உலகத்தில் இப்படியொரு போராட்டத்தை மன தைரியத்துடன் நடத்தி இருப்பவர்கள் யாரும் இருக்க முடியாது.
இந்திய அரசு இந்தப் போராட்டத்தை சட்டை செய்ததாகத் தெரியவில்லை. சிறப்பு ராணுவச் சட்டத்தினை திரும்பப்பெற மறுக்கின்றது அல்லது மௌனம் சாதிக்கின்றது. யாருக்கும் எந்த கவலையும் இல்லாமல் வழக்கமான இந்தியா இருந்துகொண்டே இருக்கின்றது. நடிகைகள் மேல் அடிக்கும் வெளிச்சத்தை ஊடகங்கள் ஷர்மிளாவின் போராட்டதின்மேல் திருப்புவதே இல்லை. அந்தப் போராட்டத்தை நிறுத்துவதற்கான வழியான சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மற்ற மைய நீரோட்ட அரசியலாளர்கள் வைப்பதே இல்லை. மற்ற மாநிலங்கள் இன்னொரு மாநிலத்தின் பிரச்சனைகளில் தலையிடுவதில்லை என்ற அயல்மாநிலக் கொள்கைகளையே கடைபிடிக்கின்றன. கடந்த ஆண்டு ஈழப்போரின்போது தமிழக மக்களின் ஒற்றை கோரிக்கையான போர் நிறுத்தம் என்ற கோரிக்கைக்கு வேறு எந்த மாநிலமும் செவி சாய்க்காதது போல, இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாகாணங்களின் பிரச்சனையிலும் காஷ்மீர் பிரச்சனையிலும் மற்ற மாநிலங்களும் அமைதியாகவே இருக்கின்றன.
இதனால்தான் இந்திய ஒருமைப்பாடு மேலும் சீர்குலைந்திருக்கின்றது என்ற எண்ணம் தோன்றுகின்றது. மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்பது வெறும் ஆட்சியதிகாரங்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற மாநில மக்களின் உரிமைச்சார்ந்த பிரச்சனைகளிலும் தலையிட வேண்டும். அப்போதுதான் இரோம் ஷர்மிளா போன்றோரின் போராட்டங்களும் அவற்றில் இருக்கும் அறம் சார்ந்த கோரிக்கைகளும் வெல்லப்படும்.
சிறைக்கூடங்களில் சித்திரவதை, வகுப்பறை வன்முறை, சாதிய ஒடுக்குமுறை இவற்றிற்கு எதிராக மட்டுமல்லாமல் தேசிய இனப்பிரச்சனைகளிலும் அரசு சார்ந்த மனித உரிமைகள், ஆணையங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். அதன்பேரில் நடவடிக்கை எடுக்காத அரசதிகாரத்தின் எதேச்சதிகாரங்களைக் கண்டிக்கவும் தட்டிக் கேட்கவும் வேண்டும். அப்போதுதான் உண்மையான ஜனநாயகத்தினை நாம் பேணமுடியும்.
வடகிழக்கு போன்ற எல்லைப் புற மாநில மக்களின் பிரச்சனைகள் அதிக அளவு கவனத்தோடு மைய அரசு அணுக வேண்டும். அது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும். அதை விடுத்து அவர்களை புறந்தள்ளுவோம் என்றால் அது விபரீத விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். வள்ளுவர் கூறுவதைப் போல இளையதாக முள் மரம் கொல்ல வேண்டும். களைபவரின் கைகளைக் கொல்லும் அளவுக்கு அதை வளர விடக் கூடாது.
பல வெளிநாடுகள் இரோம் ஷர்மிளாவுக்கு விருதுகளை வழங்கிக்கொண்டிருக்கின்றது. 2007 இல் தென்கொரிய அரசு வழங்கிய மனித உரிமைகளுக்கான விருது சியோலில் வழங்கப்பட்டது. ரவீந்தரநாத் தாகூர் சமாதான விருது கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு வழங்கப்பட்டது. உலகமே அவருடைய உண்ணாவிரதத்தை நிறுத்திவிடும்படி வேண்டுகோள் விடுக்கின்றது. ஆனால் அதையெல்லாம் புறக்கணித்து போராட்டமே குறிக்கோளாக இருக்கின்றார் இரோம் ஷர்மிளா.
ராணுவ சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை அவர் போராடுவார். அண்மையில் இம்பால்
சட்டத்தின் ஆட்சியிலும், ஜனநாயகத்தின் நம்பிக்கையிலும், மனித உரிமையில் நாட்டமும் கொண்ட யாரும் இரோம் ஷர்மிளாவை ஆதரிக்காமல் இருக்க முடியாது. உண்மையான ஜனநாயகத்தை வலியுறுத்தும் மக்கள் அவர் பக்கம்தான் இருக்கின்றார்கள். மியான்மரில் ஆண்டுக்கணக்கில் இல்லச்சிறையில் அடைக்கப் பட்ட ஆங்சான் சூ கி தற்போது விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். இரோம் ஷர்மிளாவும் அப்படிதான் விடுதலைச் செய்யப்பட வேண்டும். சிறப்பு ராணுவ சட்டம் திரும்பப் பெறப்பட்டு மணிப்பூர் மக்கள் தங்கள் சிவில் உரிமைகளுடன் வாழ வழி வகை செய்ய வேண்டும். மனித உரிமைகளும் உண்மையான ஜனநாயகமும் தழைக்க வேண்டும்.
No comments:
Post a Comment