தோழமையுடன்

Wednesday, July 18, 2012

ரமளான் வருகிறது உன் கோப்பையில் காதல் தீயை ஊற்றிக் கொள்!

 ரமளான்!
இது இறைக்காதலர்களின் மாதம்.
எட்டா? இருபதா? என்ற கத்திச் சண்டை எல்லாம்
சற்றே நிறுத்தி வைப்போம்.
முகத்தோடு முகம் நோக்கும்
காதலர்களின் நந்தவனமிது!
தயவு செய்து இந்த குளத்தில் யாரும் கல் எறிய வேண்டாம்.


ரமளான்!
இறைநேசர்களின் மாதம்.

பார்வை கொண்ட நெஞ்சமே!
அகக்கண்ணை திறந்து பார்! 
ரமளானில் திறந்தது சொர்க்கத்தின் கதவுகள் மாத்திரமல்ல!
அவன் பேரழகின் தரிசனமும் தான்!.
அந்த பேரழகை மறைக்கும் எல்லா திரைகளும்
ரமளானின் தீயில் எரிகின்றன!

 
உன் கோப்பையில் காதல் தீயை ஊற்றிக் கொள்!
இதயத்தால் பருகு!
தீயில் எரிவது
பாவங்கள் மட்டுமல்ல
அவன் முகம் தவிர அனைத்தும் எரிந்து விடும்
எல்லாத் திரைகளும்.
அந்த பேரழகை மறைக்கும் எல்லாத் திரைகளும்.

ரமளான்!
இது நெருக்கத்தை பரிசளிக்கும் மாதம்.
பசியற்றவன்
தாகமற்றவன்
புலன்களின் இன்பம் தேவையற்றவன்
சற்றே தன் வர்ணம் பூச அழைக்கின்றான்.
தன் ரகசியத்தின் பிரதிநிதியை
தூரமற்ற தன் நெருக்கத்தை பரிசாய் வழங்க!

அருகே அழைத்து என்ன சொல்லுகின்றான்?

எனக்காக பசித்திரு!
என் முகம் காண பசித்திரு! வாய்த்தால்
என் முகம் கண்டு பசியாறு!.
எனக்காக தாகித்திரு!
என் அழகை பருக தாகித்திரு! வாய்த்தால்
என் அழகை பருகி தாகம் தீர்!.
எனக்காக இச்சை விடு!
என் நெருக்கம் காண இச்சை விடு! வாய்த்தால்
என்னை கொண்டே எழுந்து விடு
நீ பார்க்கும் விழியாக,
பற்றும் கரமாக,
நடக்கும் காலாக,
நினைக்கும் உள்ளமாக
என் நெருக்கம் காண 
உன்னை விடு வாய்த்தால்
என்னை கொண்டே எழுந்து விடு.


ரமளான்!
இது வேதத்தின் மாதம்!
வேதம் எனும் காதல் கடிதத்தை
மலையில் இறங்கினால்
மலையே சுக்கு நூறாகும் என்று தான்
என் நேசரின் நெஞ்சத்தில் இறக்கி வைத்தேன்.
அந்த நெஞ்சத்தின் ரகசியம் கொஞ்சமாவது தெரியுமா உனக்கு?

நபியின் நாவாய் நானிருந்து
பேசிய அந்த காதல் வார்த்தைகளை
இருள் சூழ்ந்த உள்ளத்தால் வாசிக்க முயலாதே,
நினைக்கும் உளமாக எனைக் கொண்டு வாசித்துப் பார்!
ஆயிரமாயிரம் சூரிய தீபங்கள் உன் இதயத்தில்
வெளிச்சமேற்றும்.
ரமளான்!
இது ஈகையின் மாதம்!
மன்னாதி மன்னவன் நான் !
எல்லையற்ற என் கருணையின் பிரவாகத்தால்
இல்லாமையில் இருந்தவைகள் 
காட்சிக்கு வந்தது!
எல்லா காலி பாத்திரங்களும்
என்னால் நிரம்பி வழிகின்றது.

திரும்பும் திசை எல்லாம் என் முகமிருக்க
எனை விட்டு எங்கே திரும்புகின்றாய்!
என்னிடமே கேள்!.
எனை கொண்டே வாங்கு!
வாங்கியதில் எனைக் கொண்டே வழங்கு!
எளியவனிடம் முகம் சுளிக்காதே!
என் தயவின்றி யாசகன் தனியே வருவானா?
நீயும் யாசகனும் தனித்திருந்தாலும்
மூன்றாவதாக நானிருக்கின்றேன்
உன்னுடனும்
அவனுடனும்
என் முகம் காண ஆசித்து யாசகம் வழங்கினால்
அவனிடமும் என்னை பெற்றுக் கொள்வாய்.
என் கருணையின் பிரவாகத்தால்
எல்லா பாத்திரங்களும்
நிரம்பி வழிகின்றது.

ரமளான்!
இது காதலர்களின் மாதம்!
முகத்தோடு முகம் நோக்கும்
காதலர்களின் நந்தவனமிது!.
சைலன்ஸ் ஃபிளீஸ்!.
தயவு செய்து இந்த குளத்தில் யாரும் கல் எறிய வேண்டாம்!. 

தொடர்புடைய சுட்டிகள்:
 உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.


Post a Comment