தோழமையுடன்

Monday, October 1, 2012

வெல்கம் அத்வானிஜி!

 இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு பாஜக எதிரான கட்சியல்ல என்பதை நாம் மீண்டும் உணர்த்த வேண்டும். காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், முஸ்லீம்களின் ஓட்டுக்களையும் பெறும் வகையில் கட்சியை நாம் முன் நிறுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரான அத்வானி கூறியுள்ளார் என்பதை படித்ததும் திரு.ராமகோபாலன் மீலாது விழா மேடையில் பேசுவது போலும், நோன்பு விருந்தில் கஞ்சி குடிப்பது போலும் மனதில் ஒரு காட்சி வந்தது.

 செப்டெம்பர் 29, 2012 ஒன் இந்தியாவில் வெளிவந்த செய்தி:

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் கடந்த மூன்று நாளாக நடந்தது. இதில் இறுதி உரையாற்றிய அத்வானி கூறியதில் ஒரு பகுதி:

நம்முடன் கூட்டணி அமைப்பதால் தங்களது மதசார்பற்ற நிலைக்கு பிரச்சனை வரும் என சில கட்சிகள் கருதுகின்றன. அவர்களது அச்சத்தை போக்கும் வகையில், மதசார்பின்மைக்கு நாமும் எதிரிகள் அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் கட்சியின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

சிறுபான்மை இனத்தினருக்கு நாம் எதிரிகள் அல்ல, இதுவரை எந்த அநீதியையும் செய்யவில்லை என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்.

முதலில் பாரதீய ஜனதா தலைவர்கள் பல குரலில் மாறுபட்டுப் பேசக் கூடாது. அனைவரும் ஒரே கருத்தையே வலியுறுத்த வேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல கட்சிகளை சேர்த்து பெரிதாக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி மதச்சார்பின்மையை பின்பற்றுவதை உறுதிப்படுத்தி நம்மைப் பற்றிய அச்சத்தை அகற்ற வேண்டும். இப்படி செயல்பட்டால் 1998, 1999-ம் ஆண்டுகளைவிட கூடுதல் இடங்களைக் கைப்பற்றலாம்.

இஸ்லாமுக்கு எதிரான அமெரிக்கத் திரைப்படம் இன்னும் இன்டர்நெட்டில் வலம் வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. நபிகள் நாயகத்தை தவறாகக் காட்டும் அந்தப் படத்தை ஏற்கவே முடியாது. எந்த மதமாக இருந்தாலும் அதன் புனிதத் தலைவர்களை கீழ்த்தரமாக சித்தரிப்பது தவறுஎன்றார் அத்வானி.

பாஜகவின் மதவாத நிலை காரணமாக  அதிமுக தவிர்த்து  பல கட்சிகள் பாஜகவுடன் கூட்டணிக்குத் தயாராக இல்லை. இந் நிலையில் தன் கூட்டணிக்குள் காங்கிரஸ் அல்லாத கட்சிகளில் சிலவற்றையாவது இழுத்தால் தான் அடுத்த ஆட்சி சாத்தியம் என்பதை பாஜக உணர்ந்துள்ளது. இதுவே அத்வானியின் இந்தப் பேச்சில் எதிரொலித்துள்ளது.

நன்றி : ஒன் இந்தியா செப்டெம்பர் 29, 2012

0  0  0  0

அரசியல்வாதிகளின் தேர்தல் வியூகங்கள் சுய கட்சி நலன் சார்ந்தவை என்றாலும்  அத்வானி அவர்களின் இந்த உரையில் உள்ள வரவேற்கத் தக்க அம்சம் மதவாத அரசியலிலிருந்து மதசார்பற்ற அரசியலை நோக்கிய நகர்வை முன்வைப்பது தான். 


அதே நேரத்தில்,“சிறுபான்மை இனத்தினருக்கு நாம் எதிரிகள் அல்ல,  இதுவரை எந்த அநீதியையும் செய்யவில்லை என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்” போன்ற வாசகங்கள் மூலம் பாபரி மஸ்ஜீத் இடிப்பு, குஜ்ராத்தில் நடத்திய கொடுரங்களையெல்லாம் நியாப்படுத்த அல்லது மறைக்க முயல்வது ஒரு புத்தம் புதிய கபட நாடக அரங்கேற்ற காதையின் ஒரு வரி செய்தியாக எதிரொலித்து அத்வானி அவர்கள் முன் வைக்கும் ஒரு நல்ல மாற்றத்தை கேள்விக்குரியதாக்குகிறது. 

பாஜக சார்ந்த இயக்கங்கள் விதைத்த துவேசத்தின் வழியாக விளைந்த பரஸ்பர அச்சமும், அவநம்பிக்கையும் கனிசமான அளவு பெரும்பான்மையினரையும், சிறுபான்மையினரையும் தங்கள் சுயபாதுகாப்பை உறுதி செய்பவர்களை மட்டுமே நோக்கி தள்ளும் நிலையாய் மாறி நிற்கிறது. 

இது  இந்து, முஸ்லீம், கிருஸ்தவ மதவாத அமைப்புகளின் வளர்ச்சிக்கு வேண்டுமானால் உதவியிருக்கலாம் ஆனால், மதவேறுபாடின்றி அனைவரும் ஒருவரையொருவர் மாமா, மச்சான், அண்ணன், சித்தப்பா என உறவு கொண்டாடி நட்புடன் வாழ்ந்த காலங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞசமாய் பழங்கதையாகிவிட்டது. நம் நேசங்களெல்லாம் நிறம் மாறி, நெறியாய் இருந்த மதவுணர்வு இன்று வெறியாய் மாறிவிட்டது. சமூக அமைதியை குலைக்கும் தீவிரவாதத்தில் யாருக்கும் உடன்பாடு இல்லை தான். அந்த வகை நிகழ்வுகளை மனதாற வெறுக்கவே செய்கின்றோம். ஆனால் ஒரு தீவிரவாத செயல் மற்றொரு தீவிரவாதத்தின் எதிர்வினை என்பதால் தங்கள் பரஸ்பர அநீதங்களை நியாயப்படுத்த முனையவோ அல்லது கண்டும் காணாமல் மௌனமாகி போவதன் மூலமோ இந்த சமூக அவலம் தொடரவே துணை போகின்றோம். ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக,  மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)

இந்து, முஸ்லிம், கிருஸ்தவர், நாத்திகர், கம்யூனிஸ்ட், தமிழர், மலையாளி, ஆங்கிலேயர் என கொள்கை, மொழி சார்ந்த குழு என்ற அடிப்படையில் தன் குழுவினரை – சமூகத்தை நேசிப்பதும் அதன் வளர்சிக்காக பாடுபடுவதும் மனித சமுதாயத்தின் பொது அமைதிக்கு பங்கம் வராத வரை தவறில்லை. 

அந்த வகையில் இந்துமதத்தின் மறுமலர்சிக்காகவோ, இந்து சகோதரர்களின் சமூக, பொருளாதார, ஆன்மீக மேம்பாட்டிற்காக பாரதீய ஜனதாவோ, இந்து முண்ணனியோ பாடுபடுவதை யாரும் குறை சொல்ல முடியாது. 

கொள்கைரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நபிகள் நாயகம், இயேசு நாதர், புத்தர் முதல் சென்ற நூற்றாண்டை சேர்ந்த விவேகானந்தர், ராம கிருஸ்ண பரமஹம்ஸர், ரமணர், ஜே.கிருஸ்ன மூர்த்தி போன்ற ஆன்மீக பெரியார்கள் பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது இங்கே நினைவுகூறத் தக்கது. ஆனால் அடுத்த தலைமுறை இளைஞர்கள் மனதில் இத்தகைய நேசம் நிலைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

தேசநலன் சார்ந்த கொள்கை பலம் பாரதீய ஜனதாவுக்கு இருக்கிறது என உண்மையில் நம்பினால் அவர்கள் முதலில் நிறுத்த வேண்டியது அரசியல் லாபத்திற்காக சிறுபான்மையினரை பூச்சாண்டிகளாக காட்டி பெரும்பான்மை சமூகத்தின் அப்பாவி வாக்குகளை அள்ளும் யுக்தியையும் அதற்காக ரத, கஜ, துரக பதாதிகளை கொண்டு சிறுபான்மையினர் மேல் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் மன, உடல் ரீதியான வன்முறைகளையும், துவேஷங்களையும் தான்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக,

பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலாவது சிறுபான்மையினருக்கும்,  தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கும் இன்னும் அநீதி இழைக்கப்பட்ட அனைவருக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கு மாற்றாக இயன்ற வரை ஈடு செய்யும் நடவடிக்கைகளை எடுத்து அத்வானிஜி முன்வைக்கும் மாற்றம் உண்மையானது என்பதை செயலில் காட்டுங்கள். அதன் பின் பாரதீய ஜனதாவின் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக ஒளிர்வதை பாஜகவால் மட்டும் தான் தடுக்க முடியும்.  


உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment