தோழமையுடன்

Saturday, March 31, 2012

ஞான வழி நுட்பங்கள் (“ஹிகம்”) ஒர் அறிமுகம்


ஆன்மீக வழிநடப்போர்கள் அனைவருக்கும் வழிகாட்டும் அற்புத நூல் ‘ஹிகம்’ . இது ஷாதுலியா ஆன்மீகப்பாதையின் வழி வந்த இப்னு அதாவுல்லா ஸிக்கந்தரி (ரஹ்) அவர்களால் எழுதப்பட்டது. அவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத்தான ஞான மாகான் ஆவார்கள். இதன் சுருக்கத்தை உத்தம பாளையத்தை சேர்ந்த மௌலானா மௌலவி T.S. மூஸாகான் பாகவி (ரஹ்) அவர்கள் தமிழில் தந்துள்ளார்கள். 


சங்கை மிகும் இந்த நூலை என் குரு நாதர் ஃபைஜிஷாஹ்(ரஹ்) அவர்கள்  ஆயிரக்கணக்கான முறை படிக்கச் செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது  மிகையான செய்தியல்ல. மேலும் அவர்கள்  இந்த புத்தகத்தை தங்கள் சிரசில் வைத்து முத்தமிட்டு மகிழ்வார்கள். இந்த அற்புதமான புத்தகத்தின் கருத்துகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். இவைகள் எளிமையாக தோன்றினாலும் கொஞ்சம் நுட்பமான செய்திகள். ஆகவே சற்று கவனம் செலுத்தி படிக்க வேண்டுகிறேன்.

ஹிகமிலிருந்து……

இறைவனை மறந்தவர்கள் விடிந்ததும் இன்று என்ன செய்வோம் என எண்ணுவார்கள். புத்திசாலிகள் (இறைவனை நம்மோடிருப்பதை மறவாதவர்கள்)  இன்று இறைவன் நம்மை என்ன செய்ய போகிறான் என்பதை பார்ப்போம் என நினைப்பார்கள். அதாவது புத்திசாலிகள் செயல்கள் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்து விடுவார்கள். அவர்களின் செயல்களை அவனே ஏற்றுக் கொண்டு எல்லாவற்றையும் இலேசாக முடித்து விடுவான்.

000

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரங்களில் இறைவன் புறத்திலிருந்து ஒவ்வொரு நிலைமை ஏற்பட்டு கொண்டிருக்கும். அந்நிலமையில் செய்ய வேண்டியவற்றை தவற விட்டால் வேறொரு நேரத்தில் அதை (களா) செய்ய முடியாது. அந்நிலமைகள் நான்கு வகை.

1.   நிஃமத் – அருட் கொடைகள்

2.   பலாய் முஸீபத்து  ( சீக்கு, பிணி, கஷ்ட, நஷ்டங்கள்) 

3.   'தாஅத்து' எனும் வழிபாடு

4.   பாவம்

இந்த நான்கு நிலைகளிலும் செய்ய வேண்டியவைகள்:

அருட் கொடைகளுக்கு இறைவனை புகழ்தலும், அவனுக்கு நன்றி செய்தலும் வேண்டும்.

பலாய் முஸீபத்தில் பொறுமையும், பொருந்தி கொள்ளுதலும் வேண்டும்.

வழிபாட்டு நேரத்தில் இந்த வழிபடுதல் என்ற அருட்கொடை இறைவன் செய்த உதவி என்று உணர வேண்டும்.

பாவம் ஏற்படும் நேரத்தில் மன்னிப்பும், பிழை பொறுக்குதலும் தேட வேண்டும்.

000

இறைவனின் அருட்கொடைகளுக்கு ஒருவன் நன்றி செய்யாவிட்டால் அந்த அருட்கொடைகளை தன்னை விட்டும் நீக்கிக் கொள்வதற்கு முயற்சித்துவிட்டான். அதற்கு ஒருவன் நன்றி செய்தால் அதன் கால்களை கட்டி வைத்துக் கொண்டான். அதாவது நன்றி செய்தால் அந்த உபகாரங்கள் தன்னை விட்டும் போகாது. அது மட்டுமல்ல நன்றி செய்யச் செய்ய உபகாரங்களும் அதிகமாகும்.

000
‘தேவையுறுதல்’ எனும் ‘ஏழ்மை’ (ஃபக்ரு) உனக்கு இயற்க்கையாகும். பசி, பிணி போன்றவைகள் உன்னில் மறைந்து கிடக்கும் அந்த நிலையை ஞாபக மூட்டும். இடையிலேற்படும் சீமான்தனம்- சுகங்கள் போன்றைவைகளால் உன் இயற்கை நிலை நீங்கிவிடாது. 

அதாவது நீ இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டவன்! உனக்கு சொந்த தரிப்பாடு கிடையாது. (உன் இருப்புக்கே) எப்போதும் நீ இறைவனளவில் தேவையானவன். எனினும் கொஞ்சம் சுகமாக இருத்ததால் அந்த தேவையுறும் ஏழ்மையை மறந்து விட்டாய். கஷ்ட நஷ்டம் வந்தால் உன் தேவையுறும் நிலையை நினைப்பாய். உன் நேரங்களில் உன் ஏழ்மையை நினைக்கச் செய்து தலைசாய்க்குதலை உண்டாக்கும் நேரமே சிறந்தது. ஏனெனில் அத்தகைய நேரங்களில் உன் மனம் இறைவனிடம் லயித்திருக்கும். மற்ற சிருஷ்டிகளிடம் கவனமோ, ஆசையோ இருக்காது. 

000

இறைவன் உன்னில் படைத்த வழிபாடுகளை நீயே செய்ததாக நினைத்தால் உன் இழி நிலைக்கு ஒரு எல்லை இல்லை. நற்செயலுக்கு இறைவன் உதவி செய்யாதிருந்த்தால் உன்னால் எந்த வேலையும் செய்ய இயலாது. (சக்தி அனைத்தும் அவனுக்கே சொந்தம். உன்னையும் உன் செயல்களயும் படைத்தவன் இறைவன்) ஆகவே உன்னையும், உன் செயல்களையும் இறையளவில் சேர்வது கொண்டல்லாது உனக்கு ஈடேற்றமில்லை. எஜமான் தனத்தின் லட்சணங்கள் அனைத்தும் அவனுக்குரியவை. அடிமை குணங்களடங்களும் உனக்குரியவை என்பதை திடப்படுத்திக் கொள்.  

000

உன்னில் ஏதாவது பாவம் ஏற்பட்டுப் போனால் உன்னை படைத்தவனுடன் செம்மையாய் இருக்கத் தவறி விட்டோமே என்று அவன் அருளை விட்டு நீ ஆதரவற்றுவிடாதே! இது உன்னில் ஏற்படுத்தப்பட்ட பாவங்களில் கடைசியானதாக இருக்கக் கூடும். ஆகவே  இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன் என்று உறுதியாக எண்ணி பாவ மன்னிப்பு கோறு! ஆதரவற்றுவிட வேண்டாம்.

000

உனக்கு யாராவது மரியாதை செய்தால் உன்னுடைய குறைகளை இறைவன் மறைத்ததினால் தான் மரியாதை செய்தார்கள்.ஆகையால் உன்னுடைய புகழும், நன்றியும் குறைகளை மறைத்தவனுக்கே அல்லாது மரியாதை செய்தவர்களுக்கில்லை. ஏனெனில் உன் குறைகளை அவர்கள் தெரிந்திருந்தால் மரியாதை செய்திருக்க மாட்டார்கள். இறைவன் மறைத்ததினால் அது ஏற்பட்டது. ஆகவே நன்றி அவனுக்கே (உரியது).

 இதனை உள்ளத்தால் விளங்கி அதன்படி ஒழுக உங்களுக்கும், எனக்கும் இறைவன் அருள் செய்வானாக! ஆமீன்!உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment