தோழமையுடன்

Friday, June 1, 2012

திரை விலகட்டும்!


ரகசியங்கள் பகிரங்கமாகும் மறுமை நாளில் இறைவன் பிரகடனம் செய்வான்:

 “இன்று ஆட்சியதிகாரம் யாருடையது? எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுடையதே”. (40:16)

மிஸ்காத்துல் அன்வார் எனும் நூலில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) இப்படி எழுதியுள்ளார்கள்.
இறைவனின் வஜ்ஹை(being) தவிர யாவும் அழிபவையாய் இருக்கின்றன. இந்த ஆத்ம ஞானம் பெற்றவர்கள், “இன்று ஆட்சியதிகாரம் யாருடையது? எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுடையதே”. என்று இறைவன் பிரகடனம் செய்வதை கேட்க மறுமை நாளில் எழுப்பப்படும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அந்த அழைப்பு சதாவும் அவர்களின் செவிகளில் ஒலித்த வண்ணமே இருக்கிறதுஎன்று.

மேற் கூறிய வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் இந்த நபிமொழியை பாருங்கள். இதை இமாம் அஹ்மது அப்துல்லாஹ் பின் உமர் அவர்களின் வாயிலாக அறிவித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குத்பா பேருரையில் கூறினார்கள்: வானங்களையும், பூமியையும் தன் கைகளிலே பிடித்துக் கூறுவான், நானே மன்னவன், நானே சமநிலையாக்குவோன், நானே பெருமைக்குரியவன் என்று கூறித் திரிந்தவர்கள் எங்கே? சமநிலயாக்குவர்கள் எங்கே? பெருமைக்குரியவர்கள் எங்கே?

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) கூறுகின்றார்கள்:
அண்ணல் அவர்கள் இந்த வார்த்தைகளை குத்பாவில் அறிவித்து கொண்டிருந்த போது எங்கே அவர்கள் மிம்பரை விட்டும் கீழே விழுந்து விடுவார்களோ என நாங்கள் அஞ்சும் அளவுக்கு அவர்களின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது”.

அண்ணலை விட இறைவனுக்கு பிரியமானவர்கள் யார்?. அவர்கள் உடல் ஏன் நடுங்க வேண்டும்.

அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்கள் அறிஞர்களை தவிர யாருமில்லை என விளக்குகிறது இறைவேதம்.

அண்ணலாரே சொன்னபடி அல்லாஹ்வை அதிகம் அறிந்தவர்களும் அவர்கள் தான் அதனால் அதிகம் அஞ்சுபவர்களும் அவர்கள் தான்.

இறைஞானம் தான் இறையச்சத்தின் தலைவாசல்.

0 0 0

அறிவு எனும் திரை

மேலே உள்ள இறைவசனத்தையும், நபிமொழியையும் சிந்தித்து பாருங்கள்.
நாம் உண்மையாக சிந்தித்து பார்த்தால் இறை நம்பிக்கையாளர்கள் என சொல்லும் நமது அலங்கோல நிலை நமக்கே வெளிச்சமாகும்.

இது போன்ற இறைநம்பிக்கைக்கு அடிப்படையான இறைஞானத்தை அறிவதை எது நமக்கு தடை செய்கிறது?. எது நமக்கு திரையானது?.

அல் இல்மு ஹிஜாபுன் அன்த ஹிஜாபுன்என சொல்லித் தந்தார்கள் என் குருநாதர் ஃபைஜிஷாஹ்(ரஹ்).

அறிவும் திரை. நீயும் திரை என்பது இதன் பொருள்.

அறிவே அறிவதை  மறைக்கும் திரையாகுமா? சிந்தித்து பாருங்கள் புதிதாக ஒன்றை பற்றியும் அறியும் போது நாம் என்ன செய்கின்றோம்?

உதாரணமாக ஒரு புதிய பூவை அறிவதாக கொள்வோம்.

முதலில் பூ என்றவுடன் என்ன நிறம் என கேள்வி வரும்.

வெள்ளை என்றால் மல்லிகை போல் இருக்குமா? அல்லியைப் போல் இருக்குமா என நம் அறிவின் சேகரமான ஞாபக்திலிருந்து முன் மாதிரியை எடுத்து ஒப்பிட்டு அறிய முயலுவோம்.

நாம் யாரைப் பற்றிய அறிவை பெற நாடுகின்றோம்?. உவமைகள் இல்லாத இறைவனை.

எந்த பொருளிலும் அவனுக்கு உவமையில்லாத இறைவனை அறிவதில் அறிவோ அதன் சேகரமான ஞாபகமோ நமக்கு எப்படி உதவ முடியும்?.

பழமையான நம் அறிவின் மீது நடை பயிலும் சிந்தனை தான் எப்படி உதவ முடியும்?

அதனால் தான் இறைஞானம் அறிய  குருவிடம் செல்லும் போது காலி பாத்திரமாக செல்லுங்கள் என சொல்லுகிறார்கள் இமாம் ஷாஃபி (ரஹ்).

ஒரு கோப்பையில் தேநீரை ஊற்ற வேண்டும் என்றால் முதல் தகுதி கோப்பை காலியாக இருக்க வேண்டும். பாதி கோப்பை  காப்பி அதில்  இருந்தது என்றால் அதில் தேநீரை ஊற்ற முடியுமா?

ஏன் ஊற்றினால் என்ன?

ஊற்றினால் ஒன்றுமில்லை. அங்கே காப்பியும் இருக்காது. தேநீரும் இருக்காது.

ஆகவே இருக்கும் காப்பியை காலி செய்வதுடன் அதன் வாடை கூட இல்லாமல் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

தாங்கள் அறிந்த அனைத்து அறிவையும் சற்று நேரம் ஒதுக்கி வைத்து விட்டு காலியான பாத்திரமாய் நிற்கும் இதயம் தான் ஞானத்தை ஏற்கும் முதல் தகுதி.

நபி தோழர்களின் வாழ்வில் இதற்கு முன் மாதிரி இருக்கின்றது.

நபியவர்கள் எதைப் பற்றியாவது விளக்கும் நோக்கத்துடன் உங்களுக்கு இதை தெரியுமா என கேள்வி கேட்டால் நபியவர்கள் சொல்வதை அதன் முழு அர்த்தத்துடன் விளங்கிக் கொள்ள வேண்டும், தங்கள் முன் தீர்மானத்தினால் அதை பாழடித்து விடக் கூடாது என்பதால் நபியிடம் முழுமையாக இதயத்தை ஒப்படைதவர்களாக, மனோ ஓர்மையுடன் செவிசாய்தவர்களாக, “ இறைவனுக்கும், அவன் தூதருக்கும் தான் தெரியும்என பதில் அளிப்பார்கள்.

இந்த முழுமையான வாங்கும் திறன் (Receptivity) ஆன்மீகத்தின் அடிப்படை தேவை என்பதை இறைவேதமும் சுட்டிக்காட்டுகிறது:

நிச்சயமாக எவருக்கு இதயம் இருக்கின்றதோ அவருக்கு அல்லது மன ஓர்மையுடன் செவிசாய்க்கின்றாரோ அவருக்கு இதில் (இறை அத்தாட்சிகளில்) ஞாபகமூட்டல் (reminder) இருக்கிறதுஎன்கிறது அல் குர்ஆன் (50:37)

நான் எனும் திரை

பாயஜீது பிஸ்தாமி(ரஹ்) என்பவர்கள் மகத்தான இறைஞானி. அவர்களை  பார்க்க ஒருவர் அவர்களின் இல்லத்துக்கு வந்தார். அங்கிருந்த பாயஜீது பிஸ்தாமியவர்களிடமே சென்று அவர்கள் பெயரை சொல்லி அவர்கள் எங்கே என கேட்டார். “நானும் பாயஜீது பிஸ்தாமியைத் தான் தேடி கொண்டிருக்கின்றேன்என ஞானியவர்கள் சொல்லவே வந்தவர் புறப்பட்டு வெளியில் சென்று மீண்டும் மாலை திரும்பி வந்தார். மீண்டும் பிஸ்தாமி(ரஹ்) அவர்களிடமே அவர்கள் எங்கே என வினவ, பிஸ்தாமி(ரஹ்) அவர்களும்நானும் பாயஜீது பிஸ்தாமியைத் தான் தேடி கொண்டிருக்கின்றேன்என பதிலளித்தார்கள். அதை கேட்டதும் அந்த மனிதர்காலையிலிருந்து தேடி கொண்டிருக்கின்றேன் எங்கே தான் சென்றார்கள் அவர்கள்என சடைவுடன் கேட்டார். அதற்கு பாயஜீது (ரஹ்) அவர்கள் , “ தம்பி நீங்கள் ஒரு நாள் தேடியே சோர்ந்து விட்டீர்களே நான் பல வருடங்களாக தேடி கொண்டிருக்கின்றேன்என புன்னகைக்கவும். வந்தவருக்கு அப்போது தான் புரிந்தது தான் பிஸ்தாமி(ரஹ்) அவர்களுடன் தான் உரையாடிக் கொண்டிருக்கின்றோம் என்பது.

தன்னை அறியும் ஞானம் தான் தன் இறைவனை (ரப்பை) அறிவதில் கொண்டு சேர்க்கும் என்பது ஆன்மீகத்தின் அடிப்படையல்லவா?அதை சிந்திக்க சொல்கிறது இந்த வேத வரிகள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளி வருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன் இன்ன பொருள் என்றும்  கூறுவதற்கில்லாத நிலையிலிருந்தான். (76:1) என்கிறது இறைவேதம்.

இன்னதென்று தன்னைத் தானே அறியாத நிலை தான் மனிதனின் ஆரம்ப நிலை. ஏனெனில் அவன் அப்போது ஒரு பொருள் என்னும் நிலையில் இல்லாமல் இருந்தான். உடல் இல்லை.உயிர் இல்லை. உணர்வு இல்லை. Nothing என்ற நிலையல்ல No - Thing என்பார்கள் விவசாய விஞ்ஞானியான  ஷெய்கு ஹக்கிமிஷாஹ் ஃபைஜி எனும் இறையியல் அறிஞர்.

ஏகஇறைவன் தான் நமக்கு உடலைக் கொடுத்தான், உயிரைக் கொடுத்தான். உணர்வைக் கொடுத்தான். அமெரிக்காவிலிருந்தோ, ஜப்பானிலிருந்தோ வாங்கி வந்த சாமான்கள் அல்ல இவை. உடல், உயிர் என என்னிடம் உள்ளது எல்லாம் இரவல் என்றால். இவைகளை இரவலாக பெற்றுக் கொண்ட நான் யார்?

இறப்பு என்பதில் நாம் உடலை விட்டு பிறிகின்றோம். ஆன்மாவும் வானவரினால் கைப்பற்றப் படுகின்றது. கேள்வி, கணக்கு என்னிடம் கேட்கப்படுகிறது என்றால் அந்த நான் யார்?

இதை எல்லாம் நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

இன்ன பொருள் என சொல்ல முடியாத உன்னை மனிதன், இன்னாரின் மகன், இன்னாரின் தந்தை என ஒரு கண்ணியமான இருப்பை வழங்கிடும் நான் உன் பிடறி நரம்பை விட சமீபமாக இருக்கின்றேன். இன்னும்  உன்னை சன்னம் சன்னமாக வளர்த்து வாழ வைத்துக் கொண்டிருக்கின்றேன் என்பது போல் இருக்கிறது, “உங்கள் நப்ஸிலும் (பல அத்தாட்சிகள் உள்ளன) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? “(51:21) என்று இறை வேதம் எழுப்பும் கேள்வி.

 நம் இரவல் நிலையின் உண்மையை அறியாத அகப்பெருமையை நோக்கி எழுப்ப்படும் கேள்வி தான் ஆரம்பத்தில் வந்த இறைவசனமும், நபி மொழியும்.
 
ஆகவே இறைஞானத்தை பெரும் நல்லோர் வழியில் பயணிப்போம். இறையருளால் அகந்தையுடன் கூறும்    ‘நான்‘  எனும் அறியாமை திரை நம்மை விட்டும் விலகட்டும்!. ஆமீன்






உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

7 comments:

Mail of Islam said...

‘நான்‘ எனும் அறியாமை திரை நம்மை விட்டும் விலகட்டும்!. மாஷா அல்லாஹ்! அருமையான் ஆக்கம்.

shiek raja said...

Assalamu alaikum,நன்றி, மிக அருமையான பதிப்பு

கிளியனூர் இஸ்மத் said...

தெளிவான ஞானக்கட்டுரை!

zainulabideen said...

மறதிகள் நினைவாகின்றன இக்கட்டுரை மூலம்.
A.J.Faizi
Singapore.

zainulabideen said...

மறதிகள் நினைவாகின்றன இக்கட்டுரையின் மூலம்.
A.J.Faizi
Singapore

My Veerar Abdullah said...

இந்த இடுகையின் மூலமாக இசுலாத்தின் உண்மை நிலைகளை இந்த உலகமக்கள் அனைவரும் வாசித்து பயன்பெற இடுகை இட்ட நல் உள்ளங்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக ஆமீன்

My Veerar Abdullah said...

இந்த இடுகையின் மூலமாக இசுலாத்தின் தூய வரிகளை வாசித்து பயன் பெற பதிவு செய்த நல் உள்ளங்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை கொடுப்பானாக