தோழமையுடன்

Friday, March 16, 2012

சூனியம் வைக்கும் சொற்கள்!இன்று நடைமுறையில் இருக்கும் வசைச்சொற்களில் குறிப்பிட்ட சிலவற்றை ஆசிரியர்கள்தாம் உருவாக்கி இருப்பர் என நினைக்கிறேன். உருப்படாதவன்’, ‘முட்டாள்’, ‘தண்டம்’, ‘எருமை’, ‘கழுதைமுதலிய சொற்கள் பள்ளிகளிலிருந்தே வெளியுலகிற்குப் பரவியிருக்கக்கூடும். 


 உனக்கு இருப்பது மூளையா களிமண்ணா?’ என்பது போன்ற கேள்விகளும் நீ மாடு மேய்க்கத்தான் லாயக்குஎன்னும் சாபங்களும் ஆசிரியர்கள் உருவாக்கியவைதாம். பள்ளிக்கூடங்கள் தண்டனைக் கூடங்களாகவும் இருந்ததை அறிவோம். வெளியே நிற்கவைத்தல், பெஞ்சுமேல் நிற்கவைத்தல், மணலில் முட்டிபோடுதல், பிரம்படிகள் என எத்தனையோ விதமான தண்டனைகளைப் பள்ளிகள் உருவாக்கியிருக்கின்றன. சாதிக் கொடுமையைத் தம்மளவில் நிறைவேற்றிய ஆசிரியர்களும் பலர். இன்று இவை எல்லாம் பழைய வடிவங்களில் இல்லைஎன ‘ஆசிரியர் மொழி அதிகாரம்என்ற இந்த மாத காலச்சுவடு கட்டுரையில்  பெருமாள் முருகன்  எழுதியிருந்ததை படித்ததும் என்  சிந்தனை விரிந்தது.....

எனது ஆன்மீக குருநாதர் வீட்டு வாசலில் உள்ள அறையில் இளம் மார்க்க அறிஞரான(ஆலிம், என் குருவின் சீடரும் கூட) நண்பர், ஒரு பிள்ளைக்கு பாடம் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார். பிள்ளைக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் லேசாக கையில் தட்டினார். அதே நேரத்தில் வெளியில் வந்த என் குருநாதர் இதை பார்த்தும், “ஆலிம்ஷா பிள்ளைக்கு பாடம் வரலைன்னா முதல்ல நாம தவ்பா (இறைவனிடம் பாவ மன்னிப்பு) கோரணும் என்றார்கள். என் நண்பர் ஆன்மீகத்தில் காரண, காரியம் (cause and effect) பாடம் கற்றவராதலால் அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டார்.

எனக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஒரு குட்டி கதை ஞாபகத்திற்கு வந்தது. ஒரு ஞானியொருவர் காயமுற்று கிடந்த பாம்பிற்கு சிகிச்சியளித்தார். அதற்கு பிரதியுபகாரமாய் பாம்பிடம் "நீ யாரையும் கடிக்காதே!" என கேட்டுக் கொண்டார். அந்த பாம்பும் அதை சிரமேற் கொண்டு அமைதியானது. பாம்பு அமைதியாய் சும்மா கிடப்பதைப் பார்த்த விளயாட்டு சிறுவர்கள் அதன் மேல் கல்லெறிய ஆரம்பித்தார்கள். அடிப்பட்ட பாம்பு ஓடி ஒளிந்தது. மீண்டும் அந்த பக்கம் வந்த ஞானி அடிப்பட்டு கிடந்த பாம்பை பார்த்து என்ன ஆயிற்று என கேட்டார். பாம்பு அமைதியாய் இருந்து அடிபட்ட கதையை சொன்னது. ஞானி சொன்னார், “பாம்பே உன்னை கடிக்கத் தான் வேண்டாம் என்றேன். சீற வேண்டாம் என சொல்லவில்லையே”என்று.

தொடர்ச்சியாக அற்புதமான ஓர் ஆசிரியர் தானே அறியாமல்  ஒரு மாணவனை புறக்கணிப்பால் தண்டிக்கும் தி.ஜானகிராமனின் 'முள்முடி' என்ற அற்புதமான கதையும் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

இப்படியே சிந்தித்தவனாய் எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகளிடம் பள்ளியை பற்றியும், பாடங்களைப் பற்றியும் ஆரம்பித்தேன். 
சமச்சீர் கல்வி தமிழ்பாடம் நல்லாருக்குப்பா!என்றாள் என் அன்பு மகள். என் மகள் தமிழை ரசிக்கின்றாள் என்பது எனக்கு இன்பமாய் இருந்தது. எங்கே நீ ரசித்ததில் சிலவற்றை சொல்லு!என்றேன். சொல்லிக் காட்டியது மட்டுமல்லாமல். இதை யூனிகோடில் டைப் பண்ணவா வாப்பாஎன்றதும், என் மகிழ்ச்சி இரட்டிப்பாக செய்”, என்றேன். நிறைய சம்பவங்கள் சொல்லி காட்டினாள். அரை மணி நேரம் முயன்று அதில் மூன்று சம்பவங்களை டைப் செய்து விட்டாள். இதோ அவள் தட்டச்சு செய்தவை கலரில் உள்ளது. இடையில் உள்ளது நாங்கள் பேசிக் கொண்டவை.
              நீலாம்பிகை அம்மையார் மறைமலையடிகளாரின் மகள் ஆவார். மறைமலையடிகள், தனித்தமிழ்மீது ஈடுபாடுகொண்டிருந்ததைப் போன்று நீலாம்பிகை அம்மையாரும் தனித்தமிழ்ப்பற்றுடன் திகழ்ந்தார். ஒருமுறை அவருடைய வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விருந்தில் கலந்து கொண்ட பண்டிதமணி மு. கதிரேசனார், “நீலம்பிகை இரசம் கொண்டு வாஎன்றார். உடனே அம்மையார், “ஐயா, இரசம் என்பது வடசொல்; சாறு என்று கூறலாமேஎன்றார். அவரும் உடனே, “ கருப்பாயி சாறு கொண்டு வாஎன்றார்; அம்மையார் விழித்தார். அவரோ, “என்னம்மா, நீலம் என்றால் கருப்பு; அம்பிகை என்றால் தாய்(ஆய்), உம்முடைய பெயரையும் தமிழ்ப்பெயராக்கிக் கருப்பாயி என்றழைத்தேன். சரிதானேஎன்றார். நீலாம்பிகை பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். 

ஏம்மா கருப்பாயின்னு சொன்னதுக்கு நீலாம்பிகை கோபப்படலையா? என்றதும் சிரித்தவளாய்இதை பாருங்கப்பா!, இதுல கடைசியிலே புலவர் சொல்ற காரணம் தான் சூப்பர்ப்பா!என்றாள்.

0 0 0 0 0 0

         புலவர் ஒருவரிடம் வறுமையால் வாடிய ஏழை ஒருவர் வந்தார். ஐயா, அன்னம் தருகஎன்றார். அன்னமா, அது நான்முகனிடத்திலன்றோ இருக்கும்; என்னிடத்தில் ஏது? “ ஐயா, ஆடையாவது தருகஎன்றார். ஆடையா, அது என்னிடமில்லையே; தயிரிலன்றோ இருக்கும். ஐயா, காசு தருகஎன்றார். காசா, அது கயவரின் மனத்திலன்றோ இருக்கும். ஐயா, நான் கேட்ப்பதற்கெல்லாம் மாறாகப் பொருள்கொண்டு பதில் கூறுகிறீர்களே! இதற்குக் காரணம் என்ன?” வறுமை தான் காரணம் என்றார் புலவர். (அன்னம்-சோறு, அன்னப்பறவை; ஆடை-உடை, பாலாடை; காசு- பணம், குற்றம்).

0 0 0 0 0 0 
        ஒருமுறை மன்னரும், புலவரும் ஆற்றுநீர் காலில்படும்படி நடந்து சென்றார். அப்போது புலவர் ஆற்றுநீரை அள்ளிக் குடித்தார். அதைப் பார்த்த மன்னர், “புலவரே! என் காலில் விழுந்த நீரைத்தானே குடித்தீர்என்றார். உடனே புலவர், “நீரே என்காலில் விழுந்தால் நான் என்ன செய்வது?” என்று நயம்படக் கூறினார்.    
   
மீண்டும் இவைகளை படித்ததும்

 "தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!"

என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வந்தது.
குறிப்பு: மேலே உள்ள ஓவியம் என் மூத்தமகள் சிறுவயதில் வரைந்தது.உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Post a Comment