மறைக்க முடியுமா
(இஹ்ஸான் என்பது) அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.” இது (புகாரி, முஸ்லிம் ஷரீஃபில் உள்ள) பிரபலமான நபிமொழி.
இந்த ஹதீஸை ‘ஹதீஸே இஹ்ஸான்’ என்றும் ‘ஹதீஸே ஜிப்ரயீல்’ என்றும் கூறுவர்.
தன் நிலையில் எந்த மாற்றமும் இன்றி பிற உருவத்தில் காட்சியளிக்கும் தமஸ்ஸுல் என்ற முறையில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பகிரங்கமாக மனித உருவத்தில் காட்சியளித்து வெளிப்படுத்தப்பட்ட இதன் வித்தியாசமான பின்னணி நம் கவனத்தை your attention please எனக் கவர்ந்திழுக்கிறது.
அதற்கும் மேலான அதன் ருசிகரமான ஆழ்ந்த நுட்பங்களை ஆன்றோர்களை அணுகி விளக்கம் பெறுவது நலம். அதன் மூலம், இந்த ஹதீஸ் எதற்காக? (contextual circumstance) நபிகள் பெருமான் எம் முறையில் இதை திருவுளமானார்கள் என்பது புரிய வரும். இவ்வகையில் இந்த நபி மொழி ஆழ்ந்து அறிய வேண்டிய பாடமாக இருக்கிறது.
மேலும் இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டும் இலக்கு (objective core point) என்னவெனில் :
- இறைவனை வணங்குதல் (இபாதத்).
- வணக்கத்தின் தரத்திற்கான வழி முறை (Qualitative aspect of devotion)
- “இபாதத்” என்றால் எது என்ற விளக்கம்.
இந்த ஹதீஸின் இறுதியில் ஜிப்ரீல் (அலை) நம் மார்க்கத்தைப் பற்றி நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக வந்தார்கள் என்ற பெருமானாரின் முத்தாய்பான விளக்கம் இந்த இஹ்ஸான் என்ற அகப்பார்வை நிலை இல்லாமல் நம் மார்க்கம் (தீன்) முழுமையடையாது என்பதை தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.
வணக்கம் என்பதன் நுட்பமான அம்சம் என்ன?
“வணக்கம் என்பதற்கு பணிவு, சிரம் சாய்த்தல், கட்டுப்படுதல் என பல பொருள்கள் இருக்கிறது. தன் தேவைகளுக்காக பிறர் முன்பு தன்னைக் கேவலப்படுத்திக் கொள்வதற்குப் பெயர் வணக்கம் (ஜில்லத் இக்தியார் கர்னேக்காநாம் இபாதத்). கேவலப்படுத்திக் கொள்வது என்றால் ஒருவர் முன்னால் விழுந்து புரளுவது என்று பொருளல்ல. மனதால் இவருக்கு சாஷ்டாங்கம் செய்தால் தான், கூளைக் கும்பிடு போட்டால் தான், ஐஸ் வைத்தால் தான், அப்படி நடித்தால் தான் ஏதாவது கொடுப்பார் என்ற விளக்கத்தோடு அவருக்கு என்ன செய்தாலும் அது மறைமுகமான வணக்கமாகிவிடும். அதைப்போலவே ஒரு ரௌடியின் முன்பு நமக்குக் கெடுதல் செய்து விடுவானோ என்ற பயத்தினால் சலாம் சொன்னால், சலாம் என்னும் காணிக்கை வணக்கத்தை துஷ்பிரயோகம் பண்ணியதற்காக ஈமான் பறிபோகும் ஆபத்து இருக்கிறது என்பதையும் மறக்க வேண்டாம். (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!). இத்தகைய அடிப்படையில் தேவைகள் அனைத்தையும் “நன்மையைப் பெற்றுக்கொள்வது” இன்னும் “தீமைகளை விட்டுத் தப்பிப்பது” என்னும் இரண்டு பிரிவில் அடக்கலாம். இறை நம்பிக்கையாளர்கள் சிருஷ்டிகள் முன்பு இந்த இரண்டு வகை தேவைகளுக்காகவும் தன்னை கேவலப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது தான் இஸ்லாமிய கொள்கையாகும்.
