தோழமையுடன்

Saturday, May 17, 2014

மோடியின் ஆட்சியில் நாம் செய்ய வேண்டியது என்ன?

Enter the Dragon 
"கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீதான வெறுப்பே இப்படியொரு தேர்தல் முடிவு வர முக்கிய காரணம்.. 

மோடி அலை இருந்தது உண்மை என்றால் ஏன் அது தமிழகத்தில் எதிரொலிக்கவில்லை..

எது எப்படியாயினும் இனிவரும் 5 ஆண்டுகள் ஜனநாயகசக்திகளுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது" எனும் கார்டூனிஸ்ட்பாலாவின் Enter the dragon எனும் கார்டூன் தான் நாம்  இங்கே காண்பது.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பாலாவின் கார்டூனை தொடர்ந்து மனதில் சில சிந்தனைகள் எழுந்தன...... 
  

(நபியே!) நீர் கூறுவீராக: “இறைவனே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” ( 3:26) என்கிறது இறைவேதம்.

மோடிக்கு ஆட்சியை கொடுத்தது எந்த இறைவன்?

''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை! என்கிறது இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்.


நம்பிக்கையாளர்களே!

மோடிக்கு ஆட்சியை கொடுத்தது.....

மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஏக இறைவனே தான்.

அதே நேரத்தில் மோடியின் ஆட்சி நிச்சயமாக நம்பிக்கையாளர்களுக்கு சோதனை தான்.

ஆனால் சிந்தித்து பாருங்கள்…..

கொள்ளைக்காரராய் இருந்த புலைல் இப்னு இயால்  இறைநேசச் செல்வராய் மாறிய சரித்திரம் நம் முன்னே இருக்கின்றது.

முஹம்மது ரசூலுல்லாஹ்வை கொல்வதற்காக வாளெடுத்த உமர்,  நீதியை காக்கும் ஆட்சியாளராக, முஹம்மது நபியின் நேசராக மாறிய சரித்திரம் நம் முன்னே இருக்கின்றது.

ஆகவே இறைவன் நாடினால் மோடியின் மூலம் கூட இந்தியாவிற்கு ஒரு அமைதியான நல்லாட்சியை வழங்கலாம். 

ஒரு வேளை அதற்கு அவர் தகுதியானவராக இல்லை என்றால் வேறு நல்லாட்சியாளர்களை இறைவன் நிச்சயம் வழங்குவான். 

மோடி செல்லவிருப்பது நீதிகாத்த உமரின் பாதையா?

ஆநீதியால் அழிந்த அபுஜெஹ்லின் பாதையா? என்பதை காலம் நமக்கு காட்டித் தரும்.

ஆனால், நாம் செய்ய வேண்டியது என்ன?

நல்லாட்சியை நாம் விரும்பினால் அதற்கு நாம் இரண்டு தகுதிகளை நம்மில் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என வழிகாட்டுகிறது இறைவேதம்.

இணைவைப்பின் களப்பற்ற இறை நம்பிக்கையும் அதன் வெளிப்பாடான நற்செயலும் தான் அந்த இரண்டு தகுதிகள்.

உங்களில் எவர் நம்பிக்கைக் கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, 

அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், 

இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், 

அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், இறைவன் வாக்களித்திருக்கிறான்;

“அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். 24:55.

இணைவைப்பின் களப்பற்ற இறை நம்பிக்கையும் அதன் வெளிப்பாடான நற்செயலும் தான் நமக்கு இருக்கிறதே என அலட்சியமாக எண்ண வேண்டாம்.

இந்த இறை வசனத்தை ஆழமாக சிந்தித்து பாருங்கள்:

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி இறைவனுக்கே உரியது. இறைவனையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?  (2:107) என்கிறது இறைவேதம்.

உங்கள் ஒரே பாதுகாவலனாக இறைவனை அறிந்து கொண்டீர்களா?

உங்களுக்கு ஒரேயொரு உதவி செய்பவனாக இறைவனை பெற்றுக் கொண்டீர்களா?

இந்த கேள்விக்கு பிறருக்கு நாம் விடையளிக்க வேண்டியதில்லை. நம்மை நோக்கியே நாம் கேட்டுக் கொள்வோம்.

தட்டுங்கள் திறக்கப்படும் என்று இறைத்தூதர் இயேசு நாதர் சொன்ன கதவை நாம் வெளியில் தேட வேண்டாம். 

அந்த கதவு நம் உள்ளே....

நம் இதயத்தில் தான் இருக்கிறது.


எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள், நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக (முஃமின்களாக) இருந்தால் நீங்கள் தான் மேலானவர்கள்.(3:139) என்பது இறை வாக்கு.


So Lose not heart,

Not fall into despair:

For you must gain mastery

If you are true in Faith. (3:139)





உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: