தோழமையுடன்

Thursday, June 23, 2011

ரோல் மாடல் - (சிறு கதை)

செல்போன் சினுங்கியது. ஜமால் போனை எடுத்தான். மறுமுனையில் மனைவி, “ உங்க மக உங்க கூட பேசனுமாம்” என்றாள். மகள் ஆசிகாவின் குரல் ஒலித்தது.
வாப்பா நான் இங்லீஸ் பேச்சு போட்டியிலே ஃபர்ஸ்டா வந்திருக்கேன்....என்ன தலைப்பு தெரியமா? ரோல் மாடல். யார் என் ரோல் மாடல் தெரியுமா நீங்க தான்” என்றாள்.




"எங்க கிளாஸ் டீச்சர் “உங்க வாப்பா தான் உனக்கு ரோல் மாடலா? நெஜமாத்தான் சொல்றியா ஆசிகான்னு" என்னைய கேட்டாங்கப்பா!” 

ஜமாலும், “நிஜாமாத் தான் சொல்றியா ஆசிகா!” என்றதும் ஆசிகா சிரித்து விட்டாள்.
பேசி முடித்து விட்டு தேரா துபாயில் உள்ள திக்ர் மஜ்லீஸுக்கு நண்பர் ரஷீதின் காரில்  புறப்பட்டான். 
காரின் டாஸ்போர்டில் ஜமால் எபோதோ எழுதிய "கூலிங்கிளாஸ்" என்ற  சிறுகதை தொகுப்பு இருந்தது.
“எவ்வளவு பழைய புத்தகம் இன்னும் பத்திரமா வச்சிருக்கியே” என்றவாறு எடுத்து படிக்க ஆரம்பித்தான்…..

கூலிங்கிளாஸ்



எட்டாம் வகுப்பு படிக்கும் நியாஸ் அன்று பள்ளி விடுமுறையானதால் பத்து மணிக்கு போனால் போகிறதென்று எழுந்தான்.    எழுந்தவுடன் சிங்கப்பூரிலிருந்து அடுத்த வாரம் வாப்பா வரும் செய்தியை அம்மா சொன்னார். நியாஸுக்கு  மகிழ்ச்சியும், பயமும் சேர்ந்து வந்தது.

மகிழ்ச்சி கொள்ள ஆயிரம் விசயம் இருந்தது. வாப்பா ஊருக்கு வந்தால் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம் தான். நியாஸ்கேட்பதை வாங்கித் தருவார். ஆனால் நியாஸ் வாப்பாவிடம் நேரடியாக எதுவும் வேண்டும் என கேட்க மாட்டான். அது என்னமோ வாப்பாவிடம் கேட்க எப்போதுமே அவனுக்கு கூச்சம் தான். எல்லா கோரிக்கையும் உம்மா மூலம் தான். உம்மாவும் வாப்பாவும் கருத்தொருமித்த காதல் தம்பதியர். உம்மா எதையாவது கேட்டால் வாப்பா எப்பாடுபட்டாவது அதை நிறைவேற்றி விடுவார். உம்மாவோ தனக்காக எதுவும் கேட்க மாட்டார்.

வாப்பா ஊருக்கு வரும் செய்தியை நியாஸ் மாமாவிடம் சொன்னான்.  “நியாஸு! கொஞ்ச நாளைக்கு ஊர சுத்தாம வாலை சுருட்டிகிட்டு ஒழுங்கா இரு. இல்லை அடி பின்னியெடுத்துடுவாஹ உங்க வாப்பா!” மாமா பயமுறுத்தினார்.

அப்படியெல்லாம் அடிக்கக் கூடியவர் அல்ல வாப்பா. அவன் செய்த தப்பு தெரிய வந்தாலும் அதை காட்டிக்காமல் மௌனமாய் இருந்து விடுவார். வாப்பாவுக்கு விசயம் தெரிந்தது உம்மாவின் மூலம் நியாஸுக்கு தெரிந்து விடும். கூப்பிட்டு கேட்பார் என நியாஸ் பயத்துடன் இருப்பான். அவர் தனக்கு தெரிந்ததை   காட்டிக் கொள்ளவே மாட்டார். நாலு திட்டி திட்டி, ரெண்டு அடி கொடுத்தாலாவது அவன் குற்ற உணர்வு நீங்கும். அவரது காட்டிக் கொள்ளாத மௌனமும் கொஞ்சமும் குறையாத அன்பான அரவணைப்பும் அவனுக்கு மரண அவஸ்தையாகிவிடும்.

உம்மா வாப்பாவிடம், “ ஏங்க புளளய அடிச்சு வளக்க மாட்டேங்குறீங்க”ன்னு கேட்டப்ப           “ நானே சீசனுக்கு சீசன் வற்ற பொன்னாந்தட்டான் பறவை போல வருசத்துக்கு ஒரு தரம் ஒரு மாசம் வற்றேன். இதிலே என்னத்த கண்டிக்கிறது. …..ஒவ்வொரு தொழுகையிலும் யா அல்லா! வருசம் முழுக்க நான் வெளிநாட்டிலேயே இருக்கிறதாலே என் புள்ளை தகப்பன் இல்லாத புள்ளைய போல வளருறான் அவன் பாவத்தை மன்னிச்சு அவனை முத்தக்கீன்களின் இமாமா (இறையச்சம் உடையோர்களின் வழிகாட்டியாக) ஆக்கு என அழுது கேக்குறேம்மா…. என் புள்ளை நல்லவன்தாம்மா படைச்சவன் கிருபையிலே அவன் நல்லா வருவான் பாறேன். ” என முடித்து விடுவார். இதுவும் உம்மாவின் மூலம் நியாஸுக்கு தெரிய வரவே. அவர் அன்பால் தன்னை சிலுவையில் அறைவதை அவனால் தாங்கி கொள்ள முடியாமல் தவித்தான்.

நியாஸ் ரஜினி ரசிகன்.நேற்று ரஜினிகாந்த் படம் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து ரஜினி அணிந்தது போல் ரேபான் கூலிங் கிளாஸ் அணியும் ஆசை வந்தது. வாப்பா சிங்கப்பூரிலிருந்து  கொண்டு வர தேவையில்லை கூலிங்கிளாஸ் கைக்கெட்டும் தூரத்தில் அந்திக்கடையிலேயே இருந்தது. எடுத்து இரண்டு மூன்று முறை போட்டு பார்த்து விட்டு வைத்து விட்டான். 

அம்மாவின் மூலம் வாப்பாவிடம் கேட்கலாம் என நினைத்தான். யோசித்து யோசித்து பார்த்தவன் திடீரென் கூலிங்கிளாஸ் வேண்டாம் என தீர்மானித்துவிட்டான். வாப்பாவிடம் கேட்கக் கூடாது. உம்மாவிடமும் மூச்சுவிடக் கூடாது. இந்த முறை என் ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பை அவர்களுக்கு நான் தரப் போவதில்லை. வேண்டாம் அந்த அன்பின் இம்சை என நினைத்த போது அவன் மனம் அது தான் சரி என்றது. 
0000

இன்னும் வாப்பா வர இரண்டு நாள் இருந்தது. வாப்பாவிடம் நல்ல பிள்ளை என பெயரெடுக்க வேண்டும் என முடிவெடுத்து பள்ளிவாசலுக்கு சென்றான். 
பள்ளிவாசலில் ஒழு எடுத்துக் கொண்டிருந்த  நியாஸிடம், 
“என்ன தம்பி பள்ளிவாச பக்கம் காத்தடிக்குது. வாப்பா ஊருக்கு வறாஹலா?” என்றார் பெரியவர் செல்லாப்பா. நியாஸின் அம்மாவுக்கு சிறிய தந்தையார் முறை.
 சகிக்க முடியாத அந்த கேலி சிரிப்பை பார்த்ததும் மனதிற்குள் வலைத்தளத்தில் பதிய முடியா ஒரு கெட்ட வார்த்தையால் அவரை திட்டியவன்,“ இப்ப தான் ஸ்கூல் லீவு வுட்டாஹா செல்லாப்பா!…..”என்று இழுத்தான்.
“ஒன்னைய ரஸூலுல்லா லீவுல மட்டும் தான் தொழு சொன்னாஹலா?” என்றவர் “ஏண்டா லீவு வுட்டு தான் பத்து நாளாச்சே விசயத்தை சொல்லு உங்க வாப்பா வற்றதா காத்து வாக்குல சேதி வந்துச்சே”என்றார் விடாகண்டனாய்.

கெழட்டு மூதேவி ஏன் இப்படி என்னை பாடாய் படுத்துறே என பொருமியவனாய்,  “ஆமா செல்லாப்பா!” என்றான் பவ்யமாய். 

நியாஸுக்கு செல்லாப்பா மேல் இத்தனை கோபம் வர காரணம் இல்லாமல் இல்லை.
நியாஸ் ரகசியாக செய்யும் பல தவறுகளை அம்மாவிடம் போட்டு கொடுத்தது செல்லாப்பா தான். போன ரமலானில் கூட இப்படித் தான். .... ரமலான் மாதத்தில் நியாஸ் நோன்பு வைத்திருந்தான். நோன்பு திறக்கிற நேரம் என்பதால் ரமலானில் நியாஸ் 6 மணிகாட்சி சினிமாவுக்கு போகமாட்டான். ஒன்லி காலை காட்சியும்,மேட்னியும் மட்டும் தான். ஆனால் சோதனையா அவனுக்கு பிடித்த ரஜினியின் பழைய படம் ஒன்றை மாலை, இரவு காட்சிகளில் மட்டும் போட்டார்கள். ஸ்டார் தியேட்டர்காரன் அப்படி செய்தால் அது நியாஸின் தவறல்லவே!.  மனசுக்கு பிடித்த விசயங்களில் விட்டு கொடுக்கும் நல்ல குணம் நியாஸுக்கும் எப்போதும் உண்டு. அதனால் அவனே விதியை ஒரே ஒரு நாளைக்கு மட்டும் மீறுவோம் என முடிவு செய்தான்.
அம்மாவிடம் பள்ளிவாசலில் நோன்பு தொறந்துட்டு, தராவிஹும் (நோன்பு மாத விசேச தொழுகை) முடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவேன் என் சொல்லி விட்டான். உமா ஹோட்டலில் ஒரு ரவா தோசையும், வடையும் வாங்கி கொண்டு ஸ்டார் தியேட்ட்ரில் நியாஸ் நுழையும் போது அந்த பக்கம் பஸ்ஸில் போய் கொண்டிருந்த செல்லாப்பா பார்த்து விட்டார். 

நோன்பு திறந்ததோடு நேரா நியாஸின் வீட்டுக்கு வந்தவர், “ஏன்மா! ஒம் புள்ளை நோன்பு தெறக்க ஒரு பள்ளி வாசலும் கெடைக்கலையா? சினிமா தியேட்டரில் தான் நோன்பு தொறப்பானோ!. நீந்தான் சாப்பாடு கட்டி குடுத்தியாக்கும்,” என்ற போது உம்மா பேயறைந்தது போல் முகம் சிவந்து போனாள். அந்த நிகழ்சிக்கு பிறகு செல்லாப்பாவை கண்டாலே அவனுக்கு பத்தியெறியும். 
00000
வாப்பா வந்ததிலிருந்து நியாஸின் பெரும் பொழுது அவருடன் தான் கழிந்தது.  ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். அவனுக்கு பிடித்த சுஜாதாவின் கதை புத்தகங்கள் வாங்கி கொடுத்தார். நியாஸ் ஐந்து வேளையும் ஒழுங்காக தொழுதான். குர்ஆன் ஓதினான். வாப்பாவுக்கு பிடித்த  எல்லாவற்றையும் விரும்பி செய்தான். அப்படி இருப்பது அவனுக்கு பிடித்திருந்தாலும் வாப்பா ஊருக்கு போய்விட்டால் உன்னால் இதையெல்லாம் தொடர முடியாது என அவன் மனம் பயமுறுத்தியது.
வாப்பா வந்து ஒரு மாதம் ஓட்டமாய் ஓடிவிட்டது. இன்று வாப்பா பயணம். சிங்கப்பூர் செல்கின்றார். நியாஸ் கூலிங் கிளாஸ் ஆசையை மட்டும் கடைசி வரை யாருக்கும் தெரியாமலேயே மறைத்து விட்டான். அதில் லேசான வருத்தமும், கூடவே நிறைய திருப்தியும் இருந்தது. 
சென்னை ஏர்போர்ட்டில் எல்லோரிடமும் சலாம் கொடுத்து விடை பெற்ற வாப்பா கடைசியாக நியாசை இருக்கி அணைத்து “போய்ட்டு வரவா!” என அன்புடன் முத்தமிட்டவர் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ரேபான் கூலிங் கிளாஸை எடுத்து அவன் கண்களுக்கு அணிவித்தார். 

ஆச்சரியம்!,மகிழ்ச்சி!, ஏமாற்றம்! தனக்கு ஏற்பட்டது என்ன உணர்வு என்பதே இனம் புரியாமல் நியாஸ் உறைந்து போனான்.

வாப்பா ‘டாட்டா!’ காட்டி விட்டு கிளம்ப நியாஸ் தன் மாமாவுடன் வீட்டுக்கு காரில் புறப்பட்டான்.

லேசாக இருள் சூழ்ந்தது. போகும் வழியில் ஒரு டீக்கடையில் ரேடியோ படகோட்டி சினிமா பாடலை ஒலிபரப்பியது.

“ஒரு நாள் வருவார். ஒரு நாள் போவார். ஒவ்வொரு நாளும் மரணம்.
ஒரு ஜான் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்.”

 பாடல் வரிகள் பல அர்த்தங்களைக் கொடுக்க நியாஸுக்கு உள்ளே பொங்கியது. முன் சீட்டில் சாய்ந்து முகத்தை மறைத்து கொண்டான். முதுகு குலுங்கியது. 

0000

இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதால் ஜமால் புத்தகத்தை மூடினான்.
 திக்ரு மஜ்லீஸில் அன்று நல்லோர் தோழமையின் உயர்வை பற்றி ஒருவர் பயான் செய்தார்.

“சின்ன வயதில் ஒட்டகம் மேய்க்க கூட  தகுதி இல்லை என தன் வாப்பாவால் தண்டிக்கப்பட்ட தன்னை நாற்பது லட்சம் சதுர மயிலுக்கு ஆட்சியாரா ஆக்கிடுச்சே இந்த முஹம்மது ரஸூலுல்லாவின் சகவாசம்” என இஸ்லாமிய ஆட்சியாளர் கலிஃபா உமர் (ரலி) முஹம்மது ரஸுலுல்லாவை நினைத்து கண்கலங்கினார்கள்” என்ற போது தன்னை ரோல் மாடல் என்ற ஆசிகாவின் முகமும், தன்னை இறைநேசம் கொள்ள வைத்த ஆன்மிக குருநாதர் ஃபைஜியின் சகவாசமும்  நினைவு வர ஜமாலின் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது.

"வாடிய உள்ளம் மலரானது!.
என வாழ்வே ஃபைஜியின் அருளானது!" 

என்ற பாடல் வரிகளை  அவன் வாய் முனுமுனுத்தது.


9 comments:

ஹமீது ஜாஃபர் said...

ஆன்மீகத்தை சார்ந்த அருமையான கதை ஒன்றை தந்திருக்கிறீர்கள். இன்னும் எழுதுங்கள்.

-ஹமீது ஜாஃபர்

புல்லாங்குழல் said...

அன்புள்ள நானா!, எழுத்தாளரான உங்கள் கருத்தை வாழ்த்தாய் கருதி உங்கள் துவாவுடன் என் முயற்சிகள் தொடர இறையருளை வேண்டுகின்றேன்.

RAFIA said...

azhakiya nadai!islaam damage aakaamal ilakkiyatthaiyum padappaadal kavithaiyaiyum rasikkum vitham arumai! ithu pondra padaippirkku
nalla angeekaaram kidaitthu vittaal en pondror nirayya muyarchippom.
vazhka valamudan.
Rafia
with Rgds.
Jeddhahvilurundhu.

புல்லாங்குழல் said...

ரபியா, உங்கள் வாருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

Faizeethasan said...

அருமையான பதிவு!

Anonymous said...

மதிர்ப்புகுரிய திரு. அமீன் அவர்களுக்கு,செஷேல்லில் இருந்து திருமதி மங்களா ராஜசுந்தரம் எழுதுவது..............
நீண்ட ----------------------- வருடங்களுக்குப் பிறகு என் தந்தையாரின் நினைவுத் தடங்கள் மூலம் உங்களை மீண்டும் கண்டுபிடித்து , அந்த நாள் மலரும் நினைவுகளில் நாங்கள் வெகு நேரம் கட்டுண்டு கிடந்தோம். அன்றைய சீஷெல் இந்தியா குடும்பங்கள் எவ்வளவு அன்னியோனியமாக இருந்தது? இன்று தீவில் குட்டிதீவுகளாக, கூறு போட முடியாத குறுகிய வட்டங்களாக மாறிய அதிர்சியில் உறைந்திருந்தபோது உங்களைப் பற்றிய குறிப்பு வந்து பழைய நினைவுகளை அசைப் போட வைத்தது. உங்கள் மனைவி நிஷா , பிள்ளைகள் நலம் பற்றி அறிய ஆவல். நாங்கள் சீஷேல்லில் தான் இருக்கிறோம். மாலன் மருத்துவம் மூன்றாம் ஆண்டிலும், இளைய மகன், பள்ளி இறுதி ஆண்டிலும் இருக்கிறார்கள். . என் இ-மெயில் முகவரி bhuvana.sez@gmail.com நேரம் கிடைக்கும்போது தொடர்பு கொள்ளவும். உங்களின் குடும்ப புகைப்படம் ஒன்றை மெயிலில் அனுப்பவும். உங்களின் ரோல் மாடல் சிறுகதை யதார்த்தத்தை சிறப்பாக காட்டுகிறது...குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன் .......... மங்களா ராஜசுந்தரம்
-

Sakthi said...

nice.. salam.

புல்லாங்குழல் said...

வ அலைக்கும் ஸலாம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி.

Anonymous said...

Nice Post