தோழமையுடன்

Saturday, October 30, 2010

பிரிய நண்பராய் முல்லா...


மனசாட்சியின் கண்ணாடியாய் நின்று நம்மை நாமே கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்கும் சுய அலசலின் பக்கம் நம்மை அழைப்பவை முல்லாவின் கதைகள். சஃபி என்பவர் முல்லாவின் கதைகளை அறிமுகப்படுத்தி புதிய காற்று மாத இதழில்(ஜூன் 2006) எழுதிய  சுவராசியமான  அறிமுகம் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.


முல்லா நஸ்ருத்தீன் நமக்கு நன்கு பரிச்சயமானவர்தான். தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள் போன்ற சிறுவர்களுக்கான வேடிக்கை கதைகளின் வரிசைகளில் முல்லாவுக்கும் இடமுண்டு.


தரையில் படரும் மெல்லிய கொடியில் பெரிய பூசணிக்காய் காய்க்கிறது. அதைவிட பெரிய ஆலமரத்தில் போய், ஏன் சிறிய பழங்கள் காய்க்கின்றன என முல்லா யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மொட்டைத் தலையில் அந்த சிறிய பழம் உயரத்திலிருந்து விழுந்தும், அவர் தலை தப்பிப் பிழைக்க அவர் ஞானம் பெற்று இயற்கையின் ஒழுங்கை படைத்த இறைவனை தொழுத கதை எல்லோர் நினைவிலும் இருக்கும்.
  


இன்றும் நடைபாதையோர புத்தகக் கடைகளில் முல்லாவை சுலபமாக வாங்கிவிட முடியும். ஆனால் இவ்வளவு அருகாமையிலிருந்தும் நாம் வளர வளர, நமக்கும் முல்லாவுக்குமான பேச்சு வார்த்தை குறைந்து விடுகிறது. நமக்கும் அவருக்கும் இடைவெளி அதிகரித்து விடுகிறது.

நம்முடன் முல்லா சேர்ந்து வளர்வதில்லை என்பது நமது எண்ணம். காலப்போக்கில் முல்லாவைப் பற்றி ஒரு தெருக் கோமாளி சித்திரமே நமது மனதின் ஓரத்தில் கலையாமல் கிடக்கிறது. அரசனாய் இருப்பதை விடவும் கவனமான கோமாளியாய் செயல்பட கூடுதல் பிரயாசை தேவை என்பது வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம்.


வாழ்வின் போக்கில் செக்குமாடாய் நமது மனம் இயந்திர கதியில் ஒரே மாதிரியாக சிந்திக்கப் பழகி விடுகிறது. அவ்வாறில்லாமல் வாழ்வின் இயக்கத்தை ஒரு குழந்தையின் வியப்புடன் பார்க்கும் தன்மை நமக்குள் மிச்சமிருந்து - பழைய முல்லாவை நாம் ஏதோவொரு தேனீர் கடையிலோ அல்லது சந்தை தெருவிலோ பார்க்க நேர்ந்து - அவருடன் உரையாடத் தொடங்கினால், நம் கண்ணுக்கு தட்டுப் படாமல் போயிருந்த கூடுதலான விசேஷ அம்சங்கள் நமக்கு அவரிடம் புரிபடும்.


சொல்லப்போனால், முல்லா சிறுவர்கள் குறித்து மிகச் சொற்பமாகவே பேசியிருக்கிறார். முல்லாவை நாம் எளிதாக நெருங்கி உரையாட முடியும். கதைகளில் முல்லாவுக்கு வீடு இருக்கிறது. வீட்டில் அழகான பூனை உலவுகிறது. கோழிகள் அங்குமிங்கும் அலைகின்றன. பின் கட்டிலிருந்து கழுதை கனைக்கிறது. இடையிடையே முல்லாவின் மனைவி எட்டிப்பார்த்து அவருடன் சண்டை போடுகிறார். 

முல்லாவும் கோழிக் குஞ்சுகளின் கழுத்தில் கறுப்புத் துணி அணிவித்து இறந்துபோன பெற்றோர்களுக்காக அவைகளை துக்கம் அனுசரிக்க அனுமதிக்கும் அன்புடையவராக, பிராணிகள் உரிமை பாதுகாவரலாக இருக்கிறார். முல்லாவின் உலகம் இவ்வளவு எதார்த்தமாக இருக்கிறது. ஆனால் நாம் இருக்கும் சமூக எதார்த்தம் முல்லாவுக்கு பிடிப்பதில்லை. ‘உலகம் ஆரோக்கியமற்று தலை கீழாக போய்க் கொண்டிருக்கிறது. மனிதர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்’, ‘இரண்டும் இரண்டும் எவ்வளவு?’ என்று கேட்டால் ‘நான்கு ரொட்டித் துண்டுகள்’ என்று சொல்லக் கூடிய ‘பார்வையுடன்தான்’ மனிதர்கள் வாழ்கிறார்கள் என்ற விமர்சனத்தை முன் வைக்கிறார் முல்லா.

முல்லா கதைகளின் கடைசி வால் பகுதியில் நீதி உபதேசங்கள் தொங்குவது இல்லை. கதைகளின் இறுதிப் பகுதியானது கேள்விகளை நம்மை நோக்கி திருப்பிவிட்டபடியேதான் இருக்கின்றன. சினேக பாவத்துடன் நம்மையும் சூழலை பரிசீலிக்கச் சொல்லும் கேள்விக முல்லாவின் கதைகள் சுவராஸ்யமானவை. அவரின் ஹாஸ்யத் துணுக்குகள் நமக்கு ஆசுவாசத்தைத் தரக்கூடியவை. இந்த மேலோட்டமான கேளிக்கை மதிப்பைத் தவிர, முல்லாவின் கதைகளை ஊன்றிப் படிக்கும் போது கதைகளில் இழையோடும் ஆழ்ந்த பரிமாணங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வரிகளுக்கிடையே இருக்கும் சொல்லாத செய்திகளைப் பற்றி யோசிக்கத் தூண்டுகிறது. கவனிக்காமல் விட்டுப்போன தனிமனித மன இயக்கங்களையும், சமூக மனோபாவங்களையும் துண்டு துண்டாக எடுத்து மீண்டும் நம் கவனத்துக்கு உட்படுத்தும் உளவியல் ஆவணங்களாக இருக்கின்றன முல்லா கதைகள்.


நாம் யார்? இப்பிரபஞ்சத்தில் ஏன் இருக்கிறோம்? என்ற அடிப்படை தத்துவக் கேள்விகளை எழுப்பிய வண்ணமும் பல கதைகள் முல்லாவிடம் இருக்கின்றன. நான் படித்ததில் சில அதீதமான முல்லா கதைகள் இருந்தன.


ஒரு கதையில் இரவு நேரத்தில் ஏதோ வினோதமான ஒன்று அசைந்தாட அதன் மீது முல்லா அம்பெய்து விடுவார். காலையில் அதைப் பார்த்தால் அம்பெய்யப்பட்ட பொருள் முல்லாவின் சட்டையாக இருக்கும். அதைப் பார்த்து விட்டு முல்லா சொல்லுவார் நல்ல வேளை இந்தச் சட்டையை அணியவில்லை. சட்டையை அணிந்திருந்தால் அம்பினால் நானும் கொல்லப் பட்டிருக்கக் கூடும்.


இன்னொரு கதையில் பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பைக் கொடுத்து விட்டு முல்லா வேகமாக ஓடுவார். ஏன் ஓடுகிறார்? என்று கேட்பவர் களுக்கு தனது இனிமை யான குரல் எவ்வளவு தூரம் போய்ச் சேருகிறது என்பதைக் கண்டறிவதற்காக ஓடுகிறேன் என்று பதில் சொல்லுவார் முல்லா.


இன்னொரு கதையில் நட்டநடு ராத்திரி தெருவில் அலைந்து கொண்டிருப்பார் முல்லா ஏன் அலைகிறீர் கள்? என்று கேட்டவர்க்கு தனது தூக்கம் தொலைந்து விட்டது அதைத் தேடுகிறேன் என்பார் முல்லா. அக்கதையின் இன்னொரு வடிவத்தில் தனக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கமுண்டு என்பதையும் அப்படி தான் நடந்து போவதை பார்ப்பதற்காக தெருவில் நிற்பதாயும் முல்லா பதில் கூறுவார்.


இப்படி தன் குரலையும், தன்னையுமே பார்ப்பது என்பதும் நடைமுறையில் சாத்தியப் படாத, தர்க்கத்துக்கு ஒவ்வாத விஷயம். அவருடைய பதிலும் சாதாரண தளத்தில் கேட்க முடியாத பிறழ்வான பதில். அப்படி இருக்கும் போது இந்தக் கதைகள் சொல்லும் செய்தி என்ன? இப்படி தனது பிம்பத்தை, தனது சுயத்தின் சாயலை தேடும் கற்பனையான, ‘வெறுமனே நினைவுத் தளத்தில் மட்டும்’ நிகழும் இந்த தீவிர மனநிலைக்கு இணையான உதாரணத்தை உளவியல் வரலாற்றில் காட்ட முடியும்.


முல்லா பங்கேற்ற பாத்திரங்கள் எல்லாம் நாம் வாழ்க்கையில் சந்தித்தவைகள்தான். நாமும் முல்லா மாதிரியே ஏதோவொரு தருணங்களில் உணர்ந்திருக்கிறோம். செயலாற்றியிருக்கிறோம். இந்தத் பொதுத் தன்மைதான் முல்லாவிடம் நாம் மனத்தடைகள் அற்று ஆசுவாசமாக உணரச் செய்கிறது. ‘திருட்டு’ கதைகள் போக நீதித்துறை சம்பந்தப்பட்டும், இயற்கை சம்பந்தப்பட்டும் பயிற்றுவிக்கப்பட்டு, பழக்கப்பட்டுப் போன மனம் எப்படி இயங்கும், நாம் யார்? இப்பிரபஞ்சத்தில் ஏன் இருக்கிறோம்? என்ற அடிப்படை தத்துவக் கேள்விகளை எழுப்பிய வண்ணம் பல கதைகள் முல்லாவிடம் இருக்கின்றன. கதைக்குள் போகப் போக முல்லாவைப் பற்றிய எளிய பிம்பம் மறையத் தொடங்குகிறது. அவரது சிந்தனையின் அடர்த்தி தட்டுப்படத் தொடங்குகிறது.


ஆமாம். சுய ஆய்வுக்காக மனதை தயார் படுத்தும் பயிற்சிக்காக, சூஃபி ஞானிகளால் சுத்தமாக தயாரிக்கப் பட்டவைகளே முல்லா கதைகள். தினசரி வாழ்விலிருந்து ஒரு சம்பவத்தை துண்டித்து எடுத்து நம் முன் போட்டு அதில் நம் கவனத்தை குவிய வைத்து நம்மையே கேள்வி கேட்க, சுயவிமர்சனம் செய்து கொள்ள உருவாக்கப் பட்டவைகளே முல்லா கதைகள். முல்லா நஸ்ருத்தீன் சூஃபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதே நிஜத்திற்கு அருகில் வரும்.


சூஃபிகளுக்கே ‘இதயத்தின் ஒற்றர்கள்’, ‘மனதின் இயக்கங்களை வேவுபார்ப்பவர்கள்’ என்றுமொரு பொருளுண்டு. இதயத்தை குறிக்க பயன்படுத்தப்படும் அரபிச் சொல் ‘கல்பு’ சூஃபி மொழியில் ‘கல்பு’ என்ற வார்த்தை ‘தலைகீழாய் புரட்டுவது’, ‘சாரத்தை எடுப்பது’, ‘மாவை பதமாகச் சுட்டு ரொட்டியாக்குவது’ என்ற பல உள் அர்த்தங்களை கொண்டிருக்கிறது. இவையெல்லாம் மனதை ஆராய்வது பண்படுத்துவது குறித்து சூசகமாக சொல்லும் அர்த்தமுடைய சொற்களாகும். ஆர்வக் குறுகுறுப்பு அடங்காமல் முல்லா யார்? அவர் எங்கு, எப்போது வாழ்ந்தார்? முல்லா ஒரு சூஃபியா? அவர் போதனைகளில் மதிப்பு வைக்கலாமா? என்பது பற்றி கட்சி கட்டிக் கொண்டு பெரிய விவாதமே நடந்திருக்கிறது.


முல்லாவின் மூலத் தோற்றத்தினை கண்டறிய ஆசைப்படுபவர்களுக்கு, ஒரு சூஃபி ஞானியின் பதில்: ‘ஒரு சிலந்தியின் கால்களில் மையை தடவி அதை ஊர விடுங்கள். கிடைக்கும் அதன் கால்தட வரைபடம், முல்லாவைப் பற்றி சரியான தேதியையோ அல்லது அவரைப் பற்றி வேறு சேதிகளையோ காட்டும்’. சூஃபிகள் தங்களின் மரபுப்படி தனது செய்திகளை மட்டும் விட்டுச் செல்வதில் பிரியப் பட்டிருக்கின்றன. பூமியில் தனது மற்ற அடையாளங் களை விட்டுச் செல்வதில் ஆர்வமற்றிருந்திருக்கின்றனர்.


வெளியே ஒட்டுப் போட்டும், உள்ளே ஆழமான விருட்சங்களை, மலர்களை வேலைப் பாடுகளுடன் நெய்த கம்பளி அங்கியை அணிந்து கொண்டு, நாடோடியாய்ச் சுற்றும் முல்லாவின் நாட்டுப்புற அம்சம் எல்லோரையும் ஈர்க்கும். காலம் காலமாக அவரின் கதைகளை பல்வேறு நாக்குகள் பரப்பிக் கொண்டிருக்கின்றன. தேசம் தோறும் முல்லாவுக்கும் வேறுவேறு பெயர்கள் இருக்கின்றன.


சூஃபிக்களின் வாழ்வியல் செய்திகள் ஒரு சமனை, இசைவை இலக்காகக் கொண்டவை. உள்ளுணர்வு, சிந்தனை, சொல், செயல்களுக் கிடையில் சமனை வேண்டுபவை. மனதின் செயல்பாடுகளை மேம்பட்டவையாக கருதி உடலின் தேவைகளை ஒடுக்கச் சொல்வதில்லை சூஃபிகளின் வாழ்வு. பரவசமான ஆன்மீக, அனுபூதி நிலையிலையே, திளைத்துக் கொண்டிருக்காமல் உலகியல் வாழ்விலும் கால்பதிக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லுவது சூஃபிகளின் செயல்கள்.


‘மேலிருப்பவற்றிற்கு உள்ள அதே மதிப்புதான் கீழிருப்பவைகளுக்கும்’ என்று இம்மை - மறுமை விஷயம் வரும் போது

உலகியல் வாழ்வை சூஃபி மரபில் வலியுறுத்திச் சொல்லுவார்கள். இஸ்லாத்தின் உயிரோட்ட முள்ள உள் அர்த்தங்களை சுமந்து செல்லும் தூதுவர்களே சூஃபி ஞானிகள்.

சூஃபிகளைப் பொறுத்தவரை திருக்குர் ஆனின் இறை வசனங்கள் நேரடியான, எளிமையான, ஒரு பொருள் அர்த்தத்தை தருபவன அல்ல. அவரவர் பக்குவத்தைப் பொறுத்து நாம் பல மட்டங்களில் வியாக்கியானப் படுத்திக் கொள்ள இயலுமான செறிவான அர்த்த தளங்களை கொண்டது இறை வசனங்கள் என்பர் சூஃபிக்கள்.


இதன் தொடர்ச்சியாக, இஸ்லாம் ஒரு பழைய கெட்டி தட்டிப் போன கற்கால மதம் என்று இன்று எழும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக, நவீன காலத் தேவைகளுக்கும் ஈடுசெய்யும் வகையில் அருளப்பட்ட இறை வசனங்களிலிருந்த புதுப்புது வியாக்கியானங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ‘இஜ்திகாத்’ (ljtihad) அணுகுமுறை இருக்கிறது என்று இஸ்லாமிய மார்க்க வல்லுனர்கள் பேசிவருவதை நாம் இவ்விடத்தில் மனங்கொள்ள வேண்டியிருக்கிறது.


சூஃபிகளின் சிந்தனை பேச்சுக்கள் இஸ்லாத்திற்குள் மட்டும் சுருங்கி விடவில்லை. பிற மதத்தினரையும் பெரிதும் ஈர்த்து தன்னகப் படுத்தியுள்ளது. அதே சமயத்தில் சூஃபிகளின் கேள்வி கேட்கும், விமர்சனத்தை தூண்டும் சுதந்திரமான மனோபாவம் சில சமயங்களில் விசாலமான பார்வையில்லாத மார்க்க அறிஞர்களின் அதிகார பீடத்தை அசைத்தும் பார்த்திருக்கிறது.


ஒருவர் நகைச்சுவையை தானே உருவாக்கி சிரித்துக் கொண்டிருக்க முடியாது. சிரிப்பை பகிர்ந்து கொள்ள, பற்ற வைக்க கூட ஒருவர் தேவை. அந்தத் தன்மையை கொண்டவைதான் முல்லா கதைகள். நிறையக் கதைகள், நாலு பேர் கூடும் தேனீர்க் கடையில்தான் நிகழ்கின்றன. தேனீர்க் கடையென்பது சூஃபி ஞானிகள் ஒன்று கூடி தத்துவ விசாரணை செய்யும் இடம் என்று சொல்லும் மரபுண்டு.


வாழ்க்கை பற்றி சூஃபிக்களின் பார்வைகளை, மதிப்பீடுகளை பரப்பவுமே உருவாக்கப்பட்டவை முல்லா நஸ்ருத்தீன் கதைகள். நகைச்சுவை துணுக்குகள் வழியாக சூஃபி மரபின் இலக்குகளை அடைந்தது புலன் கடந்த பொருளியல்  வரலாற்றில் நடந்த ஓர் அதிசயமான சாதனை என்ற அறிஞர்கள் கருதுவர். கதைகள் கற்பனையாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருக்கட்டும். அவைகள் உண்மையை பிரகாசிக்க வைக்கக் கூடியன என்ற வழக்கு சூஃபி மரபிலுண்டு. இதற்கு அனுசரணையான சான்றுகளை நவீன உளப்பகுப்பாய்வு கோட்பாடுகளும் நமக்கு தருகின்றன.


‘கனவுகளுக்கும், நகைச்சுவைகளுக்கும் சில பொதுத் தன்மைகள் இருக்கின்றன. கனவுகள் நமது ஆழ் மனதை தெரிவிக்கும். அது போல, பகுத்தறிவின் பிடி தளர்ந்த நிலையில் வார்த்தை களினால் நெய்யப்படும் நகைச்சுவைகளிலும் நம் ஆழ்மனம் எட்டிப் பார்க்கும். முக்கியமாக நகைச்சுவைக்கு அதிகாரத்தை குலைத்துப் போடும் தன்மையுண்டு’ என்று நகைச்சுவை குறித்து உளப்பகுப்பாய்வு கோட்பாடுண்டு. அதற்கு நிரூபணங்காளாக முல்லாவின் பல உரையாடல்கள் இக்கதைகளில் சிதறிக் கிடக்கின்றன.


ரத்தமும் சதையுமாக வாய் மொழி மரபில் பயணித்த முல்லா. இங்கே அச்சில், எழுத்தாக நம்முன் தலைப்புகளுடன் படிக்க கிடக்கிறார். முல்லாவை காரியக்காரராக, கர்வியாக, ஞானியாக, கருமியாக, அசடராக, திருடராக, நீதிபதியாக, தேசத்தைக் காக்க வாளெடுக்கும் வீரர்கள் மத்தியில் புல் தடுக்கி பயில்வானாக... என்று பல வேடங்களில் சந்திக்கப் போகிறோம்.


நமக்கு பிரியமான ‘குரலை’ அவர் தொண்டையில் பொருத்தி அவரை பேசச் செய்யலாம். அல்லது போட்ட வேசத்திற்கு தகுந்தவாறு முல்லாவே ‘பல குரல்களில்’ பேசக் கூடியவர்தான். அதிலிருந்து நமக்கு வேண்டிய ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். முல்லாவின் தேர்வுக்கே விட்டால் கண்டிப்பாக அவர், ஒரு பெண் குரலில்தான் பேசுவார். அவ்வப்போது பிசிறு தட்டினாலும் அது அவரது வாஞ்சைக்குரிய மனைவியின் குரலாகத்தான் இருக்கும். நவீன யுகத்தில் முல்லாவை நாம் அடையாளம் கண்டு கொள்ள சிரமப்பட வேண்டியதில்லை. முல்லாவிடம் வயதாகாத ஓர் கழுதை கூட இருக்கும். கழுதையில்லா விட்டாலும் முல்லாவே பேச்சின் நடுவே திடீரென்று கழுதை மாதிரி கனைக்கக் கூடும்.முல்லா கதைகள் - சஃபி நன்றி: கீற்று 
Post a Comment