“தொழுகின்றேன் பேர்வழி என முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகைக்கு சென்று விடுவதால் நாட்டின் உற்பத்தி திறன் (productivity) பாதிக்காதா?” என கேள்வி எழுப்பினார் ஒரு நண்பர்.
நாட்டின் உற்பத்தி திறனில் எத்தனை ஆர்வம் பாருங்கள் அவருக்கு. சற்று சிந்திந்திருந்தால் நணபர் அப்படி கேட்டிருக்க மாட்டார் . பாருங்களேன், அவரது கேள்விபடி அஸர் எனும் பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் தொழும் தொழுகையைத் தவிர அனைத்து தொழுகைகளும் வேலை நேரத்தில் இல்லை என்பது தான் உண்மை. அதன் கால அளவு கூட ஒரு தேநீர் இடை வேளையை விட குறைந்த பொழுதே தான் என்பதும் உண்மை. ஆக இந்த வாதம் எளிதில் புறந்தள்ள தக்கதாகும். அதேநேரத்தில் அந்த கேள்விக்குள் மறைந்திருக்கும் இன்னொரு கேள்வியையும் நான் கண்டேன்.
தனக்கு ஏதும் தேவைகள் இல்லாதவன் இறைவன். அப்படி தேவை இல்லாதவனுக்கு, தான் வணங்கப்பட வேண்டும் என்பது மட்டும் தேவையா? அப்படியே வணங்க வேண்டும் என்றாலும் இப்படி நாள் முழுவதும் அடிக்கடி மற்ற வேலைகளை எல்லாம் விட்டு விட்டு இறைவனை வணங்க வேண்டுமா? என்பது அவரது கேள்விக்குள் மறைந்திருக்கும் இன்னொரு கேள்வி.
அப்படி என்றால் தொழுகை என்பது எதற்கு?
தொழகை என்பது நாம் கடவுளை நினைப்பதற்கு….
நினைவை பற்றி ஆபிதீனின் பக்கங்களில் பதியப்பட்ட கவிஞர் Z.ஜெபருல்லா அவர்களின் கவிதையை பாருங்கள்:
இறைவா…உன்னை நினைக்கச் சொல்கிறாயே
மறதிக்குப்பின் தானே நினைவு?
உன்னை
மறக்க வேண்டுமா? என்றேன்
‘உன்னை மற’ என்றான்
என் ஏகன்.
தன்னை மறந்து இறைவனை நினைப்பதெல்லாம் இறைகாதலர்களின் விஷயம். இதற்கு மாறாக ‘கடவுளை மற! மனிதனை நினை ! என்பதோ கடவுளின் பெயரால் பொருளாதார விரயம் ஏற்படாமல் மனித நலனுக்காக அது பயன்படுத்த பட வேண்டும் என்ற மனித நேய நெஞ்சங்களின் ஆதங்கமாக நோக்கப்பட வேண்டிய வாசகங்கள். முடிந்தால் இவை பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம்.
இங்கு தொழுகை எப்போது கடமையானது என்பதை பார்ப்போம்.
Seychelles Mosque
Seychelles Mosque
1995 ஆம் ஆண்டு சிஷெல்ஸ் என்னும் இந்திய பெருங்கடலில் உள்ள தீவுக்கு என் குரு நாதரை வரவழைத்திருந்தோம். அப்போது அவர்கள் அங்கே உள்ள பள்ளிவாசலில் ஏகத்துவ ஞானம் (தவ்ஹீத் பில் உலூஹிய்யத்) பற்றி உரையாற்றினார்கள். அந்த பள்ளியின் இமாம் இத்ரீஸ் மதனி அதை வெகுவாக ரசித்து கேட்டார்.
மறு நாள் இமாம் இத்ரீஸ் மதனியும் இன்னும் சில ஊர் பிரமுகர்களும் என் குருநாதரை பார்க்க வந்தார்கள். வந்தவர்கள் “இந்த நாட்டில் யாருடைய பிரச்சாரமும், அழைப்பும் இன்றி வருடத்துக்கு இருபது, முப்பது பேர் இஸ்லாத்துக்கு வருகின்றார்கள். ஆனால் வந்தவர்களில் பாதி பேர் இடையிலேயே இஸ்லாத்தை விட்டு போய் விடுகின்றார்கள். அவர்களுடன் சேர்ந்து பழகும் எங்கள் வீட்டு பிள்ளைகளும் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது இஸ்லாமிய சூழலில் சென்று வாழலாமா என நினைக்கின்றோம். உங்கள் ஆலோசனை என்ன?” என கேட்டார்கள்.
0000
இந்த நேரத்தில் சிஷெல்ஸ் பற்றி ஒரு சின்ன அறிமுகம். சிஷெல்ஸ் மக்கள் கம்யூனிச பாணி ஆட்சியில் வாழ்ந்ததால் பெரும்பான்மையோர் எந்த மதத்தையும் சீரியஸாக பின்பற்றாதவர்கள். திருமண உறவு இல்லாமலே சேர்ந்து வாழ்பவர்கள். பியர் குடிப்பது அங்கே டீ குடிப்பது போல. டிஸ்கொத்தே, மியூஸிக், பெர்ஃபியூம், என வருமானத்தின் கடைசி ரூபாய் வரை செலவழித்து விட கூடியவர்கள்.
நாங்கள் எங்கள் கம்பெனிக்காக இன்டெர்வ்யூ செய்யும் போது சில பொது தகவல்களை இந்த வரிசையில் கேட்பார் எங்கள் பெர்ஸனல் மேனேஜரஸ்:
“ஒன்”, “டூ” என ஏதாவது பதில் வரும்,
“ஆர் யூ மேரீட்?” என கேட்பார்.
“நோ சிங்கிள் பேரண்ட்” என்பது தான் பெரும்பாலும் பதிலாக இருக்கும்.
0000
ஆலோசனை கேட்டு வந்தவர்களைப் பார்த்து என் குரு “ நீங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களிடம் தொழுகை முதலிய வணக்கங்களை மிகவும் கடுமையாக வலியுறுத்துவீர்களா?” என கேட்க,
“ஆமாம் வணக்கம் இல்லாமல் மார்க்கம் என்பது ஏது?” என்றார்கள்.
“உண்மை தான். ஆனால் நீங்கள் ஒரு விசயத்தை நினைவு கூற வேண்டும். நேற்று நான் பள்ளியில் பேசிய ஏகத்துவ ஞான விசயங்கள் குர் ஆனில் உள்ளதா என் சொந்த கருத்தா?” என கேட்க “முழுக்க முழுக்க குர்ஆனில் உள்ளது. மதினாவில் உள்ள சில மார்க்க அறிஞர்களிடம் கேட்டதற்கு பிறகு உங்கள் வாயால் தான் இந்த வாசகங்களை கேட்டு மகிழ்ந்தேன் என்றார்.”என்றார் இத்ரீஸ் மதனி.
அவர்களை பார்த்து என் குரு” முஹம்மது நபிகள் தன் 40வது வயதிலிருந்து இறைவனைப் பற்றிய ஞானத்தை போதிக்க துவங்கி விட்டார்கள். 12 வருடங்கள் கழித்து அவர்களது 52ஆவது வயதில் தான் தொழுகை கடமையாக்கப்பட்டது.
இறைவன் தொழுகையின் பால் தேவை உள்ளவன் என்றால் ஆரம்பத்திலேயே தொழகையை கடமையாக்கி இருப்பான். இன்னும் தொழாதவர்கள் ஒருவரைக் கூட வாழவைக்க மாட்டான்.”
( இந்த இடத்தில் எனக்கு இறைவனிடம் கையேந்துங்கள் பாடலில் உள்ள
“தேடும் நேயர் நெஞ்சங்களில் குடி இருப்பவன்.
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்.” என்ற வரிகள் ஞாபகத்திற்கு வந்தது.)
“இறைவன் எதன் பக்கமும் தேவைகள் இல்லாதவன் மட்டுமல்ல. நம் அனைத்து தேவைகளையும் வேறு யாருடைய தயவுமின்றி நிறைவேற்றுபவன். மீண்டும் சொல்கின்றேன் நம் சின்ன தேவை, பெரிய தேவை, அற்ப தேவை, சொற்ப தேவை என அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுபவன் அவன் தான்.நம் கைகளால் உணவை அள்ளி உண்டாலும் இறைவன் தானே தான் உணவை ஊட்டி விடுவதாக சொல்கின்றான். கடலிலும், பூமியிலும் நம்மை சுமப்பதாக அவன் சொல்கின்றான். வானத்திலும் பூமியிலும் வாழ்வாதாரங்கள் (ரிஜ்க்) அனைத்தும் வழங்குவதாக சொல்கின்றான். உப்பு போன்ற சிறிய பொருளின் தேவையிலிருந்து, செருப்பு வார் அருந்தால் செப்பனிடும் சிறு செயலின் உதவிக்குக் கூட அனைத்தையும் அவனிடமே கேட்கச்சொல்கின்றான்.
இப்படி பெருமானார் முதல் 12 வருடங்களில் நம் வாழ்வின் அனைத்து தேவைகளயும் இடைவிடாமல் நிறைவேற்றுபவனாக இறைவனை காட்டி காட்டித் தந்தவுடன் அந்த மக்களின் மனதில் ஏகத்துவ ஞானம் ஆழ பதிந்தது. இவ்வளவு உதவும் இறைவன் மேல் காதல் அலைமோதியது. அவனுக்கு காணிக்கையாக ஏதாவது கைம்மாறு செய்யும் மனோநிலை உருவானது அந்த நிலையில் தான் தொழுகை கடமையானது, ஆகவே நீங்களும் அந்த மக்களுக்கு இறைவனை பற்றி, வணக்கத்துக்குரிய அவனது தகுதிகளைப் பற்றி அவர்கள் மனதில் ஆழபடியும்படி எடுத்துச் சொல்லுங்கள். இறைவனின் பேருபகாரங்களை உணர்ந்து இறைக்காதல் மிகைத்தால் எல்லா வணக்கங்களும் சொல்லாமலே வந்து விடும்” என்றவுடன் அவர்கள் மனம் தெளிந்தவர்களாய் திரும்பி சென்றார்கள்.
அதற்கு பிறகு பல வாரங்கள் வெள்ளி கிழமை ஜும்மா உரையில் என் குருவின் வாயிலாக கேட்ட இறைஞான விளக்கத்தை தான் பேசினார் இமாம் இத்ரீஸ் மதனி.
7 comments:
உங்கள் குரு நாதர் பெயரை குறிப்பிடவில்லையே.
பொன்னான பதிவு.வாழ்த்துக்கள் சகோதரர்.//“ஹவ் மெனி சில்ரன்ஸ்?”
“ஒன்”, “டூ” என ஏதாவது பதில் வரும்,
“ஆர் யூ மேரீட்?” என கேட்பார்.
“நோ சிங்கிள் பேரண்ட்” என்பது தான் பெரும்பாலும் பதிலாக இருக்கும்.
// என் கணவர் வேலை நிமித்தமாக சென்று இருக்கும் நாட்டிலும் இதேதான்.ஒன் சைல்ட்.சிங்கில் பேரண்ட்”என்ற வார்த்தை சகஜம்.அப்ளிகேஷனில் கூட இதனையே குறிப்பிடுவார்களாம்.பொதுவாக கம்யூனிச நாடுகளில் இது மிக மிக சகஜம் போலும்
//உன்னை மறக்க வேண்டுமா? என்றேன்
‘உன்னை மற’ என்றான் என் ஏகன்//
ரொம்ப நல்லாருக்கு
இளம் தூயவன், அரபு தமிழன், சகோதரி ஸாதிகா உங்கள் அனைவருக்கும் நன்றி!
நம்மை விட நமக்கு நெருக்கமானவன் நம் இறைவன் ஆயினும் அவன் முகவரி திருக்குர்ஆன்,ஹதீஸ்
குருநாதர் அவர்களைப்பற்றி நாங்கள் ஒரளவு தெரிந்திருந்தாலும் அவர்களை நன்கு அறிந்த உங்களைபோன்றோர்கள் மூலம் பல அறிய செய்திகளை படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். உங்களுடைய சேவைகள் தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.
-நாச்சியா ரபி அஹமது, சிங்கப்பூர்.
சகோதரர் நீடுர் அலி நன்றி! ஆயினும் உங்களிடம் இன்னும் அதிகமாக / ஆழமாக எதிர் பார்க்க்கின்றேன்.
சகோதரி நாச்சியா ரபி அஹமது உங்களை போன்றோரின் துவாவில் அதரவு வைக்கின்றேன். உங்கள் குடும்பத்தினருக்கு என் ஸலாம்.
Post a Comment