தோழமையுடன்

Saturday, March 9, 2013

தன்னை அறிதல்

 தன்னை அறிந்தவன் தன் நாயனை (ரப்பை) அறிவான்என்பது ஆன்மீகத்தின் அடிப்படைப் பாடம். உங்களில் (பல அத்தாட்சிகள் உள்ளன) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? (51:21)  என்கிற வேதவரிகளின் விளக்கமேயிதுபல  நூற்றண்டுகளாக ஆன்மீக அறிஞர்களால் எடுத்தாளப்படும் இந்த வாசகம் நபிமொழி எனவும், அலி ரலியல்லாஹுத்தாலாவின் கூற்று எனவும் இரு வகை கருத்துகள் உண்டு. இதன் விளக்கமாய் அமைந்த பாடமோ மிகவும் ஆழ்ந்த கருத்துகளடங்கியது. அதில் ஒரு சிறு பகுதி அதன் முக்கியத்துவம் கருதி உங்கள் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றது:

 தன்னை அறிதல்அதாவது தன் சுயநிலையை அறிவதன் மகத்தான பயன்கள் இரண்டு:
  
  1. இணைவைப்பு (ஷிர்க்) எனும் பாவத்திலிருந்து மீள்வது. 
  2.  இறை நெருக்கம் (குர்பு)


அந்த வகையில் ஒரு இறைநம்பிக்கையாளனின் அடிப்படைத் தேவையிது

 ஏனெனில், முதலாவது அம்சம் தவிர்க்க வேண்டிய பாவம். இரண்டாவதோ அடைய வேண்டிய பாக்கியம்

இந்த இரண்டு மகத்தான பலன்களை தரும் தன்னை அறிதலை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்:

ஃபக்கீர் :

 ஃபக்கீர்என்ற நம் சுயநிலையை அறிய வேண்டியது தான்தன்னை அறிதலின்முதல் பாடம்.

டாக்டர். மீர் வலியுத்தீன் (ரஹ்) எழுதிய Quranic Sufism (உருதுவில்குர்ஆன் அவுர் தஸவ்வுஃப்’) மிக சிறந்த ஆன்மீக நூலாகும். என் குருநாதர் ஃபைஜி ஷாஹ் நூரி(ரஹ்) அவர்களின் இல்லமானபைத்துன் நூரில்இந்த உருது நூலை பலமுறை வாசிக்கச் செய்து ஆன்மீக பாடங்களை விளக்கியிருக்கின்றார்கள். அந்த நூலில் குர்ஆனின் அடிப்படையில்  ஃபக்கீர், அமீன், கலிஃபா, வலி என மனிதனின் நான்கு வகை நிலைகளை விளக்கியுள்ளார்கள். அதில் முதலாவது நிலை ஃபக்கீர்

ஃபக்கீர் என்றதும் சட்டென நம் நினைவில் வருவது கையில் தாயிரா கொட்டடித்து  யாசகம்  கேட்டு வருபவரைத் தான். ஆனால் குர்ஆன் கூறுவது தாயிரா ஃபக்கீரை அல்ல. ஒட்டு மொத்த மனித இனத்தையும் முன்னோக்கிஃபக்கீர்என்ற வார்த்தையில் அழைக்கிறது இறைவேதம்.

இந்த இறைவசனத்தை கவனியுங்கள்:

யா அய்யுஹன்னாஸுமனிதர்களே!

அன்துமுல் ஃபுக்ராஉ இலல்லாஹ்நீங்கள் இறைவன்பால் தேவையுடையவர்கள்.

வல்லாஹு ஹுவல் க(Ga)னியுல் ஹமீதுஇறைவனோ தேவையற்றவனாகவும், புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான். (35:15)

ஃபக்கீர் என்றால் தேவையுடைவர்என்பது தான் பொருளா? என சாதாரணமாக விளங்கிவிட வேண்டாம். இந்ததேவையுறுதல்என்பது மிகவும் ஆழ்ந்து அறியப்பட வேண்டிய ஒரு நிலை

நம் சுயத்தின் ஆரம்ப நிலையை இப்படி விவரிக்கிறது இறைவேதம்:

ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளி வருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன் இன்ன பொருள் என்றும்  கூறுவதற்கில்லாத நிலையிலிருந்தான். (அல் குர்ஆன் 76:1) 

இன்ன பொருள் என கூற முடியாத நிலை என்றால் என்ன? என்ற கேள்வி எழுகிறதல்லவா? இதை விளக்க  ஓவியனின் சிந்தனையில் உள்ள ஓவியத்தைஉவமையாக குறிப்பிடுகின்றார்கள் ஆன்மீக அறிஞர்கள்.

எப்படி என்பதை சற்று விளக்கமாக பார்ப்போம்:

ஒரு ஓவியம் இன்னும் வரையப்படவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது யாருடைய சிந்தனையில் அந்த ஓவியம் இருக்கிறதோ அந்த ஓவியனைத் தவிர வேறு யாரும் அதை என்னவென்று  கூற முடியாது. ஏனென்றால் இன்னும் அந்த ஓவியம் படைக்கப்படவில்லை. அந்த ஓவியர் தன் மனதில் ஒரு கடலின் உருவம் இருக்கிறது என்று சொன்னால். உங்களுக்கும் கடலைப்பற்றி தெரியும் என்பதால் அதை ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் இறைவன் உலகை படைக்குமுன் கடல், வானம், பூமி, மனிதன், மலை என எதை பற்றியும் யாருக்கும் என்ன பொருள் என்றே தெரியாது என்பதையும் இங்கே இணைத்துப் பாருங்கள். நாமும் பிற படைப்பினங்களும் படைக்கப்படும் முன் இறைவனின் ஞானத்தில் அவனால் மட்டுமே அறியப்பட்ட நிலையில் இருந்தோம். ஆகவே படைப்பினங்கள் படைக்கப்பட்டு, காட்சியில் வெளியாகும் வரை அதை நம் புலன் உணர்வுகளால் உணர முடியாது - அதை இன்ன பொருளென்றும் கூற முடியாது.  

சுருக்கமாக சொன்னால் நம் சுயம் இறைவனின் அறிவில் மட்டுமே இருந்தது.
நமக்கு நம்மையும் தெரியாது, பிறரையும் தெரியாது. ஏனென்றால் நாம் இன்னும் சிருஷ்டிக்கப்படவில்லை.

படைக்கப்பட்ட நம் முந்திய இருப்பு ஆன்ம நிலை.

அந்நிலையில் நமக்கு நம் உணர்வை (Self consciousness) தந்தான் இறைவன்
இந்த உடலுடன் கூடிய வாழ்வு இன்னும்  துவங்கவில்லை.

அந்த ஆன்மநிலையில்_


நீதான் எங்கள் இறைவன் (ரப்பு) என சாட்சி சொன்னோம்.

பின்னர்,

உடல் வந்தது

உயிர் வந்தது.

ஒற்றை ஒரு புள்ளியில் துவங்கிய உணர்வு நிலை consciousness பார்த்தறிதல், கேட்டறிதல், முகர்ந்தறிதல், சுவைத்தறிதல், தொட்டறிதல் என ஐம்புலன் உணர்வாய் மலர்ந்தது.

ஏதுமற்றிருந்த நமக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தது.

كُلًّ مِّنْ عِندِ اللّهِ

அனைத்தும் இறைவன் புறத்திலிருந்தே இருக்கிறது என்று (நபியே!) நீர் கூறி விடுவீராக.(4:78) என பதிலளிக்கிறது இறைவேதம்.

0 0 0 0
'எனது கண்ணாடி', 'எனது சட்டை' என்று நான் சொன்னால் கண்ணாடி, சட்டை என்பது நானல்ல. அவைகளை நான் அணிந்திருக்கின்றேன் என்பதை தெளிவாக அறிந்துள்ளோம்..

அதைப்போலவே 'எனது உடல்', 'எனது உள்ளம்', 'எனது உயிர்' என சொல்லும் போது உடல், உள்ளம், உயிர் என்பது நானல்ல. உடல், உள்ளம், உயிரை இரவல் இணைப்பாகக் கொண்டது  நம் இந்த வாழ்க்கை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் ஒவ்வொரு நொடியிலும் உடல், உள்ளம், உயிர் கொண்ட இந்த இருப்பு இடைவிடாமல் இறைவனால் வழங்கப்படுகின்றது. கவனிக்கவும் இடைவிடாமல் இறைவனால் வழங்கப்படுகின்றது.

இதற்கு ஆன்மீக அறிஞர்கள் எரியும் விளக்கை உவமையாக கூறுகின்றார்கள்.

விளக்கின் எண்ணெய் எரிந்து 'சுடரை' காட்டிக் கொண்டிருக்கிறது. பார்வையில் சுடர் ஒரே நிலையில் காணப்பட்டாலும் ஒவ்வொரு வினாடியும் முதல் சுடர் அந்த இடத்தை விட்டும்  அகன்று விட புதிய சுடர் அதே நேரத்தில் இடைவெளி இல்லாமல் தோன்றி 'சுடரை' ஒரே நிலையில் காட்டிக் கொண்டிருக்கிறது.

நாமும், சர்வகோடி சிருஷ்டிகளும் இடைவிடாமல் நிலைமாற்றத்திற்கு உள்ளாகிறோம்

உலகம் ஒவ்வொரு வினாடியும் புதிது புதிதாய் காட்சியளிக்கின்றது.

விதை மரமாகிறது,

காய் கனியாகிறது,

நம் உடலில் ஆயிரக்கணக்கான செல்கள் தினமும் அழிந்து புதிய செல்கள் உருவாகின்றன. ஐந்து முதல் ஏழு வருடத்தில் உடலின் அனைத்து செல்களுமே புதுப்பிக்கப்பட்டு விடுகின்றது

எங்கும் மாற்றம். எதிலும் மாற்றம்.


பார்வையில் விளக்கின் சுடர் ஒரே நிலையில் காணப்பட்டாலும் ஒவ்வொரு வினாடியும் முதல் சுடர் அந்த இடத்தை விட்டும்  அகன்று விட புதிய சுடர் அதே நேரத்தில் இடைவெளி இல்லாமல் தோன்றி சுடரை ஒரே நிலையில் காட்டிக் கொண்டிப்பதைப் போல ஒவ்வொரு நொடியிலும் நம் இருப்பின் நிலை மாறிக் கொண்டே இருக்கிறது.

ஆழ்ந்து கவனித்தால் எதுவும் சுயமில்லாத ஃபக்கீர்என்ற நிலை நம் ஆதி நிலை மட்டுமல்ல. அது தான் என்றும் மாறா நம் சொந்த நிலை. நாம் உடல், உள்ளம், உயிரை இரவலாகக் (அமானிதம்) கொண்டு காட்சியளிப்பது தான் அதிசயத்திலும் அதிசயம்.

அமானிதத்தில் என்ன அதிசயம் என்கின்றீர்களா?

ஒரு உதாரணம் சொல்கின்றேன் கேளுங்கள்.

உங்களிடத்தில் ஒரு கார் இருக்கிறது. நீங்கள் அதை எனக்கு சில காலம் இரவலாக தருகின்றீர்கள் என கொள்வோம்.

காரை வாங்கி உபயோகிக்க முதலில் நான் என்ற ஒருவன் இருக்க வேண்டுமல்லவா?

பாலை குவளையில் ஊற்றுகின்றோம் என்றால். பாலை தன்னில் வாங்கிக் கொள்ள குவளை என்ற ஒரு பாத்திரம் முதலில் இருக்க வேண்டும் அல்லவா?

இன்ன பொருள் என சொல்ல முடியாத ஏதுமற்ற நம் சுயம் உடல், உள்ளம், உயிர் கொண்டு காட்சியளிப்பது எப்படி? குவளை இன்றி பால் தாங்கி நிற்க்கும் குவளயத்தை சிந்தித்து பாருங்கள்.

நமது இருப்பே (existence) ஒரு பேரதிசயம்.

0000

இன்னல்லாஹ அலா குல்லி ஷையின் வக்கீல்.

எல்லா படைப்பினகளின் வக்கீலாக இறைவன் இருக்கின்றான் என்கிறது இறைவேதம்.

கட்சிக்காரனின் சார்பில் ஆஜராவது 'வக்கீலின்' பணி.  

இறைவனை தன் காரியங்களில் வக்கீலாக்கிக் கொள்வது தவக்கல் எனும் பரம்சாட்டலின் முக்கிய அம்சம்.

0000

சுருக்கமாக சொன்னால்,

 ஃபக்கீர் னும் சுயாமாய் காட்சியளிக்க முடியாத தன் சுயத்தை தெளிவாக உணர்ந்தால் இருப்பவை எல்லாம்அமானத்என்பது புரியும்.

எல்லா படைப்பினகளின் வக்கீலாக இறைவன் இருக்கின்றான் என்பதை உணர்ந்தால் அமானத்தின் நுட்பம் புரியும்.

இறை நெருக்கத்தின் வாசல்கள் திறக்கும்

முகர்ரபீன்கள் (இறைநெருக்கம் பெற்றவர்கள்)  முந்தி கொண்டவர்கள் என்கிறது இறைவேதம்.

இறைஞானத்தின் நுட்பமான விளக்கங்களை முறையான இறைஞானியரை அடைந்து விளக்கம் பெருவது நலம்.உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment