தோழமையுடன்

Friday, October 12, 2012

அல்லாவின் தொழுகையில் நிழலாடும் அனுஷ்காவின் முகம்
‘நஜீர், எனக்கு தொழுகையில் நிண்டா அல்லாட நினைவு வரலை. அனுஷ்காட முகம் தான்டா நினைவுல வருது. ஹாரிஸ் ஜெயராஜுட பாடல் வரிகள் தான் மனசுல ஓடுது. எத்தனையாவது ரக்காயத் தொழுறேன்ங்கிறது கூட பல சமயம் குழப்பமாயிடுதுடா   என்று சொன்ன சாதிக்கிடம் “ நாளைக்கு என் வீட்டுக்கு சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரியவங்க வற்றாங்க நீயும் வா. அவர்கள் மூலம் உனக்கு அல்லாஹ் ஒரு நல்ல வழிய காட்டுவான். இன்ஷா அல்லாஹ்” என்றான்.

 வீட்டிற்கு வந்த நண்பனிடம்“சாதிக் இவர்கள் தான் என் ஷெய்கு(குரு)என அங்கிருந்த  ஹஜ்ரத்தை அறிமுகப்படுத்தி வைத்தான் நஜீர்.

 மெல்லிய புன்முறுவல் தவழ்ந்த ஹஜ்ரத்தின் முகத்தில் ஓர் இதமான அரவணைப்பு  வெளிப்பட்டது

“இங்கே உட்காருங்கள் தம்பி!” என மிகவும் கண்ணியமாக அருகில் அமர வைத்தார்கள் ஹஜ்ரத். சிறிது நேரத்தில் சுமார் இருபது பேர் அங்கே கூடிவிட ஹஜ்ரத் பயானை தொடங்கினார்கள்.

“தொழுகை என்பது எதற்காக நஜீர்?” என கேட்ட ஹஜ்ரத் தானே பதிலும் சொல்ல தொடங்கினார்கள். 

“தொழுகை என்பது இறைவனின் நினைவிற்காக. இறைவனைத் தவிர யாரும் பெருமைக்கும் உயர்வுக்கும் தகுதியில்லை என்பதை உண்மையாக உணரும் மனது தொழுகைக்கு நின்றவுடன் இறைவனல்லாத அனைத்தையும்  விட்டும் பரிசுத்தமாகிவிடுகின்றது” 

எத்தனையோ பேர் தொழுகையைப் பற்றி பேச கேட்டவன் தான் சாதிக். ஆனால் இந்த ஹஜ்ரத் சொல்ல சொல்ல அந்த  வார்த்தைகள் உள் நுழைந்து மனதை உலுக்கியது.

 ‘ஹஜ்ரத், எனக்கு தொழுகையில் நின்டா அல்லாட நினைவு வரலை. அனுஷ்காட முகம் தான் நினைவுல வருது. ஹாரிஸ் ஜெயராஜுட பாடல் வரிகள் தான் மனசுல ஓடுது. எத்தனையாவது ரக்காயத் தொழுறேன்ங்கிறது கூட பல சமயம் குழப்பமாயிடுது  ஹஜ்ரத்  என்று சத்தம் போட்டு கத்த வேண்டும் போலிருந்தது சாதிக்கு. மிகவும் சிரமத்துடன் அடக்கிக் கொண்டான்.

“காலையில எழுந்ததுமே இறைவனுடய நினைவுடன் நம்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்காகத் தான் பஜ்ர் (அதிகாலை) தொழுகையையே கடமையாக்கியிருக்கான் அல்லாஹ். தொழும் போது குறைந்த பட்சம் நாம் என்ன ஓதுறோங்கிறதுலயாவது கவனம் இருக்கணும். உதாரணமா நான் இப்ப ‘அல்ஹம்துலில்லாஹின்னு’ சொல்றேன். இப்ப நான் ‘சுப்ஹான ரப்பில் அளீம்’ னு சொல்றேன் என்றாவது கவனம் செலுத்தனும். தொழுகையில் ஓதக் கூடியதன் அர்த்தம் தெரிந்து கொள்வது இன்னும் சிறப்பு. இன்னும் யாரை வணங்குறமோ அவனது உயர்ந்த அந்தஸ்தையும், அவன் நெருக்கத்தையும் உணரும் இறைஞானம் ஒரு மகத்தான பாக்கியம்.

அடுத்ததா, தொழுகைக்கு பிறகும் இறைவனை நினைவு கூறும் திக்ரு செய்வதைக் கொண்டு அந்த நாள் முழுவதும் நமக்கு எல்லா நிலைகளிலும் இறை சிந்தனை தொடரும். அத விட்டுட்டு எழுந்தவுடனே நியூஸ் பேப்பர், டி.வி. ன்னு ஆரம்பிசுட்டா நாள் முழுவதும் அந்த நினைவு தான் நம்மை துரத்தும்.” என்று சிறிது இடைவெளி விட்ட ஹஜ்ரத் “ சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்” என சொல்லி முடித்தார்கள்.

எல்லோருக்கும் சுவையான தேநீர் பறிமாறப்பட்டது.

“அல்லாஹ்...அல்லாஹ்  என்று நீங்கள் தினமும்  இறைவனை ஞாபகம் (திக்ர்) செய்கிறீர்கள். எவ்வளவு நேரம் உங்களால் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மன ஒருமையுடன் நிலைத்து இருக்க முடிகிறது என்பதை நினைத்து பாருங்கள். இதெல்லாம் சாத்தியமில்லை என உடனே முடிவுக்கு வந்து விட வேண்டாம். உங்களிடம் ஒரு ஆயிரம் திர்ஹம் நோட்டு கட்டு தரப்படுகின்றது. அதை நீங்கள் எண்ணி பார்க்கின்றீர்கள். எண்ணி முடிக்கும் வரை அதில் கவனம் இருக்கிறதா இல்லையா? ஆகவே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.” இப்படி பல்வேறு உவமைகளுடன் தொடர்ந்த ஹஜ்ரத்தின் பேச்சு ரொம்ப பிராக்டிகலாக இருந்தது. 

சாதிக்குக்கு மனதில் ஒரு தெளிவு கிடைத்தது போல இருந்தது. அதிலும் குறிப்பாக “சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்” என்ற வாசகம். IPodல் இருக்கும் சினிமா பாடல்களை சதா காதில் மாட்டிக் கொண்டு அலைவதை உடனே நிறுத்த வேண்டும் என முடிவு செய்தான்.

பயான் (சொற்பொழிவு) முடிந்தவுடன் வீட்டிற்கு வந்தவன் மனைவி ரஹீமாவிடம் ஒன்று விடாமல் சொல்லிக் காண்பித்தான். அனுஷ்காவின் விசயத்தை தவிர. 

எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த ரஹீமா, “ஏங்க இந்த நஜீர்கூட நீங்க அளவோட தொடர்பு வச்சுகங்க. ரொம்ப ஒட்டுனீங்ன்னா எதுக்கெடுத்தாலும் அல்லாஹ். அல்லாஹ்ன்னு உங்களையும் அல்லாஹ் பயித்தியமா ஆக்கிடுவாரு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என அவள் ஒரு மினி பயான் செய்தாள். ரஹீமா சொல்வதும் சரியாகவே பட்டது சாதிக்குக்கு. 

“ஏங்க சிட்டி சென்டர்ல ஓகேஓகே ஓடுது இன்னைக்கு போலாமா?” என்றாள்.

ஒகே.ஓகேன்னா இங்கிலீஸ் படமா? என்றவனிடம்.

“ஒரு கல் ஒரு கண்ணாடி” என விளக்கமளித்தாள் ரஹீமா.

“ஓகே ஓகே” ன்னு சிரித்தான் சாதிக்.

அடுத்த நாள் முதல் நஜீரிடமிருந்து வந்த போனை தவிர்த்து விட்டான். இந்த ஒரு வாரத்தில் பத்து முறையாவது நஜீரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்திருக்கும். அனைத்தையும் முழுமையாக தவிர்த்து விட்டான்.

நஜீரும் விட்டு விடாமல் வேறொரு நம்பரிலிருந்து போன் செய்யவே எடுத்து அவனிடம் வகையாக மாட்டிக் கொண்டான்.

“ஏன்டா போனை எடுக்க மாட்டேங்குற” என்றவனிடம், “நான் அபிஸியல் டிரிப்ல ஒரு வாரம் பஹ்ரைன் போயிருந்தேன் நஜீர்” என சமாளித்து விட்டான்.

“ ஹஜ்ரத் நேற்று தான் ஊருக்கு புறப்பட்டார்கள். உன்னைய ரொம்ப விசாரித்தார்கள். ஆமா தொழுகையில உன்னட ஹால் (மனநிலை)  மாறி இருக்கா” என்ற நஜீரிடம்.

“ ஒரு வாரமா அனுஷ்காட நெனப்பு ஒரு தடவை கூட வரலை” என்றான்.

“அல்ஹம்துலில்லாஹ்!” என நஜீர் மகிழ்வை தெரிவித்தான்.

‘இரண்டு நாளா அனுஷ்காவுக்கு பதில் ஹன்ஸிகாவின்  முகம் தான் மனதில் வருகிறது.’ என்பதை அப்பாவி நஜீருக்கு சொல்ல சாதிக்கிற்கு  ஏனோ மனமில்லை. 

நன்றி: 

அலுவலக உணவு இடைவேளையின் போது அந்த வாரத்தில் சார்ஜாவில் ஓடும் தமிழ்படங்களைப் பற்றி சுருக்கமாக கமெண்ட் அடிக்கும் சீஃப் அக்கௌண்டண்ட் கூடங்குளம் சுபாஷுக்கு.
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment