தோழமையுடன்

Thursday, June 17, 2010

அகப்பார்வை அத்தியாயம் 1

மனிதனுக்கு வானம், பூமியை வசப்படுத்திக் கொடுத்ததாக இறைவன் சொல்கின்றான்.

أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً
வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான் என்பதையும், இன்னும் உங்கள் மீது தன் அருட்கொடைகளை வெளிப்படையாகவும் (known and seen) மறைவானவையாகவும் (unknown and unseen) நிரப்பமாக்கி வைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? - அல் குர்ஆன் (31:20)

நம்மில் உள்ள இறைவன் வழங்கிய மறைவான அந்த அருட்கொடைகள் என்ன?

சைக்கோ சைபர்னேடிக்ஸ்” (Psycho cybernetics) என்பது மேக்ஸ்வெல் மால்ட்ஸ் (Maxwell Maltz) என்னும் பிளாஸ்டிக் சர்ஜன் (Plastic Surgeon) எழுதிய ஓர் அற்புதமான புத்தகம். அவர் பிளாஸ்டிக் சிகிச்சை (Plastic surgery) செய்து பலரது முக அமைப்பை மாற்றிய பொழுது, அது அவர்களது மன அமைப்பில் ஏற்படுத்திய வியக்கத்தக்க மனமாற்றத்தைக் கண்டார். அதே நேரத்தில் ஒரு சிலர் புதிய அழகிய தோற்றத்தை அடைந்த பின்னும் எந்த வித மாற்றமுமின்றி இருப்பதைக் கண்டு அதிர்ந்தார். இதை பல ஆண்டுகள் ஆராய்ந்த அவர் தன் ஆய்வின் விளைவாக எழுதிய புத்தகம் தான் சைக்கோ சைபர்னேடிக்ஸ்” (Psycho cybernetics). அது self image” என்னும் நமது சுய உருவகத்தைப் பற்றியது.

குறிப்பு: self image என்பதற்கு சுய உருவம், சுய வடிவம் போன்றவை நேரடிப் பொருளாய் இருந்தாலும் நம் சுயம் தன்னை உருவகித்துக் கொண்ட விதத்தின் கற்பனை வடிவங்கள் அல்லது மனப்பதிவுகள் என்பதை விளக்க சுய உருவகம் என்ற வார்த்தை பொருத்தமாகப்பட்டதால் self image என்பதை சுய உருவகம் என்ற வார்த்தையாலேயே குறிப்பிட்டிருக்கின்றேன்.
நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி நான் இன்ன வகை மனிதன்என்ற ஒரு சுய உருவகத்தை (self image) - நம்மைப் பற்றிய மனச்சித்திரத்தை, நம் மனதின் அடியில் பதிய வைத்திருக்கின்றோம். இந்த சுய உருவகம் நம்முடைய நான்என்பதன் வரைபடம் (mental blueprint). அதாவது நம்மைப் பற்றிய நமது கருத்துக்களின் மனச்சித்திரம். நம் புலன் உணர்வுகளினால் இதை அறிய முடியாவிட்டாலும் கூட நான்என்ற இந்த சுய உருவகத்தை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றோம். ஓர் அகராதியைப் போல ஆரம்பம் முதல் கடைசி விளக்கம் வரை இதில் இருக்கிறது.” 

ஒருவர் கருவாட்டு வாசம்என்பதும், இன்னொருவர் கருவாட்டு நாற்றம்என்பதும் இதனால் தான். ஒருவர் கணினியில் புகுந்து விளையாடுவதும், இன்னொருவர் கணினி என்றாலே எனக்கு அலர்ஜி என்பதும் இதனால் தான். ஒருவர் கால் கிலோ ஜிலேபியை காலையில் தின்பதும், இன்னொருவர் வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடுவார்களா? என்பதும் இதனால் தான்

நமது செயல்கள், உணர்வுகள், திறமைகள் இன்னும் நடத்தைகள் எல்லாம் இந்த சுய உருவகத்துக்கு இசைவானவை. சுருங்கச் சொன்னால் மனதில் உருவாக்கப்பட்ட இன்ன வகை மனிதனாகத்தான் நாம் நடக்கின்றோம். இன்னும் சொன்னால் எவ்வளவுதான் மனோ சக்தியை(will power) பிரயோகித்து முயன்றாலும் நம்மால் வேறு விதமாக நடக்க முடியாது. இது தான் நம் இலக்கு (goal)களின் கட்டுப்பாட்டு மையமாகும். இதுவே நமக்கு எது எது சாத்தியம் என்ற எல்லைக் கோடுகளையும் நிர்ணயிக்கின்றது.” 

உண்மையில் இவை நம் மனதில் நாமே வரைந்த கற்பனை வேலிகள். தாண்டிச் செல்ல முடியாத இரும்புச் சுவர்கள் அல்ல. “நமது சுயவுருவகத்தை மேம்பட்டதாக வடிவமைப்பதன் மூலம் நமது செயல் திறனின் எல்லையும் வியக்கத்தக்க உச்சத்தை எட்டுகிறதுஎன்பதைப் பற்றி விவரிக்கிறது அந்தப் புத்தகம்

எண்பதுகளின் ஆரம்பத்தில், என் கல்லூரி நாட்களில் படித்த அந்தப் புத்தகம் என் ஆன்மீகத் தேடலில் ஒரு சிறிய ஜன்னலைத் திறந்தது. அதனால் உந்தப்பட்டு அதைப் போன்ற பல புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். அதன் வாயிலாய் மனதின் சூட்சுமத்தை திறக்கும் மந்திர சாவிகளை வெறும் புத்தகங்களில் தேட முடியாது என்பதை அந்தப் புத்தகங்களை எழுதிய அறிஞர்களின் வழிகாட்டுதலால் புரிந்து கொண்டேன்.
0 0 0 0
الرَّحْمَنُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا
ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள் -அல் குர்ஆன் (25:59)

நல்ல வேலை, இனிய குடும்பம், அன்பு நண்பர்கள் என இறைவன் எனக்கு என் தகுதிக்கு மேல் வழங்கிய அருட்கொடைகள் ஏற்படுத்திய இறைக்காதலின் தொடர்ச்சி அவனைப் பற்றிய தேடலாக விரிந்தது

1994 ஆம் வருடம், அப்போது நான் சிசெல்ஸ் (Seychelles) என்னும் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆப்பிரிக்கத் தீவில் வேலை செய்து கொண்டிருந்தேன். விடுமுறையில் இந்தியாவுக்கு வந்திருந்த போது ஒரு நாள், என் வாழ்வின் போக்கையே உன்னதமாக மாற்றிய இருபதாம் நூற்றாண்டின் மகத்தான ஒரு இஸ்லாமிய தத்துவ ஞானியைச் சந்தித்தேன்.
அன்பே வடிவாய், அரவணைக்கும் புன்னகையுடன், மரியாதைக்குரிய தோற்றம். அவர்கள், “நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்?” என என்னைக் கேட்டார்கள். அந்த கேள்வியின் நோக்கம் நான் எங்கே வேலை செய்கின்றேன் என்பதா? இல்லை என் சொந்த ஊர் என்ன என்பதா? என விளங்கவில்லை. ஆனால், அவர்கள் முகத்தின் தீட்சண்யம் கேள்வி மிகவும் நுட்பமானது என்பதை விளக்கியது. தயக்கத்துடன் நான் சிசெல்ஸில் இருக்கின்றேன்!” என்றேன். ‘அப்பாவி மனிதா!’ என்பது போல் புன்னகைத்தார்கள். பின் கனிவான தோரணையில், “மனிதனுக்கு உடல், உள்ளம், ஆன்மா என்ற மூன்று அம்சங்கள் இருக்கின்றன. வெளிரங்கத்தில் தெரியும் இது உங்களுடைய உடல். இன்னும் உள்ரங்கத்தில் இருப்பது உங்களுடைய உள்ளம், உங்களுடைய ஆன்மா. இப்படி உடையஎன்னும் உடமையை (Possessiveness) குறிக்கும் சொல் வந்தாலே அது வேற்றுமையைக் குறிக்கும். உடைய என்பது வேற்றுமை உருபு. உதாரணமாக இது என்னுடைய கண்ணாடி என்றால் கண்ணாடி என்பது நான் அல்ல. இது என்னுடைய சட்டை என்றால் சட்டை என்பது நான் அல்ல. இது உங்களுடைய உடல், இது உங்களுடைய உள்ளம், இது உங்களுடைய ஆன்மா என்றால் உடல், உள்ளம், ஆன்மா என்பது நீங்கள் அல்ல. அப்படி என்றால் இந்த உடலை, உள்ளத்தை, ஆன்மாவை உடையவரான நீங்கள் யார்? அந்த நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்என மெலிதான புன்னகையுடன் கேட்டார்கள்.

இறப்புக்குப் பின் கேள்வி கணக்குகள், வேதனை என்பதெல்லாம் செய்யப்படும் கப்ர்என்பது என்ன? ஒரு விமான விபத்திலோ, அல்லது தீ விபத்திலோ முற்றிலும் உடல் அழிந்த ஒருவருக்கு (நம் அனைவரையும் அத்தகைய திடீர் மரணத்தை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கப்ர் எங்கேயுள்ளது? அந்த உடலற்ற நிலையில் இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிப்பது யார்? அல்லது எது?” இந்த ரீதியில் கேள்விகள் தொடர்ந்தன.
وَفِي أَنفُسِكُمْ أَفَلَا تُبْصِرُونَ
உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை நீங்கள் உற்று நோக்க வேண்டாமா? (51:21) என்ற இறை வசனத்தை மையமாக வைத்து அமைந்திருந்தது அவர்களின் உரையாடல். ஒவ்வொன்றையும் அவர்கள் விளக்கிய பாணி எளிமையாகவும், புதுமையாகவும் இருந்தது. ஒரு நாள் அவர்களுடன் இருந்தேன். அதற்குப் பிறகு நான் சிசெல்ஸ்க்குச் சென்று விட்டேன். மீண்டும் இந்தியா வந்த போது இறைவன் அருளால் அவர்களின் தொடர்ச்சியான சகவாச பாக்கியம் கிடைத்தது.

நம்மை இறைவன் படைத்ததன் நோக்கம் என்ன? நமது நப்ஸ் (self ‘நான்’) என்பது என்ன? நம்மில் உள்ள இறைவனின் மறைவான அருட்கொடைகள் என்ன?ஈருலக வாழ்விலும் வெற்றியாளனாக ஒரு இறைநம்பிக்கையாளனின் சுய உருவகம் திருகுர்ஆன்என்னும் இறைவழிகாட்டலின் அடிப்படையில் எப்படி அமைய வேண்டும்? இணைவைப்பிலிருந்து (ஷிர்கிலிருந்து) நம்மை மீட்டு உன்னதமான அர்ஷின் அதிபதியை நம் பிடரி நரம்பை விட சமீபமாக காட்டித் தரும் அகப்பார்வை என்றால் என்ன? அகப்பார்வையாளனை (முஹ்சினை) அல்லாஹ்வுடன் சேர்த்து வைக்கும் இறையச்சம் (தக்வா), ஏகத்துவம் (தவ்ஹீத்) என்பது என்ன

உலூஹிய்யத் - இறைத்தன்மை என்பது என்ன

ருபூபிய்யத் - ரட்ஷகத்தன்மை என்பது என்ன

என இப்படி பல புரியாத கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் நபிமொழியின் (ஹதீஸ்) அடிப்படையில் பரிவோடு சொல்லிக் கொடுத்தார்கள்

அகப்பார்வை, இறையச்சம் (தக்வா), ஏகத்துவம் (தவ்ஹீத்) என்பதெல்லாம் மத சம்பந்தபட்ட உயர் தத்துவங்கள் மட்டுமல்ல; நம்மை, நம் சுய உருவகத்தை மேம்படுத்தும் மகத்தான மனோதத்துவம் என்ற புதிய பரிமாணம், என்னை ஆச்சரியப்படுத்தியது. கடல் போன்ற இறை ஞானத்தில் ஒரு சில துளிகளை பருகிய என் போன்ற கடை நிலை மாணவர்களுக்கே, அந்த அறிவின் வெளிச்சத்தில் குர்ஆனை அணுகினால் எத்தனை மகத்தான பொக்கிஷமது என்பது புரிந்தது. விஞ்ஞானத்தின் வியக்கத் தக்க விளக்கங்களை படிக்கும் போதெல்லாம் அவை அனைத்தும் அதன் முழுமைக்காக மெய்ஞானத்தை சார்ந்து நிற்பது புரிந்தது. திருக்குர்ஆனின் வெளிச்சத்தில் அருவியாய்க் கொட்டிய அவர்களின் மெய்ஞான விளக்கம் வணக்கத்திற்குரிய அல்லாஹ்வின் மீது மட்டுமல்ல, நம் வாழ்வின் வட்டத்தில் அன்றாடம் சந்திக்கும் பெற்றோர், மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள் என சக மனிதர்களின் மீதும், இன்னும் அதையும் தாண்டி இறைவன் படைத்த அனைத்து படைப்பினங்கள் மீதும் ஒரு நேசத்தை விதைத்தது. அந்த நேசத்தின் விளைவாக நான் பெற்றுணர்ந்த பேற்றைப் பெறுக இவ்வையகம், என்ற ஆசையுடன், இறைவனின் கருணையில் ஆதரவு வைத்தவனாக என்னால் இயன்ற வரை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் துணிந்து விட்டேன்.

இதில் கூறப்பட்டுள்ள விஷயம் கனமானதாகவும், புதியதாகவும், சற்று ஆச்சரியப்படுத்தவும் கூடும். ஆனால் உண்மை. நான் எதை சத்தியமான உண்மையென நம்புகின்றேனோ அதைத் தான் என் அன்பு சகோதர/சகோதரியான உங்கள் முன் எடுத்து வைத்திருக்கின்றேன். ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். அப்படி எந்த ஒரு முடிவுக்கும் வரும் முன் நிதானமாக ஒவ்வோரு பக்கத்தையும் திறந்த மனதுடன், ஒன்றுக்கு இரண்டு முறை பொறுமையுடன், கொஞ்சம் கொஞ்சமாக படித்துப் பாருங்கள். முழுவதையும் படித்த பின், இரண்டாம் முறையாக மீண்டும் ஒரு முறை அவசியம் படியுங்கள். கடந்த பதினைந்து வருடகால ஞான சகவாசத்தில் கற்ற கல்வியின் சாரத்தில் ஒரு முக்கிய பகுதி இது. நம் வாழ்வை உன்னதமாக்கும் அகமிய விஷயங்களைக் கொஞ்சம் தெரிந்து கொள்வதற்காக உங்கள் பொன்னான நேரத்தில் இரண்டே இரண்டு மணி நேரம் ஒதுக்குங்கள். இறைவன் அருளால் உங்கள் இதயத்துக்கு மேலும் ஒரு புதிய வெளிச்சம் கிடைக்கும் என நம்புகின்றேன்

இறைஞானம்என்பதெல்லாம் இறையச்சம் மிகுந்த நல்லடியார்களின் பாதை. நாமோ ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என வாழும் சராசரிகள். நமக்கெல்லாம் இவை சரியாக வருமா? என புனிதத்தின் பேரில் ஒதுங்கும் பாசாங்கு நமக்கு வேண்டாம். இறைஞானம் இன்றி இஸ்லாம் இல்லை. நம் நிம்மதியான வாழ்வின் ஆணி வேர் அது. மேலும் நீங்கள் படிக்கப் போகும் இந்தச் சிறிய வெளியீடும், ஒரு ஞானியின் பார்வையல்ல. நானும் உங்களில் ஒருவன் தான். ஒரு ஞானியின் சகவாசத்தில் இருந்த ஒரு பாமரன் பெற்ற பேறு இது என்பதே, “இறைஞானம்என்ற கதவை இறைவன் எல்லோருக்கும் திறந்தே வைத்திருக்கின்றான் என்பதற்கான அத்தாட்சியாகும்.

عَلَى بَصِيرَةٍ أَنَاْ وَمَنِ اتَّبَعَنِي அகப்பார்வையின் மீதே நான் இருக்கின்றேன். என்னை பின்பற்றியவர்களும்” (12:110) என்னும் இறைவசனம் (12:110) பெருமானாரை பின்பற்றுபவர்கள் அனைவரும் அகப்பார்வை பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அண்ணல் பெருமானாரின் அகப்பார்வை என்பது, ஓர் உச்சக்கட்ட எல்லை. அந்த உன்னத அகப்பார்வையில் அறிவுடையோர் அனைவரும் அடைவதற்கு முயல வேண்டிய ஒரு நியாயமான எல்லையைப் பற்றித் தான் இந்தக் கட்டுரையில் அலசப்படுகிறது. இஹ்ஸான் ஹதீஸில் வரும் பார்ப்பதைப் போல” (கஅன்னக்க தராஹு) என்ற சொற்றொடர், பஸீரத் என குறிப்பிடப்படும் அகப்பார்வைஇன்னும் ஷுஹூது/ ஷஹீது என்று சொல்லப்படும் சாட்சியளித்தல்” (witnessing) என்ற வார்த்தைகளுக்கு தனிப்பட்ட ஆழமான அகமிய அர்த்தங்கள் இருக்கின்றது. அத்துடன் அவைகளுக்கிடையே ஞானம் கொண்டு பார்க்கும் பார்வை” (இஸ்திஹ்லார் ஃபில் இல்ம்) என்ற ஒரு பொதுவான சரடு (common string) இருப்பதை என் ஞானாசிரியரின் போதனையின் போது நான் உணர்ந்த விதத்தில் இக்கட்டுரையை அமைத்திருக்கின்றேன். மேலும் இறையருளால் ஆன்மீக அறிஞர்கள் வாயிலாக பெற்ற திருமறைஞானம் சார்ந்த நம்பிக்கையைக் (இல்முல் யக்கீன்) கொண்டு அகப்பார்வை (அய்னுல் யக்கீன்) வழியில் முயன்றால் அது உறுதியான ஆன்மீக அனுபவ நம்பிக்கையாக (ஹக்குல் யக்கீன்) மலரும் என்பது என் நம்பிக்கை. அந்த வகையில் அகப்பார்வை என்பது மானிடத்தின் மீதான கடமை என்பதை விட மகத்தான பிறவிப் பேறு!” என சொல்லலாம். இக்கட்டுரையில் என் ஞானாசிரியரின் அறிவும், என் அறிவின்மையும் சேர்ந்தே வெளிப்பட்டிருக்கலாம். ஆயினும், இறையருளால் இயன்ற வரை தவறுகள் ஏற்படாமல் கருத்துகளை முன் வைக்க பல அறிஞர்களின் துணையுடன் முயன்றிருக்கின்றேன்

முழுவதும் படித்தப் பின் உங்கள் பண்பட்ட அறிவின் உறைகல்லில் இதை உரசிப் பார்த்து, என் விளக்கத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து கொண்டு, அதை விட மேலான விளக்கத்தை நீங்கள் பெறக் கூடும் என்பது என் நம்பிக்கை. மேலும் உங்கள் தேடுதல் பாதையில் ஒரு சிறு அளவாவது தூண்டுகோலாக இருந்ததற்காக அன்புடன் எனக்காக இறைவனை இறைஞ்சுவீர்கள் என்பது என் எதிர்பார்ப்பு. அதன் மூலம் அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பான் என்பதில் ஆதரவு வைக்கிறேன். உங்களையும், என்னையும் அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவானாக! ஆமீன். வஸ்ஸலாம்.

No comments: