தோழமையுடன்

Friday, August 27, 2010

இறைவன் இருக்கின்றானா?


பொருள்முதல்வாதம் :

பொருள் முதல் வாதம் என்பது ஆதிமுதல் இருப்பது பொருள்கள் மட்டுமே என்பதில் துவங்குகிறது. மனிதன், விலங்கினம், தாவரங்கள், வானம், மலை, கடல், பூமி அனைத்தும் ‘பொருள்கள்’ என்ற வார்த்தையில் அடங்கும். இந்த பொருள்கள் அனைத்தும் தோற்றம், வளர்ச்சி, மறைவு என்ற நிலைகளுக்குட்பட்டவை. ஆதியிலிருந்து இருக்கும் இந்த  பொருள்களின் அடிப்படை அலகு ‘அணு’ எனப்படும். 


 நாம் காணும் அனைத்து பொருள்களும் அந்த அணுக்களின் இயக்கத்தால், கூட்டுறவால் உருவான பல்வேறு நிலை மாற்றங்களின் பரிணாம வளர்ச்சியால் உருவானவை. வானம், பூமி, மலை, கடல் என எங்கும் பொருள்கள் மட்டும் தான் உள்ளது. Existence எனப்படும் ‘இருப்பு’ என்பது பொருள்களுக்கு மட்டும் தான் உள்ளது. எளிமையாக சொன்னால் இருப்பது பொருள்கள் மட்டுமே. Physical world என்னும் பௌதீக உலகத்தை தாண்டி வேறு ஒரு உலகம் இல்லை. நம் புலன் உணர்வுகளாலும், அறிவியல் சார்ந்த பகுத்தறிவாலும் உறுதி செய்யப்படாத கடவுளின் இருப்பு (Existence) என்பது வெறும் கற்பனை  தான் என்பது பொருள் முதல்வாதிகள் (Materialist) என்னும் இறைமறுப்பாளர்களின் வாதம்.

பொருள்முதல்வாதிகளின் இறைமறுப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களின் அறிவியல் பூர்வமான நோக்கு பாராட்டுதலுக்குரியது. ஆனால் இந்த பொருள்களை நாம் எதைக் கொண்டு அறிகின்றோம் என்ற கேள்வி அவர்களின் அறிவியலால் விடை காண முடியாத கேள்வியாகவே இருக்கிறது. ஆன்மா என்பதை இன்ன வகையான பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையில் அதை ஏற்பதிலும், மறுப்பதிலும் பொருள்முதல்வாத நிலையில் ஏற்பட்ட  தடுமாற்றம் ஆன்மீகம்  சார்ந்த அறிவியல்  அறிவின் தேவையை வலுவாக வலியுறுத்துகிறது.

ஆன்மீக அறிவியல் பார்வை:

ஆன்மீக அறிஞர்கள் புலனுணர்வின் எல்லையை ஒரு அடிப்படையாகக் கொண்டு உலகை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரித்தறிகின்றார்கள். ஒன்று புலனுணர்வுகளை கொண்டு பகுத்தறிவால் உணரப்படும் Physical world என்னும் பௌதீக உலகம். இரண்டாவது புலனுணர்வுகளுக்கு எட்டாத ஆன்மீக அறிவைக் கொண்டு உள்ளத்தால் அறியப்படும் மறைவுலகம். இந்த மறைவுலகைப் பற்றிய நம்பிக்கை ஓர் இறைநம்பிக்கையாளனின் அடிப்படை அம்சமாகும்.

பௌதீக உலகத்தின் இருப்பை ஆன்மீக அறிவொளியில் ஆராய்வதன் மூலம் மறைவான உலகத்தை பற்றிய அறிவின் வாயில்கள் திறக்கும். ஆகவே முதலில் இந்த புலன்களின் எல்லையில் இருக்கும் பௌதீக உலகைப் பற்றி சிறிது பார்ப்போம்.

இந்த பொருள்களை திட நிலை, திரவ நிலை, வாயு நிலை இன்னும் plasma stage(உ-ம் சூரியன்) என்ற நிலைகளின் மூலமும், கருப்பு, சிவப்பு, மஞ்சள், நீலம் என நிறங்களின் மூலமும், கட்டம், வட்டம், உயரம், குட்டை என வடிவங்களின் மூலமும். இனிப்பு, புளிப்பு, கரிப்பு, துவர்ப்பு என சுவைகளின் மூலமும், எடை, பளபளப்பு, மினுமினுப்பு, சொர சொரப்பு இது போன்ற பண்புகளின் மாறலாகத்தான் அறிகின்றோம்.

எந்த ஒரு பெயரில் அழைக்கப்படும் ஒரு பொருளையும் அதன் தன்மைகள், திறமைகள் எனப்படும் பண்புகளின் வாயிலாகவேயன்றி நம்மால் அறிந்து கொள்ள முடியாது. முயன்று பாருங்கள். உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பூவை எடுத்துக் கொள்வோம். அந்தப் பூவின் நிறம், மணம், வடிவம், மென்மை, வளவளப்பு இப்படி அதன் தன்மைகள் வாயிலாகத்தான் இது ரோஜாப்பூ, இது மல்லிகைப்பூ என அறிந்து கொள்ள முடிகின்றது. ஒரு விளக்கத்திற்காக மேற்கூறிய பூவின் தன்மைகளை பூவை விட்டுப் பிரித்து விட்டோம் என வைத்து கொள்ளுங்கள். அப்போது அது என்ன பூவென்று மட்டுமல்ல என்ன பொருள் என்றும் கூட நம்மால் கூறமுடியாது.

ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளி வருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன் இன்ன பொருள் என்றும்  கூறுவதற்கில்லாத நிலையிலிருந்தான். (76:1) என்ற வேதவரிகள் இங்கே நினைவு கூறத்தக்கது. இன்ன பொருள் என சொல்ல முடியாத ஒரு நிலையே மனிதனின் ஆரம்ப நிலை. இறைவன் வழங்கிய தன்மைகளின் தொகுப்பான ஒரு இருப்பைக் கொண்டுதான் மனிதன் என்பவனே காட்சியளிக்கின்றான். இப்படி பல்வேறு பண்புகளின் தொகுப்பாக புலனுணர்வுகளின் வாயிலாகத் பெற்ற தகவல்களை பகுத்தறிந்து தான் மனிதன் முதல் உள்ள அனைத்து பொருள்களின் இருப்பை (existence) நம்மால் உணர  முடிகின்றது.

இப்படி புலனுணர்வு மூலம் பெற்ற அறிவும் இன்னும் அறிவியல் சார்ந்த பகுத்தறிவும் பொருள்களின் மூலத்தை (Materia Prima) “இன்னதுதான்” என இது வரை தெளிவாக மெய்ப்பிக்கவில்லை. இந்த நிலையில் மனிதனும், மிருகங்களும், பறவைகளும், கல், கரடு, தங்கம் வெள்ளி, பித்தளை இன்னும் அனைத்து பொருள்களின் மூலப் பொருளும் ஒன்றாக இருக்கும் சாத்தியத்தை (hypothesis)  மட்டும் அறிவியல் ஆய்வுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டு விட்டது என சொல்லலாம். ஆனாலும் அனைத்தின் ஆதரமான ஏகாந்த இருப்பின் உள்ளமையை - உண்மையை (The Truth of Absolute Existence Per se) பரமமானது, புனிதமானது என்றெல்லாம் ஒத்துக் கொள்ளமுடியாது. அதுவும் தோன்றுதல், வளர்தல், மறைதல் என எல்லைக்குட்பட்ட ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும் என்றார்கள். இதன்படி பொருள் என்ற வரையறைகுள் வராத ஒன்று இல்லவே இல்லை என்பது அவர்களின் வாதம்.

பொருள் முதல்வாதிகள் பொருள்களைப் பிளக்க முடியாத அணுக்களின் இயக்கத்தால், கூட்டுறவால் உருவான பல்வேறு நிலை மாற்றங்களின் பரிணாம வளர்ச்சியாக மட்டுமே கண்டார்கள் என பார்த்தோம். அந்த அவர்களின் நம்பிக்கை அணுவைப் பிளந்து அணு குண்டு தயாரித்த போதே பாதி தகர்க்கப்பட்டு விட்டது.

அணுவின் மூலத்தை ஆராய்ந்த நுண்ணியற்பியல் அது பொருளாகவும், சக்தியாகவும் இருக்கும் இரட்டை நிலையை கண்டு வியந்தது. ஒரு வகையில் ஒளியாலான அலைகளைப் போன்றுள்ளது எனக் கருத்து தெரிவித்தது. அந்த அலைகளை போன்றவற்றின் (wave like propertiesன்) உள்ளமையை பற்றிய ஆராய்சி தொடர்கிறது.

இந்த நிலையில் பொருள் என்று தனியாக எதுவும் இல்லை. பொருள் சிதைந்தால் சக்தி. சக்தி திரண்டால் பொருள் என்ற அறிவியல் அதை E = mcஎன்ற சின்ன சமன்பாட்டில் அடைத்தது, அதனால், மூலத்தை நோக்கிய பார்வையில் பொருள் என்று வரையறுக்கப்பட்டது எங்கே? என்ற கேள்வி எழுந்தது.

பொருள் இல்லை என ஒத்துக் கொள்ள முடியாது. பொருள்களைப் பற்றிய புதிய வரையறை (definition) காணப்பட வேண்டும் என்றார் பொருள்முதல்வாதிகளின் முன்னோடி சகோதரர் லெனின்.
இன்ன பொருள் என சொல்ல முடியாத ஆன்மாவின் இருப்பே அந்த ஆன்மாவை வழங்கிய ஒப்புவமை இல்லாத இறைவனின் இருப்புக்கு மகத்தான சாட்சியாக இருக்கின்றது. ஆன்மா என்னும் அகக்கண்ணைக் கொண்டு தான் நாம் அனைத்தையும் அறிகின்றோம் என முந்திய இடுகையில் பார்த்தோம். இமாம் கஸ்ஸாலி போன்ற ஆன்மீக அறிஞர்கள் நமது “புறக்கண்களுக்கு” பார்க்கும் திறன் இருந்தாலும் சூரியனின் வெளிச்சம் ஒளி வழங்கி உதவுவது போல இந்த ஆன்மீக பார்வையை வழங்கும் ஆன்மா என்னும் அகக்கண்ணுக்கு வெளிச்சம் வழங்கும் சூரியன் என இறைவேதத்தை கூறுகின்றார்கள்.

அனைத்தும் இறைவன் புறத்திலிருந்தே இருக்கிறது என்று (நபியே!) நீர் கூறி விடுவீராக.(4:78) என்கிறது இறைவேதம்.

நாம் இங்கே கவனிக்க வேண்டிய நுட்பமான அம்சங்கள் நான்கு:

1.    பொருள்கள் என்பது பண்புகளின் தொகுப்பாலான ஒரு இருப்பைக் கொண்டு உணரப்படுகின்றது .  

2.     பொருள் சார்ந்த உலகம் (Physical world) என்பது புலன் உணர்வுகளின் வாயிலாக வடிவமைக்க பட்ட காலம், இடம், நிறம், வடிவம் என்னும் வரையறைகளால் ஆன அற்புதமான உணர்வுலக உண்மையாகும் (perceptual reality).

3.    அனைத்துப் பொருள்களும் நாமறிந்த எந்தப் பொருளையும் போல் இல்லாத மறைவான ஒரே மூலத்திலிருந்து தான் நாம் உணர்ந்தறியும் விதத்தில் நம் புலனுணர்வு எல்லைக்குள் வருகின்றது, இன்னும் மீள்கின்றது.

4.    இந்த பொருள்கள் அனைத்துக்கும் இருப்பை வழங்கும் மூலமான பொருளை(Materia Prima) நாம் பொருள் என்ற பௌதீக எல்லைக்குள் வரையறுக்க முடியவில்லை. அதுவே என்றும் இருக்கும் மாறாத மெய்யிருப்பு என்பதும் தான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.
Post a Comment