மரக்கால்களின் நடை பலகீனமானது.
_ மௌலானா ரூமி (ரஹ்)
சிந்திக்க மாட்டீர்களா? உங்கள் உள்ளங்கள் பூட்டியா வைக்கப்பட்டுள்ளது? என்பது சிந்தனைக்கான இறைவேதத்தின் அழைப்பு.
சிந்தனை
செய் மனமே! என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் அருமையான உபதேசம். அதை விட அவசியம் எதை சிந்திப்பது என்பது!.
எதிரே
மனைவி இருக்கும் போது அலுவலக சிந்தனை. அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டின் சிந்தனை.
இறைவனை
முன்னோக்கி தொழுகையில் நின்றால் கூட பக்கத்தில் தொழுபவர் ஏனிப்படி விரலை அசைக்கின்றார்?. வாசலில் கழற்றி வைத்த புது செருப்பு பத்திரமாக இருக்குமா?. இந்த ஹஜ்ரத் ஏன் இவ்வளவு பெரிய சூரா ஓதுராரு?.
இப்படி சிந்தனை…சிந்தனை….சிந்தனை
….எண்ணங்களின் இடை விடா கூக்குரல்.
இந்த சிந்தனை
வழியே மனம் பேசிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையை முன்வைத்து “மனதின் உள்ளே ஒரு வாய் சதா பேசிக் கொண்டே இருக்கின்றது கவனித்தீர்களா!” என்பார்கள் என் குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்).
எழுத்தாளர்
சுஜாதாவின் கதைகளில் கணேஷ், வசந்த் என்ற இரண்டு துப்பறியும் வக்கீல் பாத்திரங்கள் மிகவும் பிரபலம். ஜுனியர் வசந்த் சில ஆச்சரியமான விசயங்களை முன்வைக்கும் போது
சீனியர் கணேஷ் “இதெல்லாம் எங்கேந்துடா புடிச்ச” என்பார். அதற்கு வசந்த் “
உள்ளிருந்து ஒரு பட்சி சொல்லுது பாஸ்” என்பார்.
எங்கள்
பள்ளி நாட்களில் இந்த ‘பட்சி’ எங்களிடையே மிகவும் பிரபலம்.
ஏதாவது
முடிவெடுக்க வேண்டிய போதெல்லாம் “என்னடா பட்சி உனக்கு என்ன சொல்லுது?” என ஒருவரையொருவர் வேடிக்கையாக கேட்பது வழக்கம்.
ஒரு
கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால் இந்த பட்சி சொல்கிறது என்பது சிந்தனையின் வெளிப்பாடாக மனதில் தோன்றும் எண்ணமல்ல . சிந்திந்து முடிவெடுக்க முடியாமல் ஓய்ந்த நிலையில் வெளிப்படும் உள்மனதின் குரல். இது ஒரு Subconscious சமாச்சாரம். அதைப் பற்றி பிறகு பார்க்கலாம். மீண்டும் சிந்தனைக்கு வருவோம்.
சிந்தனை
என்பதில் என்ன நடக்கிறது?
சிந்தனை
என்பது ஞாபகத்தை பயன்படுத்தும் செயல்பாடு.
ஞாபகம்
என்பது அற்புதமான இறையருள். ஞாபகம் பற்றி ஏற்கனவே ஒரு முறை எழுதியிருந்ததை தேவை கருதி கீழே தருகின்றேன்.
ஞாபகம்
அல்வா என்றதும் நாக்கில் எச்சில் ஊறுவதும்;
நேசத்துக்குரியவர்களை நினைத்தால் நெஞ்சில் ஆயிரம் பூக்கள்
பூப்பதும்;
என்றோ நடந்த துக்கத்தின் காயம் இன்றும் வலிப்பதும்;
நாவினால் சுட்ட வடு உள்ளாறாமல் தவிப்பதும்;
எல்லாம் ஞாபகத்தின் வெளிபாட்டினால் தான்.
கடந்த காலத்தில் நாம் பார்த்த, பழகிய, ரசித்த, ருசித்த,
சிரித்த, அழுத பல்வேறு உணர்வுகளில் நாம்
பொறுக்கி எடுத்து புதைத்து வைத்திருக்கும் நம் அந்தரங்க பொக்கிசம் நம் ஞாபக சக்தி.
வெறும் உணர்வுகளின் சேகரம் மட்டுமல்ல. சின்ன வயதிலிருந்து
நாம் கற்றுக் கொண்ட சின்ன சின்ன விசயங்கள் முதல் பொறி இயல், மருத்துவ கல்லூரிகளில் படித்த பாடங்கள் வரை வாழ்வின் ஒவ்வொரு
நொடியிலும் கற்றுக் கொண்ட அறிவின் பிரமாண்டமான சேமிப்பு கிடங்கது.
காலை எழுந்தவுடன் கழிப்பறைக்கு சென்று மல, ஜலம் கழிப்பதும்
ஆடையணிவதும், அழகுபடுத்திக் கொள்வதும்
சாம்பாரும், ரசமும் போட்டு சாதத்தை குழைத்து அள்ளி உண்பதும்.
கார் ஓட்டுவதும், கணக்கு போடுவதும், கவிதை எழுதுவதும்,
அலுவலகத்தில் உழைப்பதும், அரசியல் பேசுவதும்,
மருத்துவம் பார்ப்பதும், வணக்க வழிபாடு என நம் வாழ்வின் அனைத்து வகை இயக்கங்களின் மையமும் ஞாபக சக்தி தான்.
ஒரு கற்பனைக்காக உலகத்தில் உள்ள அனைத்துயிர்களுக்கும் ஒரு
பத்து நிமிடம் தற்காலிக மெமரி லாஸ் என்னும் ஞாபக இழப்பு நிலை ஏற்பட்டால். அந்த
பத்து நிமிடமும் உலகோர் இயக்கமெல்லாம் ஸ்தம்பித்து செயலற்ற குழப்பத்தில்
உறைந்துவிடும்.
ஆக ஞாபகம் என்பதும், சிந்தனை என்பதும் இறைவன் நமக்கு வழங்கிய அற்புதமான கருவிகள். கருவிகள் என்பவை நாம் தேவைப்படும் போது பயன்படுத்த வேண்டிய
ஒன்று. அதற்கு மாறாக கருவிகள் நம்மை பயன்படுத்தினால் ?.
உதராணத்திற்கு சிந்தனை என்பதை ஒரு குதிரை என கொள்வோம். குதிரையின் மீது அமர்ந்து அதனை நாம் செலுத்தினால் அது சிறப்பான
உபயோகம். குதிரையின் அடியில் நாம் தொங்கிக் கொண்டிருக்க குதிரை
அதன் போக்கில் நம்மை செலுத்தினால் என்னவாகும் நினைத்துப் பாருங்கள்.
பல நேரங்களில் இந்த சிந்தனை குதிரை அதன் போக்கில் நம்மை செலுத்துகிறது.
அதனால் உடல் இங்கே இருந்தாலும் உள்ளம் எங்கோ போய்விடுகிறது.
சிலரை எதிரே இருக்கும் போது நாம் பெயர் சொல்லி அழைத்தால் கூட
உடனே பதிலளிக்க மாட்டார்கள். ஓரிரு முறை கூப்பிட்ட பிறகு தான் “ கூப்பிட்டீங்களா?” என
கேட்பார்கள். இவர்களை “மேல் மாடியில் உலாத்துபவர்கள்” என வேடிக்கையாக குறிப்பிடுவோம்.
இந்த நேரத்தில் நாம் செய்யும் செயலில் நம் முழு கவனம் இருந்தால்
தான் எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்ய முடியும் என்பது நாம் அறிந்த ஒன்று.
இப்னு அரபி (ரஹ்) என்பவர்கள் மகத்தான இறைஞானி. அவர்கள் காலத்தில்
இறைஞானத்தில் சிறந்த ஒரு மூதாட்டி இருந்தார் இளம் வயதில் இப்னு அரபியும் அவர் நண்பர்களும்
அந்த ஞானமாதாவிடம் பாடம் படித்தனர். குறுகிய
காலத்தில் இப்னு அரபி அடைந்த ஞான விளக்கம் பிறரை ஆச்சரியப்பட வைத்தது. எல்லோரும் ஒன்றாகத்
தானே படிக்கின்றோம். இவருக்கு மட்டும் எப்படி இந்த உயர்வு கைகூடியது என வியப்படைந்தார்கள்.
அதை விளங்கி கொண்ட ஞானமாதா, “ இப்னு அரபி பாடம் படிக்கும் போது முழுமையாக இங்கே மட்டும்
தான் இருக்கிறார்” என்றார்கள்.
நம் நிலமையையே உற்று நோக்குங்கள்.
கடந்த கால நம் தோல்விகளை, நாம் பட்ட சின்ன சின்ன அவமதிப்புகளை
ஊதிப் பெருக்கி நினைத்து நினைத்து வருந்தி கொண்டிருக்கின்றோம். அதன் நீட்சியாக நாளைக்கு என்ன நடக்குமோ என அச்சமும், வேதனையும் கொள்கின்றோம்.
உண்மையில் நாம் கவலைப்படும் 99 சதவீத விசயங்கள் நம் வாழ்வில் நிகழ்வதே இல்லை. ஆனால்
கற்பனை பயங்களே நம்மை தினம் தினம் கொல்லுகிறது. இவ்வாறு பயம், கவலை, குழப்பம் என ஒரு தெளிவற்ற மனோநிலையை
நாமே தேடிக் கொள்கின்றோம்.
இத்தகைய தேவையற்ற பயங்களால் நம் முன்னே இருக்கும் பொன்போன்ற
வாய்ப்புகளை பயன்படுத்தும் தைரியத்தை இழந்த கோழையாகியாகி விடுகின்றோம். நாளை ஒரு பொன் விடியல் புலர்ந்து
எல்லாம் நலமாகிவிடும் என கற்பனை கனவுகளில் மனம் புதைத்து செயலற்ற சோம்பேறிகளாய் காலம் கழிக்கின்றோம்.
நேற்று நடந்த தவறுகளை சரி செய்வதோ, நளைய வெற்றிக்கு படியாய்
அமைவதோ இறையருளான இந்த விநாடியில் நாம் முழுகவனத்தோடு செய்யும் முயற்சியை சார்ந்த விசயம்
என்பதை உணர்வது தான் நாமே உண்டாக்கி கொண்ட இந்த நரகத்திலிருந்து விடுதலை பெற நாம் வைக்கும்
முதல் அடி. அடுத்து நம் முன்னே இருக்கும் பில்லியன்
டாலர் கேள்வி, இந்த கவனசிதைவிலிருந்து தப்பிக்கும் வழியென்ன? நம் சிந்தனைக்
குதிரைக்கு கடிவாளமிட முடியுமா? என்பது தான்.
ஆம். பெருமளவில் நம்மால் முடியும். அந்த கடிவாளமிடும்
பயிற்சிதான் தியானத்தின் ஆரம்ப பாடம்.
தியானம்:
“நான் பல வருடங்களாக என் உள்ளத்தின் வாயிலில் காவல்காரனாய் இருக்கின்றேன்” என சொல்வார்கள் என் குரு நாதர் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்).
தியானத்தின் ஆரம்பம் ஒரே வார்த்தையை இடைவிடாமல் சொல்வதன் மூலம்
மனதை கட்டுப்பாடற்ற சிந்தனையின் பிடியிலிருந்து விடுவிப்பது.
அந்த ஒரு வார்த்தை என்பது மந்திரமாகவோ, இறைதிரு நாமமாகவோ இருக்க வேண்டியது அவசியமா என்றால் இல்லை என்பது
தான் பதில்.
பின் இறைவனின் ஞாபகம் எதற்கு? உள்ளங்கள் அமைதியுறுவதற்கு. இறைவனின்
ஞாபகத்தை கொண்டு தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. இறைவனின் ஞாபகத்தை கொண்டு மாத்திரமே
என்கிறது இறைவேதம்.
இறைவன் என்றவுடன் கோயிலிலோ, பள்ளிவாயிலிலோ, தேவாலயத்திலோ
இல்லை வானத்திலோ எந்த ஓர் இடம், வடிவம், உருவம் கற்பித்து சொல்லப்படும் ஒன்றை குறிப்பிடவில்லை.
எல்லையற்ற கருணையின் மூல ஊற்றாய் எங்கும் இருக்கும்
மெய்பொருளை (ஹக்கை) குறிப்பிடுகின்றேன்.
“ஹக் – மெய்” என்ற வார்த்தை இறைவேதத்தில் குறிப்பிடப்படுகின்றது.
வானம், பூமியில் உள்ள அனைத்தும் ஹக்கைக் கொண்டு
தான் இருக்கிறது என்கிறது இறைவேதம்.
அந்த ஹக்கை கொண்டே நம் இருப்பு நமக்கு இடைவிடாமல்
வழங்கப்படுகின்றது.
உயிர், அறிவு, நாட்டம், வல்லமை முதலிய நம் பண்புகள்
நமக்கு வழங்கப்படுகின்றது. இப்படி நம் வாழ்வின் அனைத்து தேவைகளையும் வழங்கும் மூல ஊற்று நம்மைவிட்டு
பிரியாமல் எப்போதும் நம்மோடிருக்கிறது.
இதை “நீங்கள் எங்கிருந்த போதும் நான் உங்களுடனே இருக்கின்றேன்”
என இறைவன் தன் வேதத்தில் சொல்லியும் கூட வேதவிளக்கமின்மையால் இறைவன் என்றவுடன் நம்மை
விட்டு வெகு தூரமாக விளங்கும் அறியாமை நம்மை விட்டு போகவில்லை.
அதனால் இறைவனுக்கு சொந்தமானதை தனதாக விளங்கி “நான்
…எனது” என்ற அகம்பாவம் (ego) கொண்டு இணைவைப்பில் வீழ்ந்து இறையைவிட்டு பிரிந்து நிற்கின்றோம்.
அதனால், கடலை விட்டு பிரிந்த துளியாக இறைவன் வழங்கிய
வரம்பற்ற அருட்கொடைகளின் வாசல் கதவுகளை மூடிவிடுகின்றோம்.
இது_
திக்ரே
லிஸானி – நாவினால் செய்யும் திக்ரு என்பதில் ஆரம்பித்து,
திக்ரே
கல்பி – உள்ளத்தினால் செய்யும் திக்ரு எனும் சுவாசத்தோடு இணைந்த திக்ராக தொடர்ந்து,
திக்ரே
ரூஹி – ஆன்மாவினால் செய்யும் திக்ர் எனும்
அகவிழிப்பு நிலையாக மலர்வது.
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.