“உங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்”, என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.(5:76)
அவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்திட அவை சக்தி பெறமாட்டா. (அது மாத்திரமல்ல) தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் முடியாது. (7:192)
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற திருமறை வசனங்களின் வாயிலாக அல்லாஹ்வை தவிர யாரிடமும் உதவி தேடக் கூடாது என்னும் ஏகத்துவத்தின் அடிப்படையை நாம் விளங்கி இருக்கின்றோம். இந்த திருவசனங்களை நன்றாக கவனியுங்கள் . அல்லாவை தவிர யாரிடமும் உதவி கேட்க கூடாது என்பதை விட அல்லாஹ்வைத் தவிர யாரும் உதவி செய்ய முடியாது என்பதையே இவை வலியுறுத்துகின்றன. அல்லாஹ்வைத் தவிர யாரும் உதவி செய்யவே முடியாது, அந்த தகுதியே எந்த படைப்பினத்துக்கும் இல்லை என இந்த திருமறை வசனங்கள் வலியுறுத்தும் மகத்தான உண்மையை விளங்குவதில் நாம் பெரும்பாலும் கவனம் செலுத்தாதவர்களாகவே இருக்கின்றோம். அந்த மேலான ஈமானின் விளக்கமின்மையால் என்ன நேர்கிறது? தொழுகையின் போதும், தவிர்க்க முடியாத சிரமத்தின் போதும் அல்லாஹ்விடம் உதவி தேடுகின்றோம். நடைமுறையில் நம் தேவைகளை படைப்பினங்களின் மூலமாகத்தான் தான் நிறைவேற்றிக் கொள்கின்றோம்.
ஒரளவு விளக்கம் பெற்ற நாம் படைப்பினங்களின் மூலம் பெருமானார் உதவி பெற்றிருக்கின்றார்கள் என்பதாலும் இந்த படைப்பினங்களின் மாறலாக அல்லாஹ் தான் உதவுகிறான் என்ற நம்பிக்கையாலும் படைப்பிங்களிடம் அவற்றின் சக்திக்கு ஏற்ப உதவி கேட்கலாம் என்ற அளவு விளக்கத்தை தங்களுக்கு போதுமானதாக ஆக்கிக் கொள்கின்றோம். ஆயினும் குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் ஆராய்ந்து அறியும் முயற்சி நம்மிடம் இல்லை. அதனால் “உன்னையே வணங்குகின்றேன். உன்னிடமே உதவியும் தேடுகின்றேன்” என்ற திருமறை வசனத்தை ஒவ்வொரு வேளைத் தொழுகையிலும் உணர்வின்றி சடங்காக சொல்கின்றோம். நம் வாழ்வின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றித் தருபவனாக அல்லாஹ் மட்டுமே இருக்கின்ற அகமியமான கலிமா விளக்கத்தைப் பெற்று அல்லாஹ்வை அகக்கண்ணால் முன்னோக்கி “பார்ப்பதைப் போன்று” சொல்ல வேண்டிய தாத்பரியமிக்க வார்த்தைகளவை. (அகக்கண்ணால் முன்னோக்கும் இஹ்சான் என்னும் நிலையைப் பற்றி அகப்பார்வை கட்டுரையில் விளக்கி இருப்பதால். விரும்பியவர்கள் அங்கே சென்று பார்வையிடலாம். அதை படிக்காவிட்டாலும் நான் சொல்ல வருவதை இன்ஷா அல்லாஹ் விளங்கிக் கொள்ளலாம்.).
தேவைகளை நிறைவேற்றுபவன்
நமக்கு உப்புப் போன்ற சிறிய பொருளின் தேவையா? தன்னிடமே கேட்கச் சொல்கின்றான். அறுந்த செருப்பு வாரை சரி செய்யும் சிறிய செயலின் தேவையா? தன்னிடமே கேட்கச் சொல்கின்றான். இது ஒப்புக்கு சொன்ன வார்த்தைகளல்ல இதன் உண்மை பொருளை உணர்ந்து அதன்படி நடந்தால் இறைவன் அருளால் நம் வாழ்வில் ஒரு மகத்தான மறுமலர்ச்சி ஏற்படும்.
“என்ன இந்த அடியானுக்கு அல்லாஹ் போதுமானவனாக இல்லையா?”(39:36) என அல்லாஹ் கேட்கின்றான்.
அவனைத் தவிர இன்னொருவர் சுயமாக ஒரு அற்பத் தேவையை தன் தானாக நிறைவேற்றிக் கொள்ளவோ அல்லது பிறருக்கு நிறைவேற்றவோ முடியும் என்றால் அல்லாஹ் இந்த கேள்வியை எழுப்ப மாட்டான்.
மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகின்றேன். ஏகத்துவத்தின் அடிப்படை அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் உதவி கேட்கக் கூடாது என்பதை விட அல்லாஹ்வைத் தவிர யாரும் உதவி செய்ய முடியாது என்பதை தெளிவாக உணர்வதிலேயே இருக்கிறது.
புலன் உணர்வு சார்ந்த புறப்பார்வையையும், பகுத்தறிவு சார்ந்த அனுபவ நம்பிக்கையை மட்டுமே கொண்டு இந்த மகத்தான உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூட தன் சொந்த ஆராய்ச்சியின் மூலம் இந்த இறைஞான கருத்துகளை முன் வைக்கவில்லை. இறைவன் வஹி என்னும் வேத வெளிப்பாட்டின் மூலம் இந்த ஏகத்துவ ஞானத்தை - மறைவான ஆதி ஞானத்தை மன்னர் முஹம்மதரின் சங்கைமிகு இதயத்தில் இறக்கி வைத்து மானிட குலத்திற்கு ஒரு தெளிவான ஆதாரமாக்கிவிட்டான்:
“மனிதர்களே! உங்கள் ரப்பிடமிருந்து (உறுதியான) ஆதாரம் உங்களுக்கு வந்து விட்டது. தெளிவான ஒளியையும் நாம் இறக்கி வைத்துள்ளோம்”. (4:174 அல் குர்ஆன்)
நபிகள் பெருமான் (ஸல்) அவர்கள் அல்லாஹ் ஏற்றி வைத்த தன் அக ஜோதியை தன்னைப் பின்பற்றிய அனைவருக்கும் வாரி வழங்கி அல்லாஹ் என்ற உண்மை உதவியாளனை (முனீமே ஹக்கீகியை) மகத்தான நேசனை மிக மிக நெருக்கமாக திரும்பும் திசையெல்லாம் அகப்பார்வைக்குக் காட்டித் தந்தார்கள்.
அந்த ஏகத்துவ வழிகாட்டுதலினால் பயன் பெறாத நிராகரிப்பாளர்களை பற்றிக் கூறும் போது மறுமையில் இந்த உண்மை விளங்கிவிடும் என்ற அமைப்பில்:
“அல்லாஹ்வையன்றி எந்த நேசனையும், உதவியாளனையும் (நிராகரிப்பாளர்களான) அவர்கள் (மறுமையில்) காணமாட்டார்கள்”. (4:173) என கூறுகின்றான்.
குர்ஆன் என்னும் தெளிவான ஆதாரத்தையும், அதன்படி அமைந்த இறைஞானம் என்னும் ஒளியையும் நபி வழியில் முறையாக பெற்றுக் கொண்ட நம்பிக்கையாளர் தன் அகப்பார்வையால் இறைவனையன்றி, எந்த உண்மை நேசனையும், உதவியாளனையும் இம்மையிலும் காணமாட்டார்.
அல்லாஹ்வைத் தவிர ஏன் யாரும் தேவையை நிறைவேற்ற முடியாது
தேவைகளை நிறைவேற்றும் தகுதி என்ன? அல்லாஹ்வைத் தவிர ஏன் யாருமே தேவையை நிறைவேற்ற முடியாது என்பதை பார்ப்போம். தேவைகளை நிறைவேற்றக் கூடியவனுக்கு நான்கு அம்சங்கள் சுயமாக இருக்க வேண்டும் என இறையியல் அறிஞர்கள் வகுத்துள்ளார்கள். அவையாவன :
(1) சுயமான இருப்பு:
தேவையை நிறைவேற்றக் கூடியவனின் (இலாஹுடைய) இருப்பு சுயமானதாக (Self Existent) தன்னைக் கொண்டே தான் இருக்க வேண்டும். தன் இருப்புக்குப் பிறரை சார்ந்திருப்பவன் அல்லது சார்ந்திருக்கும் ஒரு பொருள் பிறர் தேவைகளை சுயமாக நிறைவேற்றவே முடியாது.
ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளி வருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன் இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலையிலிருந்தான். (76:1) என திருமறையின் வாயிலாக அறிகின்றோம்.
மனிதன் மட்டுமல்ல அல்லாஹ்வை தவிர உள்ள அனைத்துமே சுயமாக இல்லதவைகள். “அல்லாஹ் இருந்தான். அவனுடன் எந்த பொருளும் இருக்கவில்லை” என்னும் நபிமொழியும் இந்த விளக்கத்தையே தருகின்றது. இப்படி இன்ன பொருள் என அறிய முடியாத நிலையில் இருந்தவைகளை ஆணாக, பெண்ணாக, வானமாக, பூமியாக பாடைத்தவன் அல்லாஹ்.
அல்லாஹ்விற்கு ‘கையும்’ என்றொரு பண்பு உள்ளது. “சுயமாக இருப்பவன்” என்பதை இந்த பண்பும் குறிக்கிறது. ‘கையும்’ என்பதற்கு சுயமாக இருப்பவன் என்பது மட்டுமல்ல தான் சுயமாக இருப்பதுடன் தான் அல்லாதவற்றிற்கு அதாவது தன் படைப்பினங்களுக்கு (இரவல்) இருப்பை வழங்குபவன் (காயுமுன் ஃபிநஃப்ஸிஹி முகவ்விமுன் லி கைரிஹி) என்று திருமறை விரிவுரையாளர்கள் கூறிப்பிடுகின்றார்கள். இங்கு தான் நான் கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய நுணுக்கம் இருக்கிறது. அல்லாஹ்வின் படைகுதல் என்பது ஒரு தொடற்சியான செயல். நம் கண், காது, மூக்கு, மூளை, இதயம் மட்டுமல்ல முடியும், நகமும் கூட செல்கள் என்ற அமைப்பினால் ஆனவை. செல்கள் இடைவிடா மாற்றத்திற்கு உட்பட்டவை ஒவ்வொரு நாளும் நம் உடலில் ஆயிரக்கணக்கான் செல்கள் அழிகின்றன. புதிய செல்கள் உறுவாகின்றன. முற்றிலும் புதிய செல்களைக் கொண்டு புதுபிக்கப்பட்ட நிலையில் நாம் காட்சியளிக்கின்றோம் என்பதை “ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த நீயல்ல தம்பி இப்போது இருப்பது ஆளே வேறு!”, என அறிவியல் அறிந்தவர்கள் நகைச் சுவையாக இந்த உண்மையை சொல்வார்கள்.
அல்லாஹ் (தான்) படைப்பை (முதன் முறையாக) படைக்கின்றான். பிறகு மீள வைக்கின்றான் .எனவே(இந்த உண்மையை விட்டும்)எங்கு செல்கின்றீர்கள் என நீங்கள் சொல்வீர்களாக!( 10:34)
முதலாவதாக படைத்ததில் நாம் இயலாமல் ஆகி விட்டோமா? அவ்வாறன்று (நிராகரிப்போர்களான) இவர்கள் புதிதாக படைப்பது குறித்து சந்தேகத்தில் உள்ளனர்.(50:15) என்னும் இறைவசனங்களிலிருந்து ‘படைக்குதல்’ என்பது ஒரு தொடர்ச்சியான செயல் (continuous and instantaneous process) என்பதை இறைவன் தெளிவாக வழியுறுத்துகின்றான்.
தன் இருப்புக்குப் இவ்வாறு அல்லாஹ்வை சார்ந்திருக்கும் சார்ந்திருக்கும் ஒருவன் அல்லது ஒரு பொருள் பிறர் தேவைகளை சுயமாக நிறைவேற்றவே முடியாது. நாம் எங்கிருந்த போதும் நம்முடன் அங்கே இருந்து நமது ஒவ்வொரு வினாடியையும் இடைவிடாமல் படைத்துக் கொண்டே இருக்கின்றானே அவன் தான் தான் விரும்பிய சிருஷ்டிகளின் மூலம் நம் தேவைகளை நிறைவேற்றுகின்றான்.
2. சுயமான பண்புகள்(சிஃபாத்):
தேவையை நிறைவேற்ருப்வனுக்கு உயிர், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு, முதலிய தேவைகளை நிறைவேற்றும் அடிப்படைப் பண்புகள் சுயமாக இருக்க வேண்டும். உயிர், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு, முதலிய தேவைகளை நிறைவேற்றும் அடிப்படைப் பண்புகள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அந்த பண்புகள் நம்மிடமும் காணப்பட்டாலும் நாம் அறிவோம் நம்மிடம் காணப்படும் இந்த பண்புகள் ஜப்பானிலோ, அமெரிக்காவிலோ வாங்கியவைகள் அல்லாஹ். நமக்கு ஒரு இருப்பை இடைவிடாமல் வழங்கி கொண்டிருக்கும் அல்லாஹ் தன்னுடையஇந்த தன்மைகளயும் நம்மில் சுடர வைத்து நம்மை வாழ வைத்து கொண்டிருக்கின்றான். ஒவ்வொரு வினாடியும் இப்படி அவன் தயவால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சிருஷ்டிகள் நம் தேவையை எப்படி சுயமாக நிறைவேற்றும். தனக்கே சொந்தமான இந்த தன்மைகளின் மூலம் அல்லாஹ் தான் சிருஷ்டிகளின் போர்வையில் நம் தேவைகளை நிறைவேற்றுகின்றான். (புல்லாங்குழலின் ஏகத்துவ ரகசியம் என்னும் தனி கட்டுரையில் இதை பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.)
(2) சுயமான செயல்பாடு (அஃப்ஆல்):
தேவையை நிறைவேற்றுபவன் சுய சக்தியுடையவனாக, சுயமாக செயல்படுபவனாக இருக்க வேண்டும்.
சிருஷ்டிகள் இயங்குவதால் தான் தேவைகள் நிறைவெறுகின்றன. இயங்குவதற்கு சக்தி தேவை. சக்தியனைத்துக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் ஆனால் ஒவ்வொரு சிருஷ்டியின் செயலிலும் இது அல்லாஹ்வின் சக்தியைக் கொண்டு இயங்குகிறது என்பது நமக்கு நினைவுக்கு வருகிறதா?
வெப்ப சக்தி, மின் சக்தி, புவி ஈர்ப்பு சக்தி, மின்காந்த சக்தி, பார்க்கும் சக்தி, பேசும் சக்தி, கேட்க்கும் சக்தி, ஞாபக சக்தி என நம் உள்ளும் வெளியிலும் எத்தனை எத்தனையோ சக்திகள். புரிந்து கொள்ளும் வசதிக்காக தனித் தனியே அவைகளை பெயரிட்டு அழைக்கும் நாம் அனைத்து சக்திகளின் மூல ஊற்று இறை சக்தி என்பதை மறந்து விடுகின்றோம்.
சக்தி என்பதே இல்லை. அல்லாஹ்வைக் கொண்டே தவிர 18:39 என்பது திருமறை கூற்று.
அபு மூசா அல்அஷ்அரி (ரலி) அவர்கள் கூறிய ஹதீஸின் ஒரு பகுதி பின் வருமாறு :
“பின்னர் (அண்ணலார் என்னை நோக்கி) அப்துல்லாஹ் பின் கைஸே! சொர்க்கத்தின் கருவூலங்களிலுள்ள ஒரு வார்த்தையை உமக்கு நான் கற்றுத் தரட்டுமா? (அது) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (எனது யுக்தியும், சக்தியும் அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை) என்பது தான்”. - நூல்: புகாரி
தப்ஸீர் இப்னுகஸிரில் (பாகம் 1 பக்கம் 465-466ல்) இந்த ஹதீஸின் அடிக்குறிப்பில் பின் வருமாறு எழுதப் பட்டுள்ளது:
‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்பதற்குப் பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ‘லா ஹவ்ல’ பாவத்திலிருந்து திரும்புவதோ ‘வலா குவ்வத்த’ வழிபாட்டின் மீது ஆற்றல் பெருவதோ ‘இல்லா பில்லாஹ்’ அல்லாஹ்வைக் கொண்டே தவிர முடியாது என்பது ஒரு பொருள். ‘ஹவ்ல’ என்பதற்கு இயக்கம் என்றும் ‘குவ்வத்’ என்பதற்கு ‘ சக்தி ’ என்றும் ஒரு பொருள். இதன்படி மனிதனின் இயக்கமும், சக்தியும் அல்லாஹ்வைக் கொண்டு தான் என பொருள் விரியும். ‘ஹவ்ல’ எனபதற்கு யுக்தி என்ற பொருளும் உண்டு அதன்படி எனது யுக்தியும், சக்தியும் அல்லாஹ்வைக் கொண்டுதான் எனப் பொருள் அமையும். மனிதனின் அறிவாற்றலும் செயலாற்றலும் அல்லாஹ்வால் தான் என்ற கருத்து இதில் கிடைக்கின்றது (துஹ்பதுல் அஹ்வதி).
எக்காரியத்திலும் நீர் இருப்பதில்லை. இந்த குர்ஆனிலிருந்து நீங்கள் ஓதுவதுமில்லை. செயலில் நீங்கள் எதையும் செய்வதுமில்லை. நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும் போது நாம் பிரசன்னமானவர்களாக (ஷுஹூதன்) இருந்தே தவிர (10:61)
அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி மொழி :
அல்லாஹ்த் தஆலா கூறியுள்ளான்: எனது அடியான் என்னை நினைவு கூறும் போது நான் அவனுடனே இருக்கின்றேன். அவனது இரு உதடுகளும் என்னைக் கொண்டே அசைகின்றன. (புகாரி ஷரீப், மிஸ்காத் பக்கம் 199 ஆதாரம் ஷைக் அப்துல் காதர் மன்பஈ எழுதிய அல்லாஹ் நம்முடன் பக்கம் 9)
நாம் எங்கிருந்த போதும் இறைவன் நம்முடன் இருந்து நம் செயலை வெளியாக்குகின்றான் என்பது குர்ஆன், ஹதீஸின் பற்பல ஆதாரங்களின் வாயிலாக மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
சுய சக்தியில்லாதவைகள் தனக்குத் தானே லாபமோ, நஷ்டமோ தர முடியாது என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள். சிருஷ்டிகளை அவை தாமே பார்க்கக் கூடியவை, கேட்கக் கூடியவை, பேசக்கூடியவை சுருக்கமாகச் சொன்னால் சுயமாக இயங்கக் கூடியவை என்பதாக நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) விளங்கி இருந்தார்கள். அதனால் சிருஷ்டிகள் சுயமே லாபம், நஷ்டம் தருவதாக கண்டார்கள். காரணம் புற உலகில் லாப நஷ்டங்களை உண்டாக்குவது சிருஷ்டிகளே என்று இயல்பாக விளங்கும் அளவிற்குக் கச்சிதமான முறையில் ஹிக்மத்தான செய் நேர்த்தியுடன் சிருஷ்டிகளை இறைவன் படைத்துள்ளான். ஆத்ம நிலையில் நாம் அனைவரும் அறிந்திருந்த இந்த சூட்சமத்தை உலக மயக்கத்தால் மறந்து தவிக்கக் கூடாதே என்ற கருணையினால் வேதம் தந்து, இந்த ஹிக்மத்தை விளக்கிக் காட்டி மன இருள் போக்கும் நூரான நபியையும் தந்தான் இறைவன். நிராகரிப்பாளர்கள் நபியை மறுத்ததனால் ஞான விளக்கத்தை இழந்தார்கள். அதனால் லாப நஷ்டம் தர கூடிய தெய்வத்தன்மையில் சிருஷ்டியைப் பங்காளியாக்கிய அவர்களின் விளக்கக் குறைவு சிருஷ்டிகளைத் தன் தேவைகளுக்காக வணங்கக்கூடிய ஷிர்கில் - இணை வைப்பில் போய் முடிந்தது.
“மனிதர்களில் அல்லாஹ்வையன்றி (வேறு ஒன்றை) இணையாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதைப் போன்று அவற்றையும் நேசிப்பவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் ஈமான் கொண்டோர் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியானவர்கள். மேலும் அநீதி இழைப்போர் (இணை வைப்போர்) வேதனையைக் (மறுமையில்) கண்கூடாகக் காணும் போது ஆற்றல் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது (என்பதை புரிந்து கொள்வார்கள்.) “2:165 என அல்லாஹ் அச்சமூட்டி எச்சரிக்கின்றான்.
(3) சுய உடமை (ஆஸார்):
தேவையை நிறைவேற்றுபவன் கொடுத்து குறையாத அகில உலகத்தின் ஏக போக அதிபதியாக இருக்க வேண்டும். வானம் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என திருமறையில் பல இடங்களில் மீண்டும், மீண்டும் நமக்கு நினைவூட்டுகின்றான். நம்முடைய ஒவ்வொரு வினாடி இருப்பும் யாருடைய கையில் இருக்கிறதோ. யார் நமது உயிர், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு, முதலிய தேவைகளை நிறைவேற்றும் அடிப்படைப் பண்புகளை ஒவ்வொரு வினாடியும் வழங்கி நம்மை இயங்கச் செய்கின்றானோ அந்த அல்லாஹ்வின் ஆதிக்கத்தில் தான் பொருளாதாரம் முற்றிலுமாக இருக்கிறது. நம் தட்டில் இருக்கும் உணவை உண்பது, நாம் வாங்கி வைத்திருக்கும் உடையை அணிவதும் கூட அவன் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது.
புது துணி எடுப்பதற்காக துணிக்கடைக்கு செல்கின்றான். ஆதே கடையில் கஃபன் துணி அவனுக்காக காத்திருக்கிறது. தன் மகளின் திருமணத்திற்கு உதவிசெய்கின்றேன் என்று சொன்ன பணக்கார நண்பன் திடீரென இறந்து விட்டானே எனபது போன்ற புலம்பல்களை நாம் அடிக்கடி கேட்கின்றோம். மரணமே இல்லாத நம் இலாஹ் இருக்கின்றான் நம்மை வாழவைக்க என்பதை மறந்துவிடுகின்றோம்.
இவ்வாறு உலூஹியத்தின் நான்கு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு தான் படைத்த சிருஷ்டிகளின் அனைத்து தேவைகளையும் ஹிக்மத் என்னும் நுண்ணறிவோடு நுணுக்கமாக அறிந்து நிறைவேற்றக் கூடியவன் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர என்பது தான் திருக்கலிமாவில் அடங்கியுள்ள உலூஹிய்யத் என்னும் இறைத் தன்மையின் சுருக்கமான விளக்கம்.
சிருஷ்டிகள் சுயமாக இல்லையென்பதை உணர்ந்த இறைநம்பிக்கையாளர் எங்குத் திரும்பினாலும் அந்த சிருஷ்டிகளை காட்டி கொண்டிருக்கும் இறைவனின் திருமுகம் இருக்கின்றது என்ற மறை வழி நம்பிக்கையால் புறக்கண்களால் அல்லாஹ்வை பார்க்க முடியாவிட்டாலும் தன் அகப்பார்வையால், “நிச்சயமாக நான் வானங்களையும், பூமியையும் படைத்த ஒருவனின் (உள்ளமையின்) பக்கம் என் முகத்தைத் (கவனத்தை) திருப்பி விட்டேன். நான் ஏகத்துவநேசன் (ஹனீஃப்), நான் இணைவைப்பவர்களில் சேர்ந்தவன் அல்ல” (6:79) என ஏகத்துவ சாட்சியாளனாகி விடுகின்றார்.
நபிமார்கள் வழியில் அத்தகைய ஏகத்துவவாதியாக நீண்ட நல் வாழ்வு வாழ்வதற்கும். நம் இறுதி வார்த்தையாக லாஇலாஹா இல்ல்ல்லாஹ் என் கூறி புன்முறுவலோடு நம் உயிர் பிரிவதற்கும் நம் அனைவருக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக! ஆமீன்.
ஒரு வேண்டுகோள் : இந்த இணைய பக்கத்தின் லிங்கை எவ்வளவு நண்பர்களுக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு பேருக்கும் அனுப்புங்கள். இந்த ஏகத்துவ செய்தியை அகில உலகிலும் பரப்பிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு தருவான். நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நம் ஈருல தேவைகளையும் அல்லாஹ் நிறைவேற்றித் தருவான் என்பதில் ஆதரவு வைக்கின்றேன்.ஆமீன்.
No comments:
Post a Comment