தோழமையுடன்

Wednesday, June 23, 2010

புல்லாங்குழல் என்னும் ஏகத்துவ ரகசியம் !


நாங்கள் ஒரு புல்லாங்குழல் போன்று தான் இருக்கின்றோம். அதன் ஓசையோ உன்னுடையது (இறைவனுடையது) _ மஸ்னவி ஷரீபில் மவ்லானா ரூமி (ரஹ்)
“புல்லாங்குழல்” என்பது ஓரு மகத்தான ஆன்மீகக் குறியீடு. நீங்களும் நானும் ஒரு வகையில் புல்லாங்குழலைப் போன்றவர்கள். என்ன ரூமி (ரஹ்) இப்படிச் சொல்கின்றார்கள் என அதிர்ச்சியடையாதீர்கள். இதை விளங்க நாம் திருக்கலிமாவை விளங்க வேண்டும். 

“லா இலாஹா இல்லல்லாஹ்” என்ற கலிமாவில் அல்லாஹ்வின் இரண்டு பெயர்கள் உள்ளன. ஒன்று அல்லாஹ். மற்றொன்று இலாஹ். ‘அல்லாஹ்’ என்பது இறைவனது பெயர். ‘இலாஹ்’ என்பது அவனது பண்புப் பெயர். உதாரணமாக ஓவியர் ஹுசைன் என்பதில் ஹுசைன் என்பது அவரது பெயர். ஓவியர் என்பது அவரில் அடங்கி இருக்கும் திறமையின், பண்பின் பெயர். (ஆனால் இறைவனது பண்புகள் மனிதர்களைப் போல ஆரம்பத்தில் இல்லாமல் இருந்து கற்று தேர்ந்த பின் வரும் புதிதாக வரும் திறமையல்ல, இன்னும் காலம் செல்ல செல்ல மறையக் கூடியதுமல்ல. இறைவனது உலூஹிய்யத்தான பண்புகள் எப்போதும் அவனுடனே இருப்பவை).
இறைவனுக்கு எண்ணற்ற பண்புப் பெயர்கள் உள்ளன. அவைகளில் ரஹ்மான், ரஹீம், கஃபூர், கஃப்பார் முதலிய 99 பெயர்கள் திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டு மொத்த இறைத்தன்மைகளையும் ஒன்றாக சேர்த்து உலூஹிய்யத் மற்றும் ருபூபிய்யத் தன்மை கொண்ட பண்புகள் என்பார்கள். இந்த இறைபண்புகளுக்கு உரிமையாளன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பது தான் மகத்தான ஏகத்துவத்தின் மையக் கருத்தாகும்.
இறைத் தன்மையில் இறைவனுக்கு பங்காளி இல்லை : உணவளிப்பவன் (ராஜிக்), படைப்பவன் (ஹாலிக்) முதலியவை நம்மை படைத்து, வளர்த்து வரும் இறைவனின் ரட்ஷகதன்மையின் (ருபூபிய்யத்தின்) பெயர்கள். இந்த ருபூபிய்யத்தான குணங்களில் சிருஷ்டிகளையும் ஒரு இரவல் நிலையில் தன்னுடன் சேர்த்து சில இடங்களில் படைபாளர்களில் ‘அழகிய படைபாளன்’ (அஹ்சனுல் ஹாலிக்கீன்), ‘உணவளிப்பவர்களில் சிறந்த உணவளிப்பவன்’ (ஹைருர் ராஜிக்கீன்) என இறைவன் தன்னைப் பற்றி கூறுகின்றான். ஆனால் உலூஹிய்யத்தான பண்புகளில் வேறு பங்காளியை அவன் சேர்ப்பதே இல்லை. “லா இலாஹ்” என வணக்கத்துக்குரிய (உலூஹிய்யத்தின்) பண்புகள் கொண்டவன் தன்னைத் தவிர யாருமே இல்லை என வலியுறுத்தி கூறிவிடுகின்றான்.
இறைவன் தன்னுடன் யாரையுமே பங்காளியாக்காத உலூஹிய்யத்தான பண்புகள் என்ன என்பதை பார்க்கலாமா! உலூஹிய்யத்தான பண்புகளுக்கு தாய் பண்புகளாக ஏழு பண்புகளை கூறுவார்கள். உயிர், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு என்பதே அந்த ஏழு முதன்மை பண்புகள். இவை வணக்கத்திற்குரியவனுக்கு (இலாஹ்விற்கு) மட்டுமே சொந்தமான பண்புகள். உயிருள்ளவன் (ஹைய்யுன்), அறிஞன்(அலீமுன்), நாடுபவன்(முரீதுன்), வல்லமையாளன் (காதிருன்), கேட்கக்கூடியவன்(சமீஃவுன்), பார்க்கக்கூடியவன் (பஸீருன்), பேசக்கூடியவன் (கலீமுன்) என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமான பண்புப் பெயர்கள். இந்த பெயர்களுக்கு இன்னொருவரை உரிமையாளனாக, உடமையாளனாக விளங்குவது தான் ஷிர்க் என்னும் இணை வைத்தலின் தலை வாசல் ஆகும்.
“நிச்சயமாக அல்லாஹ், அவனே (யாவையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்” (40:20) என்னும் ஆயத்தில் நான் தான் பார்க்கக் கூடியவன். நான் தான் கேட்கக் கூடியவன் என அந்த பண்புகளை (exclusively) தனக்கு மட்டுமே சொந்தப்படுத்தி கூறுகின்றான்.அதே நேரத்தில் “அவனை கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் நாம் ஆக்கினோம்” (76:2). என கூறி நம்மை பார்க்க கூடியவனாகவும், கேட்க கூடியவனாகவும் ஆக்குவதையும் குறிப்பிடுகின்றான். இங்கே நாம் விளங்க வேண்டியது என்னவென்றால் கேஸ் சிலிண்டரில் கேஸ் இருப்பது போல பார்வை, கேள்வி முதலிய உலூஹிய்யத்தான வணக்கத்திற்குரிய பண்புகள் நம்மில் குடிவந்து விடவில்லை. புல்லாங்குழலை வாசிக்கும் போது ஓசை வருவது போல அவன் உலூஹிய்யத் இடைவிடாமல் நம்மில் வெளியாகி நம்மை பார்க்கக் கூடியவர்களாகவும், கேட்கக் கூடியவர்களாகவும் இடைவிடாமல் ஆக்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த இறைவனுக்கே சொந்தமான பண்புகள் இறைபிரதிநிதி (கலிஃபா) என்ற வகையில் நம்மில் சிறப்பாக வெளியானாலும்
 “அல்லது உங்கள் கேள்வி, பார்வையின் மாலிக் (எஜமான் - உரிமையாளன்) யார்?” (10:31) என கேள்வி எழுப்பி தன் ஏக போக உரிமையை நமக்கு தெள்ள தெளிவாக உணர்த்துகின்றான் வல்ல இறைவன்.

இறைவன் எல்லாவற்றையும் பார்க்கின்றான். எல்லாவற்றையும் கேட்கின்றான் நாமோ குறைந்த அளவு சுயமாக பார்க்கின்றோம், கேட்கிறோம் என எண்ணினால் கூட அவனுடைய பண்புக்கு நாமும் ஒரு சிறிய அளவில் சொந்தக்காரர்கள் ஆகிவிடுவதால் அது மறைமுகமான ஷிரிக் (ஷிர்கே கஃபி) என்ற நிலைக்கு நம்மை தள்ளிவிடும். மய்யத் தன்னை அடக்கி விட்டு செல்பவர்களின் காலடி ஓசையை கேட்கிறது என்பது நபி மொழி. வாழும் காலத்திலும் சரி மண்ணறைக்கு போன பின்னும் சரி அல்லாஹ் கேட்க வைக்காமல் யாரும் கேட்கவே முடியாது. அல்லாஹ் பார்க்க வைக்காமல் யாரும் பார்க்கவே முடியாது. எந்த நேரத்திலும் நாம் இடைவிடாமல் இறைவன்பால் தேவையுடையவனாகவே இருக்கின்றோம்.
“புல்லாங்குழல்” என்பது மனிதனின் இந்த தேவையே உருவான நிலயைக் குறிக்கும் ஓர் ஆன்மீகக் குறியீடு.
 “மனிதர்களே நீங்கள் (எல்லா நிலையிலும், எல்லா விஷயங்களிலும்) அல்லாஹ்வின்பால் தேவையுடையவர்கள். அல்லாஹ்வோ (எக்காலத்திலும், எவரிடத்திலும்) தேவையற்றவனாகவும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்”. (35:15)
எந்தவித உள்ளீடுமற்ற, ஏழு ஓட்டைகளைக் கொண்ட புல்லாங்குழலில் வாசிப்பவனின் திறமையால் மனதை மயக்கும் இசை வெளியாவது போல தனக்கே சொந்தமான உலூஹிய்யத்தின் அடிப்படையான ஏழு பண்புகளை பிரதிபலிக்கச் செய்து மனிதனை தன் பிரதிநிதியாக (கலீஃபாவாக) ஆக்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ் என்ன மகத்தான கருணையது! மனிதன் அல்லாஹ்வின் உயிரின் (ஹயாத்தின்) தொடர்பைக் கொண்டு உயிர் வாழக்கூடியவனானான், அல்லாஹ்வின் அறிவின்(இல்மின்) தொடர்பைக் கொண்டு அறியக் கூடியவன் ஆனான். அல்லாஹ்வின் நாட்டத்தின்(இராதத்தின்) தொடர்பைக் கொண்டு நாடக் கூடியவன் ஆனான். அல்லாஹ்வின் வல்லமையின் (குத்ரதின்) தொடர்பைக் கொண்டு வல்லமையுற்றான். அல்லாஹ்வின் கேட்கும் தன்மையின் (ஸமாஅத்தின்) தொடர்பைக் கொண்டு கேட்கக் கூடியவனானான். அல்லாஹ்வின் பார்வையின் (பஸாரத்தின்) தொடர்பைக் கொண்டு பார்க்கக் கூடியவனானான், அல்லாஹ்வின் பேச்சின் (கலாமின்) தொடர்பைக் கொண்டு பேசக்கூடியவன் ஆனான்.

இப்படி நம்மை வாழ வைப்பதற்காக இடைவிடாமல் இந்த இறைத்தன்மைகள் நம்மில் வெளியாகி கொண்டிருப்பதால், இவற்றை நமக்கே சொந்தமானது என நினைத்து இணைவைப்பில் விழுந்து விடுவோம் என்பதால் ஆன்மீக ஆசிரியர்கள் இதை பல உதாரணங்கள் சொல்லி தெளிவுபட விளங்க வைப்பார்கள். அவர்கள் கூறும் இன்னொரு ஓர் உதாரணத்தையும் பாருங்களேன்.
மின்சக்தியினால் மின் விசிறி இயங்குகிறது. மின்சாரத்தின் தயவின்றி ஒரு நிமிடம் கூட மின்விசிறி தனித்து இயங்க முடியாது. எப்படி மின்சாரம் பத்து வருடங்கள் மின் விசிறியுடன் இருந்து மின் சக்தியை வழங்கினாலும், மின் விசிறி மின்சக்திக்குச் சொந்தம் கொண்டாட முடியாதோ அதைப் போல வாழும் காலமெல்லாம் இறைவனின் குணங்கள் நம்மில் காணப்பட்டாலும் - அவைகளைக் கொண்டே நாம் இயங்கினாலும் அவை நமக்குச் சொந்தமானவை அல்ல. உதாரணமாக அறிவு என்னும் குணத்தை எடுத்துக் கொள்வோம். எந்த வித அறிவும் அற்ற நிலையில் தான் நம் குழந்தைப் பருவம் தொடங்குகிறது. இன்று எத்தனை பெரிய அறிஞனாக இருப்பவரும் குழந்தைப் பருவத்தில் மலத்தில் கை விட்டு மூத்திரத்தில் ‘சப்பு’ கொட்டிய காலத்தைக் கடந்து வந்தவர் தான். வயோதிகம் என்னும் நிலையில் இந்த அறிவின் தெளிவு சன்னம் சன்னமாக குறைவதையும் நாம் பார்க்கின்றோம். ஆக வாழும் காலத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது “உணர்தல்” (perception) என்னும் நுகர்வுரிமை (consuming rights) தான் அஸலான உரிமைத்தனம் (original ownership) அல்ல.
அல்லாஹ் நம்முடன்
புல்லாங்குழலில் ஓசை வருகின்றது என்றால் என்ன பொருள்? வாசிக்கும் உதடுகள் அதனுடன் இணைந்துள்ளது என்று தானே பொருள். இறைவனின் சக்தி, இறைவனின் பார்வை, கேள்வி என்பவையெல்லாம் நம்மில் வெளியாகின்றது என்றால் அவற்றை நமக்களித்து விட்டு இறைவன் ஒதுங்கி இருக்கவில்லை நம்மை வாழவைக்கக் கூடிய இறைவன் நம் பிடறி நரம்பை விட நமக்கு சமீபமாக இருக்கின்றான். இன்னும் ஒவ்வொரு படைப்பையும் அடைய வளைய சூழ்ந்தவனாக(முஹீத்தாக) இருக்கின்றான். நம் காரியங்களை ஆற்றித் தருபவனாக (வக்கீலாக, வலியாக, நஸீராக) இருக்கின்றான் என்பதைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்களின் ஆத்மீக போதனையின் மூலம் உலகுக்குக் காட்டித் தந்தார்கள். இதனால் அன்றைய சஹாபா பெருமக்கள் அனைத்து சிருஷ்டிகளின் உடன் இருந்து, அவைகளையும் அவற்றின் இயக்கங்களையும், அந்த சிருஷ்டிகளின் அமைப்பின் படி தன் யுக்தி, சக்தியைக் (ஹவ்ல குவ்வத்தைக்) கொண்டு படைத்து ஆட்சி செய்யும் உருவமில்லா அந்த மன்னவனின் (மாலிக்கின்) ஆட்சியை மனக் கண்ணால் கண்டார்கள்.அந்த அகப்பார்வையினால் அவர்களின் மனதில் இணைவைப்பு இல்லாத ஏகத்துவ தென்றல் வீசியது.
சிருஷ்டிகளில் வெளிப்படும் இறைத்தன்மையை (அல்லாஹ்வின் உலூஹியத், ருபூபியத்தைக்) கண்டு இறைவனுக்காக சிருஷ்டிகளை நேசித்தார்கள், தாயின் மூலம், தந்தையின் மூலம், கணவனின் மூலம், மனைவியின் மூலம், பிள்ளைகள் மூலம் இன்னும் கோடானகோடி சிருஷ்டிகளின் மூலம் நம் தேவையை நிறைவேற்றுபவனான, லாப நஷ்டம் தருபவனான ஏக இறைவனை மட்டுமே வணங்கினார்கள். அவர்களின் அச்சமும் ஆதரவும் ஏகனான அல்லாஹ்வின் பேரில் இருந்தது. அத்தகைய தன் நேசர்களை “(சிருஷ்டிகளை பொருத்தவரை) அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. துக்கமும் இல்லை” என அல்லாஹ் கூறுகின்றான். அவர்களின் ஈருலக வெற்றிக்கும் நன்மாராயம் சொல்கின்றான்.
(நம்பிக்கையாளர்களே) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள், அவர்களுக்கு எவ்வகை அச்சமுமில்லை; மேலும், அவர்கள் கவலையுறவும் மாட்டார்கள்.
அவர்கள் (அல்லாஹ்விடம்) நம்பிக்கைக் கொண்டு தக்வா செய்வார்கள்( பயபக்தியுடன், பேணுதலாக நடப்பார்கள்)
இன்னும் அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் நற்செய்தியுண்டு; அல்லாஹ்வின் வார்த்தைகளில் எத்தகைய மாற்றமும் கிடையாது. இதுவே மகத்தான வெற்றியாகும். (10:62-64)

No comments: