தோழமையுடன்

Sunday, May 27, 2012

ஹாஜா! - ஏழைகளை அலங்கரிக்கும் அஜ்மீர் ராஜா!

     வடஇந்தியா முழுவதும் அஜ்மீரிலே அமைந்துள்ள ஒரு மெய்ஞானியின் அடக்கஸ்த்தலம் ஆட்சி செய்து கொண்டிருப்பதை நேரில் கண்டேன் என்றார் வரலாற்று பேராசிரியர் எட்வின் அர்னால்ட்.
    அகன்று பரந்த நெற்றி! ஆத்மாவே நின்று ஆடிக் கொண்டிருப்பது போன்ற கண்கள்! ரோஜாவோ, தாமரையோ என்று ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு அழகு முகம்!  இளம் பிஞ்சு உறுதியான பிடரி, அதன் கீழ் தோள், மார்பு, கால்கள் அனைத்திலுமே வயதுக்கு மீறிய லாவகம்! அப்பப்பா அற்புதம்!

       நடப்போரின் கவனத்தையெல்லாம் ஈர்த்துக்கொண்டு  நடந்து சென்ற அந்த சிறுவரின் கவனம்  வழியிலே இருந்த ஒரு மதரஸாவின் வாசலில் நிலை குத்தி நின்றது. விரைந்து நடந்து அவருடைய கால்களும் பின் வாங்கின!

     “முயீனுத்தீன்! விரைந்து நடவும் பெருநாள் தொழுகைக்கு நேரமாகிவிட்டது ” இது தந்தையின் குரல்.

     எனினும் மைந்தரின் நடைமுன்னேறியும் அவருடைய முகம் பின்புறமாக திரும்பி கவனிப்பதைப் பார்த்துவிட்டார் தந்தை. மகனுடைய கவனம் எங்கே செல்கிறது என்று அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

    “என்ன முயீனுத்தீன் என்ன ?” தந்தை சிறிது அதட்டலாகவே கேட்டுவிட்டார். மைந்தருக்கு தொழுகையின் அக்கரை இருக்க வேண்டுமே என்பது அவரது அக்கரை.

   அந்த மைந்தரோ தந்தையின் கரத்திலிருந்து தம் தளிர்க்கரத்தை விலக்கிக் கொண்டு திரும்பி நடந்தார். தந்தையார் வியப்புடன் திரும்பி நின்றார். மைந்தர் அந்த மதரஸாவின் வாசலுக்குச் சென்று புகுந்தார்.

    தூண் மறைவிலே ஒளிந்து நின்று கொண்டிருந்த தம் வயதையொத்த ஒரு சிறுவனை கைகளால் பற்றி வெளியிலே இழுத்தார். மைந்தரின் செயலை வியப்போடு கவனித்தபடி நின்றிருந்தார் தந்தை.

   “முஷ்தாக்! நீ ஏன் பள்ளிவாசலுக்கு வரவில்லை?” இது முயீனுத்தீனின் கேள்வி!

   “நீ போ! உன் தகப்பனாரைக் காத்திடச் செய்யாதே, எனக்கு புத்தாடை எதுவும் இல்லை. இருக்கும் ஆடையும் கந்தலாக இருக்கிறது!”

   “ஏன் உன் தகப்பனார் வாங்கித் தரவில்லை!”

   “இல்லை முயீனுத்தீன், என் தகப்பனார் தான் இறந்து விட்டார்களே! உமக்குத் தெரியாதா? என் தாயார் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.”

   முயீனுத்தீனின் கண்களில் கண்ணீர்  வடிகிறது. “முஷ்தாக் அணிந்து கொள் என் மேலாடையை” தந்தையைக் கவனித்துக் கொண்டே தமது வெல்வெட் கோட்டை கழற்றி முஷ்தாக்கின் மீது அணிகிறார் முயீனுத்தீன்!

   நிலைமையைக் கண நேரத்தில் ஊகித்து விட்டார் கியாஸுத்தீன். உள்ளாடையையும் சராயையும் உடுத்துவரும் மைந்தரை ஒரு கையில் பிடித்துகொண்டு வெல்வெட் மேலாடை அணிந்து வரும் அநாதை சிறுவனையும் மறு கையில் பற்றியபடி கியாஸுத்தீன் பள்ளிவாசலை நோக்கி விரைகிறார்கள்.

   சுபுஹானல்லாஹி வல்ஹம்ந்து லில்லாஹி……..

   கியாஸுத்தீன் அவர்களுடைய உள்ளத்திலே இனம் புரியாத உணர்வுகள் பொங்கிப் பொங்கி வருகின்றது!

   “தூயவனே! புகழுக்குரியவனே! இறைவா! இந்த இளமைப் பருவத்திலேயே இளகிய  இதயமும் ஏழைகளின் மீது நேசமும் பாராட்டக்கூடிய மைந்தரை எனக்குத் தந்திருக்கிறாய்! இறைவா எங்கள் நாயகம் ரசூல் (ஸல்) அவர்கள் : ‘இறைவா என்னை ஏழைகளோடு மரணிக்கச்செய்து ஏழையரோடே மறுமையில் எழுப்பு’ என்றார்களே! இறைவா அந்த நேசரின் நேயரா என் செல்வன்!”.

   கியாஸுத்தீன் நன்றிக் கண்ணீர் பார்வையில் துளிரிட பள்ளிவாசல் படிகளை மிதித்தபோது வாசலிலிருந்து  ஒரு மஜ்தூப் (இறைகாதலில் தன்னிலை இழந்த ஞானி) சப்த மிட்டபடி வெளியே ஓடுகிறார்.

    கரீபு நவாஸ்……..கரீபு நவாஸ்….கரீபு நவாஸ்!     (ஏழைகளை அலங்கரிப்பவர்!)  

நன்றி:( மாபெரும் ஜோதி ஹாஜா முயீனுத்தீன் ஷிஸ்தி அஜ்மீரி எனும் எம்.ஏ.ஹைதர் அலி  M.A., காதிரி அவர்கள் எழுதிய நூலிலிருந்து நன்றியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது)

 0 0 0 0
  

இறையல்லாத ஒன்று அல்லது இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு இறைநேசர் தன் தானே இறைவனின் சக்தியின்றி யாருக்கும் எந்த லாபத்தையும், நஷ்டத்தையும் கொடுக்க முடியும் அல்லது சிருஷ்டிகள் தன் தானே இறைவனின் சக்தியின்றி எந்த ஒரு வேலையையும் சிறிதளவேனும் செய்ய முடியும் என்று எண்ணுவது இறைநெருக்கத்தை விட்டு தூரமாக்கும் மறைமுகமான இணைவைப்பாகும் (ஷிர்கே கஃபி).

இவை ஹாஜா முயினுத்தீன் ஷிஸ்தி அஜ்மீரி (ரலி) அவர்கள் காலத்திலிருந்து செவிவழியாக பாதுகாக்கப்பட்டு வந்த எங்கள் ஷிஸ்தியா காதிரியா ஆன்மீக பாதையின் ஞானபாடங்களில் உள்ள வரிகள்.

 “உங்களையும் உங்கள் செயல்களையும் அல்லாஹ் தான் படைத்தான் ” எனும் அருள் மறை வாக்குடன் ஒப்பிட்டு உணர வேண்டியவை இந்த அற்புத வரிகள்.

'உங்கள் செயல்கள்' என்பது படைப்பினங்ளுக்கு செயல்கள் உண்டென்பதை வலியுறுத்துகிறது. ஆனால் அது வெளியாவதற்கு இறைவனால் அந்த செயல் படைக்கப்பட வேண்டும் என்பது அவசியம்.

வெளிச்சம் தருவது விளக்கின் செயல்.ஒவ்வொரு வினாடியும் விளக்கையும் அதன் வெளிச்சதையும் வெளியாக்குவது இறைவன் செயல்.

தாகத்தை போக்குவது நீரின் செயல். ஒவ்வொரு வினாடியும் நீரையும் அதன் தாகம் போக்கும் குளிச்சியையும் படைப்பது இறைவன் செயல்.

ஆக வெளிப்படையாக யாரிடத்தில் பெற்றாலும் அந்த சிருஷ்டியின் மூலம் கொடுப்பவன் இறைவன் தான் என்பதை உணராவிட்டால் அது மறைமுகமான இணைவைப்பாகிவிடும்.

என் அன்பு தந்தையாரின் மறைவுக்குப் பின் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டிய பொருளாதார நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. புது டெல்லியில் ஒரு இன்டர்வியூவுக்கு சென்று விட்டு அப்படியே அஜ்மீருக்கு செல்லும் பாக்கியமும் கிடைத்தது.

மறைந்தும் மறையாமல் வாழும் அந்த தவராஜரின் அருள் வாசலில் முன் நின்றேன்.

அவர்கள் பார்க்கும் விழியாக அவனிருக்க அவர்கள் அல்லாஹ்வை கொண்டல்லவா பார்க்கிறார்கள்!.

அவர்கள் கேட்க்கும் செவியாக அவனிருக்க அவர்கள் அல்லாஹ்வை கொண்டல்லவா கேட்கிறார்கள்!.

நான் அவர்களை பார்க்க முடியாவிட்டாலும், லட்சக்கணக்கான இதயங்களில் ஆன்ம ஒளியேற்றிய அந்த ஞானசூரியனின் பார்வையின் முன் நிற்கின்றோம் என்ற உணர்வுடன்.... “ யா கரீபே நவாஸ்! (ஏழைகளை அலங்கரிப்பவரே!) உங்கள் வாசலுக்கு ஒரு கரீப் (ஏழை) வந்திருக்கின்றேன்…. ”என்றேன். உணர்வு மிகுந்தது. அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை.

ஊர் திரும்பிய ஒரிரு வாரங்களிலேயே எனக்கு சிஷெல்ஸ், துபாய், சவுதி மூன்று இடங்களிலிலும் வேலை கிடைத்தது. எதை தேர்தெடுப்பது என திகைப்பு ஏற்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.  ஹாஜாவின் போர்வையில் இறைவன் செல்வ செழிப்பை தந்தான்.

அது மட்டுமா?

சிறு வயதில் பைத்து சபாவில்

 “ஹக்கினில் ஹக்காய் நின்றவா!
ஹக்குல் யக்கீனில் நிறைந்தவா!
எக்காலம் திக்ரு முழக்கமாய்
ஈடேற்றும் காமில் ஹாஜாவே! ‘’

எனும் பைத்தை பொருள் தெரியாவிட்டாலும் உணர்ச்சியுடன் பாடுவோம்.

எங்களையே அறியாமல் நாங்கள் வைத்த கோரிக்கை. 

இறைவனின் கருணை கொடுப்பதற்கு சாக்கு போக்கு தேடுகிறது என்பார்கள் என் குரு நாதர் ஃபைஜிஷா நூரி(ரஹ்).

விலைமதிப்பில்லா ஷிஸ்தியா தரிக்காவை எங்களுக்கு தந்து ஹாஜாவின் (ஃபைஜியின்) போர்வையில் இறைவன் ஆன்ம செழிப்பையும் வாரி வழங்கினான்.


அல்ஹம்து லில்லாஹ் - எல்லா புகழும் இறைவனுக்கே!


இறைவா! உன் நேசர் ஹாஜா அவர்களின் பொருட்டால் எங்கள் அனைவருக்கும் பூரண ஞானமும், இறையச்சத்துடன் கூடிய இனிய நல்வாழ்வும் தந்தருள்வாயாக! ஆமீன்!

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment