தோழமையுடன்

Tuesday, October 30, 2012

சிந்தனை செதுக்கிய சிற்பம் ‘நான்’


 நாம் வளரும் சூழலுக்கு ஏற்ப நம்மைப் பற்றியும் நமக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றியும் நம் கருத்துருவாக்கம் (conception) இன்னும் கொள்கைகள்(idealogy) நமது மனதில் உருவாகின்றன. நமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், கேட்ட பிரசங்கங்கள், படித்த புத்தகங்கள், பார்த்த டி.வி., சினிமாக்கள், பழகிய சூழ்நிலைகள், சந்தித்த வெற்றி, தோல்வி அனுபவங்கள் அனைத்திலிருந்தும் நாம் கற்றுக் கொண்ட அல்லது கற்பித்துக்கொண்ட செய்திகள் மனதில் பிம்பங்களாக பதியப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக நம் குழந்தைப் பருவத்தில் அனுபவித்த உணர்வுகளின் மன பிம்பங்கள் நாமறியாமலேயே நம்முள் அடைகாக்கப் படுகின்றன. இவைகள் நம்மைப் பற்றிய நாம் உள்வாங்கிய நம்பிக்கைகள். இந்த நம்பிக்கைகளை உண்மையாக ஏற்றுக்கொண்டு அதன் படியே நாம் உணர்கின்றோம், நடக்கின்றோம். எவ்வளவுதான் மனோ சக்தியைப் பிரயோகித்து முயன்றாலும் நம்மால் வேறு விதமாக நடக்க முடியாது என்கிறார் மேக்ஸ்வெல் மால்ட்ஸ் என்ற ஆளுமை அறிஞர்(personality scientist). இந்த மனோகற்பித நம்பிக்கையால் உருவான சுய உருவகத்தை சரி செய்யாமல் நாம் முயலும் நேர்மறை சிந்தனை (positive thinking) முயற்சிகளெல்லாம் ஒரு பயனும் தராது என்கின்றார்.  அவர் கூறுவதன் சாரம் இதோ:



சுய உருவகம் (Self Image)

“நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி ‘நான் இன்ன வகை மனிதன்’ என்ற ஒரு சுய உருவகத்தை (self imageஐ) - நம்மைப் பற்றிய மனச்சித்திரத்தை நம் மனதின் அடியில் பதிய வைத்திருக்கின்றோம். இந்த சுய உருவகம் நம்முடைய ‘நான்’ என்பதன் வரைபடம் (mental blueprint). அதாவது நம்மைப் பற்றிய நமது கருத்துக்களின் மனச்சித்திரம். நம் புலன் உணர்வுகளினால் இதை அறிய முடியாவிட்டாலும் கூட ‘நான்’ என்ற இந்த சுய உருவகத்தை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றோம். ஓர் அகராதியைப் போல ஆரம்பம் முதல் கடைசி விளக்கம் வரை இதில் இருக்கிறது. 

நமது செயல்கள், உணர்வுகள், திறமைகள் இன்னும் நடத்தைகள் எல்லாம் இந்த சுய உருவகத்துக்கு இசைவானவை. சுருங்கச் சொன்னால் மனதில் உருவாக்கப்பட்ட இன்ன வகை மனிதனாகத்தான் நாம் நடக்கின்றோம். இன்னும் சொன்னால் எவ்வளவுதான் மனோ சக்தியை (will powerஐ) பிரயோகித்து முயன்றாலும் நம்மால் வேறு விதமாக நடக்க முடியாது. இது தான் நம் இலக்கு (goal)களின் கட்டுப்பாட்டு மையமாகும். இதுவே நமக்கு எது எது சாத்தியம் என்ற எல்லைக் கோடுகளையும் நிர்ணயிக்கின்றது.”

உண்மையில் இவை நம் மனதில் நாமே வரைந்த கற்பனை வேலிகள். தாண்டிச் செல்ல முடியாத இரும்புச் சுவர்கள் அல்ல. நமது சுயவுருவகத்தை மேம்பட்டதாக வடிவமைப்பதன் மூலம் நமது செயல் திறனின் எல்லையும் வியக்கத்தக்க உச்சத்தை எட்டுகிறது குணங்களின் - பண்புகளின் தொகுப்பான நம்முடைய ஆளுமை (personality) என்பது இந்த ‘நான்’ என்பதன் வெளிப்பாடு தான். இந்த மனச்சித்திரத்தின் எதிரொலியாகத்தான் நமது விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை, அவநம்பிக்கை, பயம், கோபம், கொள்கை, குழப்பம் என்ற நம் ஆளுமை (personality) வெளிப்படுகின்றது.

இறைவன் வழிகாட்டிய வேத வெளிச்சத்திற்கு மாறாக நம் வாழ்வின் அனுபவங்களிலிருந்து பெற்ற கற்பனைகளால் உருவகித்த தவறான நம்பிக்கைகளால் வடிவமைக்கப் பட்ட சுய உருவகம் நமது உலக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடுவது தான் நம்மில் பெரும்பாலானவர்களின் நிலை.

உதாரணமாக சின்ன வயதில் அடைந்த தோல்விகள்...

சின்ன வயதில் சில நேரம் நாம் சரியாகப் படித்து விட்டுப் போகாததால் கணக்குத் தவறாகப் போட்டிருக்கலாம். கற்றுக் கொடுக்க பொறுமை இல்லாத ஒரு கோபக்கார வாத்தியார் அல்லது தன் மனைவியின் மேல் உள்ள கோபத்தை, தன் மேலதிகாரி மேல் உள்ள கோபத்தைத் தன் மகனிடம் காட்டும் பொறுமையற்ற தந்தை, “செத்தாலும் உனக்குக் கணக்கு வராது! நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு” என்று கோபத்தில் சொன்ன வார்த்தைகள் நமக்கு வேதவாக்காகின்றது. “நமக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் கணக்கு வராது சார்” என்று சட்டெனத் தவறான முடிவுக்கு வந்து விடுகின்றோம்.

கூட்டத்தில் வைத்து வாத்தியார் அவமானப்படுத்த, அடிக்க, அதனால் சிறுநீர் போக, கூடி நின்றோர் அதைப் பார்த்து சிரிக்க நேர்ந்த அவமானத்தின் எதிரொலியாக கூட்டத்தைக் கண்டாலே அஞ்சுவது என இப்படி ‘என்னால் முடியாது,’ ‘நான் ஜெயிக்க மாட்டேன்’ என்று தன்னைப் பற்றிய மன வடிவம் (mental image) உள்ளவன் வெற்றிக்கனி அவன் மடியில் விழுந்தாலும் கூட எப்படியாவது தோற்பதற்கே வழியைத் தேடுவான். ‘நான் துன்பப்படவே பிறந்தவன்’ என்ற மனவடிவத்தை உடையவன் அதை உண்மை என நிரூபிக்கும் சந்தர்ப்பத்தைத் தேடியலைவான் என்கிறது மனோதத்துவம்.

எனக்குக் கார் ஓட்ட வராது. ஆங்கிலம் பேச வராது. தமிழ் இலக்கணம் வராது. கணினி வராது. கணிதம் வராது என வராதவைகளின் பட்டியல் வைத்திருக்கும் அன்பர்களை, எவ்வளவு நாள் முயற்சி செய்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்? எனச் சற்றே விசாரித்து பாருங்கள்! பெரும்பாலும் “அதற்கெல்லாம் நமக்கு எங்கே நேரம் இருக்கிறது” என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும். இல்லை என்றால் “நான் ஒரிரு முறை முயற்சி செய்தேன் எனக்குச் சரியாக வரவில்லை” என்பார்.

மானிடம் என்பது வானமும், பூமியும் வசப்படுத்தித் தரப்பட்ட தன் பிரதிநிதி என இறைவன் எத்தனை பிரியமாய் நம்மை பற்றிச் சொல்கின்றான். உலகத்தின் பார்வையில் நாம் பணமற்றவராக இருக்கலாம். பெரிய படிப்பற்றவராக இருக்கலாம், பதவியற்றவராக இருக்கலாம். ஆனால் இவையெல்லாவற்றையும் வழங்கும் இறைவன் நம்மோடிருக்கின்றான். நம் ஒவ்வொருவருடனும் இருக்கின்றான். இறைவன் நம்மோடு இல்லாதவனாக நாம் யாருமேயில்லை.

‘நீங்கள் எங்கிருந்த போதும் நான் உங்களுடன் இருக்கின்றேன்’ என இறைவன் சொல்லிக்காட்டியும் நாமோ நம்மைப் பற்றிய தெளிவின்மையால் இன்னும் சரியான முயற்சியின்மையால் பல தவறான அவசர முடிவுகளை மனதில் கொண்டு இறைவன் வழங்கியிருக்கும் வரம்பற்ற சக்திகளின் வாசல் கதவுகளை மூடிவிடுகின்றோம். கேட்டதைக் கொடுக்கும் மனம் என்னும் இறைவன் வழங்கிய அட்சயப் பாத்திரம் நம்மில் பிச்சைப் பாத்திரமான பரிதாபம் நமக்குப் புரியவேயில்லை.

அப்படியானால் நமது சுய உருவகத்தை (self imageஐ) superman image ஆக கற்பித்துக் கொள்ள முடியுமா? அது சாத்தியமா?

நமது சுய உருவகத்தை மாற்றியமைப்பது என்றால் நமது சுயம் என்னும் நப்ஸையே மாற்றுவது என்று அர்த்தம் அல்ல. நமது பழைய தவறான மதிப்பீடுகள் கருத்துகளால் வடிவமைக்கப்பட்ட நம் சுய உருவகத்தை மாற்றியமைப்பது. இனி ஒப்பிட்டு தெளிவு பெறக் கருதி நம் சுயத்தின் அரபிப் பதமான நப்ஸ் என்ற திருகுர்ஆனில் கையாளப்படும் வார்த்தையைக் கையாளுவோம். நமது நப்ஸ் (self) என்பது நம்மால் படைக்கப்பட்டதல்ல, அதை நாம் மாற்ற முடியாது. ஆனால் அதை நாம் உணர்ந்து கொள்ள (realize பண்ண) முடியும் அதன் மூலம் நம் உண்மையான மன வடிவத்தை நாம் அடைய முடியும். நமது நப்ஸின் உண்மை நிலையின் அடிப்படையில் நம் சுய உருவகத்தை  அமைப்பதால் புதிய திறமைகளும், சக்திகளும் நம்மில் உருவாகப் போவதில்லை. ஏற்கனவே நம்முள்ளே இருந்தவைகள் நம் தவறான சுய உருவகத்தால் முடக்கப்பட்டவைகள் இப்போது தடையின்றி வெளிப்படும்.

ஒரு இளம் விற்பனையாளர் ஒருவரின் கதையைக் கேளுங்கள். கொஞ்சம் கூட விற்பனை செய்ய முடியாது எனப் பிற விற்பனையாளர்கள் சொல்லும் குக்கிராமத்தில் கூட அவர் தன் நிறுவனத்தின் சாதனங்களை விற்று தனது மாதாந்திர இலக்கான 5000 பவுண்ட் விற்பனையை எட்டி விடுவார். இப்படி விற்காத ஊர்களிலெல்லாம் விற்று வெற்றிகரமாய் திகழ்ந்த அந்த விற்பனை நாயகரை பெரிய எதிர்பார்ப்புடன் நகர விற்பனைக்கு மாற்றியது அவரது நிறுவனம். வேடிக்கை என்னவென்றால் அங்கும் அவரது விற்பனை இலக்கு 5000 பவுண்டை தாண்டவில்லை. 5000 பவுண்டு தான் தன்னால் விற்க முடியும் என அவரே கற்பனை செய்து கொண்ட எல்லைக்கோடு தான் இதன் காரணம் என பின்னால் கண்டறியப்பட்டது.

இதைப் போலவே ஒரு இளம் விளையாட்டு வீரர் தன்னால் 100 கிலோ எடை தான் தூக்க முடியும் என்ற எண்ணத்தில் இருந்தார். ஒரு மனோவசிய மருத்துவர் (ஹிப்னோடிஸ்ட்) அவரை மனோவசிய (ஹிப்னாடிச) நிலையில் ‘நீ வலிமையானவன். உன் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது” என உற்சாகப்படுத்தினார். அப்போது அவரது கற்பனையால் விளைந்த மனத்தடை அகன்றதால் அவர் 125 கிலோ எடையை அலட்சியமாகத் தூக்கினார். உண்மையில் மருத்துவர் அவருக்கு சக்தியேதும் வழங்கவில்லை. அவர்  ‘தன்னால் இவ்வளவு தான் முடியும்’ என்ற கற்பனையினால் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட மனச்சிறையிலிருந்து மருத்துவர் அவரை விடுவித்தார். அதனால் வசிய மீட்சியடைந்த நிலையில் (dehypnotized stageல்) எந்த மனத்தடையும் இல்லாமல் அவரது இயல்பான திறமை வெளிப்பட்டது.

முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்) என்னும் மகத்தான மனோ தத்துவ நிபுணரோ சகலவிதமான மனமயக்கங்களிலிருந்து மானிடத்தை வசிய மீட்சி அடையச் செய்தார்கள். மிஃராஜில் தான் அடைந்த உச்ச நிலைக்கு தொழுகையின் மூலம் தன் தோழர்களை அழைத்துச் செல்கின்றார்கள். தங்களின் நபித்துவத்தின் ஆத்மீக சக்தியால் அல்லாஹ் பிடரி நரம்பை விட சமீபமாக இருக்கும், நம்மால் மறக்கப்பட்ட உண்மை நிலையை மனக்கண்களுக்கு காட்டித் தந்தார்கள். அந்த நிலையில் எஞ்சி இருப்பது ஒரே ஒரு திரை தான்.  ஆனால் அது மறைக்கும் திரையல்ல. மன்னாதி மன்னவனை (ஹக்கை) காட்டும் திரை. அது தான் நம் நப்ஸின் உண்மை நிலை.

நமது உண்மையான நப்ஸை நாம் கண்டுபிடிப்பது எப்படி? நப்ஸை கண்டுபிடிப்பது என்பது(Discovering your self) என்பது நப்ஸை அறிவது (knowing your self) தான். அதற்கான கல்விதான் தஸவ்வுஃப் எனும் தன்னை அறியும் ஆன்ம ஞானம். Tasavvuf is the science of self. It is the Divine Psychology. தன்னை அறிந்தவன் தன் ரட்ஷகனை அறிவான்(மன்அரஃப நப்ஸஹூ ஃபகத் அரஃப ரப்பஹூ) என்று தொன்று தொட்டு எல்லா ஆன்மீக நாதர்களாலும் கையாளப்படும் நபிமொழியின் விளக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது இந்தக் கல்வி. இது அலி(ரலி) அவர்களின் கூற்று என்ற கருத்தும் உண்டு. 

தன்னை அறியும் மேலான ஞானத்தை  நம் அனைவருக்கும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன். ஆமீன்!


குறிப்பு : இந்த கட்டுரை “அகப்பார்வை” என்ற நூலின் ஒரு அத்தியாயமாகும்.



உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

5 comments:

செய்தாலி said...

அஸ்ஸலாமு அலைக்கும்


அருமையான ஆக்கம்
சிறந்த ஆழ்ந்த சிந்தைகள் தோழரே
மிகவும் பயனுள்ளதாக இருந்தது

வஸ்ஸலாம்

புல்லாங்குழல் said...

வ அலைக்கும் ஸலாம் செய்தாலி.

நன்றி தோழரே!

HM Rashid said...

இந்த கட்டுரையின்மூலம் நம்மில் பெரும்பாலானோர் hypnotized state ல் தான் இறுக்கின்றோமோ என்று தோன்றுகிறது!!!!நம்மை சுற்றி நமக்கு நாமே அமைத்துக்கொண்ட எத்தனை சிந்தனை வேலிகள்!!!
Rashid

M.Abdul Khadar said...

உங்களின் அகப்பார்வை புத்தகத்தை ஒருமுறை வாசித்து வைத்து விட்டேன்.இப் பதிவைப் படித்தவுடன் "கோபக்கார வாத்தியார்" உதாரணம் மட்டுமே திரும்ப ஞாபகத்தில் வந்தது. கருத்துகளை மனதில் பதிக்க தூவிய இனிப்பு மறக்கவில்லை.....நுனிப்புல் மேய்ந்து கொண்டு இருக்கிறேன் போல. வாசித்த "கீமியா ஸஆதத்"தை திரும்ப திரும்ப படிக்க வேண்டும் என்று சொல்லப் பட்ட ஒரு உபதேசத்தின் அர்த்தம் தெரிகிறது.

புல்லாங்குழல் said...

நன்றி ரஷீத், அப்துல் காதர் பாய்.

நப்ஸை பற்றிய கல்வி மனவீணையில் சதா மீட்டி சுருதி சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டிய விசயங்கள். மீண்டும் மீண்டும் வாசிப்பதும், வாசித்தை மனதில் அசைபோடுவதும் ஒரு முக்கியமான வழி!