அதே நேரத்தில் பெற்றோர், பெரியோர், ஆலிம், ஆரிஃப், வலி, நபி என மதிக்க வேண்டியவர்களுக்கு இஸ்லாமிய வழிகாட்டலின் படி மரியாதை காட்டுவது இறை நம்பிக்கையை சார்ந்ததாகும். இறைநம்பிக்கையாளர் முன்னால் உன் தோள்களை உயர்த்தாதே (வக்ஃபில் ஜனாஹக லில் முஃமினீன்), அகம்பாவம் காட்டதே என எச்சரித்துப் பணிவு காட்ட சொல்லியிருக்கிறது மார்க்கம். அந்தப் பணிவு எதற்கு? அவர் இறை நம்பிக்கைக்கான மரியாதையது. அதையே தன் தேவைகளுக்காக செய்தால், அல்லாஹ்வை விட்டு தனித்த நிலையில் அவரைக் கொண்டுதான் தன் வாழ்வே இருக்கிறது என்ற விளக்கத்துடன் யார் முன்னிலையில் தன்னைக் கேவலபடுத்திக் கொண்டாலும் அது வணக்கமாகும். அத்தகைய வணக்கம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமாகும். இது நிய்யத் சம்பந்தப்பட்ட பிரச்சனை” என என் ஞானாசிரியர் சொல்லிக் கொடுத்தார்கள்.
உள்ளங்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் ஆகையால், வெளிரங்கமாக தெரியாத இந்த மனதின் நிலைக்கு யாரும் யாருக்கும் நான் சரி நீ தவறு என சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை. ஆனால் இங்கே நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வணக்கம் என்பது இந்த அளவு நுட்பமாக இருக்க இப்படித் தேவைகளுக்காக பிறர் முன்பு தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொள்ளும் நிலையிலிருந்து மீளும் வழியென்ன? என்பது பற்றியே ஆகும்.
இழிவு நீக்கும் “இனிய கலிமா” விளக்கம்:
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்பது தான் நம் மனதின் தவறான கொள்கைகள் எனும் அழுக்குகளை விட்டும் பரிசுத்தப்படுத்தி, சிருஷ்டிகள் முன்பு கேவலப்படும் நம் இழிவான நிலை மாற்றி நம்மை ஒளிமயமாக்கும் அற்புத மந்திரம்.
கலிமாவில் வரும் “லா” என்பது “இல்லை” என மறுக்கின்றது? எதை மறுக்கின்றது? இலாஹ் “தெய்வம்” யாருமில்லை என மறுக்கிறது. ஆதம் நபி காலம் முதல் அனைத்து நபிமார்களும் இந்த கலிமாவை கொண்டே தவிர நபியாக வரவில்லை என திருமறை கூறுகின்றது. ஏகப் பரம்பொருளான அல்லாஹ்வைத் தவிர இன்னொரு தெய்வம் இருக்கிறது என ஷைத்தான் கூட சொல்லாத அந்தக் காலத்தில், கலிமா தெய்வம் யாருமில்லை என யாரை/எதை மறுத்தது? எங்கே மறுத்தது? அல்லது யாருடைய கூற்றை மறுத்தது? என்பதைச் சிந்திக்க வேண்டும். ஏகனைத் தவிர வேறு தெய்வம் யாருமில்லை என்றாலும் அவன் தெய்வத்தன்மை (உலூஹிய்யத்) என்பது எங்கும், எதிலும், எல்லா சிருஷ்டிகளிலும் வெளிப்பட்டு இருந்தது. இருக்கிறது. என்ன அந்தத் தெய்வத் தன்மை? நன்மையைத் தருவதும், தீமையிலிருந்து காப்பதுமான அனைத்து வகை “தேவைகளையும் நிறைவேற்றும் தன்மைக்கு” பெயர் தெய்வத் தன்மை. (“இலாஹ்” என்ற வார்த்தைக்கு தேவைகளை நிறைவேற்றக் கூடியவன் என்ற பொருளில் அல்லாஹு தஆலா தன் திருமறையில் பல இடங்களில் கையாண்டுள்ளான். உதாரணத்திற்கு பார்க்க 6:46, 27:60-64, 28:71,72). சிருஷ்டிகளில் காணப்படும் இந்த லாப நஷ்டம் கொடுக்கக் கூடிய தெய்வத்தன்மை அந்த சிருஷ்டிகளின் தாத்துக்குச் சொந்தமில்லை என “லா” மறுக்கிறது. அத்துடன் இல்லல்லாஹ் “அல்லாஹ்வைத் தவிர” என்ற வார்த்தையின் மூலம் தேவைகளை நிறைவேற்றும் தன்மையை அல்லாஹ் தஆலாவுக்கு மட்டுமே சொந்தப்படுத்துகிறது.
நாமோ இடைவிடாமல் தேவைகளால் சூழப்பட்டவர்களாய் இருக்கின்றோம். எண்ணற்ற சிருஷ்டிகள் மூலம் நம் தேவைகள் நிறைவேறுகின்றன, சிறு துரும்பும் பல் குத்த உதவுகிறது. நம் பார்வையில் கொஞ்சம் கூட சந்தேகம் வராத அளவு சிருஷ்டிகள் தன் தானே நம் தேவைகளை நிறைவேற்றுவதைப் பார்க்கின்றோம். லாபமும், நஷ்டமும் தருவதைப் பார்க்கின்றோம். இந்தக் கண்காட்சியான உண்மையை எப்படி மறுப்பது? என மனித மனம் தடுமாறுகின்றது. ஆனால் கண்ணால் கண்டதே உண்மை என்பது எத்தனைத் தவறு என்பதைச் சற்று சிந்தித்தாலே தெளிவான அறிவுடையோருக்கு அது விளங்கிவிடும். உதாரணமாக வானத்தைப் பாருங்கள். சூரியன் ஒரு வட்டத் தட்டு போலவும், நட்சத்திரங்கள் சின்ன ஒளித்துணுக்குகள் போலவும் காட்சியளிக்கின்றது. உண்மையில் சூரியனும், நட்சத்திரங்களும் நாம் வாழும் பூமியை விடப் பல மடங்கு பெரியது என்பதைப் பார்வையால் மட்டுமே நம்மால் விளங்க முடியுமா?.
“புறக்கண்ணின் பார்வை பல குறைபாடுகள் உடையது. மிக மிக அருகில் இருப்பதையும், தொலைவாய் இருப்பதையும், திரை மறைவில் இருப்பதையும் அது காண முடிவதில்லை. பொருள்களின் புறத்தோற்றத்தை மட்டுமே காண்கிறதேயன்றி அகத்தோற்றத்தைக் காண இயலுவதில்லை. வரம்புள்ளதையேயன்றி, வரம்பில்லாததை அது காண முடிவதில்லை. அது காண்பதில் கூட பல தவறுகளைச் செய்கிறது. பெரிதாய் இருப்பது அதற்குச் சிறிதாய்த் தெரிகிறது. தூரத்தில் இருப்பது, அருகில் இருப்பது போல் தென்படுகின்றது. சுழன்று கொண்டிருப்பது, நிலையில் இருப்பது போன்று தெரிகின்றது. இத்தகைய குறைகள் இல்லாத கண் ஒன்று இருந்தால் அது ஊனக் கண்களை விட விரும்பத்தக்கதாய் இருக்குமல்லவா?” என கேள்வி எழுப்பும் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) “மானிட இதயத்துக்குள்ளே அத்தகைய ஒரு கண் உள்ளது அது “மதி நுட்பம்” (அகல்) என்றும், “கல்பு” என்றும் “ரூஹ்” என்றும் சொல்லப்படுகின்றது.” என குறிப்பிடுகின்றார்கள். அதன் பல்வேறு பெயர்களைக் கொண்டு குழப்பமடையாமல் நாம் உள்ளிருக்கும் அகக்கண் என்பதாக விளங்கிக் கொள்வது இங்கே நமக்குப் போதுமானது.
நம் இதயத்தின் விஷேசமான நுட்பமது. இந்த அறிவுக்கண்ணாகிய அகக்கண்ணின் ஆற்றலைப்பற்றி இமாம் கஸ்ஸாலி (ரஹ்) தம் மிஸ்காத்துல் அன்வார் எனும் நூலில் “கற்பனை (imagination), பிரமை (phantasy) ஆகியவற்றின் ஏமாற்றுகளிலிருந்து மதிநுட்பம் (அகக்கண்ணின் பார்க்கும் திறன்) பிரிக்கப்பட்டால் அது தவறு செய்யும் எனக் கூற இடமிருக்காது. (அப்போது) பொருள்களின் உண்மை சொரூபத்தில் அவற்றை அது பார்க்கிறது. ஆனால் இவ்விதம் பிரிப்பது கடினம். மரணத்திற்குப் பின்னரே இது (இந்த பிரிவினை) சம்பூரணமாகிறது” எனக் கூறியவர்கள். மனிதன் பெற்றுள்ள இந்த விஷேச திறன் மூலம் முயன்று உயர்வடைய வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதத்தில் “மறைவான உலகத்துக்குப் பறந்து செல்வதற்கு மனிதனுக்குள்ள இறக்கை எந்த மிருகத்துக்கும் இல்லை.” எனவும் குறிப்பிடுகின்றார்கள்.
நமது “புறக்கண்களுக்கு” பார்க்கும் திறன் இருந்தாலும் சூரியனின் வெளிச்சம் ஒளி வழங்கி உதவுவது போல இந்த “அகக்கண்ணுக்கு” வெளிச்சம் வழங்கும் சூரியன் என திருக்குர்ஆனை கூறுகின்றார்கள். மேலும் திருக்குர்ஆனின் மூலம் “ஆலம் மலக்கூத் என்னும் மறைவுலக வாயில்களில் ஒன்று திறந்துவிட்டது” எனவும் திருக்குர்ஆனின் வெளிச்சத்தை கொண்டு மறைவுலக அற்புதங்களை எட்டிப் பிடிக்காதவன் (அகப்பார்வையடையாதவன்) மனித இனத்தை சார்ந்தவனல்ல என்றெல்லாம் கூறி தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆகவே திருமறை கூறும் அகமியமான ஞானஉண்மைகளை முறைப்படி தெளிவாய் அறிந்து நம் கற்பனை (imagination), பிரமை (phantasy) சார்ந்த யூகங்களை விட்டு நம் இதயத்தைப் பரிசுத்தமாக்கினால் “லாபமளித்தல், நஷ்டத்திலிருந்து காத்தல் என்ற அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றக் கூடியவனாக” அல்லாஹ் மட்டுமே இருக்கும் ஏகத்துவ நிலை நமக்கு வெளிச்சமாகும்.
வணக்கமும், உதவி தேடுதலும் (இபாதத் வ இஸ்தியானத்) யாரிடம்?
“உன்னையே வணங்குகின்றேன். உன்னிடமே உதவியும் தேடுகின்றேன்” என்ற திருமறை வசனத்தை ஒவ்வொரு வேளைத் தொழுகையிலும் சொல்கின்றோம். நம் வாழ்வின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றித் தருபவனாக அல்லாஹ் மட்டுமே இருக்கின்ற அகமியமான கலிமா விளக்கத்தைப் பெற்று அல்லாஹ்வை அகக்கண்ணால் முன்னோக்கி “பார்ப்பதைப் போன்று” சொல்ல வேண்டிய தாத்பரியமிக்க வார்த்தைகளவை.
பார்ப்பதைப் போன்று வணங்க வேண்டிய இஹ்ஸான் (அகப்பார்வை) நிலைத் தொழுகையில் மட்டுமல்ல ஒரு இறை நம்பிக்கையாளனின் வாழ்வின் எல்லா நிலையிலும் இருக்க வேண்டிய நிலை. தொழுகை என்பது “வணக்கத்தின் சிரசு” போன்றது. ஆனால் வணக்கம் என்றால் தொழுகை மட்டுமல்ல, இறை நம்பிக்கையாளனின் எல்லா நிலைகளும் வணக்கமேயாகும். அவன் ஆகுமான உணவை உண்பதும் வணக்கம், அன்பான மனைவியுடன் இல்லறம் கொள்வதும் வணக்கம். அலுவலகத்தில் உழைப்பதும் வணக்கம், அன்பு குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்வதும் வணக்கம். இப்படி திரு நபி (ஸல்) காட்டித் தந்த முறையில் வாழும் வாழ்வின் எல்லா நிலைகளுமே வணக்கம் தான்.
இப்படி எல்லா நிலையிலும் நபியவர்களின் சொல், செயல்களை மார்க்க அறிஞர் பெருமக்கள் வாயிலாய் நாம் அறிந்து நபி வழியை பின்பற்ற முயலுகின்றோம். இன்னும் நம்மை சிரிக்க வைப்பவனும் இறைவன் தான். அழவைப்பவனும் இறைவன் தான். கண்ணியப்படுத்துபவனும் இறைவன் தான், கேவலப்படுத்துபவனும் இறைவன் தான். உயர்த்துபவனும் இறைவன் தான், தாழ்த்துபவனும் இறைவன் தான் என நம்பிக்கையும் கொண்டுள்ளோம். அத்துடன் இந்த மாறுபட்ட நிலைகளின் பிண்ணனியில் சிருஷ்டியின் சம்பந்தம் என்ன? இறைவனின் பங்கு என்ன? என்பதைத் தெளிவாக விளங்குவதுடன் அழவைப்பது, கஷ்டங்களைத் தருவது, என அனைத்தும் ஒரு மருத்துவர் தன் நோயாளிக்கு அவன் ஆரோக்கியம் பெறுவதற்காக தரும் கசப்பு மருந்தைப் போல இறைவன் நம்மை வளர்க்கும் “ருபூபிய்யத்” என்னும் ரட்ஷகத் தன்மையின் அம்சங்கள் என்பதை உணர்ந்து வாழ்வின் எல்லாத் தேவைகளிலும் லாப, நஷ்டம் தரக் கூடியவனாக இருக்கும் அல்லாஹ்வையே “பார்ப்பதை போல” முன்னோக்கி வாழ வேண்டும். இது ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான பண்பாகும்.
அல்லாஹ்வை “பார்ப்பதைப் போல”வணங்குவது என்றால் என்ன?
வெளியூரில் இருக்கும் அப்பா தான் வீட்டில் இல்லாமல் இருந்தாலும் தான் இருப்பது போல் பாவித்து ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பிள்ளைக்கு உத்தரவிடுவது போன்ற பலகீனமான மனித கட்டளையா இது? இங்கே இல்லாதவனா நம் இறைவன்? தன் இருப்பைப் பற்றி இறைவன் கூறுவதென்ன? அதைப் பற்றிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் விளக்கம் என்ன? அந்த விளக்கத்தைத் தங்கள் நம்பிக்கையாக்கிக் கொண்ட இறையியல் அறிஞர்களின் கருத்து என்ன? என்பதைச் சுருக்கமாக பார்ப்போம்:
فَأَيْنَمَا تُوَلُّواْ فَثَمَّ وَجْهُ اللّه (2:115)
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ (55:26)
وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ (55:27)
எங்குத் திரும்பினாலும் இறைவனின் திருமுகம் இருக்கின்றது (2:115) என்ற வசனமும், (பூமியாகிய) இதன் மேலுள்ள ஒவ்வொன்றும் அழியக்கூடியதே மிக்க கண்ணியமும், வல்லமையும் கொண்டவனான உம்முடைய ரட்ஷகனின்(ரப்பின்) முகமே நிலைத்திருக்கும்.(55: 26,27) என்ற வசனமும் கால, நேர, இடம் என்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன், இன்னும் எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருக்க கூடியவன் இறைவன். இடையில் தோன்றி இடையில் மறைவது என்பது சிருஷ்டிகளின் நிலை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
நீங்கள் இறைவனைக் கண்களால் பார்க்க முடியாது (லா துப்ஸிரூன்) என்று குறிப்பிடும் இறைவசனம் நமது புறப்பார்வையின் இயலாமையைக் குறிக்கின்றது. இறைவன் மறைந்தவன் என்று அதற்கு அர்த்தமல்ல. மறுமையில் (மறுமை சார்ந்த) புறக்கண்களைக் கொண்டு நம்மை அல்லாஹ் அவனைப் பார்க்க வைப்பான் என்பது நாம் நபி (ஸல்) அவர்களின் வாயிலாக பெற்ற நம்பிக்கை.
لا أُحِبُّ الآفِلِينَ
மறையக்கூடியவற்றை (எனது ரப்பாக ஏற்க) நான் பிரியப்பட மாட்டேன் - அல்குர்ஆன் (6:77)
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ
நிச்சயமாக நான் வானங்களையும், பூமியையும் படைத்த ஒருவனின் (உள்ளமையின்) பக்கம் என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் ஏகத்துவநேசன் (ஹனீஃப்). நான் இணைவைப்பவர்களில் சேர்ந்தவன் அல்ல (6:79) என இப்ராஹீம் நபி (அலை) கூறுவதாக திருமறையில் வரும் வார்த்தைகள் மேலும் இதற்கு வலுவூட்டுகின்றன.
அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) என்ற நபி தோழர் கூறியதாவது: நாங்கள் ஒரு போரில் (கைபரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஒரு மேட்டின் மீது ஏறும் போதும், ஒரு கணவாயில் இறங்கும் போதும் உரத்தக் குரலில் ‘அல்லாஹூ அக்பர் (இறைவன் மிகவும் பெரியவன்)’ என்று கூறிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அருகில் வந்த நபி (ஸல்) அவர்கள், மக்களே! உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (மென்மையாக கூறுங்கள்) ஏனெனில் நீங்கள் காது கேளாதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியுறுபவனையும், (எல்லோரையும்) பார்ப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். உங்களில் ஒருவர் தனது வாகன ஒட்டகத்திற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளாரோ அதை விட நெருக்கமாக நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ அவன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
“தப்ஸீர் இப்னுகஸீர்” என்னும் திருக்குர்ஆன் விரிவுரையில் இறைவன் எங்கே இருக்கின்றான்? என்ற தலைப்பின் கீழ் புகாரி ஷரீஃபில் உள்ள இந்த நபிமொழியை இப்னு கஸிர் (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். (பாகம் 1 பக்கம் 465-466)
மார்க்க அறிஞர்களிடமும், இறை ஞானியர்களாலும் பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டு, பல அறிஞர்களால் விளக்க உரை எழுதப்பட்ட உயர்வான நூல் “ஹிகம்”. மெய்ஞானக் கடல் ஹஜ்ரத் சைய்யதுனா இப்னு அதாவுல்லா இஸ்கந்தரி (ரஹ்) அவர்களால் எழுதப்பட்டது. அதில் அவர்கள் பின் வருமாறு எழுதியுள்ளார்கள்:
“அல்லாஹ் தஆலா மறைந்த(மறைக்கப்பட்ட)வனல்ல. அவனைப் பார்ப்பதை விட்டும் நீ தான் மறைக்கப்பட்டவன்! அவனைப் பார்க்க வேண்டுமென்றும் - அவனைச் சேர வேண்டும் என்றும் நீ நினைத்தால் உன் மனதின்(கல்பின்) கெடுதிகளை ஆராய்ந்து வைத்தியம் செய்து கொள். அப்போது அவனளவில் சேர்வாய்! உன் அகக்கண்ணால் அவனை தரிசிப்பாய். அவனை ஒரு பொருள் மறைத்துக் கொள்வதாய் இருந்தால் மறைக்க ஒரு திரை வேண்டும். அவ்வாறு திரை இருந்தால் அவன் உள்ளமைக்கு ஒரு மட்டு (அளவு) திட்டம் வேண்டும். அவ்வாறு மட்டு திட்டமிருந்தால் அவன் அப் பொருள்களுக்கு கட்டுபட்டவனாகி விடுவான். ஆனால் அவன் “அடியார்களை அடக்கியாள்பவன்” என்று குர்ஆனில் கூறுகின்றான். ஆகையால், “அவன் மறைந்தவனல்ல” நீ தான் மறைந்தவன்! உன்னை நீ பக்குவப்படுத்திக் கொள் (அகப்பார்வையால்) அவனைக் காண்பாய்!”
இத்தகைய விளக்கங்களின் மாறலாக இறைவன் மறைந்தவனல்ல என்பதும், அவனைப் பார்க்க நம் புறப்பார்வைக்கு வலிமையில்லை என்பதும், அகமியமான முறையில் அகப்பார்வையால் பார்க்கக் கூடிய புலனாகிய இதயம் காட்டவில்லையென்றால் அது ஒரு வகையில் தன் பிறவி நிலையிலிருந்து பழுதாகி இருக்கிறது என்பதும் விளங்குகிறது, மனதின் பார்வை ஏகத்துவ இறைஞானத்தின் ஒளியில் சரிசெய்யப்பட்டால் அந்த அகப்பார்வைக்கு அவன் இருப்பு புலனாகும் என்பதும் கூட ஓரளவு விளங்குகிறது. இனி மறைந்த பொக்கிஷமாக இருந்தது எது? படைக்கப்பட்ட சிருஷ்டிகளில் வெளியானது எது? நம் அகப்பார்வைக்கு களமாய் அமைந்தது எது? என்பதைப் பார்ப்போம்.
No comments:
Post a Comment