தோழமையுடன்

Wednesday, October 13, 2010

தவ்ஹீத், தஸவ்வுஃப் சில விளக்கங்கள்


தவ்ஹீது என்ற வார்த்தை குர்ஆனிலோ, நபி மொழியிலோ காணப்படவில்லை. முஆத் இப்னு ஜபல் என்ற தோழர் எமன் நாட்டிற்கு கவர்னராக சென்றபோது அந்த மக்களை ஏக இறைவன் பக்கம் அழைக்கச் சொல்லும் வார்த்தையாக “யுவஹ்ஹிது அல்லாஹு” என்ற வார்த்தையை பெருமானார் கூறினார்கள். இந்த ‘யுவஹ்ஹிது’ என்பதிலிருந்து வந்தது தான் தவ்ஹீது என்ற வார்த்தை என்கின்றார் அபு ஆமினா பிலால் பிலிப்ஸ். 

தவ்ஹீத் என்ற வார்த்தையே பெருமானார் காலத்தில்  உபயோகத்தில்  இல்லை என்பதால் தவ்ஹீத் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவது பித்அத் என நாம் யாரும் கூற மாட்டோம். ஏனென்றால் Terminology என்னும் துறை சார்ந்த கலைச்சொற்கள் புதியதாக இருந்தாலும். அதன் உள்ளடக்கமாக நாம் விளங்க வேண்டிய கருத்து இஸ்லாத்தின் உயிர் போன்றது.

இதை போலவே தஸவ்வுஃப் என்ற வார்த்தையை விளக்கும் போது ஒரு இஸ்லாமிய அறிஞர் பெருமானார் காலத்தில் அந்த பெயர் உபயோகத்தில் இல்லை. ஆனால் வாழும் உண்மையாக அது இருந்தது. இன்று பெயர் இருக்கிறது அந்த உண்மை நிலை நம்மிடம் இல்லை என்றார்கள். தஸவ்ஃவுப்புக்கு மட்டுமல்ல தவ்ஹீதுக்கும் இது பொருந்தும்.

தஸவ்வுஃப் என்னும் ஆன்மீகத்திற்கும் தவ்ஹீத் என்னும் எகத்துவத்திற்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள், தஸவ்வுப் என்பது தரீக்காவாதிகளின் கொள்கை. தவ்ஹுத் என்பது அதற்கு மாறுபட்டவர்களின் கொள்கை என சிலர் நினைக்கக் கூடும்.
தவ்ஹீதின் ஆழமான விளக்கங்களை உள்ளடக்கியது தான் தஸவ்வுஃப். அந்த ஆழமான உண்மைகளை தங்கள் உணர்வாக கொண்டு இணைவைப்பிலிருந்து தன் அகத்தை பரிசுத்தப்படுத்தி கொள்ளும் இஸ்லாமிய ஆன்மீக பாதைதான் தஸவ்வுஃப். ஏகத்துவ ஞானம் தான் அதன் உயிர். இது பற்றி பிறகு பார்க்களாம்.முதலில் தவ்ஹீத்.

தவ்ஹீத்

தவ்ஹீது என்றால் என்ன? என நான் பலரிடம் கேட்ட போது தவ்ஹீது என்றால் தவ்ஹீது தான். ஏகத்துவம்!!!...என தலையை சொறிந்தார்கள். சிலர் ஏதோ அவர்கள் தேசத்து ராணுவ ரகசியத்தை கேட்டதைப் போல் பார்வையால் என்னை முறைத்தார்கள். கொடுமையான நிலை என்னவென்றால் ஏகத்துவம் எங்கள் உயிர் என முழங்கும் நம் அன்பு சகோதரர்களில் பலர் தவ்ஹீத் என்றால் என்னவென்பதற்கு ஏகத்துவம் என்ற தமிழ் வார்த்தைக்கு மேல் அது பற்றி ஏதும் விளக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது தான்.

வெகு சிலர் மட்டும் தவ்ஹீத் என்றால் ஏக தெய்வ கொள்கை என கொஞ்சம் நெருங்கி வந்தார்கள். இஸ்லாத்தின் அடிப்படையான ஒரு விளக்கத்தை பற்றி குறைந்த பட்சம் தங்கள் கொள்கை சார்ந்தவர்களிடமாவது கேட்டு தெரிந்து கொள்ள மாட்டார்களா? என வருத்தமாய் இருந்தது. தரீக்காவை சேர்ந்தவர்களானாலும் சரி, வேறு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களானாலும் சரி வெறும் பெயர்களை மட்டும் பிடித்து தொங்கி கொண்டிருப்பவர்களால் தான் குழப்பமே.
தவ்ஹீத் என்றால் என்ன?

தவ்ஹீது என்பதற்கு ஒன்றுபடுத்துதல் (unification – making something one) என்பது அகராதி பொருள். தஸவ்ஃவுப் என்னும் ஆன்மீக அடிப்படையில் இதை விளங்கி கொள்ளும் முன்னர் தௌஹீத் குழுவின் இதழ்களில் ஒன்றான சுவனத் தென்றலில் வெளி வந்த விளக்கத்தை இங்கே நன்றியுடன் பதிவு செய்கின்றேன். இதோ சுவனத் தென்றல் கூறும் விளக்கம். போல்ட் செய்யப்பட்டுள்ள பத்திகள் மட்டுமே சுவன தென்றலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 

தவ்ஹீது என்பதற்கு ‘ஒருமைப்படுத்துதல்‘ என்று பெயர்.
இஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு,
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதி யுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீத்’ என்று பெயர்.

தவ்ஹீதின் வகைகள்: -

தவ்ஹீது மூன்று வகைப்படும். அவைகள்: -

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனை ஒருமைப்படுத்துவது)
2. தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)
3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா: -

இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் இருக்கும் அனைத்து வஸ்த்துக்களையும் படைத்து, காத்து, உணவளித்து பரிபாலிக்கும் விஷயங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவற்கு “தவ்ஹீதுர் ருபூபிய்யத்” என்று பெயர். 
அதாவது, இந்த அனைத்து செயல்களையும் செய்பவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு யாதொரு இணை துணையுமில்லை என்றும் மனதால் நம்பி நாவால் உறுதிகொள்வதாகும்.

படைத்தல் என்ற விசயத்தில் அல்லாஹ் படைப்பினங்களை படைக்கின்றான். அவனது படைப்பினங்கள் கோடானு கோடி பொருள்களை படைக்கின்றன. இறைவனின் படைப்பை விட மனிதனின் படைப்புகள் அதிகமாக இருப்பது போல் தோன்றுகின்றது. 

தாயால், தந்தையால், ஆசிரியரால் இன்னும் பல சிருஷ்டிகள் மாறலாக நாம் வளர்க்க, போஷிக்கப்படுகின்றோம். இப்படி எண்ணிலடங்கா சிருஷ்டிகள் மனிதர்களாலும் படைக்கப் படுகின்றன.காக்கப்படுகின்றன. உணவளித்து பரிபலிக்கபடுகின்றன. அப்படி இருக்கும் போது இந்த அனைத்து செயல்களையும் செய்பவன் அல்லாஹ் ஒருவனே என்று நம்பிக்கை கொள்வது எப்படி? மனிதர்களின் செயலில் இறைவனின் ருபூபிய்யத்தை ஒன்றுபடுத்துவது எப்படி? ‘எல்லாம் அவன் செயல்’ என்று இதற்கு அர்த்தமா என்றால் நிச்சயமாக அது குர் ஆனுக்கு முரணான கொள்கை. அப்படி என்றால் இந்த விசயத்தில் குர் ஆன் என்ன சொல்கிறது. குர் ஆனில் அல்லாஹ் உங்களையும் உங்கள் செயல்களையும் நான் படைத்தேன் என்கின்றான். எல்லாம் அவன் செயல் அல்ல ஆனால் எல்லா செயல்களையும் படைத்தவன் அல்லாஹ்.  இன்னும் நுணுக்கமாக சக்தி அடங்களும் அவனுக்கே சொந்தம் என்கின்றான். அவனைக் கொண்டே தவிர யாருக்கும் சக்தியில்லை என்கிறது நபிமொழி. இதன் ஆழமான அர்த்தங்கள் முறையாக விளங்க வேண்டிய ஒன்று.
உதாரணத்திற்காக இந்த இறை வசனத்தை பாருங்கள். "அவன் எத்தகையவன் என்றால் அவனே எனக்கு உணவூட்டுகின்றான். நீர் புகட்டுகின்றான். நான் நோயுற்றால் என்னை குணப்படுத்துகின்றான்". (26:79,80)

இந்த திருமறை வசனம்  ருபூபிய்யத்தின் ஒரு ஆழமான ரகசியத்தை சட்டெனத் நமக்கு திறந்து காட்டுகிறது! இறைவன் உணவைப் படைத்தவன் மட்டுமல்ல. அதை நம் வாயில் “ஊட்டியவனும்” அவன் தான். நீரை படைத்தவன் மட்டுமல்ல. அதை “குடிப்பாட்டியவனும்” அவன் தான். இப்படி நெருக்கமாக இறைவன் நமக்கு உதவுவதை உணர்ந்து வாழ்வது தான் இப்ராஹிம் (அலை) போன்ற நபிமார்களின் பாதை. அதே நேரத்தில் இப்ராஹிம் நபி (அலை) அவர்கள் இறைவன் என்னை நோயுறச் செய்தான் எனச் சொல்லவில்லை. “நான் நோயுற்றால்” என நோயுறுதல் என்பதன் தொடர்பை தன் பக்கம் இணைத்து சொல்கின்றார்கள். நலவு அடங்களையும் இறைவனின் கிருபை எனவும் நோயுறுதல் அடியானின் பார்வையில் குறையாக இருப்பதால் அதை தன் பக்கமும் இணைக்கும் நபி வழியும் மிகவும் நுட்பமான விளங்க வேண்டிய விஷயங்கள்.

2. தவ்ஹீதுல் உலூஹிய்யா: -

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அனைத்து வகையான வணக்கங்கங்களையும் அல்லாஹவுக்கே செய்து அவனை ஒருமைப் படுத்துவதற்கு ‘தவ்ஹீதுல் உலூஹிய்யத்’ என்று பெயர்.
அதாவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், பிரார்த்தனை, நேர்ச்சை, குர்பானி, பேரச்சம் கொள்ளுதல், ருகூவு செய்தல், ஸூஜூது செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்யவேண்டும் என உறுதிகொள்வதாகும்.

அல்லாஹ் மட்டும் தான் வணக்கத்திற்குரியவன் என்பது தவ்ஹீதுல் இபாதாத். ஏன் அல்லாஹ் மட்டும் தான் வணக்கத்திற்குரியவன் என்பதற்கு தவ்ஹீதுல் உலூஹிய்யாவை விளங்க வேண்டும். இந்த ஆழமான விளக்கங்களை அறிய முயலாததால் சம்பந்தமில்லா கோஷங்கள் போட்டு குழுக் குழுவாய் பிரிந்து சமுதாயத்தை துண்டாடுகின்றோம். 

நாம் இஸ்லாத்தை எத்தி வைக்கும் ஓர் அழைப்பாளர் என கொள்ளுங்கள். நாம் ஒரு முஸ்லிம் அல்லாதவரிடம் சென்று வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்ற தவ்ஹீதுல் இபாதாதை மட்டும் சொன்னால். எந்த அடிப்படையில்  உங்கள் அல்லாஹ் மட்டும் தான் வணக்கத்திற்கு தகுதியானவன் என கூறுகின்றீர்கள்  என கேள்வி எழுப்ப மாட்டாரா? ஆகவே முதலில் எது வணக்கத்துக்குரிய தகுதி என்பதை நாம் விளங்க வேண்டும்.  அந்த வணக்கத்திற்குரிய தன்மை என்ன என்று விளங்காமல் அது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கிறது என ஒன்றுபடுத்துவது சாத்தியமே இல்லை அல்லாவா? அந்த வணக்கத்துக்குறிய தகுதியை தான் குர்ஆனிய  மொழியில் உலூஹிய்யத் (இறைத் தன்மை –Divinity) எனப்படுகின்றது.

நபிமார்களின் வருகையின் நோக்கமே அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்த சமுதாயத்தினருக்கு உலூஹிய்யத்தை விளக்குவது தான்.

இறைவன் தன் உலூஹிய்யத்துக்கு  தான் சாட்சியாக இருப்பதாக சொல்லியதுடன், தன் வானவர்களையும் இன்னும் இந்த (உலுஹிய்யத் பற்றிய இல்மை) அறிவை பெற்றவர்களையும் சாட்சியாளர்களாக கூறுகின்றான். இது பற்றி மேலும் விளக்கம் வேண்டினால் எனது பின் வரும் சுட்டியிகளை பார்வையிடுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்: -

அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள் மற்றும் ஆற்றல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்பி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.


இறைவனின் திருநாமங்கள், பண்புகள் பற்றிய விளக்கம் நமது அறிவுக்கு எட்டவில்லையென்றால் நாமாக ஒரு விளக்கத்தைக் கற்பிக்கக் கூடாது. இந்த விசயத்தில் குர் ஆனின் வழிகாட்டுதல் 'ரஹ்மானை பற்றி அறிந்தவர்களிடம் தெரிந்து கொள்ளுங்கள்' என்பது தான். அதை மேலும் உறுதிபடுத்துகிறது "(நபியே!) யாரை (அவர்களின் மன அமைப்பின் கோரிக்கை படி) அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்".(18:17) என்ற இறைவாக்கு.

அறிந்தவர் யார் ? அண்ணல் பெருமானார்.
அவர்களின் இதயத்தில் தான் இந்த விளக்கம் இறைவனால் அருளப்பட்டது.
பின்னர் பெருமானாரிடமிருந்து சஹாபாக்கள்,
சஹாபாக்களின் வழியாகத் தாபியீன்கள்,
தாபியீன்களிடமிருந்து தபவுத்தாபியீன்கள்,
இப்படி சங்கிலித் தொடராக வந்த இந்த ஞானஜோதியை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ‘வலியே முர்ஷிதை’ அணுகி ரஹ்மானைப் பற்றி விளக்கம் பெறுவது தான் குர்ஆனிய வழிகாட்டலாகும்.
 
 தவ்ஹீதின் முக்கியத்துவம்: -
மேற்கூறப்பட்ட மூன்று வகை தவ்ஹீதும் ஒன்றுக்கொன்று தொர்புடையதும் பிரிக்கமுடியாததாகும். இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் மறுத்தாலும் அவர் தவ்ஹீது கொள்கையை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்.இந்த தவ்ஹீது வகைகளில் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது ‘ஷிர்க்’ என்னும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலாகும். (அல்லாஹ் நம் அனைவைரயும் பாதுகாப்பானாவும்).(நன்றி சுவனத் தென்றல்)

Post a Comment