தோழமையுடன்

Friday, February 24, 2012

தவ்ஹீதே உலூஹிய்யத் - நபி வழி வந்த ரகசியம்


தவ்ஹீத் - ஏகத்துவம் என்றால் ஒன்றுபடுத்துதல் என்று பொருள்.

தவ்ஹீதே உலூஹிய்யதின் விளக்கம் “லா இலாஹ் இல்லல்லாஹ்” என்ற கலிமாவின் விளக்கத்தை அறிவது கொண்டு தான் கிடைக்கும்.

“லா இலாஹ் இல்லல்லாஹ்” வை அறிந்து கொள்ளுங்கள் என்று திருக்கலிமாவின் ஆய்வின் பக்கம் தூண்டுகிறது இறைவேதம். அதை ஓரளவு சுருக்கமாக பார்ப்போம்.


“லா இலாஹ் இல்லல்லாஹ்” என்ற கலிமாவில் நான்கு வார்த்தைகள் உள்ளன.

லா – இல்லை
இலாஹ் – வணக்கத்துக்குரியவன்
இல்லா – தவிர
அல்லாஹ் – இறைவன், ஹுதா, God,பிரமன், கர்த்தர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் உருவமற்ற ஏகப்பரம் பொருள்.

ஆதம் (அலை) முதல் முஹம்மது நபி (ஸல்) வரை வந்த அனைத்து இறைத்தூதர்களின் தூதுத்துவத்தின் தலைப்புச் செய்தியும், தலையாய செய்தியும் இது தான். 

இதில் முக்கியமாக அறிய வேண்டிய வார்த்தை “ இலாஹ்” எனும் இறைவனின் பண்புப் பெயர்.

‘இலாஹ்’ என்பதற்கு ‘வணக்கத்துக்குரியவன்’ என்பது விளக்கம்.

‘உலூஹிய்யத்’ என்றால் வணக்கத்துக்குரிய தன்மையை குறிக்கும்.

எது உலூஹிய்யத் - வணக்கத்துக்குரிய தன்மை?

நன்மையைத் தருவதும், தீமையிலிருந்து காப்பதுமான அனைத்து வகை “தேவைகளையும் நிறைவேற்றும் தன்மைக்கு” பெயர் வணக்கத்துக்குரியதன்மை. 

“இலாஹ்” என்ற வார்த்தைக்கு தேவைகளை நிறைவேற்றக் கூடியவன் என்ற பொருள் திருமறையில் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது. (உதாரணத்திற்கு பார்க்க 6:46, 27:60-64, 28:71,72). படைப்பினங்களில் காணப்படும் இந்த லாப நஷ்டம் கொடுக்கக் கூடிய இறைத்தன்மை அந்த சிருஷ்டிகளுக்கு சொந்தமில்லை என “லா” மறுக்கிறது. அத்துடன் இல்லல்லாஹ் “இறைவனைத் தவிர” என்ற வார்த்தையின் மூலம் தேவைகளை நிறைவேற்றும் தன்மையை இறைவனுக்கு  மட்டுமே சொந்தப்படுத்துகிறது.

இதை சில உதாரணங்கள் மூலம் விளங்கலாம்.

உதாரணத்திற்கு சூரியனை எடுத்துக் கொள்வோம். சூரியனில் வெளிச்சம் தருதல் என்ற தேவையை நிறைவேற்றக் கூடிய தன்மை (உலூஹிய்யத்) வெளியாகிறது. இந்த அற்புதமான பயன் சூரியனில் இல்லை என மறுக்க முடியாதல்லவா? அதனால் சூரியன் வணங்கப்படுகின்றது.

அடுத்து ஒரு உதாரணமாக பசுவை எடுத்துக் கொள்வோம். வைக்கோலையும், புண்ணாக்கையும் உண்டுவிட்டு மதுரமான பாலை நமக்கு தருகின்றது.  இந்த அற்புதமான பயன் பசுவில் இல்லை என மறுக்க முடியுமா? மதுரமான பாலினை தருவதன் மூலம் தேவையை நிறைவேற்றக் கூடிய தன்மை (உலூஹிய்யத்) பசுவில் வெளியாகிறது அதனால் பசு வணங்கப்படுகின்றது.

நம் அற்புதமான தேவைகளை நிறைவேற்றும் சூரியன் மீதும், பசுவின் மீதும் நேசம் வருவது இயற்கை. அந்த நன்றியுள்ள மனித உணர்வை தவறு என்று எந்த அறிவுள்ள மனிதனும் மறுக்க முடியுமா?. நிச்சயமாக முடியாது.
அதனால் சூரியனும், பசுவும் வணங்கப்படுகின்றது. 

சூரியனையும், பசுவையும் படைத்தவனை வணங்குவதை விட்டு விட்டு ஏன் இந்த படைப்பினங்களை வணங்குகிறீர்கள் என்று கேட்டால், இறைவன் சூரியனை படைத்தான் சூரியன் வெளிச்சம் தருகின்றது. இறைவன் பசுவை படைத்தான் பசு பாலைத் தருகின்றது. ஆகவே ஏகனான அந்த இறைவனை வணங்குவதுடன் சூரியனையும், பசுவையும் வணங்குகின்றோம் என பதில் வரும்.

இப்போது மேலே சொன்ன கலிமாவின் அமைப்பை கவனியுங்கள். அதில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்று நேரடியாக வராமல் “யாருமில்லை வணக்கத்துக்குரியவன்” என மறுப்பு முதலில் வைக்கப்படுகின்றது? என்பதை கவனியுங்கள்.

சூரியன், பசு மட்டுமல்ல படைப்பினங்கள் அனைத்திலும் உலுஹிய்யத் (லாபம் தருதல், நஷ்டத்திலிருந்து காத்தல் என்ற தேவைகளையும் நிறைவேற்றும் தன்மை) காணப்படுகின்றது. அதனால் அந்த தன்மை அவைகளுக்கே சொந்தமென எண்ணி ஏமாறவும் வாய்பிருக்கிறது. அந்த தவறான பார்வையிலிருந்து நம்மை நேர்வழிக்குத் திருப்ப வேண்டியே உலுஹிய்யத்துக்கு சொந்தமானவனாக, தேவையை நிறைவேற்றக் கூடியவன் யாருமில்லை என்ற மறுப்புடன் ஆரம்பிக்கிறது திருகலிமா .

அப்படியானால் கலிமா சொல்வது என்ன?

படைப்பினங்களிடம் காணப்படும் உலுஹிய்யத் (லாபம் தருதல், நஷ்டத்திலிருந்து காத்தல் என்ற அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் தன்மை) அந்த படைப்பினங்களுக்கு சொந்தமல்ல. அந்த படைப்பினங்களையும் அதன் செயல்களையும் படைத்து கொண்டிருக்கும் இறைவனுக்குத் தான் சொந்தம் என்கிறது திருக்கலிமா. 

இதன் நுட்பத்தை சற்றே ஆராய்வோம். பின் வரும் இறைவசனத்தை  பாருங்கள்:

“அல்லாஹ் உங்களையும் உங்கள் செயல்களையும் படைத்தான்”.(37:96) என்கிறது இறைவேதம். 

இது ஆழமாக விளங்க வேண்டிய இறைவசனம். சிருஷ்டிகளின் இருப்பும் (being) இயக்கமும் இறைவனால் படைக்கப்படுகின்றது என்கிறது இந்த இறைவசனம். இங்கே ‘படைக்குதல்’ என்பதன் ரகசியம் மிகவும் ஆழ்ந்து விளங்கப்பட வேண்டிய ஒன்று.

ஜப்பான் டொயோட்டோ கம்பெனி டொயொட்டோகேமரி காரை உருவாக்கியது என்றால் இன்று அந்த கார் எங்கே இருக்கிறது? யாரிடம் இருக்கிறது? அதன் நிலை என்ன? என்பது டொயோட்டோ கம்பேனிக்கு தெரியாது. அந்த காரின் தற்போதைய இயக்கத்தில் டொயோட்டோ கம்பேனிக்கு சம்பந்தமே இல்லை.

இதைப்போல படைப்பாளன் அல்ல இறைவன்.

இருப்பும் இயக்கமும்

ஒவ்வொரு பொருளின் இருப்பும் அதன் மூலப்பொருளின் நிலைமாற்றத்தால் சன்னம் சன்னமாக மாறிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக மனிதன், மிருகம், பறவைகள் அனைத்தும் செல்களினால் ஆனது. செல்கள் மூலக்கூறினால் ஆனது. மூலக்கூறுகள் அனுக்களினால் ஆனது. அனுக்களின் மூலம் ஒளித்துகள்களினால் ஆனது. அந்த மூலப் பொருளும் இன்னொரு மூலப் பொருளை சார்ந்திருக்கிறது. இப்படி ஆதி மூலப் பொருளை (Materia Prima) நோக்கிய அறிவுலக பயணத்தில் வெகு விரைவிலேயே புலன் உணர்வுகளின் எல்லை வந்து விடுகின்றது. அதற்கு மேல் மூலப்பொருளை அறிவதில் ஒரளவு அறிவியல் சித்தாந்தங்கள் நமக்கு உதவுகிறது .அந்த அறிவியல் தத்துவங்கள் பொருள்கள் அனைத்தின் மூல உள்ளமை ஒன்றாக இருக்கக் கூடிய சாத்தியத்தை ஓரளவு ஒப்பு கொள்கின்றது. அதாவது பிரபஞ்சத்தின் உள்ள அனைத்து பொருள்களும் தன்னுடைய இருப்புக்கு தான் அல்லாதவற்றின் இருப்பைத்தான் சார்ந்துள்ளது. ஆனால் அனைத்துக்கும் உள்ளீடு வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு மூல இருப்போ “தன்னைக் கொண்டே தான் உள்ளது.” அந்த மூல உள்ளமையை “பொருள்” என்ற வரையறைக்குள் கட்டுபடுத்திச் சொல்ல முடியவில்லை. அந்த மூல உள்ளமை ஒன்றுக்கு மேல் இருந்திருந்தால் அவை ஒன்றை ஒன்று மிகைக்க தலைப்பட்டிருக்கும் பிரபஞ்ச அமைப்பில் - இயக்கத்தில்  ஒரு ஒழங்கு இருக்கிறதே அந்த நிலை மாறி பெரும் குழப்பமாய் முடிந்திருக்கும். இப்படி ஒன்றே ஒன்றாய் இருக்கும் அந்த சுயமான உள்ளமையைத்தான் அல்லாஹ் - ஹக் என்று சொல்கின்றார்கள். 

மனிதனுக்கு அவனது இருப்பை வழங்கி கொண்டிருக்கும்  செல் – மூலகூறு – அணு இவற்றுக்கிடையே உள்ள நெருக்கத்தை விட நெருக்கமானது அவனுக்கும் அவன் மூலத்திற்கும் இருப்பை வழங்கும் இறைவனின் இருப்பு. இறைவன் சுயம்பு. சுயமாய் இருப்பவன் என்பதுடன் அனைத்து சிருஷ்டிகளுக்கும் இருப்பை வழங்குபவன். அவனது இயக்கம் என்பது முன், பின், வலம், இடம், மேல் , கீழ் என நகரும் இடப்பெயற்சியல்ல. அந்த அனைத்து இயங்கங்களையும் படைக்கும் இயக்கமாகும்.
இறைவன்,

“ஒவ்வொரு நேரத்திலும் காரியத்தில் இருக்கின்றான்”. 55:29 என திருமறை கூறுகிறது.

 நம் இருப்புக்கும், இயக்கத்திற்கும் காரணமான இறைவனின் செயலை ‘தஜல்லி’ என ஆன்மீக அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். இதன் மேலான விளக்கத்தை ஆரிஃபீன்கள் எனும் ஞானகுருவின் மூலம் தான் பயில முடியும்.

சரி இப்போது சொல்லுங்கள் சூரியனிலும், பசுவினிலும் வெளியாகும் தேவையை நிறைவேற்றும் தன்மை (உலூஹிய்யத்) அவைகளுக்கு சுயமானவை அல்ல அவற்றையும் அவற்றின் செயல்களையும் படைத்து கொண்டிருக்கும் இறைவனுக்குத் தான் சொந்தம் என்பது சரிதானே!.

சிருஷ்டிகளைப் பார்க்கும் போது அல்லாஹ்வுடைய உலூஹிய்யத்தைத் தான் பார்க்கின்றோம். உலூஹிய்யத் தான் சிருஷ்டிகளின் உருவத்தில் காட்சியளிக்கின்றது.

தன்னைத் தவிர (தேவையை நிறைவேற்றக் கூடிய) இலாஹ் யாருமில்லை என இறைவன் சாட்சி கூறுகின்றான். அவ்வாறே வானவர்களும், ஞானம் உடையவர்களும் சாட்சி சொல்கின்றனர்.(3:18)

நாமும் அத்தகைய சாட்சியாளர்களாவோம். 

 படைப்பினங்களை நேசிப்போம். படைத்தவனை மட்டும் வணங்குவோம்.


Post a Comment