தோழமையுடன்

Thursday, January 12, 2012

மெலிதாக ஒரு தற்கொலை


ஒரு நடிகை சொன்னாள் : நான் குளித்து கொண்டிருக்கும் போது ஒரு பெரிய அலையில் என் மேலாடை போய் விட்டது. அப்புறம்வெட்கமாய் இருந்துச்சு. கண்ணை மூடி கொண்டு ஓடி வந்துட்டேன்.” 

அஷ்ரஃப் இதற்கெல்லாம் சிரிக்கமாட்டான் என்று தெரிந்தே அந்த ஹைதர் காலத்து நகைச்சுவை துணுக்கை சொன்னான் இக்பால்.

என் மனக்கண்ணை மூடிக் கொண்டு ஓடிய நிர்வாண ஓட்டங்களின் reality என்னை சுடுகிறது இக்பால்என்றான் அஷ்ரஃப்.


இக்பால், அஷ்ரஃப் இன்னும் முப்பது பயணிகளுடன் விரைவு பேருந்து சென்னையை நோக்கி போய் கொண்டிருந்தது.

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல!
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல!
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல!
நீ இல்லாமல் நானும் நானல்ல!

என்று ஒளி,ஓலி பரப்பியது பேருந்தில் இருந்த வீடியோ.

அஷ்ரப் மிகவும் விரும்பும் பாடல். அந்த பாடலைப் பற்றி பேச ஆரம்பித்தால் பத்து நிமிசமாவது விளக்காமல் ஓயமாட்டான். இன்று பாடலை கவனிக்காமல் அஷ்ரஃப் சிந்தனையில் மூழ்கி இருந்தது இக்பாலை கவலையடைய செய்ததுஅவன் கவலைக்கு காரணம் இல்லாமல் இல்லை.

புதுகவிதையிலிருந்து, ஆங்கில இலக்கியம், சங்க காலப் பாடல் வரை எளிமையும், கவர்ச்சியுமாய்  ரீமிக்ஸ் பண்ணி ஒவ்வொரு முறையும் புதுப் புது விளக்கங்களாக அஷ்ரஃப் பேசும் போதெல்லாம் இக்பால் வாய் பிளந்து கேட்பான். இக்பாலுக்கு friend, philosopher, guide எல்லாம் அஷ்ரஃப்தான்.

அத்தகைய மேதை அஷ்ரஃப் இரண்டு தினங்களுக்கு முன் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றான் என்பது இக்பாலை வெகுவாக கலக்கிவிட்டது

இடமாற்றம் இல்லாமல் எளிதில் மனம் மாறாது என்பதால் தான் அஷ்ரஃபை கட்டாயப்படுத்தி சென்னைக்கு அழைத்து செல்கிறான் இக்பால். மெல்ல பேசி அவனை நல்ல மனோதத்துவ மருத்துவரிடம் அவனை அழைத்து செல்ல வேண்டும் என்பதும் இக்பாலின் நோக்கம்.

என் மனக்கண்ணை மூடிக் கொண்டு ஓடிய நிர்வாண ஓட்டங்களின் reality என்னை சுடுகிறது இக்பால்என இரண்டாவது முறையாக சொன்னான் அஷ்ரஃப்.

ஏன் இப்படி நாடகபாணியிலே பேசுறான் என நினைத்தாலும் மௌனமாக இருப்பதைவிட அஷ்ரஃப் பேசுவதே இக்பாலுக்கு சற்று ஆறுதல் தர, “நீ சொல்றது விளங்கல எனக்கு விளக்கமா சொல்லுஎன்றான்.

என் நிலை எனக்கு உவப்பானதாக இல்லாவிட்டாலும் கூட ஒப்புக் கொள்ள கூடிய நிலையில் இருக்க வேண்டியது குறிப்பாக மன ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அதற்கு என்னால் ஒப்புக் கொள்ளப்பட்ட மதிப்பீடுகளுக்கு values and standards க்கு அந்தரங்கத்தில் உண்மையானவனாக இருக்க வேண்டியது தவிர்க்க முடியாத அவசியம். ஆனால் அப்படி இல்லாத என் உண்மை நிலையை மறைத்து என் சக மனிதர்களிடம் என் இமேஜை காப்பாற்றிக் கொள்ளப் போட்ட வேசங்கள், வியாக்கியானங்களில் நானே மயங்கி என் நிலையில் ஒரு தற்காலிக திருப்தி அடைந்தாலும், பாசாங்கு கலைந்த தனிமை என் அமைதியை குலைக்கின்றது” என்றான் அஷ்ரஃப். 

அருமையான புத்தகங்கள் இருக்க தனிமை என புலம்புவதன் அர்த்தம் விளங்காத இக்பால்,
நீதான் தீவிர இலக்கிய வாசகனாச்சே. இப்பல்லாம் புத்தங்கள் வாசிப்பதில்லையா? ” என்றான்.

தீவிர இலக்கியம் …” என்ற வார்த்தகளை இரண்டு முறை சொல்லிப் பார்த்த அஷ்ரஃப், “அந்த தீவிரவாதிகளின் ஈவு இரக்கமற்ற உண்மைகள் என் கனவுகளை, பாசாங்குகளை கிழித்து போட்டு ஆசுவாசத்தில் தள்ளியது தான் மிச்சம்என்றான்.

படிக்கும்போது பல்வேறு மனிதர்களின் அனுபவ தரிசனங்களால் அறிவு கூர்மையும், மனித நேயமும் அதிகப்படுகிறதல்லவா?” என்ற இக்பால் தானும் அஷ்ரஃபுடைய பாணியில் பேசுவதை உணர்ந்தான்.

பிரச்சனையே அது தானே. என் எளிமை எனக்கு பறிபோய் விட்டதே இக்பால். என் innocent pleasure  எல்லாம் எனக்கு பறிபோய் விட்டது. தனிமையின் கேள்விகளிலிருந்து தப்பிக்க நான் கற்று வைத்திருந்த எளிய வழியான light reading புத்தகங்கள், துணுக்கு தோரணங்களான நாடகங்கள். கெட்டுகதர்களில் இருந்த ஆர்வமும் இவர்கள் ஏற்படுத்திய புதிய விழிப்பு நிலையால் சன்னம் சன்னமாக சிதைந்து வருகின்றது.I lost my sweet innocence” என்றான் அஷ்ரஃப். 

உண்மையை, சத்தியத்தை நீ நேசிக்கின்றவன் தானே இந்த சத்திய ஆவேசம் அவர்கள் உனக்கு ஏற்றி வைத்த ஒளியல்லவா? அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரத்தில் குற்றம் சாட்டி புலம்புவது சரியா? “ என் நன்றி கொன்றவர்க்கும் உய்வுண்டாம்……” என்ற இக்பாலை இடைமறித்து,

இருங்க திருவள்ளுவர் சார். சின்ன சின்ன வண்ணக் கனவுகளைக் கொண்டு சமாதானமடைந்து வந்த என் மனதை இந்த புதிய கூர்மை குத்தி கிழிக்கின்றதே. இந்த கேள்விகளின் ஊர்வலம் அதிகமாக, அதிகமாக என் மனதின் கையிருப்பான பாசாங்குகளினால் அவற்றை கட்டுபடுத்த முடியவில்லையே?” என்றான்.

“இவ்வளவு தெளிவா பேசுற நீ ஏன் தூக்க மாத்திரையை போட்ட”

“இவ்வளவு நேரமா கேட்காம வற்றியேன்னு பார்த்தேன். நான் தற்கொலை முயற்சியெல்லாம் செய்யலடா. வழக்கமா இரண்டு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வேன். மறதியா இரண்டு தடவை எடுத்துட்டேன். திடீரென ஞாபகம் வந்தவுடன் நானே தான் டாக்டரை அழைத்தேன். அம்மா தான் ரொம்ப பயந்துட்டாங்க”

இக்பாலால் அவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை. நம்பாதிருக்கவும் முடியவில்லை.
“இரண்டு துக்க மாத்திரை சாப்பிட்டுட்டு தூங்குற அளவுக்கு என்ன பிரச்சனை?” என்றான் அஷ்ரஃபிடம்.

“பல நேரங்களில் என்னையே என்னால சகிச்சுக்க முடியல. அது தான் என் பிரச்சனை!”

“ராத்திரில தூக்கம் வராட்டா ஒழு (அங்க சுத்தம்) செஞ்சுசுட்டு தொழுவு. கொஞ்ச நேரம் தனிமையில் அமர்ந்து திக்ர் (தியானம்) செய். உன் மன நிலைய இறைவனிடம் சொல்லி மன்றாடு. முடிந்தால் கண்ணீர் விட்டு அழுது கேளு மனசு லேசாயிடும்” என்ற இக்பாலிடம்,

“இக்பால் எனக்கு தான் இறைவன், வணக்கம் இதிலெல்லாம் நம்பிக்கையில்லைன்னு உனக்கு தெரியுமேடா?” என்றான்.

"நம்பவேணாம்னு எது உன்னை தடுக்கிறது?" என்றான் இக்பால்.

"என்னால் கேள்வி கேட்காமல் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது தான் உனக்கு தெரியுமே! உண்மையை சொன்னால் இறைவனை என்னால் ஏற்று கொள்ள முடியாமல் இருப்பதற்கு எனக்கு சிறிது வருத்தம் கூட உண்டு" என்றான்அஷ்ரஃப்.

சிறிது நேரம் இருவரும் மௌனமாய் இருந்தார்கள். அஷ்ரஃப் அந்த மௌனத்தை  கலைத்தான்.'கேள்விகள் மட்டுமே மிஞ்சி நிற்கும் வாழ்வு என்ன வாழ்வு. தெளிவை தராத அறிவு என்ன அறிவு? வெறும் Intellectual pleasureக்காக சேகரித்த குப்பைகள் தானோ' என தனக்குள்ளே முணுமுணுத்து கொண்ட அஷ்ரஃப், "அஞ்ஞானிகளிடம் இரண்டு அறியாமைகள் இருகின்றன ஒன்று அறியாமை என்ற அறியாமை  மற்றொன்று அறிவு என்ற அறியாமை. இவ்விரண்டும் நீங்க வேண்டுமே தவிர ஒன்று நீங்கி மற்றொன்று மிஞ்ச வேண்டும் என்பது அஞ்ஞானம் என்கின்றார் ரமணர்" என சிரித்தான்.


ஜே.கிருஷ்ண மூர்த்தியின் அறிந்தவற்றிலிருந்து விடுதலை எனக்கு நீ தானே பரிசளித்தாய்.
நீ அதை சிந்தித்து பார்த்தாயா?ரமணர் , ஜே.கிருஷ்ண மூர்த்திமட்டுமல்ல 900 வருடத்துக்கு முந்திய இமாம் கஸ்ஸாலி கூட அறிந்தவற்றிலிருந்து விடுதலை பெறுவதை பற்றி கூறுகிறார்கள் என்ற இக்பால்,

நமது உள்ளம் என்பது ஒரு குளம் என்றால், ஐம்புலன்களும் அதற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்களாக இருக்கின்றன. அந்த குளத்தின் அடியிலிருந்து தெளிவான தண்ணீர் ஊற்றெடுக்க விரும்பினால் சிறிது கால அவகாசத்திற்காவது இந்த கால்வாய்கள் அதில் தண்ணீர் கொண்டு போகாது நிறுத்த வேண்டும். அந்த கால்வாய்கள் கொண்டு வந்து சேர்த்த சேறு சகதிகளையும் நீக்க வேண்டும். பின்னர் குளத்தின் அடிக்கரையை தேண்டினால் சுத்தமான தண்ணீர் சுரக்கும். இது போன்று புறமார்க்கங்களில் நாம் எய்திக் கொண்ட அறிவை நமது உள்ளத்தில் துவேஷமாய் உறைந்துவிடும் இயல்புள்ள இந்த அறிவை - அப்பால் அகற்றினால் தான் ஆத்மீக அறிவாகிய ஊற்றுக்கண் திறக்கும் என்கிறார்கள் இமாம் கஸ்ஸாலி” என்று சொல்லி முடித்தான்.

“இந்த விசயத்துல எல்லோருக்கும் ஒரே சிலபஸா” என சிரித்தான் அஷ்ரஃப்.

நேரம் செல்ல செல்ல தூக்கம் கண்களை அழுத்தவே இக்பால் அசந்து தூங்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அஷ்ரஃப் இக்பாலை எழுப்பினான்.

“சென்னை வந்து விட்டதா என அரை தூக்கத்தில் கேட்ட இக்பாலிடம்,”டேய் தூங்காதேடா! ஏதாவது பேசிக்கிட்டே வாடா. சும்மா உட்கார்திருந்தால் ஓடுகின்ற பஸ்ஸிலிருந்து வெளியில் குதிக்கனும் தோணுது!” என்றான்.

இக்பாலின் தூக்கம் கலைந்து கவலையுடன் அஷ்ரஃபை பார்த்தான்.

"பயப்படாதே! நாளைக்கு டாக்டரை பார்க்கலாம்" என்றான் அஷ்ரஃப் பரிதாபமான இளம்சிரிப்புடன்.Post a Comment