தோழமையுடன்

Friday, July 27, 2012

இலக்கிய வாசிப்பும் குர்ஆன் வாசிப்பும்

இது ரமலான் மாதத்திற்கு முன்பு எழுதியது. 
வேலை பளுவினால் சற்று தாமதமாக வெளியிடப்படுகின்றது.

 சுந்தரராமசாமி தமிழ் இலக்கியத்தில் ஒரு மகத்தான ஆளுமை. அவரதுஜே.ஜே. சில குறிப்புகள்என்ற நாவல் என்னை கவர்ந்த அளவு அவரதுஒரு புளியமரத்தின் கதைஎன்னை கவரவில்லை. எழுத்தாளர் ஜெயமோகனோ புளியமரத்தின் கதையை தமிழின் முக்கியமான நாவலாக குறிப்பிடுகின்றார். நல்ல இலக்கியம் என்று சொல்ல பட்ட வேறு சில நூல்களும் வாசிக்க சலிப்பூட்டுபவைகளாக எனக்கு இருப்பதை கண்டேன். சிந்தித்து பார்த்ததில் என் புரிதலின் போதாமை இது. இலக்கிய வாசிப்பில் எனக்குள்ள பயிற்சி குறைவின் விளைவு இது  என்பதை உணர்ந்தேன்


வாசிப்பு என்பதன் முதல் தேவை புரிந்து கொள்ளுதல். புரிதல் இன்றி எந்த புத்தகத்தையும் உள்வாங்குதல் சாத்தியமே இல்லை.  
புரிதல் என்ற அடிப்படையில் நல்ல இலக்கியங்களை அணுகுவது எப்படி?
சுஜாதாவுக்கு பிறகு ஜெயமோகன் தான் இதைப் பற்றியெல்லாம் தெளிவாக விளக்க கூடியவர் என்பது என் எண்ணம். அதனால் சென்ற முறை இந்தியாவுக்கு சென்ற போது ‘‘நவீன தமிழக்கிய அறிமுகம் எனும் ஜெயமோகனின் நூலை வாங்கி வந்தேன்.

இந்த நூலை சுமார் 16 வருடங்களுக்கு முன் நூலகத்திலிருந்து எடுத்து படித்தேன். அந்த நூலின் மூலம் தான் ஜெயமோகனின் எழுத்தின் மீதே எனக்கு பிரியம் ஏற்பட்டது. அதே நூல் திருத்தி விரிவுபடுத்தப்பட்டு வெளிவந்திருக்கிறது. அந்த நூலிலிருந்து ஜெயமோகனின் சில வாசகங்கள் உங்கள் பார்வைக்கு:

 “புரியாத படைப்புகள் எரிச்சலை கிளப்புவது மிகவும் சகஜமான ஒன்று. காரணம் இலக்கியம் படிக்க முன்வரும் சிறுபான்மையினராகிய நாம் (முஸ்லீம்களல்ல இலக்கிய சிறுபான்மையினராகிய நாம் ) அனைவருமே அடிப்படையில் சற்று அகங்காரம் கொண்டவர்கள். சராசரியை விட உயர்ந்தவர்கள் என்றும், விஷேஷமான அறிவுத்திறனும் கற்பனைத் திறனும் உடையவர்கள் என்று நம்மைப் பற்றி எண்ணி இருப்பவர்கள். இந்த அகங்காரத்தை ஒரு புரியாத படைப்பு சீண்டி விடுகின்றது. ஆனால் நாம் இந்த எரிச்சலை கண்டிப்பாக வென்றாக வேண்டும். அதை வெல்ல பொறுமையும், சிரத்தையும் கொண்ட முயற்சியும் அவசியம்

ஒரு படைப்பு புரியவில்லைஎன்று ஒருவர் சொன்னால் உடனடியாக எத்தனை முறை படித்தீர்கள்  என்று கேட்பது சுந்தர ராமசாமியின் வழக்கம். அனேகமாக அனைவருமே ஒரு முறை என்று சொல்வார்கள். எட்டாம் வகுப்புக் கணித்தை ஒரு தடவை படித்துப் புரிந்துகொள்ள உங்களால் முடியுமா என்பார் சுந்தர ராமசாமி. எட்டாம் வகுப்புப் பாடத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட நீங்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கவில்லை என்றுதானே பொருள்.
இலக்கியப் படைப்பு என்பது கூர்ந்து கவனித்து உள்ளர்த்தங்களை சிந்தனை மூலமும் கற்பனை மூலமும் விரிவாக்கிக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இதற்குக் கவனமும் பயிற்சியும் தேவை

டி.எஸ். எலியட் ஒரு கட்டுரையில், ‘ஒரு படைப்பை முன்கூட்டியே மிக ஆழமானது என்று முடிவு செய்துகொள்வதன் மூலம்கூட அது புரியாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளதுஎன்று கூறுகிறார்.

இலக்கிய வாசிப்பு என்பது ஓர் இலக்கியப் படைப்பானது மொழியின் வழியாக வாசகனின் ஆழ்மனத்துடன் தொடர்புகொள்ளும் முறையாகும். குழந்தைக் கதைகளானாலும் வணிகக் கதைகளானாலும் கண்டிப்பாக எங்கே கற்பனை செயல்படுகிறதோ அங்கே ஆழ்மனமே கதையை வாசிக்கிறது. ஆனால், அவற்றில் ஆழ்மன வாசிப்புக்கு ஒரு பகுதி மட்டுமே அளிக்கப்படுகிறது. மிச்சம் போதபூர்வ வாசிப்பினாலேயே அடையும்படி உள்ளது.

ஆனால், தீவிர இலக்கியங்கள் முற்றிலும் ஆழ்மனத்தால் வாசிக்கப்பட வேண்டியவை. ஆழ் மனத்தை இலக்கியத்தால் தூண்டச் செய்யும் பயிற்சி இல்லாதவர்களும் அதற்கான கற்பனைத் திறன் இல்லாதவர்களும்தான் இலக்கியத்தை புரிந்துகொள்வதில்லை.     

வாசிப்பு பயிற்சி என்பது அகமனத்தை வாசிப்புக்கு பழக்கப்படுத்துவது தான். அதாவது எப்படி தமிழ் போன்ற ஒரு மொழியை கற்கிறோமோ, அதே போல மொழிக்குள் செயல்படும்படைப்பு மொழிஎன்ற மொழியை  கற்பது தான் இலக்கிய கல்வி.

தொடர்ந்து கூர்ந்து இலக்கிய படைப்பை வாசிப்பதே இலக்கிய பயிற்ச்சி பெறுவதற்கான ஒரே வழிமுறையாகும். அப்போது உருவாகும் சிக்கலை விவாதித்து புரிந்து கொள்வது உதவிகரமானது”.

ஜெயமோகனின் இந்த நூல்  இலக்கிய கலைச்சொற்கள், பல் வேறு இலக்கிய கொள்கைகளை, சிறந்த நூல்களை அறிமுகம் செய்கிறது.

இலக்கிய இன்பத்தை, அதன் அனுபவத்தை சிறிதாவது சுவைத்தவர்கள் இவ்வளவு சிரமப்பட்டு இலக்கிய பயிற்சி பெற வேண்டுமா? என கேட்க மாட்டார்கள்.

இலக்கியம் என்பது மெய்காணும் வழி முறைகளில் ஒன்று. இலக்கியத்தின் நோக்கம் தன்னையும் சமூகத்தையும் அறிந்து கொள்ளுதல் என்பதை வாசித்த போது என் சிந்தனை இறைவேதமாம் குர்ஆனை நோக்கி விரிந்தது

 இலக்கியமானலும் சரி, இறைவேதமானாலும் சரி புரிந்து கொள்ளுதல் என்பதற்கு சிரத்தையான முயற்சியும் கடுமையான உழைப்பும் தேவை.

குர்ஆன் எனும் இறைவேதம் கூறும் விசயங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1)   இறைவன் தன் ஏகத்துவ இருப்பை, பண்புகளை, செயல்களைப் பற்றி கூறுவது.

2)   ஏகத்துவத்தை வாழ்வியலாக போதித்த நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகள். 

3)   ஏகத்துவத்தை ஒப்பு கொண்டவர்கள் ஏற்று நடக்க கூடிய ஏவல்கள். விட்டு விலக வேண்டிய  விலக்கல்கள் பற்றியது.(Do’s and Don’ts)

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரலாற்றை படிக்காமல் குர்ஆனை சரியாக உள்வாங்க முடியாது. நபியின் சரித்திரத்தில் முதல் பத்து வருடங்களில் வெளியான இறைவசனங்களின் பிரதான பகுதி இறைமை பற்றிய விளக்கங்களேயாகும்.

குர்ஆனின் அந்த பகுதியை ஒரு சிறந்த இறைநேசச் செல்வரின் மூலம் பயின்றதில் சிலவற்றை இறைவன் நாடினால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விளைகின்றேன். இதோ ஒரு பதிவு :


படைப்பதனால் என் பெயர் இறைவன்எனது ஆன்மீக குருநாதர் பரிந்துரை செய்த மௌலானா யூசூஃப் அலி (ரஹ்) அவர்களின் சின்ன சின்ன விளக்கங்களுடன் கூடிய அருமையான குர்ஆன் ஆங்கில விளக்க உரையின் சுட்டி இதோ - குர்ஆன் விளக்க உரை.

படித்து பாருங்கள். குர்ஆனிய  ஞானத்துடன் ஆங்கில அறிவும் வளரும்.

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment