தோழமையுடன்

Saturday, January 28, 2012

இணைவைப்பு எனும் கற்பிதமும் ஏகத்துவ மெய்நிலையும்


''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை! என்கிறது இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்.
 
சுயமாக இருப்பவன். யாராலும் படைக்கப்படாதவன் இறைவன். அப்படி சுயமாக இருக்கும் படைப்பாளன் ஒன்றுக்கு மேல் இருந்திருந்தால் அவர்களிடையே போட்டி நிலவி உலகின் இயக்கத்தில் குழப்பம் விழைந்திருக்கும். அந்த  ஒற்றை ஒருவனான ஏகஇறைவனைத் தான் பிரம்மன், கர்த்தர், அல்லாஹ், ஹுதா, God என பல பெயர்களில் அழைக்கின்றோம்.



அந்த ஏகப்பரம் பொருளுக்கு இணையாக, போட்டியாக, பங்காளியாக இன்னொன்றை கருதுவதற்கு பெயர் இணை வைத்தல் (ஷிர்க்) எனப்படும். ‘ஷிர்க் என்பதற்கு இணைவைத்தல். பங்காளியாக்குதல் என்பது சொற்பொருள். அதாவது இறைவனுக்கு இணைவைத்தல். பங்காளியாக்குதல் என்பது அதன் பொருள்.

இணைவைப்பு எனும் கற்பிதம்

(நபியே!) அவர்கள் எவ்வாறு இறைவனுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்;. இதுவே தெளிவான பாவமாக இருப்பதற்கு போதுமானது. (அல் குர்ஆன் 4:50)
இணைவைத்தல் என்பதை பொய். கற்பனை என்கிறது இறைவேதம். மனிதர்கள் இப்படி ஒரு பொய்யை கற்பனை செய்ய காரணம் என்ன? சற்று சிந்தித்து பார்ப்போம்.

வானம், பூமி இன்னும் பாதளத்தில் உள்ள அனைத்தும் இறைவனுக்குத் தான் சொந்தம் என்கிறது இறைவேதம். மனித உள்ளம் என்பது ஓரிறை கொள்கையை ஏற்கும் இயற்கைத் தன்மையைக் கொண்டது. அதனால் அனைத்தும் இறைவனுக்குத் தான் சொந்தம் என்ற கொள்கையை ஏற்கக் கூடியது அதன் இயற்கையான அமைப்பு. ஆனால் கண்ணால் காணும் காட்சி அதற்கு மாற்றமாய் உள்ளது. பிரத்தியட்சமான பார்வையில் ஒவ்வொரு அடி நிலத்திற்கும், அதில் உள்ளவைகளுக்கும் தனித் தனியே எண்ணற்ற உரிமையாளர்களை பார்க்கின்றோம். எனது எல்லை என வானையும், கடலையும் கூட பங்கு போட்டு சொந்தம் கொண்டாடுகிறது தேசங்கள். இந்த நிலையில் இறைவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு அடி நிலம் கூட கண்களில் படவில்லை. கோயில்களும், பள்ளிவாயில்களும், தேவாலயங்கள் கூட அறநிலையங்கள், ஜமாத்துகள், மடாலயகுழுக்களுக்கோ இல்லை தனிமனிதர்களுக்கோ சொந்தம் என்ற நிலையில் தனக்கென ஓரடி நிலமின்றி இருப்பவனாக தென்படுகின்றான் இறைவன்

ஓரிரை கொள்கைக்கு சாட்சி பகரும் உள்ளம்  இவையெல்லாம் இறைவனுக்கு சொந்தமானவை. இறைவனால் மனிதனுக்கு  இரவலாக (அமானிதம்) வழங்கப்பட்டவை என சாட்சி சொல்கிறது. ஆனால் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆதிக்கம் பெற்றவனாக சிருஷ்டிகளை காணும் மனம் மதிமயங்கி இறைவனின் தயவின்றி சிருஷ்டிகள் தான் தன் தேவைகளை நிறைவேற்றுகிறது என நம்புகிறது. அதனால் முற்றிலும்  சிருஷ்டிகளின் பக்கமே சாய்கிறது. 

செயல்படுவதால் தானே உரிமை நிலை நாட்டப்படுகின்றது. செயல்படுவதற்கு சக்தி தேவை. சக்தி அடங்கலும் இறைவனுக்கே உரியது. இறைவனைக் கொண்டே தவிர யாருக்கும் சக்தியென்பதே இல்லை என்ற ஓரிரை கொள்கைக்கு சாட்சி பகருகின்றது உள்ளம்.  

இல்லை. இல்லை கொடுக்கவோ, தடுக்கவோ சிருஷ்டிகளான இவர்களுக்குத் தான் உரிமையும் அதை தரும் வல்லமையும் இருக்கின்றது என்கின்றது கண்கூடாய் காணும் காட்சிகள்.

என் மீது இவர் பார்வை விழுந்தால்…...
என் கோரிக்கை இவர் காதுகளில் விழுந்தால்…
இவர் என் தேவையை அறிந்து கொண்டால்….
இவர் மட்டும் எனக்கு கொடுக்க நாடி விட்டால்….
இவர் எனக்கு தர சொல்லி ஒரு வார்த்தை சொல்லி விட்டால்….

என உயிர், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு முதலிய பண்புகள் கொண்டு காட்சியளிக்கும் சிருஷ்டிகள் பக்கம் மனம் சாய்கிறது.

தருகின்றேன் என சொன்ன பணக்காரன் கொடுக்கும் முன்பே இறந்து போனதை பார்க்கின்றான். இப்படி தன் வாழ்வே தன் கைவசம் இல்லாதவன், இறந்து போக கூடியவனை நம்பி ஏமாந்து விட்டேனே என தவிக்கின்றது மனம். 

இறப்பே இல்லாத இறைவன் பிடறி நரம்பை விட சமீபமாக இருக்கின்றான். உன்னை எப்போதும் பார்த்தவனாகவே இருக்கின்றான். உன் தேவைகளை அறிந்தவனாக இருக்கின்றான். நீ மனதால் அழைத்தாலும் கேட்கக் கூடியவனாக இருக்கின்றான். அவனிடமே கேள் என்கிறது உள்ளம். 

நான் பார்க்குமிடமெல்லாம் சிருஷ்டிகளே என் பார்வையில் நிறைந்திருக்க என் தேவைகளின் போது இறைவனை முன்னோக்க முடியவில்லை என பரிதவிக்கிறது மனம். பார்வைக்கு தூரமான இறைவனை விட்டு பார்க்க நெருக்கமாயிருக்கும் சிருஷ்டிகளிடம் சாய்கிறது. 
இவ்வாறு ஓரிறையிடம் உதவிதேடுவதை விட்டு பல்வேறு தெய்வங்களின் (இலாஹ்) பக்கம் உள்ளம் சாய்கிறது.

“நமது சகல கேடுகளுக்கும் மூலக்காரணம் இறைவனை விட்டுத் தூரமாகி கிடப்பதும், இறைவனல்லாதவற்றை பற்றிப் பிடித்து கொண்டிருப்பதுமேயாகும்” என கூறுகின்றார்கள் மெய்நிலைகண்ட ஞானி சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்).

இதை நன்கு மனதில் கொண்டு இதுவரை கூறியதை சிந்தித்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படும்.

சிருஷ்டிகள் சுயசக்தியில்லாதவை என உணரும் வரை அவைகளை பொருளாதாரத்தில் சுயஉரிமை பெற்றவைகளாகவே பார்த்தோம்.

இறைவனின் தயவில்லாமல் உயிர்வாழ முடியாதவை என்பதை உணரும் வரை சுயமான அறிவு நாட்டம் வல்லமை கொண்டு சுயமாக செயல்படுவதாக சிருஷ்டிகளிடம் ஆதரவு வைத்தோம்.

இவ்வளவுக்கும் காரணம் ஒரு அடிப்படை தவறு. அது தான் இணைவைப்பின் தலைவாசல்.
அது “சிருஷ்டிகள் சுயமாக இறைவனைவிட்டு தனித்த நிலையில் தன் தானே இருக்கின்றன” என்பது தான். 

சிருஷ்டிகள் ஒரு வினாடி கூட சுயமாக இருக்க முடியாதவை. அவைகளுக்கு இருப்பை வழங்கக் கூடியவன் அந்த சிருஷ்டிகளுடனிருக்கிறான் என்ற இறைநெருக்கத்தை உணராதவரை, கோடானு கோடியாய் நிற்கும் பன்மையை இடைவிடாமல் காட்டும் அவன் ஏகத்துவ ஒருமையை நெருக்கமாக உணரும் வரை இணைவைப்பதை விட்டு யார் தான் தப்ப முடியும்!.

ஏகத்துவம் எனும் மெய்நிலை

தவ்ஹீத் - ஏகத்துவம் என்பது தவஹ்ஹுத் ஒன்றுபடுத்துவது என்பதிலிருந்து வந்தது. அல்லாஹ் ஒருவன் (ONENESS OF ALLAH) என்பதல்ல தவ்ஹீத். அல்லாஹ் என்பது பலர் என யாரும் கூறவில்லை. தேவையை நிறைவேற்றும் இறைத் தன்மை (உலூஹிய்யத்) பல சிருஷ்டிகளில் காணப்படுகின்றது.  அந்த இறைத்தன்மைக்கு (உலூஹிய்யத்துக்கு) சொந்தக்காரனான இலாஹ் ஒருவன் (ONENESS OF ILAH) என்பது தான் தவ்ஹீத்.

ஏகத்துவ நம்பிக்கையின் அடிப்படையில் தன் பார்வையை ஆக்கிக் கொண்ட நம்பிக்கையாளர் “சிருஷ்டியே! நீ என் தேவையை சுயமாக நிறைவேற்றவில்லை. ஏனென்றால் நீயே சுயமாக இல்லை, அதனால் உன் தன்மைகளும் சுயமாய் இல்லை! உன்னில் காணப்படும் செயலாற்றலும், உடமைகளும் உனக்குச் சுயமாய் இல்லை. ஏதும் சுயமற்ற உன்னால் இறைவனின் தயவின்றி எந்தத் தேவையையும் நிறைவேற்ற முடியாது. உன்னுடனும், மற்ற சிருஷ்டிகளுடனும் தன் சொந்த உள்ளமையைக் கொண்டு ஏகமாய் உடன் இருந்து தன் தனித்த (unique) உள்ளமை, பண்புகள், செயல்கள், உடமைகளால் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் இறைவன் தான் உங்கள் போர்வையில் எனது தேவையை நிறைவேற்றியவன்” என எங்கும் சூழ்ந்திருக்கும் அவன் இறைத்தன்மையை ஒன்று படுத்துவார்.  இப்படி ஒன்றுபடுத்திக் காட்டும் Unity in multiplicity தான் நபிமார்களின் முதன்மையான பணியாய் இருந்தது.
0  0  0  0
சில வருடங்களுக்கு முன்பு துபாய் கோட்டை பள்ளியில் என் ஆன்மீக குருநாதரின் அன்பு மகனார் ஷெய்கு நூரானி ஷாஹ் ஃபைஜி ஹஜ்ரத் தௌஹீத், ஷிர்க் பற்றி உரையாற்றினார்கள்:

 “அல்லாவைத் தவிர யாரிடமும் கேட்க கூடாது என்பதல்ல தௌஹீத்.
அல்லாவைத் தவிர யாரிடமும் கேட்க முடியாது என்பதை உணர்வது தான் தௌஹீது” என்று.
0  0  0  0
மேலும் விளக்கம் வேண்டின் இந்த சுட்டிகளை பார்வையிடுங்கள்.
















1 comment:

அரபுத்தமிழன் said...

//அல்லாஹ் ஒருவன் (ONENESS OF ALLAH) என்பதல்ல தவ்ஹீத்.
அந்த இறைத்தன்மைக்கு (உலூஹிய்யத்துக்கு) சொந்தக்காரனான இலாஹ் ஒருவன் (ONENESS OF ILAH) என்பது தான் தவ்ஹீத்.

“அல்லாவைத் தவிர யாரிடமும் கேட்க கூடாது என்பதல்ல தௌஹீத்.
அல்லாவைத் தவிர யாரிடமும் கேட்க முடியாது என்பதை உணர்வது தான் தௌஹீது” என்று. //

மிக அருமையான விளக்கம்.