தோழமையுடன்

Tuesday, January 11, 2011

ஜெனாதிபதியை மேடையிலிருந்து இறக்கிய கிழவி!


இன்று ஒரு பவுன் நகையை மட்டும் மஹராக கொடுத்து விட்டு “வரதட்சனை எல்லாம் நாங்க வாங்க மாட்டோம் நீங்களா உங்க பொண்ணுக்கு என்ன செய்வீங்கலோ அதை செய்ங்க, என்ன உங்க பொண்ணுக்குத் தானே செய்ய போறீங்க” என தந்திரமாக பேசி பல லட்சங்களை சுருட்டும் சூட்சும வித்தைகளை  எல்லாம் அறிந்த எங்களை போல இல்லாமல் ஏமாளி இஸ்லாமியர்களாக பெண்கள் கேட்கும் மஹரை கொடுத்து மணம் முடித்து வந்தார்கள் உமர்(ரலி) அவர்களின் காலத்தில்.

இந்த விசயத்தில் அரபியர்கள் மாறவில்லை என்பதாக கேள்வி. நாங்களும் இப்படியெல்லாம் வரதட்சனை கேட்பதில்லை. எங்க தங்கச்சி, அக்கா, அம்மாலல்லாம் கேட்டா, எங்கள் வீட்டு பெண்களின் அந்த உரிமையில் நாங்கள் தலையிடுவதில்லை. அப்புறம் ஆணாதிக்கம் பிடித்த  மேல்ஷாவனிஸ்ட் என்பீர்கள் எதுக்கு வீண் வம்பு. சரி விசயத்துக்கு வருவோம்.

யார் அது உமர் என கேட்பவர்களுக்கு, உமர்(ரலி) இஸ்லாத்தின் இரண்டாம் கலிஃபா. முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு பின் அபுபக்கர் (ரலி) ஆட்சியாளராக முதல் கலிஃபாவாக தேர்ந்தெடுக்கபட்டார்கள்.  அவர்களுக்கு பின் அந்த ஆட்சி (கலிபா) பொறுப்புக்கு உமர்(ரலி) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

அவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

உமர்(ரலி) அவர்கள் காலத்தில் மணம் முடிக்க பெண்களுக்கு வழங்கப்படும் மஹர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து ‘இனி ஏழை ஆண்கள் மணமுடிக்கவே தகுதியற்றவர்களாக ஒதுக்கப்பட்டு விடுவார்களோ’ என்ற அளவுக்கு வந்து விட்டது. கலிஃபா உமர் (ரலி) அவர்கள் மஹர் தொகைக்கு ஒரு வரையறை ஏற்படுத்தி விட நினைத்தார்கள். தன் குழுவினருடன் அலோசித்த பின் பொது மக்களுக்கு அறிவிக்க மேடையேறிய கலிஃபா, “பெருமானார் அவர்கள் வழங்கிய மஹர் தொகையை விட அதிகமாக இனி மஹர் வழங்கப்பட கூடாது. அப்படி வழங்கப்பட்டால் அத் தொகை பறி முதல் செய்யப்பட்டு பொது நிதியில் (பைத்துல்மாலில்) சேர்க்கப்படும்” என அறிவித்தார்கள்.

மறுகணமே பெண்கள் பகுதியிலிருந்து ஒரு குரல், “உமரே! நீர் மேடையிலிருந்து இறங்கி விடும்” என்றது. குரல் வந்த திசையை நோக்கிய கலிஃபா அங்கே ஓர் வயதான மூதாட்டி நின்றிருக்க கண்டார். நாற்பது லட்சம் சதுர மைல்களின் ஆட்சியாளர் ஒரு மறுப்பும் இன்றி கீழே இறங்கி, “தன்னை அவ்வாறு இறங்க சொன்னதன் காரணம் என்ன?” என அன்புடன் கேட்டார்.
இங்கு கலிஃபா அவர்களை பற்றிய ஒரு சின்ன அறிமுகம். உமர் அவர்களின் கோபம் பிரசித்தி பெற்றது. இஸ்லாத்தை ஏற்று கொள்வதற்கு முன்பு ஒரு முஸ்லிம் பெண்ணை அறைந்ததில் அந்த பெண்ணின் கண்கள் வெளிவந்து விட்டது என சொல்வார்கள்.  , இதே கோபம் முஹம்மது நபி என்னும் பெருஞ்சித்தரின் சகவாசத்தில் நேர்வழிபடுத்தப்பட்டு நீதிக்கு ஓர் உமர், வீரத்திற்கோர் உமர் என்ற பெயரை வாங்கி தந்தது. நல்லோர்களின் தோழமை செய்த ரஸவாதம்.

இப்போது நினைத்து பாருங்கள் அந்த காட்சியை ஒரு எளிய கிழவியின் குரலுக்கு பணிந்து உமர் மேடையை விட்டு கீழிறங்கிய போது உமரின் கண்ணியம் வானுயர்ந்தது.

இவ்வளவு வீரமுள்ள ஆட்சியாளரை தரை இறக்கிய போது அந்த மூதாட்டியின் தைரியம் வரலாறானது.

“தன்னை அவ்வாறு இறங்க சொன்னதன் காரணம் என்ன?” என்ற ஆட்சித் தலைவரை நோக்கி, அம் மூதாட்டி “மனைவிக்கு நீங்கள் ஒரு பொற்குவியலை கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று இறை வேதம் (அல் குர் ஆன் 4:20) கூறுகின்றது. இறைவேதம் வழங்கிய அனுமதியை அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களும் தடை செய்யாத நிலையில் இன்று தடை செய்யும் உமக்கு இறைத் தூதர் நின்ற மேடையில் நிற்க என்ன தகுதி இருக்கிறது. அதனால் தான் இறங்க சொன்னேன்” என்றார்.

இதை கேட்டதும் “இம்மாதரசி இல்லாவிடில் உமர் அழிந்திருப்பேன்” என்று கூறி கலிஃபா உமர் தங்கள் கைகளை ஏந்தி இறைவனிடம், “ எனக்கு வழிகாட்ட இத்தகைய அறிவு நிறைந்த பெண்களை வைத்திருக்கின்ற இறைவா! உனக்கு நன்றி செலுத்துகின்றேன்” என இறைஞ்சினார்கள்.

3 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்...

'அமீருல் மூமினீன்' உமர் பின் கத்தாப் ரலி அல்லாஹுத்தஆலா அன்ஹூ அவர்களின் ஆட்சி நபிவழி பேணி நடுநிலையுடன் சிறப்பாக ஆட்சி புரிவது எப்படி என்பதற்கு ஓர் அழகிய எடுத்துக்காட்டு என்றால், அந்த மூதாட்டியோ... ஆட்சியாளர்கள் வழி தவறும்போது அவர்களை உடனே இறைமறை மற்றும் நபிவழி மூலம் நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்கும் சிறந்த உதாரணங்கள்.

தெரிந்த ஹதீஸ். ஆனால், உங்கள் எழுத்து நடையில் அந்த மேடைக்கு அருகிலேயே நான் உட்கார்ந்து செவி மடுத்ததை போல ஒரு பிரம்மை ஏற்பட்டு விட்டது.

Chitra said...

புதிய தகவல். பகிர்வுக்கு நன்றிங்க....

புல்லாங்குழல் said...

ஆஷிக்,சித்ரா உங்கள் கருத்துக்கு நன்றி!