தோழமையுடன்

Sunday, July 10, 2011

சமூக மாற்றத்தில் கலையின் பங்கு

ஒரு மனிதர் எனது குருநாதர் பைஜிஷா நூரி அவர்களிடம் தொலைக்காட்சி பார்ப்பது ஆகுமானதா? விலக்கப்பட்டதா? (ஹலாலா? ஹாராமா?) என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலாக என் குருநாதர் அவரிடம், “நாக்கு என்ற ஒரு உறுப்பு இருக்கிறதே அது ஹலாலா? ஹராமா?” என கேட்க அவர் “என்ன ஹஜ்ரத் இப்படி கேட்கிறீங்க” என்றார். அதற்கு என் குருநாதர் “ இந்த நாக்கு பொய்யும் சொல்லுது, புறமும் பேசுது, கோளும் சொல்லுது, குர்ஆனும் ஓதுது இப்ப சொல்லுங்க நாக்கு ஹலாலா? ஹராமா?” என்றதும் அவர் தன் கேள்விக்கு பதில் கிடைத்த மகிழ்வுடன் புன்னகைத்தார்.




இலக்கியம் என்றாலே தேவையற்றது என ஒதுங்குவோர் மத்தியில் ஒரு மாற்று இலக்கியமாக இஸ்லாமிய இலக்கியம் படைக்கப்பட வேண்டிய அவசியத்தை வழியுறுத்தும் இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் ஏபி.எம்.இத்ரீஸின் நீண்ட கட்டுரையின் இறுதி பகுதியை நன்றியுடன் மீள்பதிவு செய்கின்றேன். 

விரும்புவர்கள் இத்ரீஸ் அவர்களின் தளத்தில் இந்த கட்டுரையை முழுயாக வாசிக்க வேண்டுகின்றேன். அந்த கட்டுரையை ஒரு ஆரம்ப கருத்தாகக் கொண்டு நம் தாய்மொழியில் நம் வளமான பங்களிப்புக்கு நாம் என்ன செய்யலாம் என சிந்திக்க, விவாதிக்க வேண்டுகின்றேன்.  


நீங்கள் இஸ்லாமிய இலக்கியம் படைக்க ஆர்வமுள்ளவரா? எழுத்துக்கலைப் பற்றி இவர்கள் என்ன சொல்லுகின்றார்கள் என்ற வே.சபாநாயகம் அவர்களின் தொகுப்பையும் வாசியுங்கள்.
நன்றி வே.சபாநாயகம் அவர்களே!. இதோ இத்ரீஸ்....

சமூக மாற்றத்தில் கலையின் பங்கு 

தனிமனிதர்களுக்கு கனவுகள் எப்படியோ அப்படியே ஒரு சமுதாயத்திற்கு கலை என்பது கட்டுப்பாடுகள் யாருக்கும் சொந்தமில்லாத ஒரு தனி உலகில் நாம் சுதந்திரமாக பவனிவரக் கனவுகள் வாய்ப்பளிக்கின்றன. உலகில் மாபெரும் இறைச்சல் என்னும் பனி மூட்டம் நம் மனதை விட்டகல கனவுகள் காரணமாகின்றன. கனவில் நம்மை நாம் அறிந்துகொள்ள உதவுகின்றன. அடக்கி ஒடுக்க முடியாத நமது மனக் குரலை நாம் கேட்கச் செய்கின்றன.

காலம் காலமாக கனவுகளை ஆய்ந்து அவற்றின் அர்த்தங்களை உணர எத்தனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத நம்மைச் சூழ்ந்திருக்கும் உண்மைகளைப் புரிந்து கொள்ள கால இட எல்லைகளால் நேரும் சம்பிரதாயங்களை வெற்றி கொள்ள சென்றுபோனதை அறிந்து கொண்டு இனிவரப் போவதை உய்த்தறிந்து அதன் மூலம் நிகழ்காலத்தை கொஞ்சமேனும் அறிந்து கொள்ள இமாம்கள் கனவுகளை ஆராய்ந்திருக்கிறார்கள். கனவுகள் கான மனிதன் மறுக்கப்பட்டால் மூச்சடைத்து செத்துப் போவான்.

கனவுகள் ஒரு தனி மனித ஆன்மாவின் வெளிப்பாடாயின் கலை மனித குலத்தின் ஆன்மாவின் வெளிப்பாடு எனலாம். மிருகங்களுக்கு கூட கனவுகள் உண்டு ஆனால் மனிதன் மட்டுமே கலை ஆற்றல் பெற்றவனாயிருக்கின்றான். மனித வாழ்வும் நாகரிகமும் கலைகள் இல்லாமல் உருவாக முடியாது.

பூமியின் மேற்பரப்பில் நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்கை வரலாறு அவர்களது கலைகளின் ஊடாகவே நம்மை வந்தடைகிறது. புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் நமக்குப் பல செய்திகளைக் கொண்டு வந்துள்ளார்கள். இந்தச் செய்தியை குகைச் சுவர் ஓவியங்களாய், கல் வெட்டுக்களாய், களிமண் வடிவங்களாய், மினாராக்களாய், குப்பாக்களாய் பாதுகாக்கப்பட்டு நமக்கு கிடைத்துள்ளன.

எழில் மிக்க இசைக்கருவியன் வடிவத்திலோ அழிவற்ற கதைகளாகவோ பேரிலக்கியங்களாகவோ, அறிவு புகட்டும் நாட்டுப் புறக் கதைகளாகவோ, கவிதைகளாகவோ நமக்கு கிடைத்திருக்கலாம் கலீபாக்களின் பொக்கிசங்கள், கனீமத், பொருட்கள், கொத்தளங்கள், கல்லறைகள், காதல் சின்னங்கள், தாஜ்மஹால் என்று எண்ணற்ற கலைச் சின்னங்கள் எமக்கு கிடைத்திருக்கின்றன. காந்தல் விரல்களின் மருதானிகளாய், அறபு எழுத்தானிகளாய் கண்களின் சுறமாவாய், நமக்கு அழகு காட்டி நிற்கின்றன. அல்லது அந்த சத்தியம் பேருன்மை நினைவூட்டும் பாங்கொலியாய் ஹிராவில் ஒலிக்கும் குர்ஆனாய் மிஃராஜில் பேசிய கதீஸ் குத்ஸியாய் நம்செவிகளுக்கு இனிய நாத வடிவத்திலும் வந்திருக்கலாம்.

அதிகார பீடங்கள் அச்சுறுத்தல், இயற்கையின் சீற்றம் சமுதயப் புறக்கனிப்புக்கள் அத்தனையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச் சிலவற்றில் கலையும் ஒன்று. கலை இறைவன் முதல் மனிதனிலிருந்து கற்றுக்கொடுத்தவரும் வெகுமதி, இறைவன் கலைகளின் பேரரசன் அவன் படைத்துள்ள பேரண்டம் ஒரு கலைக் கூடம், கலை மனித சமூகத்தின் வந்த வரலாறு நமது நெடு பயணங்கள், நமது அச்சங்கள், நமது ஜிஹாதுகள் இஜ்திஹாத்துகள், நமது நம்பிக்கைள், நமது இபாதத்தின் வெளிப்பாடுகளாய்த்தான் கலை இருக்கின்றது. கலை நமது இலட்சியத்தின் குறியீடாகவும் இருந்து வந்திருக்கின்றது. கலை இலட்சிய சமூகத்தின் கருவறை. நம்மை பிரதிபலித்து நமது வாழ்வின் பொருளை துல்லியமாகவும் வெகு நேர்த்தியாகவும் புலப்படுத்தக் கூடிய தத்துவமே கலையின் பேராற்றல் ஆகும். கலையின் இம்மாபெரிய ஆற்றல் அது வெளிப்படும் கணப்பொழுதில் உடநடியாக உணரப்படுவதுமில்லை. இந்த பேராற்றலை புரிந்து கொள்ள காலம் தேவைப்படுகிறது. பல ஆண்டுகள் சில போது நூற்றாண்டுகள் தேவைப்படுகின்றது. கலை காலம் கடந்து வாழும் ஒன்றாகவே இருக்கின்றது. தனிக்கையாளர்கள், விமர்சகர்கள், மதிப்புரையாளர்கள் சில போது கலையின் எதிரிகளாக மாறிவிடுகின்றனர். ஒரு புதிய கலை ஆக்கத்தை அவசரத்தில் கொலை செய்து விடக் கூடியவர்கள். மனித இனம் தன்னை வெளிப்படுத்த தன் உள்ளத்தை புரிந்து கொள்ள இந்த உலகை ஈட்டிப்படைக்கும் ‘கைபானா‘ சக்திகளை ஆராய்ந்து அறியவும் மனிதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் கலை ஆற்றல் பேருதவி பரிந்துள்ளது.

எல்லா மனிதர்களுக்கும் கற்பனை ஆற்றல் இருக்கின்றது. இவர்களில் சிலருக்கே அதை வளர்த்துக் கொண்டு வரலாறு போற்றும் கலையை படைக்கும் ஆற்றல் வாய்த்திருக்கிறது. கோடிக்கணக்கான ஓவியங்கள், கவிதைகள், காப்பியங்கள், நாடகங்கள் சினிமாக்கள் தோன்றித் தோன்றி மனிதப் பிரச்சினையைப் பேசி இருக்கின்றன.

கலை கதையைப் போல கட்டுப்பாடற்ற கலகக் காரனாகவும் மிருகமாகவும் தொழிற்பட்டும் வந்துள்ளது. எப்பொழுதெல்லாம் கலைகள் தார்மீகப் பெறுமானங்கள் விழுமியங்களை மீறி இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் அதன் குரல் வளை நெறிக்கப்பட்டுள்ளது. ஆனால் கலை அழிந்து விடவில்லை.

உலகில் தோன்றிய ஒவ்வொரு நாகரிகமும் மதமும் கலையின் இந்த ஜீவ ஆற்றலை உணர்ந்து போற்றி வளர்த்து வந்துள்ளன. தேசவிரோதமானவை என்று கலை கொழுத்தவும் பட்டுள்ளது. அடக்கு முறையாளர்கள் அழகியல் உணர்ச்சி அற்றவர்கள் அல்லது கலை செய்யப்போகும் கலகத்தை நன்கு அறிந்தவர்கள்.

நாம் ஸ்பெய்னிலும் இந்தியாவிலும் உருவாக்கிய கலை பாரம்மபரியத்தின் வாரிசுகள் என்பதால்தான் எம்மை அந்த நாடு வரவேற்றது. நாம் கம்பலை விட்டிறங்கியதும் பல்லக்கிலேயே நம்மை தூக்கிச் சென்றார்கள். நாம் அவர்களுக்கு ஒரு தலதாவைக் கட்டிக்கொடுத்தோம். நமது பூந்தோட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க இடம் கொடுத்தோம் நமது வீட்டையும் மியூசியமாக்கி அவர்களின் அரும் பொருட்களை பாதுகாத்து வருகிறோம்.
நாம் கட்டிய குலங்களால் அந்த நாடு வளம் பெற்றது. நமது வைத்தியர்களால் அவர்களின் நோய் குணமாகியது. இன்று நம்மிடம் வாங்கிய வரிப்பணத்தால், கப்பங்களால் அவர்கள் விடுதலைப் போராட்டம் நடத்தினார்கள். கலை காண்பவரின் மனதைத்தொட்டு அந்த மனத்தின் மாறுதலுக்கு காரணமாகின்றது.

எந்த வித வன்முறைத் தாக்குதல்களாலும் கலையின் குரலை அழிக்க முடியவில்லை. ஆனால் எமது சமூகத்தில் கலை என்பது ஆபத்தான, உதவாக்கரை, கேவலமான தொழில் என்ற கருத்து நிலவுகிறது.

கலைஞர்களும், எழுத்தாளர்களும் அதிகாரவர்க்கத்திடம் பொன்னாடையையும், பொற்கிழியையும் எதிர்பாராமல் உழைக்கும் வரை அவர்கள் உருவாக்கும் கலையாய் முகமாற்றமும் விடுதலையும் இருக்கும்.

ஒரு இலட்சிய நோக்கமில்லாமல் மக்களின் பலியலைச் சுரண்டிப்பிழைக்கும் கலையின் ஆதிக்கம்தான் இன்று அதிகம் இதை மாற்றி அமைக்க வேண்டும். தனி மனித மனமாற்றத்துக்கு மட்டுமல்ல ஒரு சமுதாய மாற்றத்துக்கே கலை தூதுவனாக இருக்கின்றது மனிதன் என்பவன் யார்? மிருகங்களிலிருந்தும் அவன் எவ்வாறு வேறுபடுகிறான்? அவனுக்கு இரு உதடுகளையும் ஒரு நாவையும் கொடுத்துள்ளோம். அதுவும் அறியாதவனாக அவனைத் தாயின் வயிற்றிலிருந்து படைத்தோம். அவனுக்கு கேள்வியையும் பார்வையையும் கொடுத்தோம் என்று இறைவன் கூறுகிறான். எனவே மனிதன் ஆன்மாவைப் புரிந்து கொள்வது அவசியம். கலை மனத்தை ஊடுருவி சுய விசாரனை முஹாசபாவை செய்கின்றது. வாழ்வின் குறிக்கோளை அந்த பேருன்மையை அறிய கலை நம்மையெல்லாம் அழைத்துச் செல்கின்றது.

கலை மதம்குறித்த சமுதாயம் குறித்த நாகரிகம் குறித்த எந்த சங்கடமான கேள்விகளையும் கேட்டுவிடக் கூடாது என்று சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் இஸ்லாத்தின் நம்பிக்கை கோட்பாடு அப்படியல்ல. அது இந்த உலகத்துக்குள் உள்ள உண்மைகளை மட்டும் பேசவில்லை. இதற்கப்பால் இருக்கும் சூட்சும உலகம் குறித்தும் சிந்திக்க தூண்டுகிறது. ஹிதாயத் என்பது வஹி மட்டுமல்ல அக்ல், தஜ்ரிபா, விஜ்தான் என்று இமாம் முஹம்மத் அப்துஹி தப்ஸீரிலே மனாரிலே ‘இஃதி நஸ்ஸஸராத்தல் முஸ்தகீம்” என்ற வசனத்துக்கு விளக்கமளிக்கும்போது கூறுகின்றார். இதே கருத்தை இமாம் ஷாஹ் வலியுள்ளாஹ் நிஹ்லவி ஹிஜ்ஜத்துல்லாஹில் பாலிகா என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மனோ நோயாளிக்கு அல்லது மன நலம் பாதிக்கப் பட்டவனுக்கு நாம் வைத்திருக்கும் பெயர் பைத்தியகாரன். அவனை அதற்கு பிறகு வேலைக்கு எடுக்க மாட்டோம். ஆனால் கலை மனித மனங்களுக்கு ஒத்தடம் போடுகிறது. மருந்திருக்கிறது. நம்மை பற்றிய உள்நோக்கிய இந்த தேடலுக்கு கலைதான் உதவுகிறது. கலை உருவகிக்கும் உலகம் பூக்களால் ஆனது. அங்கே ஆயுதங்களுக்கு வேலை இருக்காது.

ஒரு பலம் நமக்கு ஏற்பட புரட்சி தேவைப்படுகிறது. ஆனால் காலப் போக்கில் அத்தகைய புரட்சிகளே ஆதிக்க அமைப்புகளாகி புதுமையை விரும்பாத, மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத இறுகிய கடும் போக்கை கையாள முடியும்.

இந்த நேரத்தில் கலை புதிய கேள்விகளை கேட்கின்றது. கலை எதிர்த்து நிற்கின்றது. புதிய சிந்தனைப் பாதைக்கு வழி கோலுகின்றது. அதற்கு வரும் ஆபத்துக்களையும் அது ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றது.

கலை இல்லாத சமூகம் நாகரிகமானதாக இருக்க முடியாது எனவே கலையை, களைஞர்களை, சமூகம் வளர்க்க வேண்டும், ஊக்கு விக்க வேண்டும் பயோ சய்சுக்கு, மெத்ஸீக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் கலைக்கும் நாம் கொடுக்கும் போதுதான் சமூகமாற்றம் என்பது சாத்தியப்படும். குறிப்பாக தொலைக்காட்சி, வானொலி இதழ்கள் அசிங்கங்களையும் குப்பைகளையும் ஒதுக்க வேண்டும். இலட்சிய உன்னத சமூகமாற்றத்திற்குரிய கலைக்கு வழிவிட வேண்டும். நமது பள்ளிவாயல்களும் பாடசாலைகளும் சமூக இயக்கங்களும் கலைக்கு முக்கிய இடத்தை கொடுக்க வேண்டும். மல்யுத்த விளையாட்டுக்கலையை வளர்த்த மஸ்ஜிது நபவி நமது பள்ளிவாயல்கள் எப்போது மாறப்போகின்றன. சின்னப்பருவத்திலிருந்தே நமது குழந்தைகளுக்கு கலை உணர்வை சோற்றோடு சேர்த்து ஊட்ட வேண்டும் அல்லாஹ் அழகானவன் அவன் அழகையே விரும்புகிறான்.

கலை வரலாற்றுப் புத்தகத்தின் பங்கு மகத்தானது. ஆனால் தொலைக்காட்சி, வீடியோ, இன்டநெட் யுகத்தில் நாம் வாழ்ந்தாலும் மனித இனத்தில் சமூகமாற்றதில் புத்தகங்கள் ஏற்படுத்திய புறட்சி மறுக்க முடியாது. இஸ்லாமிய கலையின் மூலாதாரமாக விளங்குவது அல்குர்ஆன் என்ற புத்தகமே.

புத்தகம் படிப்பது முழுமனிதனாக்கும் என்று சொல்கிறார்கள். அதில் உண்மையும் இருக்கிறது. இன்று உலகில் அதிகம் வாசிக்கப்படும் புத்தகம் அல்குர்ஆன் என்று அந்நியர்கள் ஆராய்நதுள்ளனர். நாம் இன்னும் அல்குர்ஆனை வாசிக்கவில்லை ஓதிக்கொண்டும் மனமிட்டுக் கொண்டும் பாராயணம் செய்து கொண்டுமிருக்கிறோம்.

புத்தகத்தில் மனிதன் தனிமையில் அதன் ஆசிரியருடன் உரையாடுகிறான் அந்த உரையாடல் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அல்குர்ஆன் இறைவனுடன் மனிதனை உரையாட அழைக்கிறது. ஆனால் இன்னும் நாம் உரையாடாமல் இருக்கிறோம்.

இருபதாம் நூற்றாண்டின் யுகசந்தியல் மிக முக்கியமான வரலாற்றறுக் கட்டத்தில் நாமிருக்கின்றோம். இலக்கியவாதிகள் கலைஞர்களுடன் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தருணம் நெருங்கி விட்டது. நமக்கான விடுதலையை அரசியல் வாதிகள் பெற்றுத்தருவார்கள் என்று நினைத்து வாக்குப் போட்டு விட்டு நாம் உறங்கி விடக் கூடாது. கலையாலும் சமூக விடுதலை சாத்தியம் என்று நிறுவப்பட்ட உண்மை அதை நம்புவோம்.நமது கலாசார பண்பாட்டு பெறுமானங்களையும், விழுமியங்களையும் வெளிப்படுத்தும் நமது சொந்தக் கலை வடிவங்களை உருவாக்கப் பாடுபடுவோம்.





No comments: