‘காலச்சுவடு’ ஜூன் 2011 இதழில் க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள இந்த கட்டுரை வியப்பூட்டும் ஒரு புதிய பார்வையை முன் வைக்கிறது. காலச்சுவடுக்கும், சகோதரர் திருநாவுக்கரசு அவர்களுக்கும் நன்றியுடன் இந்த கட்டுரையை மீள்பதிவு செய்கின்றேன்.
மாறி வரும் அமெரிக்க மனசாட்சி என்பதை "நாறி வரும்" என சொல்லி இருக்கலாமோ என கேட்கத் தூண்டுகிறது இந்த கட்டுரை.
மாறி வரும் அமெரிக்க மனசாட்சி என்பதை "நாறி வரும்" என சொல்லி இருக்கலாமோ என கேட்கத் தூண்டுகிறது இந்த கட்டுரை.
அமெரிக்கப் படைகளால் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அதைப் பற்றிய னைத்து சாத்தியமான சதிக் கோட்பாடுகளும் (Conspiracy theories), பின் லேடன் கொல்லப்படவில்லை என்பது உட்பட, சொல்லப்பட்டுவிட்டன. பின் லேடனே தன்னைப் பற்றி அமெரிக்கப் படைகளுக்குக் காட்டிக் கொடுத்துத் தன் கொலையை விரும்பி ஏற்றுக்கொண்டார் என்பது மட்டுமே சொல்லப்படவில்லை. மிகப் பெரும் நிகழ்வுகளுக்குப் பின்னால் மிகப் பெரும் சதிகள் இருந்தாக வேண்டுமென நம்புகிறவர்கள் சதிக் கோட்பாட்டாளர்கள். ஜான் எப் கென்னடியின் கொலை, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றது, 9/11 தாக்குதல் என எல்லா நிகழ்வுகளைப் பற்றியும் இத்தகைய எண்ணற்ற சதிக் கோட்பாடுகளைக் காணலாம். அதிலும் பின் லேடன் கொலை குறித்து அமெரிக்கா முதலில் கூறியதற்கும் ஒரு நாள் கழித்துக் கூறியதற்கும் இடையிலிருந்த முரண்பாடுகள் சதிக் கோட்பாட்டாளர்களுக்குப் பெரும் தீனி போட்டன. பின் லேடனை உயிருடன் பிடித்து, அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கித் தரும் எண்ணம் அமெரிக்காவிற்கு எப்போதும் இருந்ததில்லை. அத்தகைய எண்ணம் இருந்திருக்குமாயின், தாங்கள் அவரை அமெரிக்கா வசம் ஒப்படைக்கத் தயார் எனத் தாலிபன் கூறியதைப் பற்றி அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும்.
2001ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி தாலிபன் அரசின் துணைப் பிரதமரான ஹஜி அப்துல் கபீர், ஜலாலாபாத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ‘‘ஆப்கானிஸ்தான்மீது குண்டுகள் பொழிவதை நிறுத்தும் பட்சத்தில், பின் லேடன்மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் காட்டும் பட்சத்தில் அவரை ஒரு மூன்றாம் தரப்பு நாட்டிடம் ஒப்படைக்கத் தயார்’’ என்று கூறினார். ‘‘அவர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் குற்றவாளி என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்று கூறிய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அந்த முன்மொழிவை ஒரேயடியாக நிராகரித்தார். இதில் ஆர்வமூட்டக்கூடிய விஷயம் என்னவெனில் 2002 ஏப்ரலில் செய்தியாளர்களிடம் பேசிய எப். பி. ஐ. (Federal Bureau of Investigation) தலைவர் ராபர்ட் முல்லர் இவ்வாறு கூறினார்: ‘‘9/11 தாக்குதலுக்கான திட்டம் ஆப்கானிஸ்தானில் தீட்டப்பட்டு ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஜெர்மனியில் செயல்வடிவம் பெற்றது என்று நாங்கள் நம்புகிறோம் என்பதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை’’ அதாவது வலுவான ஆதாரங்கள் எவையுமில்லை என்பதையே அவ்வாறு சொல்லியிருந்தார்.
பின் லேடனைச் சிறைபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த அமெரிக்கா தயாராக இல்லாததற்குச் சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அடிப்படையான நீதிக் கோட்பாடுகள், முறையான சட்டங்களின் அடிப்படையில் (Due process) வழக்கை நடத்தி, பின் லேடன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்துத் தண்டனை பெற்றுத்தருவது அமெரிக்க அரசாங்கத்திற்கு எளிதாக இருந்திருக்காது. இரண்டாவது, வழக்கின்போது பின் லேடன் கூறக் கூடிய பல உண்மைகள் (ஏற்கனவே உலகிற்குத் தெரிந்தவைதான் என்ற போதிலும்) தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி, பொதுமக்களால் விவாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு மிகுந்த சங்கடங்களைத் தந்திருக்கும். மூன்றாவது, மேற்காசிய நாடுகளில் சமீபத்தில் அமைதிவழியில் நடந்த பெரும் மக்கள் போராட்டங்கள், பின் லேடன் போன்றவர்களின் செல் வாக்கைப் பெரிதும் குறைத்திருக்கும் நிலையில் அவருக்கு மீண்டும் பிர பலத்தைப் பெற்றுத்தர அமெரிக்கா விரும்பாது.
ஆக, பின் லேடனைப் படுகொலை செய்வது மட்டுமே இத்தனை வருடங்கள் அவர் தொடர்பாக அமெரிக்கா நடத்திய தேடுதல் வேட்டையின் ஒரே நோக்கம். சர்வதேச விவகாரங்கள் என்று வரும்போது சர்வதேசச் சட்டங்களையோ அடிப்படையான நீதிக் கோட்பாடுகளையோ அமெரிக்கா ஒருபோதும் கடைப்பிடித்ததில்லை. மிகச் சமீபத்திய உதாரணங்கள்: இந்தக் கொலை மற்றும் கவுன்டனாமோ பே சிறையில் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு நடந்த சித்திரவதைகள். (கவுன்டனாமோ பே சிறையிலிருந்த தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட சித்திரவதைகளின் காரணமாகப் பெறப்பட்ட தகவல்களே பின் லேடன் இருக்குமிடத்தை அறிய உதவியது என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்றும் அவரது நிர்வாகத்தினர் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதைத் தலைசிறந்த பத்திரிகையாளர்கள் பலர் தெளிவாகக் காட்டியுள்ளனர்.)
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்திலுள்ள அபோட்டாபாத் என்னும் நகரில், பாகிஸ்தானின் புகழ்பெற்ற ராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு (டேராடூனிலிருக்கும் இந்திய ராணுவ அகாடமி போன்றது) அருகில் உயர்ந்த மதிற்சுவருக்குள் அமைந்திருந்த ஒரு மூன்றடுக்கு வீட்டில் கடந்த ஆறு வருடங்களாகப் பின் லேடன் தங்கியிருந்தார். அவர் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியுமென்றாலும் மைய நிலப்பகுதிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் பழங்குடிப் பிரதேசமான வசிரிஸ்தான் போன்ற இடத்தில் ஒளிந்திருப்பார் என்றே பலர் நினைத்த வேளையில் மிக முக்கியமான ராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு அருகில் தங்கியிருந்தது எதிர்பாராதது. பாகிஸ்தான் ராணுவத்தில் உளவுத் துறையான ஐஎஸ்ஐயில் பணிபுரியும் முக்கிய நபர்களின் உதவியில்லாமல் அவர் அங்கே தங்கியிருக்க முடியாதென்பதை உயர் நிலைப் பள்ளிக்கூட மாணவன்கூட எளிதில் யூகிக்க முடியும்.
பாகிஸ்தானின் தாலிபன்கள், அல் கய்தா இயக்கத்தைச் சார்ந்தவர்களுடன் ராணுவத்திற்கும் உளவுத் துறைக்கும் இருக்கும் தொடர்பு உலகறிந்தது. இது அமெரிக்காவிற்கும் தெரியும். இதில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது என்னும் பேச்சுக்கே இடமில்லை. முற்றிலுமாக இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக இருப்பது என்பது பாகிஸ்தானின் இந்த இரு நிறுவனங்களுக்கும் சாத்தியமானதல்ல என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும்.
இதன் காரணமாகவே பின் லேடன் பற்றித் தாங்கள் சேகரித்த தகவல்களையோ அவர் தங்கியுள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தவிருந்ததையோ பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவுத் துறைக்கு அமெரிக்கா கடைசிவரை சொல்லவில்லை. பின்லேடன் கொல்லப்பட்ட பிறகே அத்தகவல் இந்த இரு நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது. தாக்குதல் நடவடிக்கை நேரடியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஒளிபரப்பானது. பாரக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், துணை ஜனாதிபதி ஜோ பிடன், ராணுவ, உளவுத் துறை உயரதிகாரிகள் இதை நேரடியாகப் பார்த்தனர். பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அதை அமெரிக்க மக்களுக்கும் உலகிற்கும் அறிவித்த ஒபாமா, ‘நீதி நிலைநாட்டப்பட்டதாக’க் கூறியது வேடிக்கை. முற்றிலும் சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான ஒரு நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு வர்ணிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இந்தத் தாக்குதல் பாகிஸ்தானின் இறையாண்மைக்குப் பெரும் அச்சுறுத்தல். அமெரிக்காமீதான பாகிஸ்தானியர்களின் கோபம் மிகவும் நியாயமானது. பின் லேடனின் படுகொலை பற்றி நோம் சோம்ஸ்கி கருத்து தெரிவித்தபோது எழுப்பிய கேள்வி அமெரிக்க அரசாங்கத்தால் பதிலளிக்க முடியாதது: ‘‘ஈராக்கிய ராணுவத்தினர் ஜார்ஜ் புஷ் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி அவரைப் படுகொலை செய்து, அவரது உடலை அட்லாண்டிக் கடலில் வீசியிருந்தால் நாம் எப்படி எதிர்வினையாற்றிருப்போம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். சர்ச்சைக்கிட மற்ற வகையில், பின் லேடனின் குற்றங்களைவிட அவரது (புஷ்) குற்றங்கள் மிக மிக அதிகமானவை’’ மேலும் கியூபா தீவிரவாதியும் கியூபா பயணிகள் விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தவருமான ஆர்லான்டோ போஷ் அவிலா என்பவருக்கு அமெரிக்கா அடைக்கலம் தந்திருந்தது. அவர் மிகச் சமீபத்தில்தான், ஏப்ரல் 2011இல், தனது 85ஆவது வயதில் புளோரிடாவில் இறந்தார். தீவிரவாதிகள் மட்டுமல்ல தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருகிறவர்களும் குற்றவாளிகளே என்பது புஷ் அடிக்கடி கூறுவது. அப்படிப் பார்த்தால் அமெரிக்காமீது கியூபா தாக்குதல் நடத்துவதும் குற்றவாளியான புஷ்ஷைப் படுகொலை செய்வதும் தவறல்ல என்பதே புஷ்ஷின் வாதம் என்பதை யாரும் கவனிப்பதில்லை என்பதையும் சோம்ஸ்கி சுட்டிக் காட்டியிருந்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்ற நாஜித் தலைவர்களை விசாரணையின்றித் தூக்கிலிட வேண்டுமென வின்ஸ்டன் சர்ச்சில் கூறியபோது அதை அன்றைய அமெரிக்க அரசாங்கம் ஏற்கவில்லை. அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியும் நூரெம்பர்க் விசாரணைகளின் தலைமை வழக்கறிஞருமான ராபர்ட் ஜாக்ஸன் இதைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமனிடம் கூறும்போது, ‘‘எந்த விசாரணையும் இல்லாமல் நாஜித் தலைவர்களைத் தூக்கிலிடுவது அல்லது தண்டிப்பது சாத்தியமே. ஆனால் அவ்வாறு செய்வது அமெரிக்காவின் மனசாட்சிக்கு ஒவ்வாதது. அது எதிர்கால அமெரிக்கக் குழந்தைகளால் பெருமையுடன் நினைவுகூரத் தக்கதுமல்ல’’ என்றார். ஆனால் இன்று அமெரிக்காவின் மனசாட்சியும் அதன் குழந்தைகளும் வேறுமாதிரியாக இருப்பதையே பின் லேடன் படுகொலையை அமெரிக்கர்கள் கொண்டாடிய விதம் காட்டுகிறது.
பின் லேடன் போன்ற ஒரு தீவிரவாதி கொல்லப்படுவதில் யாருக்கும் (இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளைத் தவிர்த்து) வருத்தம் இருக்க முடியாது. ஆனால் அது நீதியின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்க வேண்டும். நோம் சோம்ஸ்கி பலமுறை கூறியுள்ளபடி நூரெம்பர்க் விசாரணைகளின் அடிப்படையில் பார்த்தால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளும் போர்க் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள்.
பின் லேடனை அமெரிக்கா கொன்ற தருணத்தில் அவர் ஏறக்குறைய தோல்வியுற்ற தீவிரவாதியாக இருந்தார். அவரது செல்வாக்கு முஸ்லிம் மக்கள் மத்தியிலேயே பெரிதும் மங்கியிருந்தது. இந்த வருடம் ஜனவரி மாத இறுதியில் எகிப்தில் அதன் ஆட்சியாளர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராகப் பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியபோது அதே நாட்டைச் சேர்ந்தவரும் அல் கய்தா இயக்கத்தில் பின் லேடனுக்கு அடுத்த தலைவருமான அய்மன் அல் ஜாவாஹரிக்கு அதில் ஒரு பங்கும் இல்லையென்பது மட்டுமல்ல மக்கள் போராட்டங்களின்போது அதைப் பற்றி அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. டுனீஷியா, எகிப்து, ஏமன், பஹ்ரைன், லிபியா ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராகச் சமீபத்தில் உருவான பெரும் மக்கள் போராட்டங்கள், பல வருடங்களாக அல் கய்தா போன்ற எண்ணற்ற இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களால் சாதிக்க முடியாத விஷயத்தைச் சாதித்த அதே நேரத்தில் மேற்குலகம் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய மக்களைப் பற்றி உருவாக்கிவைத்திருந்த மிகப் பெரும் பொய்யையும் உடைத்தெறிந்தன.
மக்களாட்சியும் அறிவியலும் அடிப்படையிலேயே இஸ்லாமுக்கு ஒவ்வாத, முரணான விஷயங்கள் என்னும் பொய்யான கருத்து மேற்குலக ஊடகங்களால் வெற்றிகரமாகப் பரப்பப்பட்டிருந்தது. (8ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கணிதம், அறிவியலில் மேற்காசிய நாடுகள் தலைசிறந்து விளங்கியதையும் மத்திய காலத்தில் சில முக்கிய அறிவியல், கணிதக் கோட்பாடுகள் இந்நாடுகளிலிருந்தே ஐரோப்பாவிற்குச் சென்றன என்பதையும் இந்த ஊடகங்கள் மறந்தும் கூறுவதில்லை.)
சமீபத்தில் மேற்காசிய, வட ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளில் நடந்த புரட்சிகர மக்கள் எழுச்சிகள் அரசியல், பொருளாதாரரீதியாக மிகுந்த முக்கியத்துவம் உடையன என்பதுடன் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களைப் பெரிதும் பலவீனப்படுத்தியிருக்கின்றன. இத்தனை வருடங்களாக அல் கய்தா உட்பட பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளால் சாதிக்க முடியாதவற்றை இவை சாதித்திருக்கின்றன. அல் கய்தா பற்றியும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் பற்றியும் பல தவறான கருத்துகள் ஊடகங்களால் பரப்பப்பட்டுள்ளன. இந்தியா, சீனா, ரஷ்யா உள்படப் பல நாடுகளுக்கு, தங்களுக்கு வேண்டாதவர்களை ஒழித்துக்கட்ட இத்தகைய கருத்துகள் மிக உதவியாக இருக்கின்றன. மானுடவியல் அறிஞரான ஸ்காட் ஆட்ரன் மற்றும் பலர் சுட்டிக்காட்டியிருப்பதைப்போல் வறுமையோ கல்வியின்மையோ தீவிரவாதிகள் உருவாவதற்கான காரணங்களாக இருப்பதில்லை. மேற்காசிய நாடுகளின் எண்ணெய் வளத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அந்நாடுகளின் சர்வாதிகாரிகளுக்கு உடந்தையாக மேற்குலக நாடுகள் இருப்பதும் தங்களுக்கு வேண்டாத ஆட்சியாளர்களை அகற்றுவதற்காகப் போர் தொடுப்பது, இந்நாடுகள் பலவற்றில் அமெரிக்கா தனது ராணுவத் தளங்களை நிரந்தரமாக வைத்திருப்பது, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அராஜகங்களுக்கு அமெரிக்கா முழுமையாகத் துணைபோவது போன்றவற்றிற்கு எதிராகவே இத்தீவிரவாதிகள் உருவாகிறார்கள்.
பிற நாடுகள்மீது ஜனநாயகத்தின் பெயரால் அமெரிக்காவைப் போல் இஸ்லாமின் பெயரால் இவர்கள் போர் தொடுக்கிறார்கள். அமெரிக்காவும் பிற ஐரோப்பிய நாடுகளும் இஸ்லாமிய நாடுகளின் எண்ணெய் வளத்தைச் சுரண்டுவது நிற்கும் பட்சத்தில், பாலஸ்தீனர்களுக்கு நீதி கிடைக்கும் பட்சத்தில் இத்தீவிரவாத இயக்கங்கள் காணாமல் போகும்.
அல் கய்தாவிற்கான இளைஞர்களைப் பின் லேடன் கடத்தி வந்தார் என்பதிலோ அல்லது வறுமையின் காரணமாக அல்லது பிறரின் வற்புறுத்தலின் காரணமாக அவர்கள் அந்த இயக்கத்தில் சேர்ந்தார்கள் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்பதை த கார்டியன் பத்திரிகையின் செய்தியாளரும் அல் கய்தா பற்றி மிகச் சிறந்த புத்தகத்தை எழுதியிருப்பவருமான ஜாஸன் பர்க் ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார். இவர்கள் அல் கய்தாவில் சேருவதற்கு முன்னரே பின் லேடனின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள். 9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்களின் கல்வி, சமூக, பொருளாதாரப் பின்னணியைப் பார்த்தாலே இது விளங்கும். அவர்கள் அனைவருமே உயர்கல்வி பயின்றவர்கள், மிக வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பின் லேடன் மிகப் பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் தனது சொத்துக்கள் எதையும் அவரால் அல் கய்தா இயக்கத்திற்காகப் பயன்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. பலர் நினைப்பதைப் போல் அல் கய்தா நன்கு ஆயுதப் பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட இயக்கமோ அல்லது உலகெங்கும் தன் உறுப்பினர்களைப் பெற்றிருக்கும் இயக்கமோ அல்ல. அல் கய்தா ஒரு முறையான அமைப்பாக உருவாகவில்லை என்பதே உண்மை.
1988இல் இந்த அமைப்பைப் பின் லேடன் நிறுவியபோது அவருடன் இருந்தவர்கள் சுமார் இருபது பேர் மட்டுமே. 1990களின் நடுப்பகுதிவரை இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏதுமில்லை. 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை ஒழிக்க அமெரிக்க அரசும் அதன் உளவு நிறுவனமான சிஐஏவும் ஆப்கன் முஜாகிதீன்களுக்குப் பெரும் நிதியும் ஆயுதங்களும் அளித்தன. முஜாகிதீன்களுக்கு உதவத் தனது வெகுசில ஆதரவாளர்களுடன் வந்தவர் தான் பின் லேடன். பலர் நினைப்பதைப் போல சிஐஏவுக்கும் பின் லேடனுக்கும் நேரடியாகத் தொடர்புகள் ஏதுமில்லை. முஜாகிதீன்களுக்குக் கிடைத்த நிதி, ஆயுதங்களில் ஒரு சிறு பகுதி அல் கய்தாவினருக்கும் கிடைத்தது என்பதைத் தவிர மற்ற தொடர்புகள் இல்லை.
இக்காலகட்டத்தில் பின் லேடனும் அவருடைய ஆதரவாளர்களும் அல் கய்தா என்னும் பெயரில் அறியப்பட்டிருக்கவில்லை. (அல் கய்தா என்றால் கடகால், அடித்தளம் அல்லது அடிப்படை விதிகள், அடிப்படைக் கொள்கைகள் எனப் பொருள்படும்.) 1990களின் மத்தியில்தான் இந்தப் பெயரால் இந்த அமைப்பு அறியப்பட்டது. ஜாஸன் பர்க் கூறுவதன்படி 1996இலிருந்து 2001 காலகட்டத்தில்தான் அல் கய்தா பெரும் வளர்ச்சி கண்டது. அப்போதும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் சில நூறு பேர்தான். இந்த இயக்கத்தின் பலம் அதுவல்ல. மாறாக, இஸ்லாமிய நாடுகளில் ஆட்சி மாற்றங்களைக் கொண்டுவர மேற்குலக நாடுகள்மீது தாக்குதல் தொடுக்கப்பட வேண்டுமென்ற பின் லேடனின் கருத்துகள் பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளையும் இளைஞர்களையும் கவர்ந்ததே ஆகும். மேலும் பின் லேடனின் கவர்ச்சிகரமான பேச்சு, நிதி திரட்டுவதில் அவருக்கிருந்த திறன் ஆகியவையும் அல் கய்தாவின் மிகப் பெரும் பலங்கள் (நிதி திரட்ட அல் கய்தாவினர் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக மேற்குலக ஊடகங்கள் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் பர்க்).
9/11 தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்கா போர் தொடுத்ததாலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் அல் கய்தாவினரின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் தீவிரமான கண்காணிப்பிற்கு உள்ளானதாலும் நிதி திரட்டுவது, ஆயுதங்கள் பெறுவது ஆகியன அல் கய்தாவினருக்குச் சாத்தியமற்றுப் போய் விட்டது. மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது சுமார் 20 அல்லது 25 பேரைக் கொண்ட இயக்கமாக அல் கய்தா சுருங்கிவிட்டது. ஆக இன்று தீவிரவாத ஆபத்து உலகிற்கு உள்ளதென்றால் அது அல் கய்தாவால் இல்லை, மாறாக அது உலகெங்கும் பின் லேடனின் கருத்துகளால் கவரப்பட்டு உருவாகியுள்ள எண்ணற்ற இஸ்லாமிய அமைப்புகளாலேயே ஏற்படும். ஆனால் அவற்றால் பாதிக்கப்படுவது மேற்குலக நாடுகளாக இருக்காது. மாறாக இன்று பாகிஸ்தானிலும் ஈராக்கிலும் நடப்பதைப் போல் இஸ்லாமிய மக்களே தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்தத் தீவிரவாத இயக்கங்களின் கரங்கள் அமெரிக்கா வரை நீள்வது என்பது இனிச் சாத்தியமானதாகத் தோன்றவில்லை.
இஸ்லாமிய நாடுகளில் தான் இழைக்கும் அநீதியான செயல்பாடுகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும்பட்சத்தில், ஈராக், ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை முற்றாக விலக்கிக்கொள்ளும் பட்சத்தில், பாலஸ்தீனர்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்க இஸ்ரேலை ஒப்புக்கொள்ளவைக்கும் பட்சத்தில், அதாவது இந்த இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதற்கான காரணங்கள் இல்லாது போகும்பட்சத்தில் இந்தத் தீவிரவாத ஆபத்தும் மறைந்துபோகும்.
தீவிரவாதத்தை எந்தக் காரணம் கொண்டும் ஒருவர் ஆதரிக்க முடியாது, ஆனால் அது உருவாவதற்கான காரணத்தை ஒருவர் புரிந்துகொண்டாக வேண்டும். இந்தப் புரிதல் இல்லாமல் எந்த விதமான தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியாது. மேலும், அரசு தீவிரவாதத்தை ஆதரித்துக்கொண்டே அரசு சாரா இயக்கங்களின் தீவிரவாதத்தை மட்டும் கண்டிப்பது என்பது இரு தீவிரவாதங்களும் (அரசு மற்றும் அரசு சாரா) மேலும் மேலும் அதிகரிக்கவே உதவும்.
இனி இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் பலமிழக்கக்கூடும் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்காவின் ‘தீவிரவாதத்திற்கு எதிரான’ போரோ அல்லது பின் லேடன் கொல்லப்பட்டதோவல்ல, மாறாகச் சமீபத்தில் இஸ்லாமிய நாடுகளில் உருவாகியுள்ள புரட்சிகரமான மக்கள் போராட்டங்களே.
No comments:
Post a Comment