மனிதர்களை தன் காதலர்களாக – நேசர்களாக ஆக்குவதற்கு வருடந்தோறும் ஒரு மாதத்தையே கருணையுடன் தந்துள்ளான் இறைவன். அந்த மாதத்திற்கு பெயர் ரமளான்.
'இறையச்சம் கொண்டவர்களேயன்றி இறைநேசர்கள் இல்லை' என்கிறது இறைவேதம்.
அச்சம் கொண்ட இதயத்தில் எப்படி நேசம் இருக்கும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?
அச்சம் கொண்ட மனதில் நேசத்துக்கு வேலையில்லை. அது போல நேசம் கொண்ட மனதிலும் அச்சத்துக்கு வேலையில்லை, ஒரேயோரு அச்சத்தைத் தவிர. என்ன அந்த அச்சம்? தன் காதலுக்கு பொருத்தமற்ற செயலை செய்து விலை மதிக்க முடியா அந்த நேசத்தை இழந்து விடுவேனோ என்ற அச்சம் தான் அது. இறைவனுக்கு பொறுத்தமற்ற செயலை செய்து இறைநேசத்தை இழந்து விடுவோமோ என்ற உணர்வினால் அந்த செயல்களை விட்டு தன்னை காத்துக் கொள்ளுதலைத் தான் ‘தக்வா’ என்ற அரபி பதத்தினால் குறிக்கப்படுகின்றது. தக்வா என்பதன் மூலச்சொல்லான் ‘விகாயத்’ என்பதன் பொருள் ‘பாதுகாத்து கொள்ளுதல்’ என்பது தான். (பார்க்க: இறையச்சம் வாழ்க்கை ஈஸியாகட்டும்)
தக்வா என்ற இறையச்ச மனோ நிலையையை உருவாக்கும் பயிற்சிக்காக தான் ரமலான் மாதம். இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் இறையச்சத்திற்கு முந்தியது இறைகாதல். இறைகாதலின் விளவு தான் இறையச்சம். அது தான் ரமளானின் நோக்கமாக இருக்கிறது. அப்படி இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரம் பசியையும், தாகத்தையும் பல்லை கடித்து கொண்டு பொறுத்துக் கொண்டு குப்புறக் கிடப்பதோ , பசி வெறியில் சகமனிதர்களிடம் வள்வள்ளென்று குலைத்து கொண்டிருக்கும் சந்தைக் கடை நாய் போன்ற பரிதாப நிலைக்குப் பெயரல்ல தக்வா. உன்னதமான காதல் நிலையது!. காதலால் விளைந்த கட்டுப்பாடு. இறைவா! என் காதல் தலைவா! நீ விரும்பினால் எது எனக்கு அடிப்படைத் தேவையோ, எது எனக்கு ஆகுமானதோ(ஹலாலோ) அதைக் கூட நீ விதித்த காலம் வரை நான் அனுபவிக்க மாட்டேன் என ஆசையையும், தேவையையும் தள்ளி வைப்பது. உண்ணல், பருகல், மனவியுடன் உடலுறவு கொள்ளுதல் என ஆகுமானதை கூட குறிப்பிட்ட காலம் தடுத்து பழகிய மனம் இறைவன் தடுத்த ஆகாத பாவங்களை விட்டு வாழ்நாளெல்லாம் காத்துக் கொள்ளும் மனப்பயிற்சியே அதன் நோக்கம்.
மீண்டும் உங்களுக்கு நிவைவூட்டுகின்றேன். இறையச்சத்தின் முந்திய அம்சம் இறைகாதல்.
‘ஒரே ஒரு முறை தான் பார்த்தேன் என் உள்ளம் கொள்ளை போனதே’ என கண்டதும் காதல் வந்த கதைகளை நாமறிவோம். இறைக்காதல் என்பது என்ன?
இறைவனை (என்னை) பார்ப்பதை போல இரு: அது சாத்தியப்படவைல்லை என்றால் இறைவன் (என்னை) பார்த்து கொண்டிருக்கின்றான் என்ற நிலையிலாவது இரு என்னும் இஹ்சான் என்ற நிலை தான் இறைகாதலின் ஆரம்ப பாடம். உச்சகட்டமும் அதுவே.
எல்லா விதமான காதலிலும் “பார்வை”க்கு முதலிடம் தான். ‘பார்க்கும் இடத்திலெல்லாம் உனைப் போல் பாவை தெரியுதடி!’ என பாடினான் பாசத்துக்குரிய பாரதி. அது காதல் கொண்ட மனதால் விளைந்த கற்பனை காட்சி.
‘திரும்பும் திசையெல்லாம் இறைதிருமுகம்’ என இறைவேதம் சொல்கிறது. புறக்கண்ணால் பார்க்க முடியா விட்டாலும் இதயம் என்ற அககண்களுக்கு விருந்தாகும் காட்சியது. பார்வை கொண்ட நெஞ்சங்கள் அதற்கு சாட்சியாகிறது.
இறைவன் தன் தன்மைகளின் வாயிலாக தன்னை பார்க்க அழைக்கின்றான்.
எங்கும் கடை விரித்து காட்சியளிக்கும் உலூஹிய்யத் எனும் இறைத்தன்மைக்கு தான் சாட்சியாக இருப்பதாக கொல்கின்றான். வானவர்களும் இன்னும் ஞானம் கொண்டோரும் சாட்சியாக இருப்பதாக சொல்கின்றான்.
இறைஞானம் தான் இறைவனை நெருக்கமாக காட்டித் தந்து எல்லா தேவையிலும் ‘என் முகத்தை அவன் முகம் நோக்கி திருப்பி விட்டேன்’ என அவனையே முன்னோக்கும் ஏகத்துவ சாட்சியாளனாக, இறைகாதலனாக நம்மை மாற்றுகிறது.
கருணயாளனான இறைவனை (ரஹ்மானை) பற்றி அறிந்தவர்களிடம் தெரிந்து கொள்ளுங்கள் என் இறைவேதமே வழிகாட்டிகிறது. நம் வாழ்வியல் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில் தோழமையின் பங்கு மகத்தானது என்பதால். நம் இறைநம்பிக்கை உறுதி பெறவும், இயன்ற வரை இறையச்சத்துடன் வாழவும் நமக்கு தூண்டுதலாக இருக்கும் மெய்யடியார்களின் தோழமை வாழ்நாளெல்லாம் நமக்கு தேவை என்பதை “நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவனை அஞ்சுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் (சாதிக்கீன்களுடன் சேர்ந்து) இருங்கள்” என்றும் வழிகாட்டுகிறது இறைவேதம். வேதத்தின் ஒளியில் இறைவனை முன்னோக்கும் சாட்சியாளர்களாக நம்மை ஆக்கும் இறைஞானியான குருவின் தொடர் சகவாசம் மகத்தான பக்கியம்.
ஷெய்கு ஃபைஜீஷாஹ் நூரி (ரஹ்) |
என் குரு நாதர் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் இடத்தில் இறைஞான பாடங்கள்ஆண்டு முழுவதும் நடந்தாலும் ரமலானில் விஷேசமாக பிறை 1 முதல் 27 வரை நடக்கும். தராவிஹ் முதலிய விசேச தொழுகைக்குப் பின் இரவு 9.30 முதல் சஹர் நேரம் வரை (அதிகாலை 3.30 வரை) தொடரும். நேரம் போவதே தெரியாது. இறைக்காதல் பரவசத்தில் பேரானந்தமாய் இருக்கும்.
திருகுர்ஆன், நபிபொழியின் அடிப்படையில் அருவியாய் கொட்டும் அவர்களின் ஆன்மிக விளக்கங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் மீது மட்டுமல்ல, நம் வாழ்வின் வட்டத்தில் அன்றாடம் சந்திக்கும் பெற்றோர், மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள் என சக மனிதர்களின் மீதும், இன்னும் அதையும் தாண்டி இறைவன் படைத்த அனைத்து படைப்பினங்கள் மீதும் ஒரு நேசத்தை விதைக்கும். என் போன்றோரின் வாழ்வில் அரிய பொக்கிசமாய் அமைந்திருந்தன அந்த நாட்கள். சில வருடங்களுக்கு முன்பு என் குருநாதர் புறக்கண்களை விட்டு மறைந்து விட்டார்கள். ஆனாலும் அவர்களின் குடும்பத்தினரால் லால்பேட்டையில் அந்த அருஞ்சேவை இறையருளாய் தொடர்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே!
2 comments:
Jazaak allah ..........ungal idukayil oru uyirottam irukirathu.......athu savam pol irukum en ithayathayum theliya vaikirathu.........barak allah feekum...........
jazaak allah.........ungal idukayil oru uyirottam therigirathu .....athu savam pol irukum en ithayathayum thelirchi adaya seigirathu.......barak allah feekum
Post a Comment