தோழமையுடன்

Thursday, June 21, 2012

என் பெயர் பஷீர் ( நகைச்சுவை கதை)

 “நகைச்சுவையாக எழுதி தாருங்கள் அமீன்” என ஆபிதீன் நானா கேட்டுக் கொண்டதற்காக எழுதப்பட்ட கதை. ‘ஆபிதீன் பக்கங்களில்’ வெளியிடப்பட்டது. 

“சிரிக்க தெரிந்தவர்கள் இந்த கதையை வாசியுங்கள்” என எழுத்தாளர் ஆபிதீன் நானாவும்,  “கோடையின் அவஸ்த்தையிலிருந்து கொஞ்சம் விடுப்பு தந்த சுகத்தை அனுபவித்தேன்” என எழுத்தாளர் தாஜும் பாராட்டிக் கூறியதால் சிற்சில மாற்றங்கள், கூடுதல் சம்பவத்துடன் புல்லாங்குழலில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

என் பெயர் பஷீர்

என் பெயர் பஷீர். வைக்கம் பஷீரின் எழுத்துகளால் வசீகரிக்கப்பட்டு வைத்துக் கொண்ட புனைப்பெயரல்ல. என்னை உருவாக்கியவர் வைத்த பெயர். அவர் ஆன்மீகவாதி. அதனால் அவர் இமேஜை பாதுகாத்துக் கொள்ள போட்டுக் கொண்ட முகமூடி தான் நான் என்றெல்லாம் சிலருக்கு சந்தேகம் வரலாம் என்பதால் இந்த தன்னிலை விளக்கம்:

இது பஷீராகிய எனது கதை என்பதால் உங்கள் ஆன்மீக தீர்வுகளை உள் நுழைக்காமல் என்னை எனது போக்கில் விட்டு விடுங்கள் என்று கதையை ஆரம்பிக்கும் முன்பே மிஸ்டர்.அமீனிடம் தெளிவாக நான்  சொல்லிவிட்டேன்.

அவரது போக்கில் கதை சென்றால் புல்லாங்குழலில் தான் வெளியிட முடியும். இது இண்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட் உள்ள ஆபிதீன் பக்கத்திற்கான கதை. ஆகவே உங்கள் கதையை மூட்டை கட்டி வைத்து விட்டு என்னை பின்தொடருங்கள் என கூறிவிட்டேன்.

எனவே என் கதை கூறலில் அவரது சாயல்கள் கொஞ்சம் தெரியலாம். ஆனால் நான் அவரல்ல. நான் அவரல்ல. நான் அவரல்ல…..

இனி என் கதை.

நேற்று மாலை நான் அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாய்எனக்கு உடம்பு தேள் கொட்டுனா மாதிரி கடுக்குதும்மாஎன்றாள் அன்பு மனைவி ஆஷிகா

( அது என்ன வந்ததும், வராததுமாய்? உடல் வீடு வந்துவிட்டது. உள்ளம் இன்னும் அலுவலகத்தில்.) 

  ‘’உங்கூட்டு வலி எங்கூட்டு வலி இல்ல ஆயிரம் தேள் கொட்டுனா மாதிரி அப்புடி ஒரு கடுப்புஎன்றாள்.  

இதுக்கு பேரு“Psychosomatic disorder” என்றேன்எனக்கும் கொஞ்சம் மனோதத்துவமெல்லாம் தெரியுமுள்ள!

அப்படின்னாஎன்றவளிடம்,

ஆழ்மனதுல என் மேல ஏதாவது கடுப்பு இருக்கலாம். அத சொல்ல முடியாம அடக்கி வச்சிருதேன்னு வச்சுக்க. அந்த மனகடுப்பு உடல் கடுப்பாயிடும்என்றவன் சராசரி கணவனை விட நாம கொஞ்சம் நல்லவன் தானே என்ற நம்பிக்கையுடன்அப்புடி ஏதும் குறை இருக்கா?” என்றேன் கம்பீரமான புன்சிரிப்புடன்.

அவள்ம்ம்…” என்று மெலிதாய் முனங்கியவளாய் நெற்றியை சுருக்கி சிறிது நேரம் யோசிக்க ஆரம்பித்தாள்

என் அடிவயிற்றில் ஜில்லாப்பு பரவியது.

ஏடாகூடமா ஏதாவது சொல்லி தலையில கல்லை போட்டுவிடுவாளோ?

என் உயிராச்சே நீ செல்லம்! உனக்கு என்ன கவலை சொல்லுஎன்றேன் சற்றே சுருதி இறங்கியவனாய். ஏறத்தாள காலில் விழாத குறையுடன்.

அவளிடமிருந்து பதில் ஏதுமில்லை.

அவள் நீண்ட மௌனத்தினால் சற்று முன் அணிந்திருந்த கம்பீரமான பிம்பம் கலைந்து நடுக்கம் ஊடுறுவத் தொடங்கியது.

 “ரெண்டு நாளா எனக்கு கூட ஹார்ட் பீட் ஜாஸ்தியா இருக்கும்மா!” என்றேன் அனுதாபம் வேண்டியவனாய். உண்மையிலேயே படபடப்பாகத் தான் இருந்தது. சம்பாதித்த கடைசி வெள்ளி வரை செலவாகும் சிங்கப்பூர் வாழ்க்கையில் என் ஒரே சேமிப்பு என் குடும்பத்தினரை சந்தோசமாக வைத்திருக்கின்றேன் என்ற திருப்தி தான். அதுவும் இல்லையா? என்ற அதிர்ச்சியில் கையிலிருந்த மிட்டாயை காகத்திடம் பறிகொடுத்த சிறுவனாய் பதறியது மனது.   

என் இருண்ட முகத்தை சட்டென படித்து விட்டாள் அவள்.“நீங்க ரொம்ப நல்லவருமா!”  ஆறுதலாய் தலையை கோதினாள். எனது மனதின் தத்துவம் என்னை விட அவளுக்குக்குத் தான் தெளிவாய் தெரிகிறது என்பதால் இனி மேல் தேவையற்ற கேள்விகளை அவளிடம் கேட்கக் கூடாது என முடிவெடுத்தேன். நாம நல்லவன் தான் என்பது நமக்கே லேசுமாசா தெரியும் போது தேவையில்லாமல் அதை உண்மையா என பரிசோதனைக்குள்ளாக்கக் கூடாது. இதுவெல்லால் மெல்லிய கண்ணாடி மாதிரி சமாச்சாரம் தேவையில்லாமல் பலப்பரீட்ஷை நிகழ்த்தாதே பஷீர் என என்னை நானே எச்சரித்து கொண்டேன்.

இரவு உணவு முடிந்ததும் ஆஷிகா உறங்கிவிட்டாள். எனக்கு உறக்கம்வராமல் புரண்டு கொண்டிருந்தேன்.

என்ன கவலை இவளுக்கு?’   

இன்று காலையில் நடந்த உரையாடல் ஞாபகத்திற்கு வந்தது.     

அதிகாலையில் ஒரு கனவு கண்டேங்கஎன்றாள்.

சொல்லுஎன்றதும் விவரித்தாள்:

நான் சூப்பர் மார்கெட்டில் காய்கறி வாங்கிகிட்டு இருக்கேன். பக்கத்து ஃபிளாட் ரெஜினாவும் கூட இருக்கு

ரஜினாவிடம்,”சின்ன வெங்காயம் சாப்புடுங்க பிரசருக்கு நல்லதூங்கிறேன்.

அதுக்கு ரெஜினா,” எனக்குத் தான் நாத்தனா இல்லையே. அதனால சின்ன வெங்காயம் தேவையில்லைன்னு சிரிக்கிற மாதிரி கனவு வந்தது. கண்ணு முழிச்சத்தோட எனக்கும் சிரிப்பு வந்துடுச்சுங்கஎன்றாள்.

நானும் சிரித்தவனாய், “ இன்னைக்கு ஆஃபிஸ்லேந்து வந்ததும் என் தங்கச்சிட்ட போன் போட்டு இதை சொல்லப் போறேன்.” என்றதும்,

நீஙக என்னா சொல்றது நீங்க ஆஃபீஸ் போனவுடனே நானே போன் பாட்டு என் நாத்தனாட்ட சொல்லத்தான் போறேன்என்றாள்.   
  
ஆஷிகா மாமியார், நாத்தனாருடன் மிகவும் நேசமாக இருப்பாள். மேலும் அவர்கள் ஊரில் இருப்பதால் அவள் விஷயத்தில் கொடுமை என்பது  பேச்சுக்கு கூட இடமில்லை. சிங்கப்பூரில் தனிக் காட்டு ராணியாக ராஜாங்கம் செலுத்துகிறாள். நானும் பிள்ளைகளும் அவளுக்கு மிகவும் கீழ்படிதலுடன் இருக்கின்றோம்.

உண்மையான கீழ்படிதலா என்கின்றீர்களா?

எங்கள் கீழ்படிதலில் சிறிது பாசாங்கு இருக்கலாம். அவளுக்கும் அது தெரிந்தாலும் அதை பிரியமுடன் அங்கீகரிப்பாள்.

உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடிஎன தொப்பி போட்ட பாரதியாராய் உருகுவதிலும்,

 “நான் பார்த்ததிலே உன் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன். நல்ல அழகி என்பேன்என தொப்பி போடாத எம்ஜியாராய் நாடியை பிடித்து கன்னம் கிள்ளுவதிலும்,

கொஞ்சம் உண்மையும், கொஞ்சம் இனிமையான பொய்யின் கலப்பும் இல்லை என்றால் வாழ்க்கை வசீகரமற்று போய்விடாதா?

 நினைத்ததை நினைத்தபடி வெளிப்படுத்த நாம் என்ன மிருங்கங்களா

மனிதன் சமூக மிருகம் என்கிறார்களே? ஆமாம், கலாச்சார, பண்பாட்டு வேசங்களுடன் வெளியில் அழைந்தாலும் உள்ளுக்குள் உறங்கும் மிருகம் யாரிடம் தான் இல்லை……

எப்போதோ படித்த ஆதவனின் கதை அரை குறையாய் ஞாபகத்திற்கு வந்தது. தன் மனைவியை முழுக்க முழுக்க அறிந்தவன் என நினைக்கும் கணவன் அலுவலகத்திருந்து தன் ஃபிளாட்டுக்கு திரும்புவான். வரும் வழியில் சக குடித்தனக்காரர்கள் அவன் மனைவியின் விஷேச குணாதிசயங்களை சொல்லி வியந்து பாராட்டுவார்கள். அவனுக்கு தான் முற்றிலும்  அறியாத விசாலமான இன்னொரு பக்கம் தன் மனைவிக்கு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைவான். அத்தகைய அதிர்ச்சி என் மனதில் கள்ளப்பூனையாய் மெள்ள நுழைந்தது.

 “நல்ல கணவன்னு மனைவி சொல்ல வேண்டும் அவன் தான் நல்ல மனிதன்”  என நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார்கள் என எங்கோ படித்தது வேறு ஞாபகத்திற்கு வந்தது.

 (பஷீர் : மிஸ்டர் அமீன், உங்கள் சிந்தனையை என் மேல் திணிக்காதீர்கள் என சொன்னேன் அல்லவா? தயவு செய்து சற்று விலகி நில்லுங்கள்.
அமீன் : .கே. பஷீர் நான் குறுக்கிடவில்லை.)

தூக்கம் கலைந்து எழுந்த ஆஷிகா  “இன்னும் நீங்கள் தூங்கலையா ”   என்றாள்.
 “தூக்கம் வரலைன்னதும்.

 “ஏதும் ஆஃபிஸ் பிரச்சனையா?” என்றாள்.

 “அதெல்லம் ஒன்னுமில்லை. ஒன்னைய நான் சந்தோசமா வச்சிருக்கேனாங்கிற கவலை தான்என்றதும்.

 “நீங்க என்னை சந்தோசமாதானேம்மா வச்சிருகீங்க. அதுல என்ன சந்தேகம்
 “ அப்ப நீ எதை நெனச்சு கவலைப்படுறே!”  

மனுசின்னா மனசுல சின்ன சின்ன கவல வரத்தான் செய்யும். அதுகெல்லாம் காரணம் யாருக்கு தெரியும். வரிசையா கேள்வி கேட்டு தூக்கத்த கலைக்காம நீங்களும் தூங்குகம்மா”   என்றவளிடமிருந்து சிறிது நேரத்தில் மெல்லிய குறட்டை ஒலி எழுந்தது.

எனக்கு தூக்கம் வரவில்லை.    

எந்த கவலையும் இல்லைங்கிறா? அப்புறம் ஏன் டல்லா இருக்கா? அடிக்கடி உடல் கடுக்குதூங்கிறா?

சின்ன ஃபிளாட்டில் அடைந்து வாழும் சிங்கப்பூர் வாழ்க்கை கசந்து விட்டதோ? பிரிவினையில் வெந்து தணியும் வாழ்க்கையை விட இது பல மடங்கு உயர்வல்லவா? என்ன செய்யலாம்?

சிறு வயதில் படித்த கதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு தம்பதியருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்த இனிமையே வாழ்க்கையில் சலிப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு ஒரு குரு இருந்தார். அவரிடம் சென்று, “எல்லா வளமும் இருந்தாலும் வாழ்க்கையில் அமைதியில்லை குருவே!”  என தங்கள் நிலையை சொல்லி பரிகாரம் கேட்டார்கள். “அவர் வீட்டின் கொல்லையில் கட்டி இருக்கும் ஆடு,பசுக்களை வீட்டின் உள்ளே மூன்று தினங்களுக்கு கட்டி வையுங்கள்”  என்றார். மூன்று நாட்களும் வீட்டில் ஆடு, மாடுகள் கத்திக் கொண்டே இருந்தது. வீட்டின் உள்ளே ஒரே இறைச்சல், இட நெருக்கடி, கால்நடைக் கழிவுகளின் நாற்றமுமாய் பொழுது கழிந்தது. நாலாவது நாள் ஆடு, மாடுகளை வெளியேற்றி மீண்டும் கொல்லையில் கட்டினார்கள். வீடு சுத்தமாகியது. மனசும். ‘அப்பாடா வீடு எவ்வளவு அமைதியாய் இருக்கிறது!’ என்றார்கள் அவர்கள்

எதை எதையோ நினைத்தவண்ணம் இருந்தவன் அப்படியே தூங்கி விட்டேன்.
இன்று சனிக்கிழமை. அலுவலகம் அரை நாள் தான். மதியானம்  சிங்கப்பூரின் இன்னொரு மூலையில், ஜுரோங்கில் இருக்கும் ஆஷிகாவின் அண்ணன் குடும்பத்தினரை வீக் எண்ட் வந்து தங்கி செல்லுமாறு வலிய அழைத்தேன்.
மச்சான், நாங்க ஆறு பேறு கொண்ட பெரிய குடும்பம். எல்லோரும் வந்து தங்கினால் வீடு இடம் பத்தாதே, ஒன்னும் தொந்தரவில்லையேஎன்றான் ஆஷிகாவின் அண்ணன்.

வீட்டுல இடமில்லாட்டி என்ன? மனசுல இடமிருக்குதுல வாங்க மச்சான்என்றேன் வேறு வழி சிங்கப்பூரில் ஆடு, மாடுகளுக்கு எங்கே போவது? நீங்களே சொல்லுங்கள்!.


உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment