தோழமையுடன்

Wednesday, March 21, 2012

கவலைகளுக்கு மருந்தாகும் கவலை!


ஒரே ஒரு கவலையுடன் மட்டும் - இறைவனை திருப்திபடுத்த வேண்டும் என்ற கவலையுடன் மட்டும் - ஒருவன் காலையில் எழுவானாயின் இறைவன் இம்மை, மறுமையின் சகல கவலைகளிலிருந்து அவனை பாதுகாப்பான்என நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக இமாம் கஸ்ஸாலி(ரஹ்) தனது பிழையிலிருந்து விடுதலை செய்வது எதுவோ அது (அரபியில் : அல் முன்கித் மினழ் ழலால்) எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

இறைவனை மட்டும் திருப்தி படுத்தி விட்டால் போதுமா? என்கிறது வெளிப்படையான அனுபவ அறிவு.

 சிந்தித்து பாருங்கள் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் கண்ணியமும், கேவலமும், உயர்வும், தாழ்வும், செல்வமும், வறுமையும், ஆரோக்கியமும், பிணியும், உணவும், பசியும் இறைவன் வழங்குவது என்று.

எப்படி வழங்குகின்றான்? இதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

உங்களையும் உங்கள் செயல்களையும் இறைவன் தான் படைக்கின்றான்என்கிறது இறைவேதம்

 (இதன் சுருக்கமான அறிமுகத்தை 'தவ்ஹீதே உலூஹிய்யத்நபி வழி வந்த ரகசியம்' கட்டுரையில் காண்க.)
இந்த வேத வரிகளின் ஆழ்ந்த அர்த்தம் ஆன்மீக குருநாதர்களின்(வலியே முர்ஷிதின்) போதனையின் மூலமே விளங்க முடியும். விளங்கி விட்டால் மனிதனின் இம்மை, மறுமை கவலைகள் எல்லாம் பறந்துவிடும். மேலும், அந்த விளக்கத்தை உறுதியான நம்பிக்கையின் நிலைக்கு உயர்த்துவது முராக்கபா, முஷாஹதா எனும் ஆன்மீக பயிற்சியின் மூலம் பெரும் இறைகருணை கொண்டே சாத்தியம். இறைவன் தன் அளவற்ற கருணையினால் எனக்கும், உங்களுக்கும் அந்த உன்னத பாக்கியத்தை அருளுவானாக!


சுருக்கமாக இங்கே விளங்க வேண்டியது செய்தி

படைத்தல் என்பது ஒரு தொடர் நிகழ்வு – continuous process 

அதாவது ஒவ்வொரு சிருஷ்டியும்….

 இந்த விநாடி இருப்பதும்

இந்த விநாடி செயல்படுவதும்

 இறைவனால் படைக்கப்படுகின்றது என்பதே இங்கே விளங்க வேண்டிய முக்கிய செய்தியாகும்.

படைத்தலின் இந்த ஏகத்துவ நிலையை நமக்கு தெளிவானால் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) முன்வைக்கும் நபி மொழி எவ்வளவு அற்புதமான செய்தி என்பது புரியும்.

0000

இறைவனின் திருப்தி எதில் உள்ளது? எதை கொண்டு இறைவனை திருப்திபடுத்த முடியும்? உதாரணத்திற்கு சிலவற்றை பார்ப்போம்:

'அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி ஷரீஃப் பாகம் 1, அத்தியாயம் 2, எண் 56 )

‘ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி ஷரீஃப் பாகம் 7, அத்தியாயம் 81,எண் 6478 )


'பெற்றோர்களின் திருப்தியில் இறை திருப்தி இருக்கிறது' என்பதும் நபிமொழி.

'வணக்கசாலியான பெண் ஒருவர் பூனையை கட்டி போட்டு விட்டு தொழுதார். பூனை பசியால் இறந்து விட அந்த பெண் நரகவாதியாகிறார். ஒரு விபச்சாரியான பெண் தாகித்த நாய்க்கு நீர் புகட்டியதில் இறைவனின் மன்னிப்பை பெருகின்றார்'. இதுவும் ஓர் நபி மொழியின் சாரம் தான். 

‘இறையச்சம்’ எனும் தக்வா’ என்பது இறைவனை திருப்திபடுத்துவதில் பிரதான வழி. தக்வா –  இறையச்சம் வெளிப்படும் உறுப்பு இதயமாகும். இன்னும் இது உடல்,உள்ளம், ஆன்மா அனைத்தையும் கொண்டு சேர்ந்து செய்ய கூடிய ஒரு நற்செயலாகும்.

தக்வா என்பதன் விளக்கத்தைஇறையச்சம்வாழ்க்கை ஈஸியாகட்டும்எனும் கட்டுரையில் பார்க்கவும்

ஆக இறைவனை திருப்தி படுத்தும் விசயம் என்பது  மிகவும் ஆழமாக பயில வேண்டிய பாடமாகும். ஆயிரம் நூல்களை படித்து கற்பதை விட நல்லடியார்களின்  சகவாசம் இதை எளிதாக்கும் என்பது என் ஆன்மீக குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் சகவாசத்தில் நான் அனுபவ வாயிலாய் உணர்ந்த உண்மை.

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment