புல்லாங்குழலில் வந்த ரோல் மாடல் சிறுகதைப் பற்றி கவிஞர் தாஜ் என்னும் அன்பரின் விமரிசனப்பார்வை. ஆபிதீன் பக்கங்களில் வெளிவந்தது நண்பர்களும் எழுத முன்வர வேண்டும் என தூண்டுதலுக்காக உங்கள் பார்வைக்கு.
பார்வை : “ரோல் மாடல்” - தாஜ்
விட்டால் மௌலவிகளும் ஆலிம்ஷாக்களும் இஸ்லாமிய பேனா, இஸ்லாமிய பென்சில், இஸ்லாமிய பேப்பர்தான் உபயோகிக்கவேண்டும் என்று சொல்லி ‘இ(ஸ்லாமிய) கலப்பையால்’ நம்மை அடிக்கவும் செய்வார்கள் போலும். வேடிக்கையாக இருக்கிறது…
அடுத்து வருவது , தலைவர் தாஜின் பார்வை. ‘ஹலோ’ என்றதுமே அட்வைஸ்களாக இப்போதெல்லாம் பொழிய ஆரம்பிக்கிற நண்பர் தாஜின் பார்வை. ஜானகிராமனிலிருந்து ஜாகீர்ராஜா வரை வாசிக்கிற நம் நூருல்அமீனையும் விடவில்லை அவர் கிண்டல். வாழ்க இஸ்லாமிய இலக்கியம்! – ஆபிதீன்
**
பார்வை: நூருல் அமீனின் ‘ரோல் மாடல்’
தாஜ்
சமீபத்தில்
நூருல் அமீனின்
‘ரோல் மாடல்’
சிறுகதையைப் படித்தேன்.
கதையின் பெயர்
ஆங்கிலமாக இருந்தாலும்
தமிழில்தான் எழுதி இருக்கிறார்.
ப்ரியத்தையும்
நெகிழ்ச்சியையும் களமாக்கி
இஸ்லாமிய
நெறிமுறைகளில் பயணித்து
மறவாமல்
தன் ஆன்மீக குருவை
பாடலால் துதித்து
கதையை நிறைவு செய்திருக்கிறார்!
பாத்திஹா ஓதி
ஆரம்பித்திருக்கலாம்
விட்டுவிட்டார்.
மறந்திருக்கலாம்.
என்றாலும் பரவாயில்லை.
அவர் நினைத்து எழுதிய மாதிரியே
‘ரோல் மாடல்’
வளமான
இஸ்லாமியப் பண்புகள் கொண்ட
கதையாகவே மலர்ந்திருக்கிறது.
ஆன்மீகத்தை
உயிர் மூச்சாய் போற்றி
சூஃபியாக சஞ்சரிக்கும்
நண்பர் நூருல் அமீன்,
இஸ்லாமியப் பண்புகளை
அதிகத்திற்கு அதிகம் சுமப்பவர்.
அப்படி சுமப்பது சுகமென்றும்
மனித குலம் முழுவதும்
அப்படி சுமந்தே
வாழவேண்டும் எனவும் நினைப்பவர்!
அவரது இக் கதை
அவர் கொண்ட நெறிகளுக்கு
கிஞ்சித்தும் பழுதில்லாமல்
முழுமை கொண்டிருப்பதை
இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும்!
கொண்ட நெறி பிறழாமல்
கொள்கைத் தவறாமல்
எண்ணத்தில் மிளிந்த சம்பவங்கள்
அத்தனைக்கும்
பதிவில் வடிவம் காண்பதென்பது
அசாத்தியமானது.
அந்த வகையில்…
நூருல் அமீன் சாதித்திருக்கிறார்.
தன் படைப்பாற்றலின்
திறமைக் குறித்து நிரம்பவே
அவர் பெருமைக் கொள்ளலாம்.
தகும்.
*
மகள் ஆசிகா,
தன்னை ;ரோல் மாடலாக’
பார்த்ததிலான நெகிழ்ச்சியை
அந்தப் ப்ரியத்தை
பதிவு செய்ய முனைந்த நூருல் அமீன்,
தனக்குள்ளே சில காலம்
பின்னோக்கி நகர்ந்து
தனது இளமைப் பருவத்தில் சஞ்சரித்து
தன் தந்தையிடம் கொண்ட பாசத்தை
அதனோடான
சில நெகிழ்ச்சியான நினைவுகளை
இக்கதையில் பதிவு செய்திருக்கிறார்.
இது விசேசமான கோணம்.
இக்கதையினை
வாசிக்கும் வாசகன்
அது தரும் கிரியையினால்
இளமைப் பருவத்தில்
தான் கொண்ட இந்த அளவிலான
பாசத்தை / நெகிழ்வை
கொஞ்ச நேரமேணும்
அசைப் போட்டுவான்.
போடாமலும் முடியாது.
இக்கதை தரும் கிரியை அப்படி!
இப்படி
மனித நெஞ்சங்களில்
ஈரத்தை சுரக்கவைக்கும்
நிகழ்வுகளை/
வடிவுக்குள் நிகத்துவது
கதையாசிரியரின்
வெற்றியாக கணிக்கப்படும்.
ஆக,
தனது படைப்பாற்றலின்
இத்திறன் குறித்தும் கூட
நூருல் அமீன்
இன்னொரு முறையும்
பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
தகும்.
*
இக் கதையில்
நான்
புருவம் உயர்த்திய இடங்கள் இரண்டு.
ஒன்று…
கதைக்குள் கதையென
கதையை
நிகழ்த்திக் காட்டியிருக்கும் யுக்தி
சிறப்பானது.
இரண்டு…
நாயகனின் தந்தை
சிங்கப்பூரில் இருந்து
ஊர் வந்த நாளில்,
மனைவியிடமும் மகனிடமும்
அவர் மிளிரவிடும்
பாசம், ப்ரியம் என்பதையெல்லாம் தாண்டி
பழுத்த அனுபவம் கொண்ட
தன் பேச்சாலும்,
மேன்மையான கொண்ட
அணுகுமுறைகளாலும்
அவர் என்னை ரொம்பவும் ரொம்பவும்
வியக்க வைத்தார்!
குறிப்பாய்
மகனின் மானசீக ஆசையை உணர்ந்து
அதனை அவர்
நிறைவேற்றி தருவதும்
நிறைவேற்றி தரும் தருணமும்
சிலிர்ப்பைத் தருவது.
இக்கதையில் பிடித்த
இன்னொரு நிகழ்வை
சொல்லுங்களேன் என்றால்..
ரம்ஜான் நோன்பு நோர்த்திருக்கும்
நாயகன்(நூருல் அமீன்)
நோன்பு திறக்கும் நேரத்தையும்
பொருட்படுத்தாமல்
ரஜினி படமென்று
மாலை காட்சிக்குப் போவதை குறிப்பிடலாம்.
*
இஸ்லாமிய இலக்கிய
வரம்புகளுக்கு உட்பட்ட
சமீபகால
தமிழ் சிறுகதை ஒன்றை
தேர்வு செய்துதர
யாரேனும் என்னை கேட்கும் பட்சம்
கண்ணை மூடிக்கொண்டு
இக்கதையினை
சிபாரிசு செய்வேன்.
அத்தனைக்கு இலக்கணம் மீறாத
அசல் ‘அக்மார்க்’
இஸ்லாமிய இலக்கியம் இது!
பின் குறிப்பாக ஓர் வேண்டுகோள்:
தமிழில் வரும்
இஸ்லாமிய இதழ்களுக்கு
கதை எழுதுவதை விட்டு
உலக இலக்கியத்தில் பெயர் போட
இனி
நூருல் அமீன் எழுதவேண்டும்.
ஆமீன்.
No comments:
Post a Comment