தோழமையுடன்

Monday, June 28, 2010

உள்ளத்தில் இருக்கும் அதிசய ஊற்று!


நீங்கள் ஒன்றையும் அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களின் தாய்மார்களின் வயிறுகளில் இருந்து உங்களை வெளியாக்கினான். மேலும் அவன் உங்களுக்கு செவிப்புலனையும், பார்க்கும் ஆற்றலையும், இதயங்களையும் நீங்கள் நன்றி செலுத்திடும் பொருட்டு அமைத்தான்.(16:78)
ஒன்றையும் அறியாத நிலை என்பது மனதில் எந்தக் கற்பனை கருத்துருவாக்கமும் இல்லாத நம் தூய இயற்கை நிலை.

புதிதாக உலகத்திற்கு பிரவேசித்த குழந்தைக்கு எதைப் பற்றியும் எந்த உலக அறிவும் இல்லை. அதனால் எதைப் பற்றிய எந்தக் கருத்தும் இல்லை. பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் (ஏகத்துவத்தை ஏற்கும் அதன்) இயற்கையின் (பித்ரத்தின்) மீதே பிறக்கின்றன என்ற நபிமொழிக்கேற்ப அதன் பிஞ்சு உள்ளத்தின் அடியில் ஏகத்துவத்தை ஏற்கும் தூய நிலை பசுமையாய் இருக்கிறது. அதன் மனதின் ஆழத்தில் ஆலமே அர்வாஹில் “நீதான் எங்கள் ரப்பு” என சாட்சி சொன்ன ரப்பின் தரிசன பரவசம் தெளிவாய்ப் பதிந்து கிடக்கின்றது. அந்த நிலையில் தெய்வீக உண்மைகள் (ரப்புடைய ஹகீகத்) எடுத்தோதப்பட்டால் சட்டென உள்வாங்கி ஏற்றுக் கொள்ளும் இயற்கையின் மீதே ஒவ்வொரு குழந்தையும் பிறக்கின்றது.
ஆனால் சன்னம் சன்னமாக வளரும் குழந்தையின் இதயத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், கேட்ட பிரசங்கங்கள், படித்த புத்தகங்கள், பார்த்த டி.வி., சினிமாக்கள், பழகிய சூழ்நிலைகள், சார்ந்த இயக்கங்கள், சந்தித்த வெற்றி, தோல்வி அனுபவங்கள் என ஒவ்வொன்றும் தங்கள் கருத்தை திணிக்கின்றன. இப்படி நல்லதும், கெட்டதுமாய் அனைத்திலிருந்தும் நாம் கற்றுக் கொண்ட அல்லது கற்பித்துக்கொண்ட செய்திகள் மனதில் பிம்பங்களாக பதியப்படுகின்றன. மனோ இச்சைகளினாலும், கற்பனையிகளினாலும் அந்த செய்திகளுக்கு நம் மனதிற்கு பிடித்த வர்ணங்களை பூசி நம்மைப் பற்றியும் நமக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றியும் நம் கருத்துருவாக்கம் (conception) இன்னும் கொள்கைகள்(idealogy) நமது மனதில் உருவாகின்றன. இதனால் நம் பார்வையிலிருந்து உண்மை என்பது நழுவி விடுகின்றது.
நம் பிறவி நிலையிலேயே அமைந்த நம் பரிசுத்த ஆன்ம நிலையை நாம் மீண்டும் அடையும் வழியென்ன என்பதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) தன் கீமியா சாதாத் என்னும் நூலில் கூறுகின்றார்கள்:
“நமது உள்ளம் என்பது ஒரு குளம் என்றால், ஐம்புலன்களும் அதற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்களாக இருக்கின்றன. அந்த குளத்தின் அடியிலிருந்து தெளிவான தண்ணீர் ஊற்றெடுக்க விரும்பினால் சிறிது கால அவகாசத்திற்காவது இந்த கால்வாய்கள் அதில் தண்ணீர் கொண்டு போகாது நிறுத்த வேண்டும். அந்த கால்வாய்கள் கொண்டு வந்து சேர்த்த சேறு சகதிகளையும் நீக்க வேண்டும். பின்னர் குளத்தின் அடிக்கரையை தேண்டினால் சுத்தமான தண்ணீர் சுரக்கும். இது போன்று புறமார்க்கங்களில் நாம் எய்திக் கொண்ட அறிவை – நமது உள்ளத்தில் துவேஷமாய் உறைந்துவிடும் இயல்புள்ள இந்த அறிவை - அப்பால் அகற்றினால் தான் (நம் பிறவியில் அமைந்த ) ஆத்மீக அறிவாகிய ஊற்றுக்கண் திறக்கும்”.
ஐம்புலன்கள் என்ற கால்வாய்கள் வழியாக வரும் தண்ணீரை எப்படி தடுப்பது. அந்த கால்வாய்கள் கொண்டு வந்து சேர்த்த சேறு சகதிகளையும் எப்படி நீக்குவது? . இதை என் ஞானாசிரியர் ஒரு எளிய உதாரணத்தின் மூலம் விளக்குவார்கள். ஒரு காலி குவளயை காட்டி இதில் இருக்கும் காற்றை வெளியேற்ற வேண்டுமானால் தண்ணீரையோ அல்லது வேறு எதையாவது கொண்டு அதை நிரப்ப வேண்டும். அப்போது தான் அதில் உள்ள காற்று வெளியாகும்.
மனது என்பது ஏதாவது ஒரு நினைவு வந்து போய் கொண்டே இருக்கும் இடம். நீங்கள் அல்லாஹ்வின் நினைவை (திக்ரைக்) கொண்டு உள்ளங்களை நிரப்புங்கள் என்பார்கள்.
“நீங்கள் அதிகமதிமாய் திக்ர் செய்யுங்கள். அதன் மூலம் வெற்றி பெற்றவர்கள் ஆகலாம்” என திருமறையில் வரும் இறை உத்தரவுக்கிணங்க ஆன்மீக ஆசிரியர்கள் அனைவருமே ‘திக்ர்’ என்னும் மனதை பொன்னாக்கும் இந்த மகத்தான ரஸவாதத்தை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். வரலாற்றில் ஓர் ஏடாக அமல்களின் சிறப்புகள் நூலில் (பக்கம் 596) ஷைகுல் ஹதீஸ் ஜக்கரியா மவுலானா அவர்கள் குறிப்பிடும் இந்த சம்பவத்தை படியுங்கள்.
ஸய்யித் அலீ இப்னு மைமூன் மஃக்ரிபீ (ரஹ்) என்ற ஒரு ஆன்மீக பெரியார் இருந்தார்கள். அதே காலத்தில் வாழ்ந்த உல்வான் ஹமவி (ரஹ்) என்ற மிகப்பெரிய மார்க்க மேதை மஃக்ரிபீ (ரஹ்) அவர்களின் சகவாசத்தில் இருந்தார்கள். மஃக்ரிபீ (ரஹ்) அவர்கள் அறிஞர் ஹமவி அவர்களை பாடம் நடத்துவது, மார்க்க தீர்ப்பு(ஃபத்வா) கொடுப்பது போன்ற அனைத்து மார்க்க சேவைகளையும் விட்டு விலக்கி எல்லா நேரங்களிலும் திக்ரில் ஈடுபடும்படியாக செய்து விட்டார்கள். ஹமவி அவர்கள் மூலம் உலகம் பெற்று வந்த பலன்களை இழக்கச் செய்து அவர்களை வீணாக்கிவிட்டார் மஃக்ரிபீ என மக்கள் இதனை எதிர்த்தனர்.
ஹமவி அவர்கள் திக்ரு செய்துவந்த நேரங்களில் குர்ஆன் ஷரீஃபையும் ஓதுகிறார் என்பதை அறிந்த மஃக்ரிபீ (ரஹ்) குர்ஆன் ஓதுவதையும் தடுத்து முழுமையாக திக்ரில் ஈடுபட செய்தார்கள். இதையறிந்த பொதுமக்கள் மஃக்ரிபீ (ரஹ்) அவர்களை மார்க்கத்தை விட்டு வழிதவறியவர் என்பதாக குறை கூறினார்கள்.
சில நாட்களிலேயே திக்ருடைய பலன் ஹமவி அவர்களுக்கு ஏற்பட ஆரம்பித்து விட்டது. மனம் தெளிவடைந்து விட்டது. இப்போது நீங்கள் குர்ஆனை ஓதலாம் என மஃக்ரிபீ (ரஹ்) அறிஞர் ஹமவிக்கு அனுமதியளித்தார்கள்.
ஹமவியவர்கள் குர்ஆனை திறந்து ஓத ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு வார்த்தைகளிலிருந்தும் அற்புதமான ஞானங்கள் அவர்களுக்கு விளங்கின. அப்பொது மஃக்ரிபீ (ரஹ்) “ நான் குர்ஆன் ஓத வேண்டாம் என தடை செய்யவில்லை. இந்த பலன் உங்களில் ஏற்பட வேண்டுமென்று தான் விரும்பினேன்” என்று கூறினார்கள்.
திக்ர் என்னும் இறைதியானம் செய்வதனால் என்ன ஆகிறது?
பொதுவாக தியானம் என்றால் எல்லா நினைவுகளையும் விட்டு மனதை காலியாக்குவது என்பார்கள். உலக வாழ்வில் நாம் பழகும் சூழலுக்கேற்ப நம் ஈமானிய உணர்வுக்கு மாற்றமான சிந்தனைகள் நம் மனதில் வருவது தவிர்க்க முடியாதது. இதனால் நம் மனதில் உள்ள இறை நம்பிக்கையில் மாசு படிகின்றது. மனதை காலியாக்குங்கள் என்றால் தவறான கருத்துகளால் சேகரமான இந்த மாசுகளின் அழுக்கு மூட்டைகளை காலியாக்குவதைத் தான் குறிப்பிடபடுகின்றது.
அப்படி இல்லாமல் வீடு, மனைவி, மக்கள், அலுவலகம், நண்பர்கள், கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் என சதா மனதில் வலம் வரும் சிருஷ்டிகளின் சிந்தனையை மனதை விட்டு நீக்க வேண்டும் என்றால் அது சாத்தியமே இல்லை.
சிருஷ்டிகள் நம் மனதில் வலம் வருவதை தடை செய்ய முடியாது. அப்படி மனதில் வரும் சிருஷ்டிகள் அவை தன் தானே உலகில் இருப்பதற்கும், இயங்குவதற்கும் ஒவ்வொரு வினாடியும் இறைவனை சார்ந்துள்ளதால், எந்த சுய சக்தியும் இல்லாத சிருஷ்டிகளால் சுயமாக நமக்கு எந்த லாபமோ., நஷ்டமோ தர முடியாது என்பதை குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக விளங்க வேண்டும். பின்னர் அந்த நம்பிக்கையின் ஒளியில் இறைநம்பிக்கயாளர் மனதில் வலம் வரும் சிருஷ்டிகளை நோக்கி “சிருஷ்டியே! நீ என் தேவையை சுயமாக நிறைவேற்றவில்லை. ஏனென்றால் நீயே சுயமாக இல்லை, அதனால் உன் தன்மைகளும் சுயமாய் இல்லை! உன்னில் காணப்படும் செயலாற்றலும், உடமைகளும் உனக்குச் சுயமாய் இல்லை. ஏதும் சுயமற்ற உன்னால் இறைவனின் தயவின்றி எந்தத் தேவையையும் நிறைவேற்ற முடியாது. உன்னுடனும், மற்ற சிருஷ்டிகளுடனும் தன் சொந்த உள்ளமையைக் கொண்டு ஏகமாய் உடன் இருந்து தன் தனித்த (unique) உள்ளமை, பண்புகள், செயல்கள், உடமைகளால் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் தான் உங்கள் போர்வையில் எனது தேவையை நிறைவேற்றியவன்” என எங்கும் சூழ்ந்திருக்கும் அவன் இறைத்தன்மையை ஒன்று படுத்துவார்.
வானம், பூமியிலுள்ள அனைத்து சிருஷ்டிகளிலும் காணப்படும் லாப, நஷ்டம் கொடுக்கக் கூடிய தன்மை – இறைத்தன்மை ( உலூஹிய்யத்) அந்த சிருஷ்டிகளுக்கு சொந்தமானது அல்ல என மறுத்து அந்த சிருஷ்களுடனிருந்து அவைகளின் மாறலாக தேவையை நிறைவேற்றும் அல்லாஹ்விற்கு சொந்தம் என தரிப்படுத்துவதால் அவர் தன் தேவைகளுக்காக சிருஷ்டிகளுக்கு அடிமையாக மாட்டார்.
அதே விதமாக தன்னில் வெளியாகும் புகழுக்குரிய செயல்களும் இறைவனின் சக்தியாலும் அவன் வழங்கிய ஆற்றல்களாலும் வெளியாகின்றது தான் எந்த புகழுக்கும் தகுதியானவன் அல்ல என்பதையுணர்ந்து தற்பெருமையை மனதலிருந்து காலிசெய்து எல்லா புகழும் இறைவனுக்கே என முற்றிலும் அவனை சார்ந்த அடியானாக ஆகிவிடுவதால். சக்தியிலும், பண்புகளிலும் இணைவைக்காத அந்த அடியனின் உள்ளத்தில் தன் புறத்திலிருந்து உயர்வான ஞானங்களைத்தை வழங்கி அலங்கரித்து விடுகின்றான் அல்ஹம்துலில்லாஹ்!.

Post a Comment