தோழமையுடன்

Friday, August 13, 2010

சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?


சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?" 
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.
சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திகேட்டார். 



"ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம்முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம்குறைந்தது. "இல்லை...."
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"
"அதில்லை..."
"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"
"இல்லை"
"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன்ஏற்படுமா?"
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.
"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூறமுடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை.குறுகியவாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும்

எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று
சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழியஅங்கிருந்து நகர்ந்தார். 

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம்சொல்லப்படும் போது நம்மில் எத்தனை  பேர்சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்?கேட்கும் விஷயங்கள் உண்மையா  என்பதை அறியநாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுதேர்ந்தெடுக்கிறோமா?
மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களதுபணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறிவிடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்துவிடுகிறது. அதன் விளைவுகள் நம்மைபாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறிவிடுகிறோம் என்பதுமே அதற்கு
 முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.
எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்குவருகிறது.
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும்இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம்சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார்.  அவன்மன்னிப்பு கோரினான்.  ஆனாலும் அவனுடையசெய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய்பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம்ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்றுஅதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில்  ஊதிப்பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டுவந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக்கொண்டு வா".
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம்எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதைஎப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"
"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்டபஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக்  கொண்டுவர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி  வதந்திகளைப் பறக்கவிட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில்எப்படியெல்லாம்  மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ.நீமன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப்பெற முடியும் என்று நினைக்கிறாயா?"
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின்தீமை முழுவதுமாகப் புரிந்தது. 
கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த  அந்தப்பழக்கத்தை  அடியோடு  விட்டான். 
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம்சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில்என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கிசம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம்பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா?விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர்பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றிசொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச்செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம்,உண்மையைத் தானே சொல்கிறோம் என்றுமற்றவரின் பலவீனமான உண்மைகளையும்,நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும்.அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக்கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லாஉண்மைகளையும் நாம் வெளியில்சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரியவேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமானஉண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?" 
நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள்கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன்எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்துகற்றிருக்கிறார்கள்; எத்தனையோபலவீனங்களுடன் போராடிய பிறகேவென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம்சொல்லும் தவறுகளை நாம்செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்றஎத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம்.இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்புபேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம்நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரியஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போலசொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம்காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம்சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள்.அதே போல் மற்றவர்களைப் பற்றிநல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும்போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்தநேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமானகாரியம் அதுவாகத் தான் இருக்க முடியும் 

நண்பர் அப்துல் ரவூஃப் அப்துல் ரஜாக் (ஈமான் டைம்ஸ்) அவர்களின் மின்னஞ்சலில் வந்தது. அதற்கு நாஞ்சிலன் என்னும் ஒரு நண்பர் ஒரு வாழ்த்தும் அனுப்பி இருந்தார். நான்சிலனுடன் சேர்த்து நாமும் வாழ்த்துகிறோம் . இதோ நாஞ்சிலனின் வாழ்த்துரை : 

மிக நல்ல செய்தியைச் சொல்லியுள்ளீர்கள் நண்பரே!
வதந்திகளையும் புறங்கூறலையும் அவற்றின் தீமையை உணராமல் / அல்லது உணர்ந்தும் மிக விருப்புடன் செய்துவரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்கும் சிறந்த வழிமுறை சாக்ரட்டீஸ் சொன்னதாம்.
"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.
இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கும் தீமையான புறம் மற்றும் வதந்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும்.
கேள்விப்பட்டதையெல்லாம் (ஆராயாமல்) அப்படியே பரப்புபவன் பொய்யன் என்பது நபிமொழி.
நல்ல ஒரு செய்தியத் தந்த சகோதரர் அப்துர்ரவூஃப் அப்துர்ரஸ்ஸாக்குக்கு வாழ்த்து!

3 comments:

தூயவனின் அடிமை said...

நல்ல அருமையான பகிர்வு, அனைவரும் அறிந்து ,இது போன்ற ஆட்களிடம் இருந்து
விலகி நிற்க ,உதவுகின்றது .
குரு சிஷ்யனுக்கு தான் செய்த தவற்றை உணர கொடுத்த தண்டனை அருமை.
ஆனால் இன்றைய தமிழ் பத்திரிக்கைகள் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது வீசிய பல கரைகளை
அகற்ற, முயற்சி செய்யுமா?

Shakthiprabha (Prabha Sridhar) said...

அருமையான பதிவு. எப்பேர்பட்ட உண்மையை சாக்ரடீஸ் கூறிவிட்டார். உண்மையில்
அவர் ஞானியே. உங்களின் இந்தப்பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இப்பதிவை வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_25.html

புல்லாங்குழல் said...

நன்றி சக்திபிரபா!