தோழமையுடன்

Saturday, June 2, 2012

அன்பு சகோதரி அஸ்மாவுக்கு!

நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரி அஸ்மாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாங்கள் கேட்டிருந்த  கேள்விக்கு எழுத ஆரம்பித்த பதில் சற்றே நீண்டு விட்டதால் தனி இடுகையாய் பதிந்து விட்டேன்.

முந்தைய காலத்தில் ராபியா பஸரிய்யா ரலியல்லாஹு அன்ஹா போன்ற மகத்தான பெண்மணிகள் மார்க்க சேவையாற்றியுள்ளார்கள். இந்நாளில் பெண்கள் மார்க்க சேவைக்கு வருவது எவ்வளவு மகத்தானது!. அந்த வகையில் உங்கள் மார்க்கப் பற்றும், சேவையையும் மகிழ்ச்சியான ஒன்றாகும். தாங்கள் புல்லாங்குழலுக்கு வருகை தந்ததற்கு கூடுதல் மகிழ்ச்சி! நன்றி!


இனி உங்கள் கேள்விக்கு வருவோம். 

அடிப்படையில் நீங்களும் நானும் வெவ்வேறு  School of thoughtsன் அடிப்படையில் குர்ஆன், ஹதீஸை விளங்கிக் கொண்டவர்கள்.

நம் அடிப்படைகளை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒப்பிட்டு சரிகாணாத வரை நம் விளக்கங்களில் உள்ள முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. 

 உதாரணத்திற்காக பாருங்கள்:


தூரத்தில் இருக்கும் அவ்லியாவிடம் கேட்கக் கூடாது. மரணத்தவர்களிடம் கேட்க கூடாது.
ஏனென்றால் அதில் அல்லாஹ்வை போல கேட்கும் தன்மையை, வல்லமையை அவ்லியாக்களுக்கு கற்பிக்கின்றோம். அதனால் இறைபண்புகளில் இணைவைப்பு நிகழ்கிறது என்பது உங்கள் தரப்பின் வாதம்.

உயிருள்ளவரோ, இறந்தவரோ யாராயிருந்தாலும் அவர் இறைவனின் சக்தியின்றி யாருக்கும் எந்த லாபத்தையும், நஷ்டத்தையும் கொடுக்க முடியும் அல்லது சிருஷ்டிகள் தன் தானே இறைவனின் சக்தியின்றி எந்த ஒரு வேலையையும் சிறிதளவேனும் செய்ய முடியும் என்று எண்ணுவது இறைநெருக்கத்தை விட்டு தூரமாக்கும் மறைமுகமான இணைவைப்பாகும் (ஷிர்கே கஃபி) என்பது எங்களுக்கு வலிமார்கள் சொல்லித் தந்த பாடம்.

எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான் (ப.ர.P87) என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள். ஏன் அப்படி கூறுகின்றார்கள்?.


உப்பின் தேவையையும் அல்லாஹ் தன்னிடமே கேட்கச் சொல்லுகின்றான். செருப்பு வார் அறுந்தால் கூட அல்லாஹ் தன்னிடமே கேட்க சொல்லுகின்றான் என விளக்கும் ஹதீஸை தாங்கள் சிந்தித்தித்து பாருங்கள் சகோதரி! சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) ஏன் அப்படி கூறுகின்றார்கள் என்பது விளங்கும்.


நாம் இது வரை எவ்வாறு விளங்கி இருந்தாலும்  இறைவனைத் தவிர யாரும் லாபமோ, நஷ்டமோ அனுவளவும் பிறருக்கு செய்ய முடியாது என்பது நம் அனைவரின் பொதுவான நம்பிக்கை.


அதே நேரத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது நாமறிந்த இன்னொரு உண்மை.


துரும்பின் மூலம் பல்குத்தும் உதவியையும் செய்வது இறைவன் என்பது தவ்ஹீத் எனும் ஏகத்துவம். இந்த மகத்தான ஏகத்துவ உண்மையை அடையா விட்டால் மேற் கூறிய இரண்டில் ஒரு கூற்று பொய்யென்றாகி விடும்.


