தோழமையுடன்

Monday, August 15, 2011

நோன்பாளியின் படித்தரங்கள்



நோன்பு வைப்பவர்களை மூன்று படித்தரமாக வகைப்படுத்தி கூறுகின்றார்கள் ஆன்மிக பெரியார்கள்.  

  1. உண்ணல், பருகல், உடலுறவு இவைகளை மட்டும் தடுத்து கொள்ளுதல் பாமரர்களின் நோன்பு.
  2.   உண்ணல், பருகல், உடலுறவு இவைகளை தடுத்து கொள்ளுதலுடன் அதிகமதிகம் நற்செயல்கள் புரிவதும், பொய் பேசுதல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல் போன்ற பாவச்செயல்களை விட்டும் தன்னை காத்து கொள்ளுவது நல்லடியார்களின் நோன்பு.  
  3. மேற் கூறிய இரண்டு நிலைகளுடன்  இறைவனைத் தவிர வேறு பக்கம் தங்கள் கவனம் திரும்புவதை விட்டும் காத்து கொள்ளுதல் நபிவழியில் அகப்பார்வை அடைந்த ஆரிஃபீன்கள் என்னும் இறைஞானிகளின் நோன்பு.

இது வேறு வேறு மூன்று வகை பிரிவினரை பற்றி கூறுவதாக  காட்சியளித்தாலும் யோசித்து பார்க்கும் வேளையில் நாமே சில நேரம் பாமர நிலையிலும், சில நேரம் நல்லடியார்களின் நிலையிலும் இருப்பதை உணர முடிகிறது. அத்துடன் இறைவனைத் தவிர வேறு பக்கம் தங்கள் கவனம் திரும்புவதை விட்டும் காத்து கொள்ளும் ஆரிஃபீன்கள் என்னும் இறைஞானிகளின் நிலையை நோக்கி முடிந்த அளவு முன்னேற முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் அது தான் நபிவழி அகப்பார்வையாய் இருக்கின்றது. அதைப் பற்றி இந்த கட்டுரையில் சுருக்கமாக பார்ப்போம்.


நோன்பின் நோக்கம் இறையச்சம் என்பது நாம் அறிந்ததே.  இஹ்ஸான் என்னும் ‘அக விழிப்பு நிலை’ தான் இறையச்சத்தின் அடிப்படை.

இஹ்ஸான் என்றால் என்ன?

“(இஹ்ஸான் என்பது) அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.” இது (புகாரி, முஸ்லிம் ஷரீஃபில் உள்ள) பிரபலமான நபிமொழி. 

இந்த நபிமொழியை ‘ஹதீஸே இஹ்ஸான்’ என்றும் ‘ஹதீஸே ஜிப்ரயீல்’ என்றும் ‘தஸவ்வுஃப் ‘ என்னும் இறைஞான பாதையின் அடிப்படை என்றும் கூறுவர். வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பகிரங்கமாக மனித உருவத்தில் காட்சியளித்து வெளிப்படுத்தப்பட்ட இதன் வித்தியாசமான பின்னணி இதன் அவசியத்தை நோக்கி நம் கவனத்தை your attention please எனக் கவர்ந்திழுக்கிறது. இந்த நபிமொழியின் இறுதியில் ஜிப்ரீல் (அலை) நம் மார்க்கத்தைப் பற்றி நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக வந்தார்கள் என்ற பெருமானாரின் முத்தாய்ப்பான விளக்கம் இந்த இஹ்ஸான் என்ற அகப்பார்வை நிலை இல்லாமல் நம் மார்க்கம் (தீன்) முழுமையடையாது என்பதை தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.

நோன்பு என்பது இஹ்ஸன் நிலையை அதன் மூலம் இறையச்ச நிலையை நம்மில் ஏற்படுத்தும் ஓர் பயிற்சிக்காலம். நோன்பு மாதங்களின் சிறுவர்கள் கூட இஹ்சானின் பிற்பகுதியான ‘அல்லாஹ் நம்மை பார்க்கின்றான்’ என்ற உணர்வை  அடைவதை நாம் பார்க்கின்றோம். நோன்பு வைத்துள்ள ஒரு சிறுவனிடத்தில் “ ஏன் தம்பி உச்சி வெயிலா இருக்கே. இந்த அறையில் உள்ள ஃபிர்ட்ஜில் இருந்து கொஞ்சம் கூல் டிரிங்க்ஸ் எடுத்து ஊத்திக் குடியேன். வேறே யாரும் தான் பார்க்கலையே. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்றால், “ யாரும் பார்க்கலையா? அல்லாஹ் பார்த்துகிட்டு இருக்கான்ல” என்பான். இது நோன்பின் பரக்கத்தால் இயல்பாக வரும் ஓர் அற்புத உணர்வு. இன்னும் நோன்போடு மட்டுமல்லாமல் நம் வாழ்நாளெல்லாம் இருக்க வேண்டிய உணர்வும் கூட. 

அடுத்ததாக பார்த்தால் இஹ்ஸானின் முந்திய பகுதியான இறைவனை பார்ப்பதை போல இருக்கும் – ஷுஹுது என்ற நிலைதான் நோன்பின் உச்சகட்ட நிலையாகும். அது தான் இறையச்சத்தின் முக்கிய அம்சமான இணைவைப்பதை விட்டும் தப்புதல் என்ற பாக்கியத்தை நமக்கு அளிக்கும். 

ஷுஹுது - அகப்பார்வை என்றால் என்ன?
எல்லாம் வல்ல இறைவன் ‘எங்கு திரும்பினாலும் தன் திருமுகம் (இருப்பு-being) இருப்பதாக’ சொல்கின்றான். ‘நம் பிடறி நரம்பை விட சமீபமாக இருப்பதாக’ சொல்கின்றான். இத்தனை அருகில் (அக்ரபாக) இருந்தாலும் நம் ‘பார்வைகள் அவனை எத்திக் கொள்ளாது’ என சொல்கின்றான். புறக்கண்களால் என்னை பார்க்க முடியாவிட்டாலும் அகக்கண் என்னும் அறிவுக் கண் கொண்டு ‘தன்னை பார்ப்பதை போல  இருப்பது வணக்கம்’ என்கின்றான். ‘ரஹ்மானுடைய திக்ரை புறக்கணித்து கண்களை மூடி கொள்கின்றானே ….’என்பது போன்ற வாசகங்கள்  கண்வழி காட்சியை மனக்கண்ணால் எண்ணி பார்க்கும் இந்த ஷுஹுது என்னும் ஞாபகத்தின் இன்னொரு பரிமாணத்தை நோக்கி நம்மை அழைக்கிறது.

ஷுஹுது என்பது பற்றிய ஆழ்ந்த விளக்கங்கள் இந்த கட்டுரையின் விவரிப்புக்கு அப்பாற்ப்பட்டது. அவைகள் இறைஞானிகளின் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த தொடர் போதனையைக் கொண்டு தான் விளங்க முடியும். ஆயினும் அதன் அடிப்படையில் பிரதானமான சாட்யளித்தல் (witnessing) என்பது பற்றி மட்டும் சிறிது பார்ப்போம்.

வானம் பூமியெங்கும் அவனது பண்புகள், செயல்கள் வெளிப்பட்டுள்ளது. இந்த அவனது இறைத்தன்மை (உலூஹிய்யத்)க்கு இறைவன் தானே சாட்சியாக இருப்பதாகவும், வானவர்களும், அவனை அறிந்தவர்களும் சாட்சியாக இருப்பதாக கூறுகின்றான் (3:18)

 இந்த வகையில் இறைவனது அத்தாட்சிகள் மூலம் அவன் மகத்தான இருப்பை நெருக்கமாக நாம் ஞாபகம் செய்ய முடியும். அதன் மூலம் அவனை முன்னோக்க முடியும்.

யாராவது எது இறைவனின் அத்தாட்சி என்றால், எது இறைவனின் அத்தாட்சியில்லை என்பது தான் அதன் பதில்.

நீங்களும், நானும் இன்னும் ஒவ்வொரு சிருஷ்டியும் இறைவனின் அத்தாட்சிகள் தான்.

உங்களிலும்  (பல அத்தாட்சிகள் இருக்கின்றன, அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா? (51:21) என கேட்கின்றான்.

“வானங்களிலும், பூமியிலும் என்ன இருக்கின்றன என்பதைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக, எனினும் நம்பிக்கைக் (ஈமான்) கொள்ளாத கூட்டத்திற்கு நம்முடைய அத்தாட்சிகளும் எச்சரிக்கையும் யாதொரு பலனையும் அளிக்காது.(10:101) என அறிவுறுத்துகின்றான்.

வானம், பூமியை தனியாக மேலோட்டமாக பார்த்து ரசிக்கச் சொல்லவில்லை இறைவன். அவற்றை உற்று நோக்கி அவற்றில் உள்ள இறை அத்தாட்சிகளை சிந்திக்கச் சொல்கின்றான்.

மேகம் அசைவதும், மழையை பொழிவதும், நதிகள் ஓடுவதும். கோள்களின் இயக்கமும் ஏன் நம் இதயம் இயங்குவதும், கண்கள் இமைப்பதும் ‘இறைவனைக் கொண்டே தவிர யாருக்கும் சக்தி என்பதே இல்லை’ என்பதன் சாட்சிகள் தான்.

உருவங்கள் அற்றவன் அவன். வடிவங்களில் அடங்கா மகத்துவம் அவன்.
அத்தனை உருவங்களும்,வடிவங்களும் அவன் இருப்பின் அத்தாட்சிகளே!
நிறங்கள் அற்றவன் அவன்.அத்தனை நிறங்களும் அவன் வெளிப்பாட்டின் வர்ணஜாலங்களே!
அனைத்தும் அவன் தன் அழகை வெளிப்படுத்திக் கொண்ட வெளிகளே!
நீங்களும், நானும் இயற்கையும், செயற்கையும் அவன் திறமையை பிரதிபலித்த கண்ணாடிகளே!
ஒவ்வொரு வினாடியும் மாறும் தன்னையும்,அனைத்தையும் கண்ணடியாக்கி மாறா அவன் மதிமுகத்தை காணும் காதலன் யார்?
குருடர்கள் கண்ட யானையல்ல அவன்.
யானையை கண்ட குருடர்கள் நாம்.

மனிதனை குறிக்கும் 'இன்ஸான்' என்ற வார்த்தைக்கு கண்மனி என்று ஒருபொருள். நம் சுயம்/அகம் என்பதே அவன் காட்சிக்கு சாட்சியான – கண்மனியான இருப்புத் தான். அவன் தூரமற்ற நெருக்கத்தை உணரும் நம் பிறவிப்பார்வையை….அகப்பார்வையை வழங்க வந்தவர்களே நபிமார்கள்.

கண்களின் வெளிச்சத்துக்கு ஒரு சூரியன் போல் அகப்பார்வையின் வெளிச்சத்துக்கு வந்ததே வேதம். 

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அரபகத்தில் வாழ்ந்த இறை நிராகரிப்பாளர்களைப்  பற்றி சொல்லும் போது, “வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் உள்ளன.(எனினும்) அவர்கள் அதை புறக்கணித்தவர்களாகவே, அவற்றின் அருகே நடந்து செல்கின்றனர்”.(12:105)

“மேலும், அவர்கள் இணை வைக்கின்றவர்களாக இருக்கும் நிலையிலேயே அன்றி அவர்களில் பெரும்பாலோர் இறைவனின் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வதில்லை”(12:106) என்று கூறிவிட்டு, நபியைப் பற்றி இப்படி கூறுகின்றான். 

(நபியே!) நீர் கூறும்: இதுவே எனது (நேரான வழியாகும்)நான் உங்களை இறைவனின் பக்கம் அழைக்கின்றேன். அகப்பார்வையின் மீதே நான் இருக்கின்றேன். என்னைப் பின்பற்றியவர்களும்.  இறைவன் மிகத் தூயவன். மேலும் (அந்த அகப்பார்வையினால்) நான் இணைவைப்பவர்களில் ஒருவனல்ல. (12:108) 

மேற்கண்ட இறைவசனத்திலிருந்து இணை வைப்பதை விட்டு தப்புவதில் ‘அகப்பார்வை’ என்ற அறிவுப் பார்வையின் அவசியம் தெளிவாகின்றது.

அத்தகைய பார்வை கொண்ட நெஞ்சங்களை உடைய நல்லோர் கூட்டத்தில் இறைவன் நம்மையும் சேர்ப்பானாக! ஆமீன்!.




No comments: