ஃபேஸ்புக் எனும் முகநூல் ஆன்மீகம் பகிர்வதற்கான ஊடகமா?
அதில் அற்ப விசயங்களை கூட பகிர்ந்து கொள்ளும் எத்தனையோ
பேர்களுக்கு மத்தியில் ஆன்மீகம் தேடும் என் முகநூல் நண்பர்களை விசேசமாக பாராட்டாமல்
இருக்க முடியாது.
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
ஆன்மீகத்தின் உயர்வை வைத்து பார்த்தால் இதற்கு ‘இல்லை’
என்பது தான் மிகவும் சரியான பதில்.
ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று
முகநூல் நல்லதையும் கெட்டதையும் மிக விரைவாக பரப்பும் ஓர் ஊடகமாக சகல துறைகளிலும் கிளைபரப்பி நிற்கிறது.

அவர்கள் ஆன்மீகம் அறிந்தவர்கள், அறிய முயல்பவர்கள்
என ஆன்மிகத்தின் பல தரப்பட்ட நிலையில் உள்ளவர்கள்.
அவர்களுக்காகவும் இன்னும் எங்களைப் போன்ற உங்கள்
அனைவருக்காகவும் இந்த பகிர்வு……
ஆரம்பமாக இப்னு அதாவுல்லா சிக்கந்தரி (ரஹ்) எனும்
ஷாதுலியா தரீக்காவின் ஷெய்கு மகான் அவர்களின் புகழ் பெற்ற ஹிகம் எனும் நூலிலிருந்து
சில வரிகள்......
அது ஞான வழி நடக்கும் சாதகர்களுக்கான அறிவுரைகளாகும் அதிலிருந்து சில வரிகள்
எனக்காவும் இன்னும் உங்களுக்காவும்….
மெரூண் நிறத்தில்
போல்ட் செய்யப்பட்டது ஹிகம் நூலின் வாசகங்கள்.
வானத்தில்
பறப்பதை விட அடிமைத் தனமே மேலானது :
தண்ணீரில் நடக்குதல் – காற்றில் பறக்குதல் போன்ற கறாமத்துகளைக்கொண்டு
சொந்தமாக்கப்பட்டவர்கள் யாவரும் நப்ஸின் அபாயங்களை விட்டும் இரட்சிக்க பெற்றவர்களாயிருக்கமாட்டார்கள்.
அவர்களிலும் துன்யாவின் ஆசாபாசங்களும் இச்சைகளும் இருக்கும். ஆகவே உண்மையான ‘கறாமத்’
என்பது செம்மையாக இருப்பதாயிருக்கும்.
எப்பொழுதும் உனக்கு அல்லாஹுத்தஆலா தன் ஏவல்களுக்கு வெளியில் வழிப்படுதலையும்,
மறைமுகத்தில் அவனது அடக்கி ஆளுதல் என்ற குணம் வெளியாகும் கஷ்ட நஷ்டங்களுக்கு தலை சாய்த்து
பொருந்தும் தன்மையை தந்தானோ அப்பொழுது அவனுடைய பெரும் நிஃமத்துகளை உனக்கு அளித்துவிட்டான்.
அதாவது, வெளிப்படையான அடிமைத்துவத்தையும் உள்ரங்கமான அடிமைத்துவத்தையும்
தந்து விட்டான். நீ உண்மையான அடிமையாயிருந்தால் இவ்விரண்டும் கிடைத்த பிறகு எதனைக்
கேட்கின்றாய்? இவ்விரண்டும்தான் உன்னிடம் கேட்கப்பட்டது.
000000
இக்லாஸ் :
அமல்கள் என்பது வெளி அவயங்களைக் கொண்டு செய்யும் சில கிரியைகளாகும்.
ஆனால் அதன் உயிர் (இக்லாஸ்) களங்கமற்றிருப்பதாகும் மனிதனின் உடலில் உயிரில்லாவிட்டால்
பிணம் எனும் பெயர் பெற்று வெறுப்புக்கொள்வது போன்று இக்லாஸில்லாத அமல்களை அல்லாஹ் பிரியம்
வைக்கமாட்டான். அவனிடத்தில் அதற்கு நல்ல அமல் என்று பெயரும் கிடையாது.
இபாதத்துகளில் இக்லாஸ் உண்டாவதற்காக ‘பிரபல்யப்படுத்தாமை’ எனும் பூமியில்
உன்னைப் புதைத்துவிடு! பிரபல்யப்படக்கூடிய எந்த விஷயத்தையும் செய்யாதே! நீ நினையாமல்
ஜனங்களிடத்தில் பிரபல்யம் ஏற்பட்டுவிட்டாலும் கூட, உனக்கொரு மதிப்பிருப்பதாக எண்ணாதே!
ஜனங்களிடத்தில் மரியாதையாகவும் ஒழுக்கமாகவும் உறவாடிக்கொள்!
பூமியில் புதைக்கப்படாத தானியங்களை பறவைகள் கொத்தித் தின்றுவிடும்.
அவை பறவைகளுக்குச் சிக்காமல் மறைந்து கிடந்த போதிலும் இலேசாக முளைத்து பிரயோஜனமில்லாது
போய்விடுகிறது. இம்மாதிரியே ஆரம்ப காலத்தில் உன்னை மறைத்துக் கொள்ளாவிட்டால் ஷைத்தானின்
வலையில் சிக்கிக் கெட்டுப்போய்விடுவாய். உன்னை மறைத்து இக்லாஸுடன் திக்ரு-பிக்ரு செய்து
தகுதியான பின்னர், அல்லாஹுத்தஆலா நாடினால் வெளிப்படுத்துவான். (அவன்) நாடினால் மறைத்துக்கொள்வான்.
ஆகவே நீ பிரபல்யப்படுவதை விரும்பாதே!
ஆகவே நமது பகிர்தலில் நோக்கம் நாலு பேர் அதைக் கொண்டு
நல்ல நிலையை அடைந்தால். அதைக் கொண்டு அல்லாஹ் நம்மையும் மன்னித்து கிருபை செய்வானே
என்பதாக இருக்க வேண்டும். அப்போது தான் அது நற்செயல் – நல்ல அமல் ஆகும்.
000000
கேள்விகள் அடங்கலுக்கும் பதில் கூறுகிறவனையும் மனக்கண்ணால் கண்டுகொண்டவைகளனைத்தையும்
பேசுகிறவரையும் அறிந்தவைகள் அனைத்தையும் அறிவிப்பவரையும் நீ கண்டால் அவருக்கு அறிவின்மை
இன்னமுமிருக்கிறதென்பதற்கு ஆதாரம் வைத்துக்கொள்.
நண்பர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில்
சொல்ல தேவையில்லை என்கிறது ஹிகம்.
00000
ஆன்மீகத்தில் சில இடங்களில் குறிப்பாலுணர்தலும் சில இடங்களில் விவரிப்பதும் தேவைப்படுகின்றது பற்றி சிறு
விளக்கம்:
இஸ்லாத்தில் இறையியலின் ஆன்மிக நுட்பங்கள் ‘இஷாரா’
எனும் குறிப்பாலுணர்த்தும் முறையில் தான் இறைமொழியான குர்ஆனிலும் நபிமொழியான ஹதீஸிலும்
சுட்டிக் காட்டப்படுகின்றது(1,2&3).
மேலும் விளக்கம் தேடும் இறைகாதலர்களுக்கு ‘ரஹ்மானைப்
பற்றி அறிந்தவர்களிடம் தெரிந்து கொள்ளுங்கள்’ என இறைஞான போதகர்களைத் தேட உத்தரவிடுகிறது
இறைவேதம். (2:115).
அந்த ஞான போதகர்கள் முதலில் அந்த சீடனின் இதயத்தில்
(4) ஞானத்தை வாங்கும் திறனை (receptivity
யை) ஏற்படுத்த திக்ரு எனும் இறைதியானத்தில் ஈடுபடுத்துகின்றார்.
பின் சன்னம் சன்னமாக வேத விளக்கம் தந்து ஃபிக்ரு
எனும் இறை சிந்தனை முராக்கபா எனும் ஆழ்சிந்தனையில் மூழ்குதல் என தொடர்ந்து பின் முஷாஹதா
எனும் பிரபஞ்சத்தின் அத்தாட்சிகளில் இருந்து இறை இருப்பின் அத்தாட்சிகளுக்கு சாட்சியாகும்
நிலைக்கு பயிற்றுவிப்பார். இந்த சாட்சி நிலையை பஸீரத் எனும் அகப்பார்வை நிலை என்றும்
அதுவே நபி வழி என்றும் விளக்குகிறது இறை வேதம் (5).
இவ்வாறு ஒரு நல்ல குரு இறைசன்னிதானத்தின் வாசல் வரை
சீடனை அழைத்து செல்வார்.
பின் இறையருளால் குரு – சீடன் – இறை என்ற பன்மையின் திரை நீக்கி ஏகத்துவ
ஒருமையை இறைவனே நமக்கு காட்டுவான்.
விரைவில் நமது அடையாளங்களை வெளியிலும், உள்ளேயும் அவர்களுக்கு நாம் காட்டுவோம்.
அவை ஹக்கு தான் என்று தெளிவாகின்ற வரை(காண்பிப்போம்). (41:53)
இது இறைஞான விளக்கம் பெறுதல் பற்றிய சுருக்கமான அறிமுகம்.
அப்படி முறையான பயிற்சியெல்லாம் இல்லாமல் எனக்கு ஞான ரகசியம் தெரிந்து
விட்டது நான் இறைஞானிதான் என்றால் சற்றே இப்லீஸை நினைவு கூறுங்கள்.
“ரப்பே நீ என்னை வழி தவற விட்டு விட்டாய்”
(15:39) ( நீ நினைத்திருந்தால் ஆதமுக்கு சஜ்தா செய்ய என்னை குனிய வைத்திருக்கலாமே ) என இறைவனிடமே ஞான விளக்கம்
பேசி இறை முனிவுக்கு ஆளான அவன் சரித்திரம் நம் முன்னே இருக்கிறது.
இறைஞானம் என்பது கூரிய வாள்.
சரியாக பிரயோகித்தால் நம்மை காக்கும் ஆயுதம்.
தவறான பிரயோகம் நம்மையே அழித்து விடும்.
ஆக நாம் படிக்கும் ஞான புத்தகங்கள் நம்மை குருவிடம்
சேர்ப்பதற்கே.
குருவின் பணியோ இறையிடம் சேர்ப்பது.
இறைவனின் அருள் தான் அந்த இருள் திரையை நீக்கும்.
குறிப்புகள்:
குறிப்புகள்:
1.
எங்குத் திரும்பினாலும்
இறைவனின் திருமுகம் இருக்கின்றது (2:115)
2. அல்லாஹ்
நம் பிடறி நரம்பை விட சமீபமாக இருக்கின்றான்(50:16) என்பதும், நீங்கள்
எங்கே இருந்தாலும் அவன் உங்களுடனே இருக்கின்றான் (57:4) என்பதும்.
3.
மூசா அல்அஷ்அரீ
(ரலி) என்ற நபி தோழர் கூறியதாவது: நாங்கள் ஒரு போரில் (கைபரில்) அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஒரு மேட்டின் மீது ஏறும் போதும், ஒரு
கணவாயில் இறங்கும் போதும் உரத்தக் குரலில் ‘அல்லாஹூ அக்பர் (இறைவன் மிகவும் பெரியவன்)’
என்று கூறிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அருகில் வந்த நபி (ஸல்) அவர்கள், மக்களே!
உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (மென்மையாக கூறுங்கள்) ஏனெனில் நீங்கள்
காது கேளாதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியுறுபவனையும், (எல்லோரையும்)
பார்ப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். உங்களில் ஒருவர் தனது வாகன ஒட்டகத்திற்கு எவ்வளவு
நெருக்கமாக உள்ளாரோ அதை விட நெருக்கமாக நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ அவன் இருக்கின்றான்”
என்று கூறினார்கள்.
“தப்ஸீர் இப்னுகஸீர்” என்னும் திருக்குர்ஆன் விரிவுரையில் இறைவன் எங்கே இருக்கின்றான்? என்ற தலைப்பின்
கீழ் புகாரி ஷரீஃபில் உள்ள இந்த நபிமொழியை இப்னு கஸிர் (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள்.
(பாகம் 1 பக்கம் 465-466)
4.
நிச்சயமாக எவருக்கு
(அகப்பார்வை கொண்ட) இதயம் இருக்கின்றதோ அவருக்கு அல்லது மன ஓர்மையுடன் செவிசாய்க்கின்றாரோ
அவருக்கு இதில் (இறை அத்தாட்சிகளில்) ஞாபகமூட்டல் (reminder) இருக்கிறது. எனவும் (50:37)
5.
(நபியே!) நீர்
கூறும்: இதுவே எனது (நேரான வழியாகும்)நான் உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன்.
அகப்பார்வையின் மீதே நான் இருக்கின்றேன். என்னைப் பின்பற்றியவர்களும். அல்லாஹ் மிகத்
தூயவன். மேலும் (அந்த அகப்பார்வையினால்) நான் இணைவைப்பவர்களில் ஒருவனல்ல.(12:108)
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
No comments:
Post a Comment