தோழமையுடன்

Saturday, June 15, 2013

நபியிடம் பெற்ற பேறு!


ஷெய்குல் அரபி வல் அஜம் ஃபைஜிஷாஹ் நூரி(ரலி)
முஹய்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி(ரலி), காஜா முய்னுத்தீன் (ரலி), ஜுனைதில் பக்தாதி(ரலி). அபுபக்கர் ஷிப்லி(ரலி) என இறைநேசர்களின் சரித்திரத்தை படித்திருக்கின்றோம். அந்த வழியில் வந்த ஒரு இறைநேசரின் சகவாசத்தில் வாழும் மகத்தான பாக்கியம் என் போன்றோருக்கு கிடைத்தது  இறைவன் வழங்கிய பெரும்பேறு."அவ்லியாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவிற்கே சுகம் சுகம்" என்று பாடிய மறைந்த கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் பாடல் வரிகள் தான் இங்கே நினைவில்  வருகின்றது.

வலிகள் கோமான் முஹய்யத்தீன் ஆண்டகையின் சரிதத்திலிருந்து பெரியோர்கள் எடுத்துக் கூறிய ஒரு சம்பவம்:

கௌதுனா தன் சீடர்களுடன் ஆன்மீக சபையில் அமர்ந்திருக்கின்றார்கள். அப்போது சீடர் ஒருவர் “  இப்போது நாம் அமர்ந்திருப்பது  பெருமானாருடன் சஹாபாக்கள் வீற்றிருப்பது போல் இருக்கிறது” என கூறவும் கௌதுனாவின் அழகிய முகம் சிவந்து விட்டது.


“என்ன வார்த்தைகளை சொல்லி விட்டீர்கள் தோழரே!. பெருமானாரின் கடைகோடி அந்தஸ்திலுள்ள சஹாபி பயன்படுத்திய குதிரையின் குளம்பில் உள்ள மண்ணுக்கு நாம் சமமாக மாட்டோம்” என கோபத்துடன் கூறினார்கள். இது நமக்கு ஒரு படிப்பினை.
 
அதே நேரத்தில் கௌது நாயகத்தின் சீடர் என்றால் எத்தனை ஞான விளக்கம் பெற்றிருப்பார்கள் ஆயினும் அந்த சீடர் ஏன் அப்படி கூறினார்கள்? என்ற சிந்தனை எழுந்தது. 

ஆதம் நபி முதல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வரை வந்த அனைத்து நபிமார்களின் தலையான செய்தி 'கலிமா விளக்கம்' தான். கலிமாவின் செய்தியை தாங்கியவர்களாகவேயன்றி எந்த நபியையும் அனுப்பவில்லை என்கிறது இறைவேதம்.

'நுபுவத்' எனும் நபித்துவம் பெருமானாருடன் முடிந்து விட்டது. ஆனால் நபித்துவத்தின் காணிக்கையாக வந்த 'கலிமா விளக்கம்' நபிமார்களுக்கு பின் இறைநேசர்களின் வாயிலாக உலக இறுதி நாள் வரை எத்தி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  இதை “என் உம்மத்தில் உள்ள அறிஞர்கள்(உலமா) பனுஇஸ்ரவேலர்களின் நபிமார்களுக்கு சமமானவர்கள்” என்ற நபிமொழியோடு இணைத்து அறியலாம்.  

பெருமானாரின் முன்னிலையில் தோழர்கள் பெற்ற   ஏகத்துவ விளக்கமும், அது  தந்த ஈமானின் பரவசநிலையும் ஈடு சொல்ல முடியாத மெய்நிலை. பெருமானாரின் முன் இருக்கும் நிலை, அவர்கள் சமூகத்தில் இல்லாத போது இல்லையே என ஹன்லளா(ரலி) என்ற நபித்தோழர் பரிதவித்த சம்பவத்தையும் இங்கே நினைவில் கொண்டு பாருங்கள்.  அந்த நுபுவத்தின் ஒளியில் ஏற்றிய சுடர் தான் வலிமார்களின் விளக்கம்.


வலிமார்களின் தலைவரான கௌதுனாவின் உபதேசத்தின் போது எத்தனை அற்புதமான ஞான அகமிய விளக்கங்களை சீடர்கள் பெற்றிருப்பார்கள்.  அத்தகைய ஒரு சூழலில் வாய்த்த இறைநெருக்கத்தின் பரவசநிலையால் வந்த வார்த்தைகளாகத் இருந்திருக்க வேண்டும் “  இப்போது நாம் அமர்திருப்பது  பெருமானாருடன் சஹாபாக்கள் வீற்றிருப்பது போல் இருக்கிறது” என கூறியது. குர்ஆனின் ஆழ்ந்த அகமிய விளக்கங்களை அள்ளித் தரும்   ஒரு காமிலான ஷெய்கின் உபதேசத்தை அன்மையில் இருந்து அனுபவித்த யாரும் இதை கோடியில் ஒரு பங்காவது உணர்ந்து கொள்ள முடியும். 

என் வாழ்க்கையை என் ஷெய்கு நாயகம் ஃபைஜிஷாஹ்(ரலி) அவர்களின் சகவாசத்திற்கு முன், சகவாசத்திற்கு பின் என இரண்டாக பிரிக்க முடியும்.  என் வாழ்வில் அவர்கள் சகவாசத்தால் பெற்ற நல்லுணர்வுகளை நினைக்கும் தோறும் வெளிரங்கமான அவர்களின் பிரிவை எண்ணி கண்கள் கலங்குகிறது.

“வாடிய உள்ளம் மலரானது – என் வாழ்வே
ஃபைஜியின் அருளானது” என்று என் ஆன்மீக சகோதரர் ஒருவர் பாடினார்.

'இறைபேரருளான இறைஞான விளக்கம்'  ஃபைஜி என்ற அந்த ஜீவநதியின் வாயிலாய் தான் எங்கள் நெஞ்சங்களில் பாய்ந்தது.

ஏகத்துவ மணம் கமழும் அவர்களின் உபதேசத்திலிருந்து ஒரு துளி....

என் குருநாதர் கீழக்கரை சதக் கல்லூரியில்  பல வருடங்களுக்கு முன் ஆற்றிய உரையை உங்கள் முன் வைக்கின்றேன். என் ஆன்மீக சகோதரர் சாஹுல் ஹமீது ஃபைஜி MCA (சென்னை)அவர்களுக்கு நன்றியுடன். 

திறந்த மனதுடன் பார்வையிடுங்கள். பலன் பெருங்கள். இன்ஷா அல்லாஹ்.










உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: