வீட்டுகுள் நுழைந்ததும் “என்னங்க அஹ இன்னைக்கு திரும்பி
வந்தாஹங்க!” என்றாள் என் மனைவி.
உண்மை நிலை என்ன? மடியிலே உள்ளவனை தந்தை வெறுக்காவிட்டாலும் தந்தையின் பிரியம் சுத்த பத்தமா இருக்கிறவன் மேல தானே இருக்கும்.
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
“எஹ?” என்றதும்.
“தாவா ஆண்டிங்க!” புன்னகையுடன் அவள் சொன்னதும், அதே கேலிப்புன்னகை
என் முகத்திலும் பரவியது.
‘தாவா ஆண்டி(Dawa Aunty) ’ என அழைக்கப்படும் 65 வயது மதிக்க தக்க
மூதாட்டி நேற்று தான் எங்கள் வீட்டுக்கு முதன் முறையாக வந்தார். நடுப்பகல் உச்சி வெயில்
நேரத்தில் வியர்க்க விருவிருக்க வந்த தாவா ஆண்டியை மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்து
சென்று உபசரித்தாள் என் மனைவி.
அதிலும் ‘நான்’ எழுதிய ஆன்மீக புத்தகத்தை குறித்து
“ ரெண்டு தடவ படிச்சேன்மா. ரொம்ப நல்ல புக்கு. உன்னட மாப்பிளை ரொம்ப புத்திசாலிம்மா”
என்று தாவா ஆண்டி சொன்னதும் ‘தன் கணவனை ஆன்றோன் என சொல்லக் கேட்ட’ என் மனையாள் ‘மணந்த
போதினும் பெரிதுவந்து’ தாவா ஆண்டியையும் பெரிதுவக்கத் துவங்கினாள்.
இனி நடந்ததை அவளே கூறுவதை கேளுங்கள்....
“தாவா ஆண்டி தவறாமல் தான் தொழுகின்ற தஹஜ்ஜத் தொழுகை, நஃபிலான நோன்பு என ஆரம்பித்து முஸ்லீம் சகோதரிகளை தான் நல்வழிப்படுத்தும் சேவைய பத்தி
சொன்னாஹா!. நானும் ஆர்வமா கேட்டுகிட்டே இருந்தேன். 12 மணிக்கு ஆரம்பிச்சது 2 மணியாயிடுச்சு. என்ன இது
ஒரே தற்புகழ்ச்சியாக இருக்கிறதேன்னு மனசுல சலிப்பு தொடங்குனுச்சு.
அதே நேரம் பார்த்து ஸ்கூல் விட்டு பிள்ளைங்க வந்துட்டாங்க.
பசியோடு வந்த பிள்ளைங்களுக்கு சாப்பாடு வச்சு
கொடுக்க இந்திரிச்சேன்.
“என்ன அவசரம் எல்லாரும் உட்காருங்க!”ன்னு சொல்லி
பிள்ளைங்களையும் சேர்த்து உட்கார வச்சுட்டாங்க.
( என் இரண்டாம் மகளை குறிபிட்டு) இவ சேதி தான் உங்களுக்கு
தெரியுமே வந்தவுடனே யூனிஃபார்மை கூட களட்டாமல் சாப்பிட ஆரம்பிச்சுடுவா. ஆனா இன்னக்கி
அஹ உட்கார சொன்னதும் இவ பவ்யமா உடகார்ந்ததை பார்த்தா எனக்கே சிரிப்பு வந்துடுச்சு கஷ்டப்பட்டு
அடக்கிகிட்டேன்.
தாவா ஆண்டி பேசிக்கிட்டேடேடேடே இருந்தாஹ. மணி 3 ஆயிடுச்சு.
புள்ளைங்க ரெண்டு பேரும் என் முகத்தை முகத்தை பார்க்குறாளுவ.
நான் மெதுவா தாவா ஆண்டீட்டே “பிள்ளங்களுக்கு சாப்பாடு
வச்சு கொடுக்கனும். நீங்களும் ஒரு வாய் சாப்பிடுங்க ஆண்டி” என்றதும்,
“பசிச்சா உடனே சாப்புட்டனுமா?..... நப்சை அடக்கனும்…...
‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ன்னு சொல்றதே நீ கேள்வி பட்டதுல்லே” பெருங்குரலில்
பேசி என்ன மேல பேச வுடாமெ அடக்கிட்டாஹ.
4 மணிக்கு தான் அஹ கிளம்பி போனஹா.
போனதும் சோத்து குக்கரை நோக்கி நாங்க மூனு பேரும்
ஒரே பாய்ச்சல் தான். சோத்த அவசர அவசரமா கொட்டி ‘பிஸ்மி’ கூட சொல்லாமே பரக்க பரக்க உண்டவுடனே
தான் உயிரே வந்துச்சி.
இன்னைக்கு பகல் அதே 12 மணிக்கு காலிங் பெல் ஓசை,
வாசலை நெருங்கி கதவில பொருத்தப்பட்டுள்ள லென்ஸின் வழியே பார்த்தா அந்த சீதேவி தான்
வந்து நிக்கிறாஹா.
மெதுவா பூனைய போல பின் வாங்கி அறைக்கு போயிட்டேன்.
காலிங் பெல் ஓசை விட்டு விட்டு பல முறை அடிச்சு ஓய்ஞ்சுச்சு.
ஒரு அஞ்சு
நிமிஷம் ஆகியிருக்கும். தொலைப்பேசி
சினுங்கியது. எதிர் ஃபிளாட்டிலிருந்து அழைப்பு. நான் உஷாராயிட்டேன். போனை எடுக்கவே
இல்லை” என என் மனைவி சொல்லி முடிக்கவே. நானும் அவர்களைப் பற்றிய என் கணிப்பை நகைச்சுவையாக
சொல்ல எல்லோரும் சிரித்தோம்.
திடீரென “வாப்பா நம்ப இப்ப அஹல பத்தி பேசுறது பிஸாது
தானே” என்றாள் என் சின்ன மகள்.
சின்ன மகள் உருவத்தில் பிஸாது ( புறம்) பேசாதே!'ன்னு அல்லாத்தானே எச்சரிக்கின்றான்
என்ற உணர்வு எங்களை தாக்கியது.
‘நாங்கள் ஒரு பெரிய இறைஞானியிடம் ஞானம் பயின்றும்
அதை பிறருக்கு எத்தி வைப்பதில் பின் தங்கியவர்களாய் இருக்க அந்த மூதாட்டியின் அயரா
உழைப்பு எங்களுக்கு ஏற்படுத்திய வெட்க உணர்வை மறைக்கத் தான் அவர்களை கிண்டல் செய்து
சிரித்தோமா?’
இந்த வயசுல,
இப்படி வேகா வெயிலுலே ஒவ்வொரு வீடா தேடிப் போயி ஊரு பிஸாது பேசல, வேற வெட்டி பேச்சு
பேசலை. மார்க்கத்த பத்தியே பேசும் அவர்களின் அனுகுமுறையில் சில குறைகள் இருந்தாலும்
அந்த அயராத உழைப்பை நினைத்தால் மனதில் ஒரு பிரமிப்பு எழுந்தது.
“அல்லாஹுத்தஆலாவிடத்தில்
உனக்கு எவ்வளவு மதிப்பிருக்கிறது என்று நீ அறிய நினைத்தால், உன்னை அவன் எந்த விஷயத்தில்
ஈடுபடுத்தியிருக்கிறானென்பதைக் கவனி!
ஒருவன் சீதேவிகளில் உள்ளவனாயிருந்தால் அவனை அல்லாஹுத்தஆலா
தனக்குப் பொருத்தமான விஷயங்களில் ஈடுபடுத்துவான். மூதேவிகளில் உள்ளவனாயிருந்தால் தனக்கு
கோபமான விஷயங்களில் ஈடுபடச் செய்வான்”
இப்னு அதாவுல்லா இஸ்கந்திரி(ரஹ்) அவர்களின் ஹிகம் என்ற ஞான வழி நூலில் வரும் இந்த வாசகங்களை என் குருநாதர் அடிக்கடி குறிப்பிடுவார்கள். அதன் தொடர்பில் அவர்கள் கூறிய வார்த்தைகளும் மனதில் ஓடியது.
இப்னு அதாவுல்லா இஸ்கந்திரி(ரஹ்) அவர்களின் ஹிகம் என்ற ஞான வழி நூலில் வரும் இந்த வாசகங்களை என் குருநாதர் அடிக்கடி குறிப்பிடுவார்கள். அதன் தொடர்பில் அவர்கள் கூறிய வார்த்தைகளும் மனதில் ஓடியது.
‘இறைஞானம் வந்து அகக்கண்ணால் எங்கும் இறைவனை தரிசிக்க
கூடிய நீங்க ரொம்ப உஷாரா இருக்கனும்.
![]() |
குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி(ரலி) |
எனக்கு கரீபாக
இருக்கின்ற அல்லாஹ், என்னில் முஹீத்தாக இருக்கிற அல்லாஹ், என்னில் ஹாலிரா இருக்கிற
அல்லாஹ் என்னை என்ன வேலையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றான்னு உங்களையே நீங்க கேட்டு
பாருங்க.
ஆயுசுக்கும் நினைவுல வச்சுக்கிற மாதிரி ஒரு சின்ன
உதாரணம் சொல்றேன் கேளுங்கள்.
ஒரு தந்தைக்கு ஒத்த வயதுடைய இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்களின் ஒருவன்
கழுத்தை கட்டிக்கிட்டு அவர் மடியில் தவழ்கின்றான்.
இன்னொருவன் சற்று தள்ளி நிற்கின்றான்.
மடியில் இருப்பவனோ தன் மேலேயே வாந்தியெடுத்துட்டு மலம் கழித்து அதையும் கழுவாமல் வந்து வாப்பாவின்
மடியில் அமர்ந்திருக்கின்றான்.இன்னொரு மகன் சற்று தள்ளி நிற்க்கின்றான். ஆனால்
குளிச்சு, முழுகி சுத்தமான ஆடையணிந்து ஒழுக்கமாக நின்று கொண்டு தந்தையின் ஏவலை ஏற்று
பணிசெய்ய காத்திருக்கின்றான்.
பார்வைக்கு தந்தைக்கு நெருக்கமாக (கரீபாக) யாரை தெரியுது?
மடியில் இருப்பவனை.
தூரமாக யாரை தெரியுது?
தள்ளி நிற்பவனை.
உண்மை நிலை என்ன? மடியிலே உள்ளவனை தந்தை வெறுக்காவிட்டாலும் தந்தையின் பிரியம் சுத்த பத்தமா இருக்கிறவன் மேல தானே இருக்கும்.
அதை போல சிலர் இறைஞானத்தைக் (மஃரிஃபாவின் இல்மைக்) கொண்டு அல்லாஹுக்கு கரீபா (நெருக்கமா)
ஆயிடுவான். ஆனால் செய்யுற அட்டகாசம் அழிச்சாட்டியத்தால தூர போய்டுவான்.
சிலர் இறைஞானம் இல்லாததால தூர இருப்பான். இறையச்சம்,
நல்லமல்கள் கௌஃப், அமாலே ஸாலிஹா, கஷியத்தே இலாஹியை கொண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை
பெற்றவனாக இருப்பான். இந்த நெருக்கத்துக்கு பெயர் ‘குர்பே ரிளா’. இறை பொருத்தத்தினால் கிடைக்கும்
இறை நெருக்கம்.
ஆகவே, அல்லாஹுடைய நெருக்கம் ( குர்பத், மஈயத், அக்ரபியத், இஹாதத்,
ஹாலிரியத் இவ்வளவும்) கிடைத்தும் உன் அயோக்கியத்தனங்கள் உன்னை விட்டு போகலைன்னா உன்
நிலையை நீ நினைத்துப்பார். ஆனால் அவனுக்கோ மஃரிஃபாவின் ஒரு இல்மும் நஸீபாகவில்லை இருந்தும்
கிடைத்த இல்மை கொண்டு தக்வா செய்கின்றான். இறையச்சத்துடன் வாழ்கின்றான், அதனால் அத்தகையவர்களை நீங்கள் இலேசு காணாதீர்கள்
என்பார்கள் என் குருநாதர்.
அல்லமா இக்பால் (ரஹ்) ஒரு சூஃபி ஞானியின் கவிதையிலிருந்து
எடுத்து கூறிய வார்த்தைகள் இவை:
Fate serves as wings for the God-conscious,
The same Fate works as prison-house for the
Ignorant,
The wings of the falcon swing on to the hand
of the Sultan.
The wings of the crow drive but to the graveyard!
நான் ராஜாளியா? காகமா?
“கரீபாக இருக்கின்ற அல்லாஹ், முஹீத்தாக இருக்கிற
அல்லாஹ், நம்மில் ஹாலிரா இருக்கிற அல்லாஹ் நம்மை என்ன வேலையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றான்னு
பாருங்க” என்ற என் குருநாதர் ஃபைஜீஷாஹ் நூரி (ரலி) அவர்களின் வார்த்தைகள் இன்னும் மனதில்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
No comments:
Post a Comment