அதே நேரத்தில் சிருஷ்டியை இறைவன் என்றோ
இறைவனை சிருஷ்டி என்றோ சொல்வதல்ல தவ்ஹீது.ஆகவே, தவ்ஹீது என்றால் என்ன? ஷிர்க் என்றால் என்ன? என்பதில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியான வரையறை (Definition) அளவு கோள்கள்கள் (yard stick) அடைவதும்அவற்றில் முடிந்தவரை கருத்தொறுமை அடைய வேண்டியதும் நம் முதல் தேவை.


அப்படி செய்யாதவரை இது ஷிர்க், இது தவ்ஹீது எனபதில் அதிலும் குறிப்பாக ஷிர்கே கஃபி எனும் மறைமுகமான ஷிர்க்கின் விசயத்தில் கருத்து வேறுபாடு என்பது தவிர்க்கவே முடியாதது.


0000


அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும், மறுப்பவர்களுக்கும் கூட உணவளிப்பவன் அல்லாஹ். சகல தேவைகளையும் நிறைவேற்றித் தருபவன் அல்லாஹ் என்பது தானே நம் ஈமான்.

நமது அற்ப தேவையையும் நிறைவேற்றும் தகுதி அல்லாஹ்வை தவிர யாருக்கும் இல்லை. இந்த விதமாக அல்லாஹ்வை விளங்கிக் கொள்ள வேண்டியது மார்க்கத்தில் நமது அடிப்படை தேவை.

அதை தெளிவாக தெரிந்து கொள்ளும் முறையென்ன?

 “ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.” (25:59) என்கிறது இறைவேதம்.

அறிந்தவர்கள் யார்?குர்ஆனும், ஹதீஸும் இருக்க இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ள அந்த விளக்கத்தை வைத்திருக்கும் ஒருவரை அணுக சொல்லி இறைவனே உத்தரவிடுவதன் காரணம் என்ன?

1.       எந்த சிருஷ்டியையும் போல் இல்லாத இறைவனை சுயமாக அறிவது என்பது இயலாது. ஞானத்தின் பட்டினமான நபி (ஸல்) அவர்களும் தன் சொந்த ஆராய்சியால் இறைஞானத்தை பெறவில்லை. இறைவன் வஹியின் மூலம் அறிவித்து கொடுத்த மகத்தான பாக்கியமது. ஆக  இறைவனை அறிவதில் சுயஆராய்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

2.       குரானையும், ஹதீஸிலும் கூறப்பட்ட விளக்கத்தை தெளிவாக அறியும் நபிவழி என்ன?

வஹியின் மூலம் பெருமானார் (ஸல்)அறிந்தார்கள்.
பெருமானாரிடமிருந்து சஹாபாக்கள் அறிந்தார்கள்,
சஹாபாக்களின் வழியாகத் தாபியீன்கள்,
தாபியீன்களிடமிருந்து தபவுத்தாபியீன்கள்,

இப்படி சங்கிலித் தொடராக வந்த இந்த ஞானவிளக்கத்தை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு வலியே முர்ஷிதைஅணுகுவது தான் வேதம் காட்டும் நேர்வழி. இதை பின் வரும் இறைவசனமும் உறுதி செய்கிறது.

 (நபியே!) யாரை (அவர்களின் மன அமைப்பின் கோரிக்கை படி) அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்.(18:17)

 இந்த ஆயத்துகளை சிந்தித்து பாருங்கள் சகோதரி!

ஷிர்க், தவ்ஹீது என்பதை எல்லாம் சுய ஆராய்சியாலின்றி பெருமானாரிலிருந்து சங்லித் தொடராய் வந்த விளக்கத்தை அறிந்தோர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

அத்தகைய சித்திக்கீன்கள், ஷுஹதாக்கள், சாலிஹீன்களானான நல்லடியார்களின் பாதையில் நம் அனைவரையும் இறைவன் செலுத்துவானாக!

நமது சகல கேடுகளுக்கும் மூலக்காரணம் இறைவனை விட்டுத் தூரமாகி கிடப்பதும், இறைவனல்லாதவற்றை பற்றிப் பிடித்து கொண்டிருப்பதுமேயாகும்”  என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள்

நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பொருட்டால் நம் அனைவருக்கும் அந்த பாக்கியமான இறைநெருக்கம் (குர்பு) நஸீபாக எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோமாக! ஆமீன்!உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment